அ
டுத்த ஆண்டில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.60 கோடியை ஒதுக்கியுள்ளது. ஆனால் 2017-ல் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மாநாடு இது. ஏன் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது?
2015 செப்டம்பர் 9,10 தேதிகளில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின்போதே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு தொடர்ந்து நடத்தப்படும் என்றார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதன்படி 2017-ல் நடத்தி இருக்க வேண்டும். திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி, அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போகிறது என்பதே இது தொடர்பாக எந்த அக்கறையும் அரசுக்கு இல்லை என்பதைத்தான் காட்டுகிறது.
இந்திய அளவில் தொழில் துறை வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் மொத்த ஜிடிபி சுமார் ரூ.150 லட்சம் கோடி என்றால், தமிழ்நாட்டின் பங்களிப்பு மட்டும் சுமார் ரூ.13 லட்சம் கோடி. 2004 முதல் 2014-15 வரை தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சி வீதம் சராசரி 12.31%. இது 2015-16-ல் 7.11 %- ஆகக் குறைந்துள்ளது. உலக வங்கியின் தொழில் சூழல் அறிக்கைபடி தொழில் வளர்ச்சியில் 12-வது இடத்திலிருந்து 18-வது இடத்துக்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. இந்திய அளவில் பெரு நிறுவன வளர்ச்சி, தொழில் துறை வேலைவாய்ப்புகளில் முன்னிலையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால், 2015 அக்டோபர் 13-ம் தேதிக்குப் பின்னர் தமிழக தொழில் துறைக்கான எந்தப் புதிய அரசாணைகளும் வெளியிடப்படவில்லை என்பதைத் தமிழ்நாடு அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.
2015-ல் தொழில்துறைக்கு என அறிவிக்கப்பட்ட திட்டங்களில் சில திட்டங்கள் மட்டுமே தொழில் துறைக்கானவை. இதர அறிவிப்புகள் எல்லாம் அரசு நிறுவனங்களுக்கான தனிப்பட்டவை. அத்துடன், தொழில் துறைக்கு என்று அறிவிக்கப்பட்ட திட்டங்களும் அறிவிப்பு எனும் நிலையிலேயே உள்ளன. அரசு இணையதள தகவல்களின்படி உயிரித் தொழில்நுட்ப மூலதன முதலீட்டு நிதி உருவாக்க இறுதியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிதியம் உருவாக்கப்பட்டதா… நிதியத்தின் மூலதனம் எவ்வளவு? இதிலிருந்து பயனாளிகள் பயன்பெற்றுள்ளனரா என்கிற விவரங்கள் குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. 2015 அக்டோபர் 3-ல் வெளியிடப்பட்டுள்ள மூன்று அரசாணைகளின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர்கணினி மற்றும் பொறியியல் வடிவமைப்பு மையம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சரக்குப் பெட்டகப் பூங்கா அமைத்தல் போன்றவை அறிவிப்பு நிலையில்தான் உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என 110 விதியின்கீழ் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இதற்கான எந்தப் பணியும் நடக்கவில்லை. 2015-ல் நடத்தப்பட்ட சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களும், முதலீட்டு இலக்குகளும் முழுமையாக எட்டப்பட்டனவா? சுமார் ரூ.2.42 லட்சம் கோடிக்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் மாநாட்டில் கையெழுத்தாயின. இதில் 40% ஒப்பந்தங்கள் தொழில் துறைக்கானவை. இதில் எத்தனை சதவீத முதலீடு கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளது என்கிற விவரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
மென்பொருள், வாகன உற்பத்தி, மருத்துவ சேவை சுற்றுலா, ஜவுளி, தோல் உற்பத்தி, மருந்து உற்பத்தி போன்றவற்றில் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகத் தமிழகம் உள்ளது. ஆனால் இவற்றுக்கான முதலீட்டுத் திட்டங்களை ஈர்ப்பதில் கடந்த ஓராண்டில் பல மெத்தனங்கள் நிகழ்ந்துள்ளன. வாகன உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ள சென்னையை, கடந்த ஆண்டில் இரண்டு மோட்டார் வாகன நிறுவனங்கள் புறக்கணித்துள்ளன. நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கல்கள் காரணமாகத்தான் கியா மோட்டாஸ் ஆந்திராவில் ஆலை அமைத்தது. ரூ.6,400 கோடி முதலீட்டை இந்த நிறுவனம் ஆந்திராவில் மேற்கொண்டது. நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். பல உதிரிபாக நிறுவனங்களும் அதைச் சார்ந்து தொடங்கப்பட்டிருக்கும்.
இஸூசூ நிறுவனமும் இந்தியாவில் பல இடங்களில் தொழில் சூழலை ஆராய்ந்த பின்னர்தான் ஆந்திராவுக்குச் சென்றது. ஆட்டோமொபைல் கேந்திரமான நகரத்தைத் தவிர்த்துவிட்டு ஒரு நிறுவனம் வேறு மாநிலத்துக்குச் செல்கிறது என்றால் ’அது அந்த நிறுவனத்தின் முடிவு’ என்பதாக மட்டும் குறுக்கிவிட முடியாது.
நூல் விலையேற்றம், ஜிஎஸ்டி போன்றவற்றால் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் தொழில்களும் கடும் நஷ்டத்தை நடப்பாண்டில் சந்தித்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் (2000 முதல் 2015) தமிழகத்துக்கு வந்த அந்நிய முதலீட்டு அளவு சுமார் ரூ.1.12 லட்சம் கோடி. அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஆண்டுக்கு 14% வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற இலக்கில் `விஷன் 2023` என்கிற திட்டத்தை அறிவித்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. விஷன் 2023-ன்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கபட்டிருக்க வேண்டும். எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு?
ஒரு மாநிலத்தின் தொழில் சூழல் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அங்கு உறுதியான அரசும், சுமுகமான சட்டம் ஒழுங்கும் இருக்க வேண்டும். அரசின் நிர்வாகச் சூழல் ஸ்திரமாக இல்லை என்பதால் கடந்த ஓர் ஆண்டில் தொழில் வளர்ச்சியும் சிறப்பாக இல்லை என்பதை மறுக்க முடியாது. 1960-ம் ஆண்டுகளில் இந்தியாவில் நான்காவது ஏழை மாநிலமான தமிழ்நாடு இருந்தது. தமிழக தொழில் வளர்ச்சியினால் கடந்த 55 ஆண்டுகளில் இரண்டாவது பணக்கார மாநிலமாக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால், தொழில் வளர்ச்சி பற்றி எந்த அக்கறையும் காட்டாத இந்த நிலை தொடருமெனில், தமிழகம் மீண்டும் 1960-காலகட்டத்திற்கே திரும்பிச் செல்லும் என்றே தோன்றுகிறது.
நீரை.மகேந்திரன்,
தொடர்புக்கு: maheswaran.p@thehindutamilco.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago