அடுக்குமனை வீடு வாங்க வேண்டும் என்று ஒருவர் தீர்மானித்தால், அது எதிர்காலம் குறித்த அவருடைய நம்பிக்கை யைக் காட்டுகிறது. மாதாந்திரத் தவணையைச் செலுத்தத் தொடர்ந்து தனக்கு வருமானம் வரும் என்பதே அந்த நம்பிக்கை. அதாவது, இப்போதிருக்கும் வேலையில் நீடிக்கலாம், தேவைப்பட்டால் புதிய வேலையைக்கூடத் தேடிக்கொள்ளலாம் என்கிற தெம்பு. புதிய தொழிற்சாலையையோ, வியாபாரத்தையோ ஒருவர் தொடங்குவதும் இந்த அடிப்படையில்தான். இது அர்த்தமற்ற சூதாட்டம் அல்ல. ஆனால், சாதக-பாதகங்கள் இருக்கும் என்று தெரிந்தும் துணிந்து செயல்படும் முயற்சி. இந்த நம்பிக்கை வற்றும்போதுதான் புதிதாக எத்தனை அடுக்குமனை வீடுகளைக் கட்டினாலும், வாங்குவதற்குத் தயக்கம் காணப்படும். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முதலீட்டாளர்கள் காத்திருப்பர். இப்படிப் பொருளாதாரத்தின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கத் தொடங்கினால், நம்பிக்கை சரிந்து பொருளாதாரச் செயல்பாடும் முடங்கிவிடும்.
பொருளாதாரம் லேசாகச் சரியும்போதே, “அப்போதே சொன்னேனே கேட்டீர்களா, தேவையில்லாமல் முதல் போட்டு கையைச் சுட்டுக்கொண்டீர்கள்” என்று இடித்துக்காட்டச் சிலர் தயாராக நிற்பார்கள்.
பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும்போதுகூட இந்த நிலை ஏற்படலாம். முதலீட்டாளர் அல்லது வீடு வாங்குவோருக்கு நம்பிக்கை ஏன் வற்றுகிறது? நஷ்டம் அடைந்தது பற்றிய பழங்கதைகள், பொருளாதாரம் மீட்சி அடையவில்லை என்ற உண்மை, அரசின் மீது நம்பிக்கை குறைவது, சமூக-பொருளாதார நடவடிக்கைகள் போன்றவை முக்கியக் காரணங்கள். பொருளாதாரச் சக்கரம் சுழல்வதற்கு உளவியலும் முக்கியக் காரணம். அரசு சரியான கொள்கையை அறிவிப்பதுடன், அதைச் செயல்படுத்துவதற்கான சூழலையும் ஏற்படுத்த வேண்டும். இடர்கள் எவ்வளவு வந்தாலும் சமாளித்து லாபம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையை முதலீட்டாளர் களுக்கும் மக்களுக்கும் ஊட்ட வேண்டும்.
கீன்ஸ் தீர்வு
பொருளியல் அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் இதை ‘மிருக உணர்ச்சி’கள் என்று வர்ணிக்கிறார். வந்தது வரட்டும் என்று நுகர்வோரும் முதலீட்டாளரும் களத்தில் குதிக்கின்றனர். இந்த உணர்ச்சி அச்சத்துடன் இருந்தால் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டு, அது முடக்கத்தில் ஆழ்த்திவிடும். இந்நிலையிலிருந்து மீள முதலீட்டையும் நுகர்வையும் தூண்டிவிட வேண்டும். அதற்கு அரசு பொது நிதியை அதிகம் செலவிட வேண்டும், பண விநியோகத் தைத் தாராளமாக்க வேண்டும், வரிகளைக் குறைக்க வேண்டும், கடன்கள் மீதான வட்டியையும் குறைக்க வேண்டும். கீன்ஸ் கூறியவை சரியல்ல என்று விமர்சனம் செய்தாலும், அரசுகள் அவர் சொல்லும் வழியில்தான் நம்பிக்கையுடன் செயலாற்றுகின்றன. அரசின் இத்தகைய தூண்டல்கள் குறுகிய காலத்துக்குத்தான் பலனளிக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், அதற்குள் பொருளாதாரம் இயல்பான வேகம் பெற்றுவிடும் அல்லது அச்ச உணர்விலிருந்து நீங்கி துணிச்சல் பெற்றுவிடும்.
இந்தியாவில் இப்போது பொருளாதாரத் தொய்வு நிலையோ, சுணக்கத்தை நோக்கிய நிலையோ இல்லை. ஆனால், நாம் சொல்வதை நாமே நம்பிவிடக்கூடிய ஆபத்தான நிலையில் இருக்கிறோம். எனவே, நல்ல விதமாக சொல்லிக்கொள்வது அவசியம். தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக ஜிடிபி வளர்ச்சி 9.2%-லிருந்து 5.7% ஆகக் குறைந்துவிட்டது. புதிய தொழிற்சாலைகளையும் வர்த்தகத்தையும் உருவாக்க, ஜிடிபியில் முதலீட்டுக்குரிய பங்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சரிந்துகொண்டே இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக் கும் மையம் தரும் தரவுகள்படி, அமலில் இருக்கும் திட்டங்கள்கூட வற்றிவிட்டன. ரூ.84,500 கோடிக்கு அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்களின் மதிப்புகூட கடந்த 4 ஆண்டுகளிலேயே மிகவும் குறைந்த தொகைதான். தொடங்கி பிறகு நின்றுவிட்ட திட்டங்களில் நடப்பு நிதியாண்டில் புத்துயிர் ஊட்டப்பட்டவற்றின் மதிப்பு வெறும் 6%. கடந்த ஆண்டு இது 25% ஆக இருந்தது. மேற்கொண்டு செயல்படுத்த முடியாமல் தேங்கிக்கிடக்கும் தொழில் துறை திட்டங்களின் மதிப்பு ரூ.13.2 லட்சம் கோடி. காங்கிரஸ் கூட்டணி அரசின் கடைசிக் கட்டங்களில் திட்டங்களுக்கு ஒப்புதல் தருவதிலும், தொடர்ந்து அனுமதி தருவதிலும் ஆன காலதாமதங்கள், சட்டச் சிக்கல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் போன்றவற்றால் இவை மேற்கொண்டு செயல்படுத்த முடியாமல் தேங்கியுள்ளன. இத்தகைய தடைகளில் பெரும்பாலானவை அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுவிட்டன என்றாலும், புதிய திட்டங்கள் வேகம் பெறவில்லை. தனியார் துறையில் புதிய தொழில்திட்டங்களின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளிலேயே இந்த ஆண்டுதான் மிகவும் குறைவு.
சுருக்கமாகச் சொல்வதென்றால், தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் இல்லை; பண்டங்களுக்கும் கேட்பு கிடையாது, முதலீட்டுக்கான நிதியை அளிப்பதிலும் தயக்கம் தெரிகிறது.
வங்கிகளின் எச்சரிக்கை
வங்கிகளின் கையிருப்பில் ரொக்கம் ஏராளமாக இருந்தாலும், புதிய கடன்களை வழங்கும் எண்ணம் இல்லை. வாராக் கடன்களின் அளவு மலைபோல கூடிக்கொண்டே செல்வதால், மேலும் கடன் கொடுக்கத் தயங்குகின்றன. இந்தக் கடன்களை அரசு ரத்துசெய்ய வேண்டும் அல்லது நஷ்டமாகக் கணக்கில் ஏற்ற வேண்டும் அல்லது பங்குச் சந்தையிலிருந்து புதிதாகப் பணம் திரட்டிக் கொண்டுவர வேண்டும். அரசின் திவால் நடத்தை நெறிமுறைகள் நம்பிக்கை ஊட்டுகின்றன. அது இப்போதைக்கு உதவுமா, பயன் தருமா என்று இனிதான் தெரியவரும். எல்லா வங்கிகளிலும் உள்ள வாராக் கடன்களையெல்லாம் திரட்டி புதிதாக ஒரு வங்கியைத் திறந்து அதில் சேர்த்து, அந்த வங்கிக்கு மூலதனம் அளித்து, பிறகு கடன்களை வசூலிக்கலாம் என்று ஒரு யோசனை சொல்லப்படுகிறது. இந்த வங்கி தன்னுடைய கடன்கார வாடிக்கையாளர்களின் சொத்துகளை மதிப்பிட்டு விற்று, அதில் எவ்வளவு தேற்ற முடியுமோ அவ்வளவைத் தேற்றி எடுத்துக்கொள்ளும், அல்லது நிறுவனங்களை ஏற்று நடத்த புதிய முதலீட்டாளர் கள் முன்வந்தால், அவர்களிடம் ஒப்படைக்கும். வாராக்கடன் சுமையைக் குறைத்துக்கொண்ட பிற வங்கிகள், நல்ல வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுத்து தொழிலைப் புது உற்சாகத்துடன் தொடரலாம். அரசுத் துறை வங்கிகளில்தான் வாராக்கடன் சுமை அதிகம். எனவே, அந்த வங்கிகளுக்கு மறு முதலீட்டை அளிப்பது அரசின் கடமை.
பொருளாதார நடவடிக்கைகளை அரசுதான் தூண்டிவிட வேண்டும். இங்குதான் கீன்ஸின் மேதமை நினைவுகூரப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் நான்கு காரணிகளும் தட்டுத்தடுமாறிய நிலையில் உள்ளன. ஏற்றுமதிக்குப் புத்துயிர் அளிக்க வேண்டும் என்றால், ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பைக் குறைக்க வேண்டும். அல்லது, ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புகளை அதிகப்படுத்த வேண்டும். நுகர்வோரும் முதலீட்டாளரும் உற்சாகமடைய ரொக்க ஊக்குவிப்புகள் பயன்படும். கம்பெனிகள் மீதான நிறுவன வரியை 25% என்று குறைத்துவிடலாம். பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியும் குறைக்கப்பட வேண்டும்.
நான்கு நடவடிக்கைகள்
செலவுகளைப் பொறுத்தவரையில் அரசு நான்கு துறைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். முதலாவது, இப்போதுள்ள வங்கிகளுக்கு அல்லது புதிய (வாராக்கடன்) வங்கிக்கு மூலதனத்தை அளிக்க வேண்டும். இரண்டாவது, தொழிலாளர்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தி உற்பத்திசெய்யும் துறைகளுக்கு ஊதிய ஊக்குவிப்பு அளிக்க வேண்டும். இதை வரிச் சலுகையாகவோ மானியமாகவோ தரலாம். ஜவுளி, ஆயத்த ஆடைகள் துறையில் கடந்த ஆண்டு இது அளிக்கப்பட்டது. இதை மேலும் மேம்படுத்தி வேறு துறைகளுக்கும் விரிவுபடுத்தலாம். ஒடிஷா மாநிலத்தில் ஆடை தயாரிப்புத் துறையில் மேற்கொண்ட வெற்றிகரமான முயற்சியைப் பின்பற்றலாம். மூன்றாவதாக, குறைந்த விலையில் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அதிகம் செலவிட வேண்டும். கட்டுநர்கள் குறைந்த செலவில் நிலங்களை வாங்கவும், வீடு வாங்குவோருக்குக் கடன் மீதான வட்டியைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். கேரளமும் மகாராஷ்டிரமும் பின்பற்றக்கூடிய, ஆர்வம் ஊட்டும் திட்டங்களை அமல்செய்கின்றன. நான்காவதாக, ஏற்றுமதியாளர்கள் மீது தனி அக்கறை காட்டப்பட வேண்டும். குறிப்பாக, தொழிலாளர்களை அதிகம் நேரடியாக வேலையில் ஈடுபடுத்தும் வேளாண் துறை போன்ற துறைகளுக்கு மானியம் அளிக்கலாம். ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பைக் குறைக்கலாம், ஜிஎஸ்டிக்காகச் செலுத்தும் உள்ளீட்டு வரிகளை உடனுக்குடன் திரும்ப வழங்கலாம். இந்தியாவிலிருந்து வணிக ஏற்றுமதியைப் பெருக்கத் தனித் திட்டம் வகுக்கலாம். சேவைத் துறையிலும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம்.
இவை எல்லாமே குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள். இவை ‘மிருக உணர்ச்சி’களை நல்ல விதத்தில் தூண்டும். அரசின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் நம்பகத்தன்மையுடன் இருந்தால்தான் முதலீட்டாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படும்.
தமிழில்: ஜூரி
© ‘தி இந்து’ ஆங்கிலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago