எண்ணிக்கை மட்டுமே தகுதியா?

எதிர்த் தரப்பு என்பது ஜனநாயகத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று. ஆனால், பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இதை உணர்ந்திருப்பதுபோல் தெரியவில்லை. மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு அளிப்பதில் பாஜக தேவையற்ற வகையில் தொடர்ந்து தயக்கம் காட்டி அரசியலாக்கி வருகிறது.

முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு பாஜகவுக்கு அவசியம் தேவை. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சி.வி.சி.), முதன்மைத் தகவல் ஆணையர் (சி.ஐ.சி.), மத்தியப் புலனாய்வுக் கழகத்தின் (சி.பி.ஐ.) இயக்குநர் போன்ற முக்கியப் பதவிகளுக்கான நியமனத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க் கட்சித் தலைவருக்கும் கருத்து தெரிவிக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அதிக உறுப்பினர்களைப் பெற்ற எதிர்க் கட்சிகளில் அதிமுகவைத் தவிர, வேறு எதுவும் பாஜகவுக்கு இணக்கமான கட்சியாக இல்லை. திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகியவை காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளிடமிருந்தும் விலகியே நிற்கின்றன. மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10% கூட காங்கிரஸ் கட்சிக்கு இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், அந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ள வாக்கு சதவீதமும் அந்தக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கையும் அந்தக் கட்சியைக் குறைத்து மதிப்பிடுவது சரியல்ல என்பதையே உணர்த்தும்.

மக்களவையில் கூட்டம் நடத்தத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்த போது, முதல் மக்களவையின் தலைவர் ஜி.வி. மவலாங்கர் நிர்ணயித்ததுதான் 10% என்ற வரம்பு. அது கூட்டத்தை நடத்துவதற்குத் தானே தவிர, எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்குரியவரைத் தேர்வு செய்வதற்காக அல்ல. 1977-ம் ஆண்டின் சட்டமும் எதிர்க் கட்சித் தலைவருடைய அந்தஸ்து, ஊதியம் குறித்துக் குறிப்பிடும்போது ‘ஆளுங்கட்சிக்கு அடுத்ததாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் உள்ள கட்சியைச் சேர்ந்த தலைவர்' என்றுதான் கூறுகிறது.

சீன உறவு, பாகிஸ்தானுடனான நட்பு, காஷ்மீர் பிரச்சினை உட்பட பெரும்பாலான விஷயங்களில் குறிப்பாக, பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸின் அடியொற்றியே பாஜக இதுவரை முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது காங்கிரஸுக்கு எதிர்க் கட்சி அந்தஸ்தைக் கொடுக்க மறுப்பதை என்னவென்று சொல்ல? மேலும், தேர்தல் முடிவுகள் ஒரே விதமாகத் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதையே உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளும் உணர்த்துகின்றன. அங்கு காங்கிரஸ் கட்சி, தான் போட்டி யிட்ட மூன்று தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருப்பது பாஜகவுக்கு முதல் எச்சரிக்கை.

காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்த வேண்டும் என்றோ, எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்காக அவர்கள் தங்களைக் கெஞ்ச வேண்டும் என்றோ நினைத்துத்தான் பாஜக இப்படிச் செயல்படுகிறது என்றே கருத வேண்டியிருக்கிறது. அரசியலில் சற்றுப் பெருந்தன்மையும் வேண்டும் என்பதைப் புதிய அரசின் தலைமை உணர வேண்டும். ஆட்சியின் தொடக்கம் இது. இதைக் கசப்புடன் தொடங்குவது சரியல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE