நல்ல யோசனையில் களை புகாமல் இருக்கட்டும்!

By செய்திப்பிரிவு

வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட வேளாண் பொருள்களின் அபரிமிதமான விலை உயர்வைத் தடுக்க ‘விலை நிலைப் படுத்தல் நிதி' என்ற தொகுப்பு நிதியத்தை ஏற்படுத்துவது என்ற அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. சர்வதேச அரங்கில் ஏற்றுமதி சார்ந்த உலோகம், எரிபொருள், தோட்டப் பயிர்கள் போன்றவற்றின் விலை நிர்வாகத்தில் பல நாடுகள் கடைப்பிடிக்கும் உத்திதான் இது. இந்தியாவிலேயே காபி, தேயிலை, ரப்பர், புகையிலை ஆகியவற்றின் விலை ஒரேயடியாகச் சரிந்துவிடாமலும் ஒரேயடியாக உயர்ந்து விடாமலும் இருக்க அரசு இந்த உத்தியை ஏற்கெனவே கையாண்டு வருகிறது.

கான்பூர் மண்டியில் இப்போது குவிண்டால் ரூ.1,650-க்கு உருளைக்கிழங்கு விற்பனையாகிறது. ராபி பருவத்தில் விளைந்த உருளைக்கிழங்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால் சந்தைக்கு வந்த போது குவிண்டால் ரூ.700 ஆக மட்டுமே இருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்னால் உருளைக்கிழங்கை அரசு வாங்கி, கிடங்குகளில் சேமித்து வைத்திருந்தால், இப்போது விலை உயராமல் தடுத்திருக்கலாம். விலை நிலைப்படுத்தல் நிதியைக் கொண்டு வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றைக் கொள்முதல் செய்து விற்பதற்கும், இந்திய உணவுக் கழகம் மூலம் கோதுமை, நெல் கொள்முதல் செய்து விற்பதற்கும் முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. கோதுமை, நெல் போன்றவற்றைக் கொள்முதல் செய்து, பிறகு பொதுவிநியோக அமைப்பு மூலம் விற்கும் போது அரசு அதற்கு மானியம் தருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் ஏழைகளுக்கு கிலோ ரூ. 2 வீதத்தில் கோதுமை விற்கப்படு கிறது. ஆனால், உணவுக் கழகம் கிலோவுக்கு ரூ.20 கொடுத்து அதை வாங்குகிறது. வெங்காயம், உருளைக்கிழங்கை இப்படி மானிய விலைக்கு விற்க வேண்டியதில்லை. என்ன விலை கொடுத்து வாங்கினார்களோ அதைவிடக் கொஞ்சம் சேர்த்துகூட விற்கலாம். சேமிப்புக் கிடங்குகளுக் கான வாடகை, போக்குவரத்து மற்றும் கையாளும் செலவுகளுக்காக கிலோவுக்கு ஓரிரு ரூபாய்களைக் கூட்டினால்கூட மக்களிடம் பெருத்த எதிர்ப்பு இருக்காது. அரசும் நஷ்டப்படத் தேவையில்லை. கொள்ளை லாபம் சம்பாதிக்கத் துடிக்கும் மொத்த வியாபாரிகளுக்கும் இடைத்தரகர்களுக்கும் அவசியம் இல்லாமல் செய்துவிட்டாலே விலையுயர்வு கட்டுக்குள் வரும்.

இத்தகைய அத்தியாவசியப் பொருள்களின் கொள்முதலையும், அரசு பிற தனியார் முகமைகளைப் போலவே மேற்கொள்ள வேண்டும். சிவப்புநாடா முறையும் அதிகாரிகளின் ஆதிக்கமும் கூடாது. இந்திய உணவுக் கழகம் மட்டுமல்லாது, தேசிய பால்வள வளர்ச்சி வாரியம், இந்திய வர்த்தகக் கழகம், அமுல் போன்ற மாநில கூட்டுறவு சங்கங் களையும் அரசு இதில் ஈடுபடுத்தலாம். இதனால் சாகுபடியாளர் களிடமிருந்து எளிதில் கொள்முதல் செய்வதுடன் நுகர்வோரிடமும் எளிதில் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். இத்தகைய நடவடிக்கைகளில் அரசு இறங்காது என்ற துணிச்சலில்தான் மொத்த வியாபாரிகள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விலையை உயர்த்தி லாபம் சம்பாதிக் கின்றனர். அரிசி, கோதுமை போல வெங்காயம், உருளைக்கிழங்கையும் கொள்முதல் செய்வது காலப்போக்கில் நாட்டின் பொதுவிநியோக அமைப்பை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் உதவும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE