நீதித் துறையின் நலிவு நீங்குமா?

உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளை நியமிக்க புதிய ஆணையத்தை உருவாக்கும் மசோதா, மக்களவையில் ஒருமனதாக நிறைவேறிவிட்டது.

இந்த மசோதாவை அடுத்து உருவாகவிருக்கும் தேசிய நீதித் துறை நியமன ஆணையத்துக்கு அரசியல் சட்ட அந்தஸ்து அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவும் உடன் நிறைவேற்றப்பட்டது. நீதித் துறையிடமிருந்த நீதிபதிகள் நியமன உரிமை பறிக்கப்பட்டு, ஆட்சித் துறையுடன் கட்டாயமாகப் பகிர்ந்துகொள்ளப்பட இந்த நடவடிக்கையால் வழியேற்பட்டிருக்கிறது. ஆகவே, நீதித் துறையின் சுதந்திரம் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகள், சட்டம்-நீதித் துறை அமைச்சர், சமூகத்தின் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட ஆறு பேர் குழு, இனி தேசிய நியமன ஆணையமாகச் செயல்படும். சமூகத்தின் இரண்டு பிரதிநிதிகளைத் தேர்வுசெய்யும் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள். குடியரசுத் தலைவர் ஆணையம் பரிந்துரைக்கும் பட்டியலை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டால், ஆணையத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாகத் தேர்வுசெய்து பரிந்துரைக்கும் பட்டியலைத்தான் அனுப்ப வேண்டும் என்ற பிரிவை இந்த மசோதாவிலிருந்து நீக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரான காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி வலியுறுத்தினார். சட்டம்-நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அதை ஏற்று, அந்தப் பிரிவை நீக்கிய பிறகு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசு தேசிய நீதித் துறை நியமன ஆணையம் அமைத் துள்ளதைப் போல மாநிலங்களிலும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க மாநில ஆணையங்களை அமைக்கலாம் என்ற யோசனையை அமைச்சர் நிராகரித்துவிட்டார். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு முரணான யோசனை என்று அவர் கூறியிருக்கிறார்.

நீதிபதிகள் நியமனத்துக்கான தேசிய ஆணையம் அமைவதைப் பிரபல வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், பி.எச். பாரீக் போன்றவர்கள் வெளிப்படையாகவே கண்டித்துப் பேசியுள்ளனர். எந்த விதமான நியமன முறையாக இருந்தாலும், அந்தப் பொறுப்புக்கு வருகிறவர் களின் நேர்மை, நடுநிலைத் தன்மையைப் பொறுத்துதான் நியமனமும் இருக்கும் என்பதே உண்மை.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வோடு நீதித் துறை வலுப்பெற்றுவிடாது. நீதித் துறையைச் சீர்திருத்த உண்மையான அக்கறையோடு மேலும் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற வேலை நாட்களை வழக்குகளின் தேக்க எண்ணிக்கை குறையும்வரை அதிகப்படுத்தலாம். தற்காலிக அடிப்படையில் நீதிமன்றங்களையும் நீதிபதிகள் எண்ணிக்கையையும் கூட்டலாம். வழக்கறிஞர்கள், நீதித் துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கு தொடுப்பவர்கள் என்று அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி, வழக்குகளுக்கு வாய்தாவை அதிகப்படுத்தாமல் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யலாம். பத்தாண்டுகளுக்கு முந்தைய வழக்குகளே இருக்கக் கூடாது என்று இலக்கு நிர்ணயம் செய்து, அவற்றை முடித்துவைக்க முனைப்பு காட்டலாம். நலிவடைந்த பிரிவினர் தொடுக்கும் வழக்குகளை முன்னுரிமை தந்து முடிக்கலாம். இதில் எதையுமே செய்யாவிட்டால், இந்த நீதித் துறை நியமன மசோதா என்பது வெறும் கண்துடைப் பாகத்தான் இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE