புதிய சட்டத் திருத்தம்: வனங்களைப் பாதுகாக்கவா, தாரைவார்க்கவா?

By அ.சங்கர் பிரகாஷ்

வனப் பாதுகாப்புச் சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் புதிய திருத்தம், இந்தியாவின் வனப் பகுதிகளுக்கும் வன உயிர்களுக்கும் ஆபத்தைக் கொண்டுவரும் என்னும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. 2023 மார்ச் 29 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மாநிலங்களவையின் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் - வனம் தொடர்பான நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டு, மக்கள் கருத்துக்கேட்புக்காகப் பகிரப்பட்டிருக்கும் ‘வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023’, சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது.

வனம் சார்ந்த சட்டங்கள்: 1927 முதல் இந்திய வனச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும், காலனித்துவ பிரிட்டிஷ் நிர்வாகமும் சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய அரசாங்கமும் காட்டு மரங்கள், வளங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையில் மட்டுமே அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தவிர, அச்சட்டம் காடுகளைப் பாதுகாப்பதையோ காடழிப்பைத் தடுப்பதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. 1976இல் இந்திய அரசமைப்பின் 42ஆவது திருத்தத்தின் மூலம் அதுவரை மாநிலப் பட்டியலில் இருந்த ‘காடு’ பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால், மத்திய அரசும் காடு சார்ந்த செயல்பாடுகளில் அதிகாரத்தைப் பெற்றது.

இந்நிலையில்தான் வன (பாதுகாப்பு) சட்டம் 1980 நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தின்படி காட்டுப்பகுதிகளை வனம்-சாராப் பயன்பாட்டுக்கு உள்படுத்த மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனும் நிலை உருவானது. காட்டுப்பகுதி மறுவகைப்பாட்டைப் பரிந்துரைக்க ஆலோசனைக் குழுவும் உருவாக்கப்பட்டு, காடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டது.

ஏன் இந்தத் திருத்த மசோதா? - இந்தியாவின் நிலப்பரப்பில் குறைந்தது 33% காட்டுப்பகுதிகளாக இருக்க வேண்டும் என்பது பொதுவான நோக்கம். இதுவரை, அதில் 24.62%ஐ ‘எட்டிவிட்ட’ நிலையில், மேலும் வனப்பரப்பை அதிகரிப்பது கடினமாக இருக்கிறது. எனவே, மரங்களற்ற நிலங்கள், நிலப் பதிவேடுகளில் எங்காவது ‘காடு’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தாலும், மலைத் தோட்டங்கள் அல்லது அடர்த்தியான மரங்களைக் கொண்ட பகுதிகளாக இருந்தாலும் அவை காடுகளாக வரையறுக்கப்படுகின்றன.

மறுபுறம், ‘காடு’ என்ற வரையறையின்கீழ் கணிசமான நிலப்பகுதிகள் இருப்பதால், மாநில அரசுகள் அல்லது தனியார் தொழில் துறையினர் அத்தகைய நிலப் பகுதிகளை வனம்-சாரா நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது கடினமாக இருந்தது. இந்நிலையில்தான் புதிய திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

கவனம் கோரும் திருத்தங்கள்: வன (பாதுகாப்பு) சட்டத்துக்கு இம்மசோதா ஒரு புதிய முன்னுரையை (Preamble) சேர்க்கிறது. அதில் நிகர-பூஜ்ஜிய உமிழ்வுகளின் (Net-Zero Emissions) தேசிய இலக்குகளை அடைதல், சுற்றுச்சூழல் சமநிலையை நிலைநிறுத்துதல், காடுகளின் கலாசார - பாரம்பரிய மதிப்பீடுகளைப் பேணுதல், பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்தல், கரிம நடுநிலை (Carbon Neutrality) அடைதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

1980 அக்டோபர் 25 அன்று, வன (பாதுகாப்பு) சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே, அந்தத் தேதியிலோ அல்லது அதற்கு முன்னரோ அரசு நில ஆவணங்களின்படி ‘காடு’ என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே இம்மசோதா காட்டுப்பகுதிகளாகக் கணக்கில் கொள்கிறது. இது ‘டி.என்.கோதாவர்மன் எதிர் மத்திய அரசு’ (T.N Godavarman vs Union of India) வழக்கின் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் அளித்த காட்டுக்கான ‘பரந்த வரையறை’யைப் புறந்தள்ளுகிறது. இதனால் அத்தீர்ப்பின் அடிப்படையில் பாதுகாக்கப்படும் காடுகள் (தனியார் காடுகள் உள்பட) மிக எளிதில் காடு-சாரா திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். இதனால் கணிசமான காட்டுப் பகுதிகளை நாம் இழக்க நேரிடலாம்.

எதிர்மறை விளைவுகள்: மேலும், இச்சட்டத்தின் விதிகளிலிருந்து சாலை - ரயில் பாதைக் கட்டமைப்பு, நாட்டின் பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டங்களால் ஏற்படும் காட்டுயிர்களின் வாழிட இழப்பு - இதர தாக்கம் குறித்த மதிப்பீடுகளின் (Impact Assessment) தேவை இருக்காது. அந்த வகையில், தேசிய - மாநிலக் காட்டுயிர் வாரியங்கள், தேசிய உயிர்ப் பன்மை ஆணையம், மாநில உயிர்ப் பன்மை வாரியங்களின் தலையீடு தடுக்கப்படும் சாத்தியம் ஏற்படும். இது காட்டுயிர்ப் பாதுகாப்பிலும், உயிர்ப் பன்மையிலும் குறிப்பிடத்தக்க எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

காட்டுப் பகுதிகளைக் காடு-சாரா திட்டங்களுக்காக மடைமாற்றும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பரிந்துரைக்கும் அதீத அதிகாரத்தை மத்திய அரசுக்கு இத்திருத்தம் வழங்குகிறது. காட்டுக்குள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், வேவுப் பணிகள் (Reconnaissance), நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிற திட்டங்களை எவ்வித வனம் சார்ந்த முன்அனுமதியும் (Forest clearance) இல்லாமல் மேற்கொள்ளலாம் எனவும் திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இச்சட்டத்தின் இரண்டாவது பிரிவின்கீழ் காடு-சாராத் திட்டங்களுக்காக விலக்குகள் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளன. அதன்படி கூடுதலாகக் காடு வளர்ப்பு (Silviculture), காட்டுப் பயணம் (Safari), சூழலியல் சுற்றுலாசார் கட்டமைப்புகளுக்கு (Eco-tourism facilities) விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளதால், அப்படிப்பட்ட திட்டங்களை மத்திய அரசின் அனுமதி இல்லாமலேயே நிறைவேற்றலாம்.

இத்தகைய விலக்குகள் காட்டுச் சூழல் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். மேலும் உயிரியல் பூங்கா, சூழலியல் சுற்றுலா போன்ற முன்னெடுப்புகள் காட்டு நில அமைப்பில் (Forest topography) மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, பழங்குடிகளின் காடு சார்ந்த உரிமைகளுக்கும் பூர்விகத் தாவரங்களுக்கும் காட்டுயிர்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனும் அச்சம் எழுந்திருக்கிறது.

புதிய சவால்: காலநிலை மாற்றம் நிகழ்ந்துகொண்டு இருக்கும் இவ்வேளையில், அதை எதிர்கொள்ள - மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் (Mitigation measures), தகவமைப்பு நடவடிக்கைகள் (Adaptation measures) என இரண்டு வழிகளைப் பரிந்துரைக்கிறது அறிவியல். மட்டுப்படுத்துதல் என்பது பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் (குறிப்பாகக் கரியமில வாயு) குறைப்பது, கரிம உறிஞ்சிகளை (Carbon sinks) உருவாக்குவது. தகவமைப்பு என்பது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வானிலைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் நம்மையும் நமது கட்டுமானங்களையும் தயார் செய்துகொள்வது.

உலகிலேயே மிகச்சிறந்த கரிம உறிஞ்சிகள், காடுகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. காட்டு மரங்களும் தாவரங்களும் ஒளிச்சேர்க்கை செய்யும்போது, வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன்-டை-ஆக்சைடை உட்கிரகித்துக்கொள்கின்றன.

அந்த வகையில், நிகர-பூஜ்ஜிய உமிழ்வுகளின் தேசிய இலக்குகளை அடைவதற்கும், கரிம நடுநிலையை அடைவதற்கும் விழையும் திருத்த மசோதா, மற்ற திருத்தங்கள் மூலம் காட்டு மரங்கள், தாவரங்களின் அடர்த்தியைக் குறைக்கவே வழிவகுக்கும்; காட்டுப் பரப்பையும் காட்டுயிர்களையும் பாதுகாக்க வகை செய்வது சந்தேகம்தான்.

இதனால் சூழலியல் சமநிலையை நிலைநிறுத்துவது பெரும் சவாலாக உருவெடுக்கும். அதேபோல, பழங்குடிகளின் வன உரிமையையும், அவர்களின் கிராமசபை முடிவுகளையும் பாதிக்கும் முகாந்திரம் கொண்ட திருத்தங்கள் எவ்வாறு காடுகளின் கலாச்சாரம், பாரம்பரிய மதிப்பீடுகளைப் பேண உதவும் என்றும் புரியவில்லை.

மொத்தத்தில், இந்தத் திருத்த மசோதாவில் பரிந்துரைக்கப்படும் மாறுதல்கள் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எனில், காட்டுப் பாதுகாப்பில் இது பெரும் சறுக்கலையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

To Read in English: Forest Amendment Bill: A move to conserve or squander away forests?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்