தமிழ் மரபில் செங்கோலுக்கு தனி இடம்!

By முனைவர் சுதா சேஷையன்

உலக மரபில் செங்கோலுக்கு முக்கியத்துவம் உண்டென்றாலும், தமிழ் மரபில் சிறப்பு மிக்கதொரு தனியிடம் உண்டு. செங்கோல் வழுவாமல் ஆட்சி நடத்த வேண்டும் என்பதே தமிழ் மன்னர்களின் விருப்பமாக இருந்துள்ளது.

சங்ககாலப் பாண்டிய மன்னர்களில், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பவரும் ஒருவர். இளம் வயதில், மிகுந்த திறமையுடன் இவர் போரிட்டார் என்பதால், இவரின் வீரமும் திறமையும் பற்றி, இவருக்கு ஏராளமான விருதுப் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. மறப்போர்ச் செழியன், வெம்போர்ச் செழியன், இயல்தேர்ச் செழியன், திண் தேர்ச் செழியன், பொன் தேர்ச் செழியன், யானை கடுந்தேர்ச் செழியன், கொய்சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன், ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன், கைவண் செழியன், முசிறி முற்றிய செழியன், எழுவரை வென்றோன் என்றெல்லாம் இவருடைய பெருமை பேசப்படுகிறது.

ஆனால், இவருடைய உள்ளம் எப்படி இருந்தது தெரியுமா?மக்களைப் பாதுகாத்து, போரிலிருந்து காத்து, தேவைகளைக் கொடுத்து ஆளமுடிய வில்லையாயின், ‘குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக’ என்றுதனக்குத் தானே சூளுரைத்துக் கொள்கிறார். ஆளுகைத் திறத்தின் அடையாளமாகத் தங்களின் கரங்களில் வழங்கப்படும் செங்கோலை, ‘போற்று கோல்’ என்றே பெருமைப்படுத்த வேண்டும் என்றும், எக்காலத்தும் அது மக்கள் ‘தூற்று கோல்’ ஆகிவிடக் கூடாது என்றும் மன்னர்கள் விழைந்துள்ளனர்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு - என்பார் வள்ளுவப் பேராசான்.

அரசாட்சி செய்யவேண்டிய இயல்பில் அரசாண்டு, நன்னெறியைக் காப்பாற்றும் மன்னவனுடைய நாட்டில் மழை வளமும், பொருட்களின் உற்பத்தி வளமும் நிறைவாக இருக்கும். ஆட்சி செய்தல் என்பதையே கோலோச்சுதல் என்றுதான் குறிப்பிடுகிறோம். அப்படியானால், முறையாக ஆளுவது என்பதே, செங்கோல் முறைப்படி, செங்கோலுக்கு எவ்விதக் குந்தகமும்வராமல் ஆளுவதே ஆகும். செங்கோன்மை என்ற அதிகாரம் ஒன்றைப் படைத்த வள்ளுவர், செங்கோல் வழுவும் நிலைக்குக் கொடுங்கோன்மை என்றொரு பெயர் சூட்டி, அதற்கும் அதிகாரம் ஒன்றைப் படைக்கிறார்.

செங்கோல் என்றவுடன் எல்லோருடைய உள்ளத்திலும், நீளமான கோல் ஒன்றுதான் நினைவுக்கு வரும். இந்தக் கோலின் தலைப்பகுதியில், குறிப்பிட்ட அரசர் / அரசின் சின்னமோ, மரபுச் சின்னமோ, வழிபாட்டு முறையின் சின்னமோ பொருத்தப்படுவது வழக்கம். அரசர்களின் அடையாளங்களாக மூன்று முக்கியபொருட்கள் குறிக்கப் பெறுகின்றன; மகுடம் (கிரீடம் அல்லது திருமுடி), சிம்மாசனம் (அரியணை), செங்கோல் ஆகியவையே இம்மூன்றாகும். இவற்றோடு வெண்கொற்றக் குடை என்பதும் சேரலாம். அரச அல்லது ஆளுகைச் சின்னங்களாக இவை அனைத்தும் இருப்பினும், ஆட்சிமுறையின் நேர்மைக்கும் நியாயத்துக்கும் செங்கோலே அடையாளம். இந்த வகையில் பார்த்தால், செங்கோல் என்பது வெறும் பொருளன்று; அதுவொரு கருதுகோள்; சொல்லப்போனால், செம்மாந்த தன்மையின் அடையாளம்.

வள்ளுவப் பேராசானின் கைகளைப் பற்றிக் கொண்டு நடைபோட்டால், செங்கோலின் மகத்துவம் நன்கு விளங்கும். செங்கோல் என்னும்பொருள் உண்டு; தொட்டும் தடவியும் வணங்கியும் புகைப்படம் எடுத்தும் பார்க்கக் கூடிய வகையில் செங்கோல் என்னும் பொருள் உண்டு. செங்கோல் என்னும் பொருளின் மேன்மையைச் செங்கோன்மை என்றழைக்கலாம்; இந்த மேன்மையைச் செயல் படுத்துவதையும் செங்கோன்மை என்றே உரைக்கலாம். உலகப் பொதுமறையை உற்றுப் பார்க்கும் போது, இப்படியொரு வினா எழுகிறது. செங்கோல் உண்டு,சரி. கொடுங்கோல் என்றொரு பொருள் உண்டா? இல்லை, கண்டிப்பாக இல்லை.

அப்படியானால், கொடுங்கோன்மை என்றே பேராசான் பகர்கிறாரே, அது என்ன? கொடுங் கோன்மை என்னும் அதிகாரத்தின்கீழ், தவறான அல்லது நெறியற்ற அரசர்களைக் குறிப்பதற்கு, ‘அல்லவை செய்தொழுகும் வேந்து’, ‘முறைசெய்யா மன்னவன்’, ‘வேந்தன்அளியின்மை’, ‘முறை கோடிமன்னவன்’ போன்ற தொடர்களைப் பயன்படுத்துகிறார். இவற்றைக் காணும்போது செங்கோன்மை இன்மை, கொடுங்கோன்மை ஆகிறது. ஆக, செங்கோல் என்பது மேன்மை; செங்கோல் என்பதுநேர்மை; செங்கோல் என்பது முறைமை.

முனைவர் சுதா சேனஷயன்

தெய்வம் ஆட்சி செய்தாலும், செங்கோல் வழுவாது செய்யவேண்டும். மதுரை மாநகரில், சித்திரைத் திருவிழாவில், 8-ம் நாள் விழா, மீனாட்சியின் பட்டாபிஷேகச் செங்கோல் விழாவாக மலரும். ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளும் அம்மனுக்கு, மச்ச முத்திரையும் ரிஷப முத்திரையும் கொண்டு அலங்காரம் செய்வார்கள். வேப்பம்பூ மாலையிட்டு, அம்பிகையின் கையில் ரத்தினச் செங்கோல் கொடுப்பார்கள். செங்கோல் குறித்துத் தமிழ் மரபு இத்தனைபெருமையைக் காட்டியிருக்க, தமிழ் மரபின் செங்கோல்தான், இந்திய சுதந்திரத்துக்கும் நல்லாட்சிக்கும் ஆதாரம் என்று உணரும்போது, எவ்வளவு பெருமிதம் ஏற்படுகிறது!

இந்தப் பெருமிதம், தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒருசேரக் கிட்டும் பெருமிதம், நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்னும் இந்தப் பெருமிதம், மே28-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் ஓங்கி உயரவிருக்கிறது. 2023, மே மாதம் 28-ம் தேதி என்ன நிகழவிருக்கிறது என்பதைக் காண்பதற்கு முன்னர், 1947, ஆகஸ்ட் மாதம் என்ன நடந்தது என்பதைச் சற்றே எண்ணிப் பார்ப்போம். இந்திய நாட்டுக்குச் சுதந்திரம் வழங்குவது என்னும் தீர்மானத்தை பிரிட்டன் எடுத்துவிட்டது.

முதலில் குறிக்கப் பெற்றநாளுக்கு முன்னதாகவே சுதந்திரத்தை வழங்கிவிடலாம் என்னும் தீர்மானமும் எடுக்கப்பெற்று, மவுண்ட்பேட்டன் பிரபு, இதைச் செயல் படுத்துவதற்கான செயல்பாடுகளையும் செய்யத் தொடங்கிவிட்டார். பண்டித நேரு தாம், வருங்காலப் பிரதமர் என்ற முறையில். மவுண்ட்பேட்டனிடம் இருந்து ஆளுகை உரிமையைப் பெற்றுக் கொள்ளப் போகிறார் என்பதும் தெளிவாகிவிட்ட நிலை. இந்நிலையில், மவுண்ட் பேட்டன்பிரபுவின் உள்ளத்திலொரு ஐயம்; ஐயமென்பதை விட, குறுகுறுப்பு எனலாம். பிரிட்டிஷ் பின்னணியிலிருந்து வந்த அவருக்கு, இந்திய முறையில் ஆளுகை அல்லது அதிகார மாற்றத்தை எவ்வாறு செய்வார்கள் என்னும் குறுகுறுப்பு தோன்றியது. இதையே, பண்டித நேருவிடத்தில் வினாவாக வைத்துள்ளார்.

அறிவாற்றல் மிக்கவராயினும், இந்தக் கேள்விக்கு என்ன விடை என்பது பண்டித நேருவுக்கும் புரியவில்லை. அரசியல் ஞானியாகத் திகழ்ந்த ராஜாஜியிடம் விஷயத்தைத் தெரிவித்தார். தமிழ் மன்னர்களின் மரபு குறித்தும், ஆட்சிச் சிறப்பு குறித்தும் நன்கு தெரிந்தவரான ராஜாஜி, உடனடியாக இதற்கு விடையளித்துள்ளார். ‘தமிழ் மன்னர்கள், அரசுக் கட்டில் ஏறும்போது, அவரவர்களின் ராஜகுரு செங்கோல் அளித்து ஆசீர்வதிப்பார். அதே வகையில் இப்போதும் ஆதீனகர்த்தர் ஒருவரிடமிருந்து செங்கோல் பெற்று, ஆட்சி மாற்றத்தைச் செம்மைப்படுத்தலாம்’ என்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 20-வது பட்டம் குரு மகா சந்நிதானம் ஸ்ரீ ல ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகளைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆளுகை மாற்றச் சடங்குகளை நடத்திக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அன்றைய நிலையில் கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த குரு மகா சந்நிதானம், உடல் நோயையும் பொருட்படுத்தாது, செங்கோல் ஒன்றை வடிவமைக்கச் செய்துள்ளார்.

இவ்வாறு வடிவமைக்கப் பெற்ற செங்கோலில் ரிஷபத்தின் வடிவத்தைப் பொருத்தி, சடைச்சாமி என்னும் தம்பிரான் சுவாமிகளிடத்தில் ஒப்படைத்து, அவரையும் ஆதீன வித்வான் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையையும், ஆதீன ஓதுவாமூர்த்திகளையும் டெல்லிக்கு அனுப்பியுள்ளார். இப்படித்தான், பண்டித நேருவின் கரங்களைச் செங்கோல் அலங்கரித்தது.

இதெல்லாம் பழங்கதை என்கிறீர்களா? இப்போது 2023-ம் ஆண்டுக்கு வருவோம். புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மே 28-ம் தேதி திறக்கப்படவுள்ளது. நாடு விடுதலை பெற்ற நாளில், சுய ஆளுகையின் சிறப்பு அடையாளமாக நிலைநின்ற செங்கோல், இப்போது, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படவுள்ளது.

‘நேர்மையும் நீதியும்’ நிறைந்ததாக ஆளுகையும் ஆட்சியும் இருக்க வேண்டும் என்பதே செங்கோல் சாற்றும் அடிப்படை உண்மை. நம்முடைய நாட்டின் விடுதலைச் சொத்தான செங்கோல், ஜனநாயகத் திருக் கோயிலான நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவதே பொருத்தமானதாகும். செங்கோல் என்பது மன்னராட்சியின் அடையாளம். முடியாட்சியின் பயன்பொருள். குடியாட்சிக்கு இது பொருந்துமா என்னும் வினா, பல உள்ளங்களில் எழக்கூடும். பொருந்தும் என்பதே விடை. எப்படி?

முன்னமே கண்டதுபோல், செங்கோல் என்பது வெறும் பொருள் மட்டுமன்று; அப்பொருள் காட்டும் மெய்ப்பொருள்; அடையாளத்தில் விரியும் அறுதிப் பொருள். மனித சமுதாய வளர்ச்சியில், முதன்முதலாகத் தொடங்கிய ஆளுகை முறை, மன்னர் முறையேயாகும். பத்துப் பதினைந்து பேர் அடங்கிய சிறு கூட்டங்கள் இருந்தபோது, இக்கூட்டத்தில் ஒருவர், கூட்டத்தின் தலைவராக இருந்து கூட்டத்தை வழிநடத்தியிருப்பார். பின்னர்? கூட்டத்தின் அளவு பெரிதாகியிருக்கும். காலப் போக்கில், இடம் பார்த்துக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு, கூட்டங்கள் ஆங்காங்கே தங்கியிருக்கும்.

இடத்தையும் கூட்டத்தையும் பாதுகாத்துப் பராமரிக்கும் தலைமை முறை தோன்றியிருக்கும். இதுவே, அரச முறையாக, மன்னராட்சி முறையாக விரிவடைந்து மலர்ந்திருக்கும். பின்னர், தம் குடிகளின் எண்ணங்களையும் சேர்த்துக் கொண்டு அந்தத் தலைவர் ஆளுகையைத் தொடர்ந்தபோது, குடியாட்சியின் வித்துகள் இடப்பட்டிருக்கும். முடியாட்சி முறையைத் தொடர்ந்து வந்ததுதான் குடியாட்சி முறை. எனவே, மன்னராட்சியோடு தொடர்புகொண்ட சொற்கள் சில, ஆளுகையையும் வெற்றியையும் குறிப்பதற்கான அடையாளங்களாகவே அமைந்துவிட்டன. ‘வாகை சூடினார்’ என்கிறோம்; வெற்றி பெற்றார் என்பதையே இவ்வாறு கூறுகிறோம். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றாலும்கூட, ‘மேட்சில் இந்த அணி வாகை சூடியது’ என்று அறிவிக்கவில்லையா? வாகை என்பது ஒரு மலர்.

- முனைவர் சுதா சேனஷயன், ஜி 20 இருக்கை பேராசிரியர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்