கொல்வது இயற்கை அல்ல; அலட்சியம்!

இயற்கைச் சீற்றங்களின்போது ஏற்படும் பேரழிவுகளுக்கு மனிதர்களின் தவறுகளும் அலட்சியங்களும் கணிசமாகப் பங்குவகிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலத்தின் மாலின் என்ற மலைக் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்து, 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதையும் அப்படித்தான் சொல்ல வேண்டும். எதிர்பாராதது என்றோ விபத்து என்றோ அதைக் கூற முடியாது என்பதுதான் உண்மை.

இந்த மலைச் சரிவுக்கு மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதல் நாளிலிருந்தே கனமழை சற்றும் குறையாமல் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது, முதல் காரணம். பீமாசங்கர் என்று அழைக்கப்படும் அந்த மலைப் பிரதேசம் முழுக்கவுமே குடியிருப்புகளும் விளை நிலங்களுமாக மாறியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு, அடுத்த காரணம். மலையில் அடுக்கடுக்காகப் படிகள்போல அமைத்து, அந்த நிலத்தில் நெல்லும் சிறுதானியச் சாகுபடியும் செய்துவந்தவர்கள், திடீரென நிலங்களைப் பெருமளவுக்குச் சமப்படுத்தி, சமவெளியைப் போல கோதுமைச் சாகுபடியில் இறங்கியது மூன்றாவது காரணம் என்கின்றனர்.

கோதுமைக்கான களம் அதுவல்ல என்றும், மலைப் பிரதேசங்களை அப்படியே பாதுகாப்பதன்மூலம்தான் மரங்களையும் மழை வளத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் அரசு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதையும் மீறி அவர்கள் செயல்பட்டால், சட்டபூர்வமாக அவர்களைத் தடுத்து உணர்த்தியிருக்க வேண்டும்.

மகாராஷ்டிரத்தின் இந்தப் பகுதியில் பெருமழை பெய்யப்போகிறது என்று அமெரிக்காவின் ‘நாசா' விண்வெளி மையத்துடன் இணைந்த வானிலைப் பிரிவு, முதல் நாளே எச்சரித்திருக்கிறது. புணேயில் உள்ள வானிலை மையமோ, “அந்த எச்சரிக்கை எங்களுக்குத் தெரியாது.

அதைக் கவனித்துச் சொல்லியிருக்க வேண்டியது டெல்லியில் உள்ள வானிலை மையம்” என்கிறது. ‘‘நாசா சொல்வது ஒன்றும் புதிதல்ல, நாங்களே எங்கள் வானிலை எச்சரிக்கையில் அப்படித்தான் சொல்கிறோம். வானிலை எச்சரிக்கையை அடுத்து, மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்கின்றனர் டெல்லி வானிலை அலுவலகத்தார். சிறிய அலட்சியங்களின் கூட்டுத்தொகை, பேரழிவுதான் என்பதற்கு இதைவிடச் சான்று வேறெதுவும் வேண்டுமா என்ன?

பெருமழையால் ஏற்படும் நிலச்சரிவுக்கும் அழிவுக்கும் தமிழ்நாட்டின் குன்னூர் பகுதியே தொடர் சாட்சி. மக்களின் எதிர்ப்புகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல், மலைப் பகுதிகளில் பெரிய கட்டிடங்களையும் தனியார் சுற்றுலா விடுதிகளையும் கட்ட அரசு அனுமதிக்கிறது.

மரங்களை வெட்டிவிட்டுக் காய்கறிச் சாகுபடியையும் தோட்டப் பயிர்ச் சாகுபடியையும் அரசு ஊக்குவிக்கிறது. இதனால், மழைப்பொழிவு குறைந்து, நிலத்தடி நீர்மட்டமும் ஆறுகளுக்கு நீர்வரத்தும் குறைகிறது. விளைவாக, மலைகளுக்கே உரித்தான உயிரினங்கள் அழியத் தொடங்கி, சுற்றுச்சூழல் சமநிலை குலைகிறது.

இயற்கைச் சமநிலையைக் காப்பாற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. இயற்கைச் சீற்றங்களைத் தடுக்க முடியாதெனினும், முன்னெச்சரிக்கை உணர்வுடன் அரசு செயல்பட்டால், பேரிடரின்போது ஏற்படக் கூடிய உயிரிழப்புகளையும் பொருள் இழப்பு களையும் வெகுவாகத் தடுக்க முடியும் அல்லவா? அதை விடுத்து, ஒவ்வொரு முறையும் புலம்பிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE