இரோம் ஷர்மிளாவின் குரல் கேட்கிறதா?

மணிப்பூரைச் சேர்ந்த இரோம் ஷர்மிளாவின் 14 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டத்தை உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது. ஆனால், இந்திய அரசு கவனிக்கிறதா என்றுதான் தெரியவில்லை.

மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய கோரிக்கை. எந்தக் கேள்வியுமின்றி யாரை வேண்டுமானாலும் கைது செய்வது, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வது, அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொல்வது, பெண்களை வல்லுறவு செய்வது என்று மணிப்பூரில் ஆயுதப் படையினர் செய்துவரும் அத்துமீறல்கள் உலகறிந்தவை. இந்தச் சட்டத்தைக் கேடயமாக வைத்துத்தான் இந்த அத்துமீறல்கள் செய்யப்படுகின்றன என்பதற்காகவே அந்தச் சட்டத்தை இரோம் ஷர்மிளா எதிர்க்கிறார்.

பயங்கரவாதிகளைக் கொன்றதாகப் போலி நாடகமாடி, வீரதீரச் செயலுக்கான பதக்கங்களையும் பதவி உயர்வுகளையும் பெற ஆயுதப் படையினர் தயங்க மாட்டார்கள் என்பதை காஷ்மீரில் நாம் பார்த்திருக்கிறோம். ஓரளவுக்கு பத்திரிகையாளர்களின் பார்வையில் அமைந்திருக்கும் காஷ்மீரிலேயே இந்தக் கதை என்றால், எல்லோர் பார்வைக்கும் அப்பாற்பட்ட மணிப்பூரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

எல்லையோர மாநிலங்களில் மக்களுக்கும் ராணுவத்துக்கும் துணைநிலை ராணுவப் படைகளுக்கும் சுமுக உறவு இருந்தால்தான் எதிரிகளின் ஊடுருவல், படையெடுப்பு போன்றவற்றின்போது அவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 1962 போரின்போது “அசாம் அவ்வளவுதான், கையை விட்டுப் போய்விட்டது” என்று டெல்லியில் அரசியல் தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த மாநில மக்கள் தீரமாக எதிர்த்துப் போரிட்டதல்லாமல், இந்திய ஜவான்களுக்குப் பக்கபலமாக இருந்து அசாமிலிருந்து எதிரிகளை விரட்டியடித்தார்கள் என்பது வரலாறு.

எனவே, எல்லைப்புற மாநிலங்களில் மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்துக் கேட்டு, அவர்களுடைய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதுதான் ராஜதந்திர ரீதியிலும் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். அதுமட்டுமல்லாமல், பிரிட்டிஷ்காரர்கள் நம்மை அடக்கியாள்வதற்காக போட்ட சட்டங்களையும், நம்மைச் சுரண்டு வதற்காகக் கொண்டுவந்த வரிவிதிப்பு முறைகளையும், நம்மை அலைக்கழிப்பதற்காகக் கொண்டுவந்த நிர்வாக நடைமுறைகளையும் இன்னமும் மறுபரிசீலனைகூடச் செய்யாமல், ‘பாசத்தோடு’ 67 ஆண்டுகளாகக் கட்டிக்காத்துவருகிறோமே ஏன் என்ற கேள்வியையும் அரசு தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.

உலகில் பல தலைவர்களும் நாடுகளும் தங்கள் போராட்டங்களுக்கு காந்தியத்திலிருந்து ஊக்கம் பெற்றிருக்கிறார்கள். இரோம் ஷர்மிளா எந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரும் அல்ல. அரசியல்வாதியும் அல்ல. 14 ஆண்டுகளாக கிட்டத்தட்ட ஒற்றை ஆளாகத்தான் போராடு கிறார்; தன்னுடைய மாநிலப் பெண்களின் மானத்தைக் காப்பாற்ற போராடுகிறார். நியாயமான ஒரு காரணத்துக்காக காந்திய வழியில் போராடுபவரின் குரலுக்கு இந்த அரசு செவிமடுக்கவில்லை எனில் அகிம்சை வழியிலான போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் என்ன மதிப்பு மிஞ்சியிருக்கக் கூடும் என்பதுதான் எல்லோரின் கேள்வியும்.

மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை என்றால் இந்தச் சட்டத்தை அரசு உடனடியாக ரத்துசெய்தாக வேண்டும். அதுமட்டுமல்லாமல், மக்கள் நலனுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரத்தை ராணுவத்துக்கும் பிற ஆயுதப் படைகளுக்கும் எந்தக் காலத்திலும் வழங்கக் கூடாது. இந்தியாவுக்குள்ளே அந்நியர்கள்போல் வாழும் வட கிழக்கு மாநிலங்களின் நம்பிக்கையைப் பெற வேண்டுமானால் இரோம் ஷர்மிளாவின் குரலுக்குப் புதிய அரசு செவிமடுத்தே ஆக வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE