இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பெறப் பலர் விரும்பும் சூழலில், பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலிருந்தே செயல்பட விண்ணப்பித்திருப்பதும் அவற்றில் 50 பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க இருப்பதும் வரவேற்கத்தக்கவை. ஆண்டுதோறும் ஏறக்குறைய 15 லட்சம் இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர்.
வெளிநாடுகளில் பயில்வதற்காகச் செலவழிக்கப்படும் தொகையில், 60 பில்லியன் டாலர் செலவிட்டதன் மூலம் 2023இல் இந்தியா உலகளவில் முதலிடம் பிடித்தது. அமெரிக்காவில் பயிலும் இந்தியர்களில் 70-80% பேர், கல்விக் கடன்களையே சார்ந்துள்ளனர். படிப்பை முடித்த 7-10 ஆண்டுகளில் அவர்கள் கடனை அடைக்க வேண்டும்.
இந்தத் தொகையில் பெரும்பகுதி கல்விக் கட்டணத்துக்காகவும் தங்குமிடத்துக்காகவும் செலவழிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்படுவது, இத்தகைய நெருக்கடிகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் வெளிநாட்டு உயர் கல்வி அமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் நடத்துதலுக்கான விதிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு 2023இல் அறிவித்தது. உள்நாட்டுக் கல்வி நிறுவனங்களைப் போலவே, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒப்புதல் அளித்தல், அவற்றின் செயல்பாட்டைக் கண்காணித்தல் ஆகிய பணிகளைப் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) மேற்கொள்ளும்.
இதற்காகப் பல்கலைக்கழகச் சட்டம், 1956இன்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் சில விதிமுறைகள் திருத்தப்பட்டன. 2024இல் செளத்தாம்ப்ட்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை ஹரியாணாவின் குருகிராமில் திறக்க மத்திய அரசின் ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் 2, 2025 அன்று மாநிலங்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “லட்சக்கணக்கான மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதால், பெரும் முதலீடு வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கவும் மாணவர்களுக்கு இந்தியாவிலேயே பன்னாட்டுத் தரத்துடன் கூடிய கல்வியை வழங்கவும் உயர் கல்வி ஆய்வுகளை வளர்ப்பதற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியளிக்க இருக்கிறோம்” எனக் கூறினார். ஏற்கெனவே இத்தகைய மூன்று பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட்டுவரும் நிலையில், இதன் மூலம் கூடுதலாக 50 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களை இந்தியாவில் தொடங்க உள்ளன.
பல்கலைக்கழக மானியக்குழுவின் வரம்புகளுக்கு உட்பட்டுச் செயல்படவுள்ள இவை தன்னாட்சி பெற்ற அமைப்புகளாக இருக்கும்; ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கான தகுதிகளையும் ஊதியத்தையும் அவையே நிர்ணயிக்கும் என விதிமுறைகள் தெரிவிக்கின்றன.
இவற்றோடு, கல்விக்கட்டணம் போன்ற விஷயங்களும் தீவிரக் கவனத்துக்கு உட்பட்டாக வேண்டும். இப்பல்கலைக்கழகங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டால், ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கைக்கு உள்ளாகும் என அமைச்சர் கூறியிருப்பினும், இவை நடைமுறையில் பின்பற்றப்படுவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் நடவடிக்கைகள், இந்தியாவின் கலாச்சாரக் கூறுகளுக்கு முரணாகாத விதத்தில் இருப்பது ஒரு சவால் என்பதையும் மறுக்க முடியாது.
ஏற்கெனவே வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தியக் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள் இந்திய அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏற்கத் தகுந்தவை அல்ல என்கிற புகார்களும் உண்டு. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில், ஏற்கெனவே செயல்பட்டுவரும் நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தரத்தைக் காக்கும் பொறுப்பும் அரசுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது.
அனைத்தையும் தாண்டி, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேற்ற விதிமுறைகள் கடுமையாக்கப்படும் சூழலில், இந்திய மாணவர்கள் அங்கு படிப்பது கடினமான ஒன்றாக மாறியிருக்கிறது. இத்தகைய அரசியல் சூழலில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் வருகை கணிசமான இந்திய மாணவர்களின் வெளிநாட்டுக் கல்விக் கனவுகளை நனவாக்கும் என்பதில் ஐயம் இல்லை.