ஒரு மோசமான சமிக்ஞை!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சர்ச்சை ஏற்படுவது புதிதல்ல. எனினும், இந்த முறை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலில் கோபால் சுப்பிரமணியம் நிராகரிக்கப் பட்டிருப்பது மோடி அரசு ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்துக்கும் கொடுத் திருக்கும் ஒரு மோசமான சமிக்ஞை.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகளும் சேர்ந்துதான் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரிக்கின்றனர். கடந்த கால நடத்தையில் நேர்மை, சட்டத்தில் ஆழ்ந்த ஞானம், நீதித்துறை நிர்வாக அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனர். நீதிபதிகள் பரிந்துரைக்கும் பெயர்களை மத்திய அரசு பெரும்பாலும் ஏற்றுக்கொண்டுவிடும். அப்படியே மறுபரிசீலனை செய்யுமாறு கோரினால், அதன் காரணம் வலுவாகவும் நியாயமாகவும் இருந்தால் நீதிபதிகள் குழு அந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்கும். நீதிபதிகள் குழு அப்படிப் பரிசீலித்துப் பார்த்து, அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டால் அக்குழுவின் பரிந்துரைதான் செல்லுபடியாகும்.

இம்முறை பரிந்துரைப் பட்டியலில் கோபால் சுப்பிரமணியம் பெயரை வலுவற்ற சில காரணங்களைச் சொல்லி நிராகரித்திருக்கிறது மோடி அரசு. மேலும், அவர் நிராகரிக்கப்பட்டதன் பின்னுள்ள அரசியலை ஊடகங்கள் விவாதிக்க ஆரம்பித்த நிலையில், கோபால் சுப்பிரமணியம் தொடர்பாக அவதூறான தகவல்களையும் கசிய விட ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சர்ச்சை மேலும் வளர்வதை விரும்பாத கோபால் சுப்பிரமணியம், தன்னை நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி, தானாகவே இந்தப் பிரச்சினையிலிருந்து விடுவித்துக்கொண்டிருக்கிறார்.

கோபால் சுப்பிரமணியம் நல்ல சட்ட ஞானம் உள்ள வழக்கறிஞர். 2012-ல் டெல்லி இளம்பெண் பாலியல் கொலைக்குப் பின், பாலியல் வல்லுறவுத் தடுப்புச் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தங்களுக்கு அவரும் ஒரு காரணம். அந்தச் சமயத்தில் முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவால் பாராட்டப்பட்டவர். கூடுதல் சொலிசிடர் ஜெனரல், சொலிசிடர் ஜெனரல் பதவிகளை அவர் எட்டு ஆண்டுகள் சிறப்பாக வகித்திருக்கிறார். மும்பை தாக்குதல் குற்றவாளி கஸாப்புக்காக யாரும் வாதாட முன்வராதபோது வெறும் அடையாளக் கட்டணமாக ரூ. 1 பெற்றுக்கொண்டு வாதாடியவர். அதேபோலத்தான் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, ஷோராபுதீன் போலி மோதல் வழக்கிலும் சிறப்புச் சட்ட ஆலோசகராகச் செயல்பட்டார். குஜராத் அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாகத்தான், மோடியின் வலது கரம் அமீத் ஷா சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். இதையெல்லாம் நாடு இன்னும் மறந்துவிடவில்லை. இத்தகைய சூழலில், மோடி அரசு கோபால் சுப்பிரமணியத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை வெளியே யாரும் தேடப்போவதில்லை.

பிரதமராகப் பதவியேற்ற பிறகு உயர் அரசு அதிகாரிகளைச் சந்தித்த நரேந்திர மோடி அவர்களைச் சுதந்திரமாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், இப்போது நடப்பது என்ன? இது உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, பிற அரசு அதிகாரிகளுக்கும் மறைமுகமான செய்தி. அரசின் போக்குக்கு ஏற்படச் செயல்பட முடியும் என்றால் இருங்கள், இல்லாவிட்டால் ஒதுங்கிவிடுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இது நல்லதல்ல!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE