கரியைப் பூசிய அரசுகள்!

By செய்திப்பிரிவு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருநிறுவனங்கள் ஆகியோர் கூட்டுசேர்ந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நடத்திய கொள்ளையைப் பற்றி என்ன சொல்வது? ஊழல்தான் அரசின் நடைமுறையா என்ற கேள்விதான் எழுகிறது!

நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்குவதில் ஒழுங்குமுறைக்கு உட்பட்ட நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை; வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டவும், பினாமிகள் மூலம் பணம் சம்பாதிக்கவும் கடந்த 20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்தவர்கள் தவறாகச் செயல்பட்டுவந்துள்ளனர் என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

நாட்டின் பொதுச் சொத்துகளான இயற்கை வளங்களை நேரடியாகத் தங்களால் வசப்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலையில், பொது நன்மை கருதியே செயல்படுவதாகப் பாவனை காட்டி, ஊழல் செய்வதே இப்போதைய அரசியல் தலைவர்களின் நடைமுறையாகி விட்டது. மணல் கொள்ளை, நிலத்தடி நீர் திருட்டு, சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவதில் ஊழல் என்று எந்தத் துறையை எடுத்தாலும் அதை ஆட்சியாளர்கள் தங்களுடைய சுயநலத்துக்காகவே வளைத்துக்கொண்டுவிடுகின்றனர். நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதிகாரத்துக்கு அஞ்சியோ, தங்களுக்கும் அதில் சிறிது ஆதாயம் கிடைக்கிறது என்பதாலோ இதற்கெல்லாம் மௌன சாட்சி களாகிவிடுகின்றனர் அல்லது ஊக்கமாகத் துணை நிற்கின்றனர்.

1993 முதல் 2012 வரையில் இந்த முறைகேடுகள் நடந்திருப்பதால், இந்தக் கட்சி மட்டும்தான் ஊழல் செய்தது என்று கூற முடியாதபடி இரு பெரிய தேசியக் கட்சிகளுக்கும் இதில் பங்கு இருக்கிறது. அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் இதேபோல நடந்தது என்பதை அறிந்ததும் அந்த ஒதுக்கீடுகளையே உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இப்போது நிலக்கரி வயல்கள் சிமென்ட் தயாரிப்பு ஆலைகளாலும் மின்னுற்பத்தி நிலையங்களாலும் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருப்பதால் ரத்துசெய்யும் முடிவை உடனே அறிவிக்காமல் அவகாசம் தந்திருக்கிறது.

நிலக்கரி வயல்களைப் பொறுத்தவரையில், ஊழல் செய்ததல்லாமல் மின்னுற்பத்தி நிலையங்களுக்கும் பிற நிறுவனங்களுக்கும் உரிய நேரத்தில் நிலக்கரி கிடைக்காதபடிக்குத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனாலேயே வெளிநாடுகளிலிருந்து பெருமளவு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. நிலக்கரி இறக்குமதியிலும் தரகுப் பணம் பெறப்பட்டது. அதனால், மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கும் பிற ஆலைகளுக்கும் உற்பத்திச் செலவு கூடியது, லாபம் குறைந்தது.

நிலக்கரி வயல்களைப் பொது ஏலம் மூலம், அனைவரும் பங்கேற்க வசதி செய்துவிட்டு அரசு மறு ஏலம் விட வேண்டும். இதுவரை மிகக் குறைந்த கட்டணத்தைச் செலுத்திவிட்டு நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொள்ளை லாபம் சம்பாதித்த நிறுவனங்கள் அனைத்தும், அரசுக்குச் சேர வேண்டிய தொகையைக் கணக்கிட்டுச் செலுத்துவதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

கனிமங்களை அரசுகள் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதால் பொருளாதாரம் மட்டுமல்ல, சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமா, சுரங்க நிறுவனங்கள் செல்லும் இடமெல்லாம் அங்குள்ள மக்களின் உரிமைகள் சூறையாடப்படுவதையும் நாம் கண்டிருக்கிறோம். எனவே, சுரங்க ஒதுக்கீட்டில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெருநிறுவன முதலாளிகள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்குவதன் மூலம் சுரண்டலற்ற ஓர் எதிர்காலத்தை நமக்கு உறுதிசெய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்