வானில் ஒரு கொடூர அரசியல்

By செய்திப்பிரிவு

உலகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறது. எம்.எச்-370 விமானத்துக்கு என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலையில், மலேசிய ஏர்லைன்ஸின் மற்றொரு போயிங் 777 விமானம் உக்ரைன் வான்தடத்தில் பறந்துகொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கிறது. ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த அந்த விமானம், உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் ராணுவத்துக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் என்றோ, விமானத்தில் இருந்த 298 உயிர்களும் கொல்லப்படும் என்றோ யார் எதிர்பார்த்திருக்கக் கூடும்?

இத்தனைக்கும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படாத வான் தடத்தில், அதுவும் 33,000 அடி உயரத்தில் இந்த விமானம் பறந்தபோது இப்படிச் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறது. இதுவரை உக்ரைன்-ரஷ்ய விவகாரம் என்று உலகமே வேடிக்கைபார்த்த ஒரு விவகாரம், இன்று உலகளாவிய தீவிரத்தை இந்தச் சம்பவத்தால் பெற்றிருக்கிறது. விமானங்கள் வழக்கமாகப் பறக்கும் வான்தடத்தில் இப்படி ஒரு அக்கிரமம் நிகழ்ந்திருப்பது ஒட்டுமொத்த வான்தடங்கள் குறித்தும் சர்வதேசச் சமூகத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

1940-களில் தொடங்கி இன்றுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட சம்பவங்களில் பயணியர் விமானங்கள் ராணுவத்தினராலோ பிரிவினை வாதிகள், பயங்கரவாதிகளால் போன்றவர்களாலோ ஏவுகணைகளால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளன. இப்போதைய சம்பவத்துக்கு ‘நீதான் காரணம்... நான்தான் காரணம்’ என்று உக்ரைன் அரசும் பிரிவினைவாதிகளும் மாறிமாறிக் குற்றம்சாட்டிக்கொள்கின்றனர். ரஷ்ய அரசு மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. இதே பகுதியில், சில நாட்களுக்கு முன்னால்தான் உக்ரைன் ராணுவ விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கிறது. மலேசிய விமானம் வரும் பாதையில், உக்ரைன் ராணுவ விமானம்தான் வரும் என்று பிரிவினைவாதிகள் காத்திருந்தது அவர்களுடைய உரையாடலை ஒட்டுக்கேட்டதில் தெரியவந்துள்ளது.

இந்த வான்தடம் வழியாக வேறு சில விமானங்களும் செல்வதாக இருந்தன. மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட சில மணி நேரங்களுக் கெல்லாம் அந்தத் தடத்தில் வரவிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் விமானம் வேறு தடத்தில் திருப்பி விடப்பட்டிருக்கிறது. அதே தடத்தில்தான் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் வரவிருந்தார் என்றும், இந்த ஏவுகணை அவரைக் குறிவைத்துதான் ஏவப்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்படாத மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் மீதே இந்தப் பழி திருப்பப்படுகிறது. இத்தகைய விபத்துகளைத் தடுக்க, சர்வதேச அளவில் பொது அமைப்பு ஒன்று விமானங்களின் போக்குவரத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. விமானப் பயணிகளின் நலனில் அக்கறை கொண்டு இத்தகைய பொது அமைப்பை உருவாக்குவது அவசியம். இதற்கு விமான நிறுவனங்களும் நாடுகளும் விதிவிலக்கின்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உக்ரைன் பிரச்சினை எப்போது பூதாகாரமாக வெடிக்குமோ என்று எல்லோரும் பயத்துடன் இருந்தபோது, இப்படி ஒரு கொடூரமான சம்பவம் நடந்திருக்கிறது. உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் யாவும் இந்தச் சந்தர்ப்பத்தைத் தங்கள் புவியரசியல் நகர்த்தலுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. 298 உயிர்களின் இழப்பு என்பது அந்த நகர்த்தலின் தொடக்கமாக இருக்குமென்றால் ஆட்டத்தின் போக்கு, முடிவு எல்லாம் எப்படி இருக்கும்?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE