உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

மூளைச் சாவு அடைந்த பிறகு உடல் உறுப்புகளைத் தானம் செய்வோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்திவைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதுபெரும் வரவேற்புக்குரிய முடிவு. உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது தமிழ்நாடு. தமிழ்நாடு அரசு உடல் உறுப்பு தானத்துக்காகத் தனி நாளாக செப்டம்பர் 23ஐ அறிவித்து, முன்னுதாரணமாகச் செயல்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. அரசின் புதிய அறிவிப்பு உறுப்பு தானத்தை மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.

தமிழ்நாட்டில் 6,179 பேர் மாற்று சிறுநீரகத்துக்காகவும், 449 பேர்கல்லீரலுக்காகவும் 72 பேர் இதயத்துக்காகவும் 24 பேர் நுரையீரலுக்காகவும்காத்திருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மாற்று உடல் உறுப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கணையம், கைகள், எலும்புகள் போன்ற உடல் உறுப்புகள் தேவைப்படுவோரும் உள்ளனர்.

நாட்டில் அதிகமாக உடல் உறுப்பு தேவை இருக்கிறது. நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் பேர் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். நாளொன்றுக்கு 20 பேர் வரை உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை கிடைக்காததால் இறக்க நேரிடுகிறது.

ஆனால், சர்வதேசப் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் உடல் உறுப்பு தானம் மிகக் குறைவு. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் 2014இல் 6,916 பேரிலிருந்து 2022இல் 16,041 பேராக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவில் பத்து லட்சத்தில் ஒருவர்தான் உறுப்பு தானம் செய்கிறார் என்னும் நிலை தொடர்கிறது. இந்தியாவில் 600க்கு மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலிருந்தும் ஆண்டுக்கு ஒன்று என்னும் வீதத்தில் உறுப்பு தானம் கிடைத்தால் இந்தியாவின் மருத்துவத் துறைக்குப் பெரிய வரமாக இருக்கும். ஆனால், உடல் உறுப்புக்காகக் காத்திருப்போரில் 10% பேர் மட்டுமே இப்போது பயனடைய முடிகிறது.

இந்தப் பின்னணியில் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்க, உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மருத்துவர்களையும் செவிலியர்களையும் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவுறுத்திவருவதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பு வெளியான பிறகு தேனி மாவட்டம் சின்னமனூரில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்து, உடல் உறுப்புகளைத் தானம் செய்த வடிவேலுவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை, உறுப்பு செயல் இழந்தோரின் எதிர்கால வாழ்க்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. ஆனாலும் உறுப்பு மாற்றுச் சிகிச்சையில் பல சவால்கள் உள்ளன. காத்திருப்போருக்கு வரிசைப்படியும் சரியாகவும் உறுப்புகள் சென்று சேர்வதில் பிரச்சினைகள் நிலவுகின்றன. என்றாலும் இப்போது காத்திருப்போர் பட்டியலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பலன் அளித்துவருகின்றன.

கிடைக்கக்கூடிய உறுப்புகளின் பற்றாக்குறை இதிலுள்ள முக்கியமான சவால். இது நீண்ட காத்திருப்புக்கும் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நன்கொடை செயல்முறையைச் சீராக்குவதும் அவசியம். தமிழ்நாடு அரசு அதற்கான முன்கை எடுத்துவருவது பாராட்டத்தக்க முன்னுதாரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE