கர்நாடக முதலமைச்சர் நாற்காலியாருக்கு என்ற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்துவிட்டது.நீண்ட நெடிய இழுபறிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கும் சமரசங்களுக்கும் பிறகு முதலமைச்சர் நாற்காலியை மூத்த தலைவர் சித்தராமையாவுக்கும் துணை முதலமைச்சர் பதவியை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கும் கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை.
அதிகாரம் உண்டா? சித்தராமையா முதலமைச்சர் ஆனதில் பெரிய வியப்பில்லை. ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்தவர். பழுத்த அனுபவசாலி. மக்கள் செல்வாக்கு நிரம்பியவர். எனினும், முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர், பொருத்தமானவர் என்று கருதப்பட்ட, முதலமைச்சர் பதவி தனக்கு வேண்டும் என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் கட்சித் தலைமைக்கு வெளிப்படுத்திய, முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டால் கட்சிக்குள் கலகம் செய்யக்கூடிய அளவுக்குச் செல்வாக்குப் பெற்ற தலைவரான டி.கே.சிவக்குமார், துணை முதலமைச்சர் பதவிக்குச் சம்மதித்து, எப்படிச் சமாதானம் அடைந்தார் என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம்.
உண்மையில், முதலமைச்சர் பதவிக்குப் பதிலாகத் துணை முதலமைச்சர் பதவிக்கு ஏதேனும் சிறப்பு அதிகாரம் இருக்க வேண்டும்; அல்லது, சிறப்பு அதிகாரம் தரப்படும் என்று கட்சித் தலைமை வாக்குறுதி அளித்திருந்தால் மட்டுமே டி.கே.சிவக்குமார் அதற்குச் சம்மதித்திருப்பார் எனில், துணை முதலமைச்சர் பதவிக்கு என்ன அதிகாரம் என்ற கேள்வி இங்கே எழும். அதற்கான விடையை நாம் சட்டப் புத்தகங்களில் தேட முடியாது. மாறாக, கடந்த கால அரசியல் வரலாற்றில் இருந்துதான் தேடியெடுக்க வேண்டும்.
சமாதான ஏற்பாடு: இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் துணை முதலமைச்சர் பதவிகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் பெரிய தலைவர்களும் இருந்துள்ளனர். ஆந்திரப் பிரதேசத்தின் நீலம் சஞ்சீவ ரெட்டி, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, கர்நாடகத்தின் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜே.ஹெச்.பட்டேல், சித்தராமையா, எடியூரப்பா, பிஹாரின் சுஷீல் குமார் மோடி, குஜராத்தின் கேஷுபாய் பட்டேல், தமிழ்நாட்டின் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் என்று பலரும் துணை முதலமைச்சர்களாக இருந்துள்ளனர்.
» ரூ.2000 நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
» சிந்தனை வெளியைக் காட்டும் சாளரங்கள் - 3 | ஜார்ஜோ அகாம்பென்: மனிதர், விலங்கு, விடுதலை
அவர்கள் துணை முதலமைச்சர் பதவிக்கு வருவதற்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழலில் கூட்டணி ஆட்சி அமையும்போது, கூட்டணிக் கட்சிக்கு முதலமைச்சர் பதவி தர முடியாத நிலையில், துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டிருக்கிறது. சமபலம் வாய்ந்த தலைவர்கள் கட்சிக்குள் இருக்கும்போது, ஒருவரை முதலமைச்சர் ஆக்குவதால் மற்றவர் அதிருப்தியடைந்து உள்கட்சி மோதல் ஏற்படாமல் தடுக்கவும், கட்சி உடைவதைத் தடுக்கவும் துணை முதலமைச்சர் பதவி தரப்படுவது உண்டு.
ஆனால், எந்தக் காரணத்துக்காக ஒருவருக்குத் துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டாலும் அந்தப் பதவிக்கென்று எந்தவொரு சிறப்பு அதிகாரமும் கிடையாது. இவ்வளவு ஏன், ஊதியத்தில்கூட எந்தவொரு சலுகையும் கிடையாது. அப்படித்தான் சட்டங்கள் சொல்கின்றன.
ஆம், இந்திய அரசமைப்பு மாநில முதலமைச்சர்களுக்கு என்று பல்வேறு அதிகாரங்களை வரையறுத்திருக்கிறது. அமைச்சர்களைத் தேர்வுசெய்வது, அமைச்சரவைக் கூட்டங்கள், அரசின் கொள்கை முடிவுகள், நிதிசார் முடிவுகள், திட்டங்கள் என்று மாநில முதலமைச்சரின் அதிகாரங்கள் அரசமைப்பில் தெளிவாகவும் விரிவாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்திய அரசமைப்பில் துணை முதலமைச்சர் பதவி என்கிற ஒன்றே கிடையாது.
அமைச்சர் பதவிக்கு நிகரானது: என்றாலும், அரசியல் வசதிக்காகவும் நிர்வாகக் குழப்பத்தைத் தவிர்க்கவும் அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தவும் அவ்வப்போது துணை முதலமைச்சர் பதவிகள் தரப்படுவது வழக்கமாகிவிட்டது. பிஹாரில் முதலமைச்சர் நிதீஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வியைத் துணை முதலமைச்சராக ஆக்கியிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அரசில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் துணை முதலமைச்சராக இருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தில் ஐந்து துணை முதலமைச்சர்களை நியமித்திருக்கிறார் முதலமைச்சர் ஜெகன் மோகன்.
இவர்கள் எல்லோருமே துணை முதலமைச்சர்கள்தான் என்றபோதும், அரசமைப்புச் சட்டத்தின்படி அமைச்சர் பதவிக்கு இணையானவர்களே. அமைச்சர்களைவிடக் கூடுதலாக எந்தவொரு அதிகாரமும் துணை முதலமைச்சர்களுக்குக் கிடையாது.
இது மாநிலத் துணை முதலமைச்சர்களுக்கு மட்டுமானது அல்ல; இந்தியாவின் துணைப் பிரதமர்களுக்கும்கூடப் பொருந்தும். ஆம், இந்தியாவின் துணைப் பிரதமர்களாக சர்தார் வல்லபபாய் படேல், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜகஜீவன் ராம், ஒய்.பி.சவான், தேவிலால், எல்.கே.அத்வானி என்றுபலரும் வெவ்வேறு காலகட்டங்களில் இருந்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தில் அதிக உரிமையும் அதிகச் சலுகையும் தரப்பட்டதே தவிர, அதிக அதிகாரங்கள் தரப்படவில்லை. அப்படித் தரப்பட வேண்டும் என்று அரசமைப்பும் சொல்லவில்லை. இந்தியாவின் துணைப் பிரதமருக்கே இதுதான் நிலை என்றால், மாநிலத்தின் துணை முதலமைச்சரின் அதிகாரம் எந்த அளவுக்கானது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
அரசமைப்பின்படி, துணை முதலமைச்சர்களுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்றபோதும் அரசியல்ரீதியாகச் சில அதிகாரங்கள் இருந்ததையும் தரப்பட்டதையும் அல்லது வலிந்து எடுத்துக்கொள்ளப்பட்டதையும் சில உதாரணங்கள் வழியே புரிந்துகொள்ள முடியும்.
பிஹார் துணை முதலமைச்சராக இருக்கும் தேஜஸ்வி, அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமாரை மீறி எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பேசுவதற்குக்கூட துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவீஸிடம் அனுமதி கோரினார். இதுதான் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் பதவிகளுக்கான அரசியல் அதிகாரம்.
கைக்கொள்ளப்படும் அதிகாரம்: நமக்கு நெருக்கமாக உதாரணம் ஒன்றைச் சொன்னால் இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக 2009இல் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலினிடம், கருணாநிதியின் பணிச் சுமையைப் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டது.
அப்போது முதலமைச்சர் கருணாநிதி வசம் இருந்த பொது நிர்வாகம் மட்டுமின்றி தொழில் துறை, சிறுபான்மையினர் நலன், உள்ளாட்சி உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட துறைகள் துணை முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தரப்பட்டன. அப்போது அவர் ‘அதிகாரம்நிரம்பிய துணை முதலமைச்ச’ராக இருந்தார்.
பின்னாளில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானபோது ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். நிதி உள்ளிட்ட முக்கியமான துறைகள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வசம் தரப்பட்டிருந்தன. என்றாலும்கூட, “பிரதமர் மோடி சொன்னதால்தான் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேனே தவிர, அந்தப் பதவிக்கு எந்தவொரு அதிகாரமும் கிடையாது” என்று அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
ஆக, துணை முதலமைச்சர் பதவிக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதை அந்தப் பதவியில், எத்தகைய சூழலில் யார் அமர்ந்திருக்கிறார்கள் என்பதே தீர்மானிக்கின்றது.
கர்நாடகத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு என்ன அதிகாரம் என்பது அவர் கையாளும் துறைகள், அவரது ஆதரவாளர்கள் வசமிருக்கும் துறைகள், அவர் பக்கம் திரண்டு நிற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய அம்சங்களே தீர்மானிக்கும். அந்த வகையில் கர்நாடகத்தில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இடையிலான அதிகார யுத்தம் முடிவுக்கு வரவில்லை, இனிமேல்தான் ஆரம்பம்!
To Read in English: Is Deputy CM just a paper tiger?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago