‘இந்து தமிழ் திசை’ 10-ஆம் ஆண்டு நிறைவு | இனியதோர் பயணத்தில்...

By செய்திப்பிரிவு

அன்புகொண்ட வாசக நெஞ்சங்களே… உங்கள் வாழ்த்து அலை, குளிர் தென்றலாக வந்து நிறைக்கிறது எமது வாசலை! 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளின் இந்தப் பத்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் என்பது வாசக சொந்தங்களாகிய உங்களின் குதூகலத் திருவிழா! ’உங்கள் குரல்’ கேட்டு, உங்களின் விருப்பங்களை அறிந்து, அவற்றை எங்கள் குழுவினர் நல்லவகையில் நிறைவேற்றித் தருவதன் அடையாளமே, வெற்றிகரமான இந்த பத்தாண்டுப் பயணம்.

மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் நிற்கிறது நமது தேசம். 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்கிற மகாகவி பாரதியின் கனவை பார் போற்றும் வண்ணம் நிகழ்த்திக் காட்டிவருகிறார்கள் நமது இந்திய விஞ்ஞானிகள். அதிலும் நமது தமிழ் மண் தந்த புதல்வர்/புதல்விகளின் பங்கு பெரிதென்பது மேலும் புத்துணர்வைக் கூட்டுகிறது.

அறிவை ஆயுதமாக்கி, அற்புதமாகக் காய் நகர்த்தி, சதுரங்க பலகையிலும் தமிழ் மண்ணின் பெருமையை அழுந்தப் பதித்துவருகின்றனர் நம் தமிழ்க் குழந்தைகள். அந்நிய நாடுகளிடம் கையேந்தி நின்ற காலம்போய், ஆபத்து காலத்தில் அவர்களுக்கும் கைகொடுக்கும் நிலை நோக்கி, பொருளாதார ரீதியாக படிப்படியாக முன்னேற்றம் கண்டுவருகிறது நமது பாரதம்.

நாட்டின் எந்தவொரு நிகழ்வையும் நேர்மறையான பார்வையுடன் அணுகி, வாசகர்களாகிய உங்கள் அறிவுப் பசிக்கு விருந்தளித்து, ஆக்கபூர்வமான கோணத்தில் மட்டுமே செய்திகளை அளித்துவருகிறது எங்கள் குழு. இந்தப் பத்து ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கையில் எந்த வகையில் எல்லாம் ‘இந்து தமிழ் திசை’ நல்லதொரு பங்கு வகித்திருக்கிறது என்பதை, இன்றைய செய்தித்தாளுடன் வெளியாகும் சிறப்பிதழ் பக்கங்களில் உங்களில் சிலர் குறிப்பிட்டுப் பேசியும் இருக்கிறீர்கள்.

இவ்வளவுக்கும் நடுவே, நம் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும் கவலை அறிகுறியாக, ஆங்காங்கே விதைக்கப்படுகிறது வெறுப்பின் விதை! மேடைப் பேச்சு, சமூக வலைதளங்கள், மின்னணு ஊடகங்கள் எனப் பல திசையிலும் பரப்பப்படும் பிரிவினைக் கருத்துக்களும், மனப் பதற்றத்தை உண்டாக்கும் வக்கிர விவகாரங்களும் அடுத்துவரும் தலைமுறையை பலவீனமாக்கும் அபாயத்தை இப்போதே உணர முடிகிறது.

அன்பு, ஆற்றல், வளர்ச்சி, ஒற்றுமை… இவையே நம் தேசத்தின் இன்றைய வளர்ச்சிப் பாதையை மேலும் செம்மைப்படுத்தும். அதை மனதில் கொண்டே தனது ஒவ்வொரு அடியையும் உங்கள் ‘இந்து தமிழ் திசை’ எப்போதும் எடுத்துவைக்கும் என்கிற உத்தரவாதத்தை இத்தருணத்தில் மீண்டும் உங்களுக்கு அளிக்கிறோம்.

யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவதும், யார் சாதனை புரிந்தாலும் தட்டிக்கொடுப்பதும்தான் நல்ல ஊடக தர்மம் என்பதை எப்போதும் உள்ளத்தில் இருத்தி இருப்போம்.

வாருங்கள்… அடுத்த தலைமுறையையும் நம்மோடு சேர்த்துக்கொண்டு ஒளிமயமான திசை நோக்கித் தொடர்ந்து நடைபோடுவோம்.

உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும்…

தமிழால் என்றும் இணைந்திருப்பாம்.

நன்றியுடன்…
கே.அசோகன்,
ஆசிரியர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE