ச
த்தமில்லாமல் நிகழ்கின்றன, வகுப்பறைக்குள் கண்டுபிடிப்புகள்! ‘கர்வமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத கண்டுபிடிப்பாளர்கள்’ என ஆசிரியர்களைப் பாராட்டுவது வழக்கம். குழந்தைகளின் மனவுலகில் நுழைந்து உண்மைகளையும் தேவைகளையும் கண்டறியும் வாய்ப்பு பெற்றவர் அல்லவா ஆசிரியர்? முதன்முதலாக, கரும்பலகை வகுப்பறைக்குள் வந்தது ஒரு புரட்சிதான். கரும்பலகையைக் கண்டுபிடித்தவரும் ஓர் ஆசிரியர்தான்.1801-ல் ஸ்காட்லாந்தின் புவியியல் ஆசிரியர் ஜேம்ஸ் பில்லன் கண்டுபிடித்ததுதான் பாடத்தைக் காதிலிருந்து கண்ணுக்கு நகர்த்திய அந்த ‘கறுத்த தேவதை’!
அறிவுக் கூர்மைப்பட்டும், ஆசிரியர் மாணவர் உறவு விசாலப்பட்டும் விளங்கும் வகுப்பறையில் கண்டுபிடிப்புக்குப் பஞ்சமிராது. அறிவு, உறவு இரண்டுமின்றி ‘சடங்கு’களே முதன்மைப்பட்ட உயிரற்ற வகுப்பறையில், கண்டுபிடிப்பு மலர்வதேது?
‘பாரதியார் எட்டயபுரத்தில் பிறந்தார்’ என ஒரு மாணவரை வாசிக்கச் சொல்லி, ‘பாரதியார் எங்கு பிறந்தார்?’ என்று மற்றொரு மாணவரிடம் கேள்வி கேட்டு, ஆசிரியர் நகர்த்தும் வகுப்பறை, சடங்கு சார்ந்த வகுப்பறைக்கு ஓர் உதாரணம். தகவல்களைத் திணிக்கும் வகுப்பறை அல்ல - தகவல்கள் உயிர்பெறும் வகுப்பறைதான் இன்றைய தேவை.
தலைகீழ் வகுப்பறை
தகவல்களைத் தருவது, தந்த தகவல்களை மாணவர்கள் வாங்கிக்கொண்டார்களா என்று கண்காணிப்பது ஆகிய இரண்டும் ‘சடங்கு வகுப்பறை’யின் அடிப்படைகள்.
இந்த அடிப்படைகளிலிருந்து விலகிப் பிறந்ததுதான் ‘தலைகீழ் வகுப்பறை’ (Flipped Classroom). ‘மறுபுறம் திருப்பப்பட்ட வகுப்பறை’ என்றும் இதனைத் தமிழில் சொல்வதுண்டு. தலைகீழ் வகுப்பறையைக் கண்டுபிடித்தவர்களும் ஆசிரியர்கள்தான். ஜோனதன் பெர்க்மேன், ஆரன் சாம்ஸ் ஆகிய இரு அமெரிக்கப் பள்ளி ஆசிரியர்கள். தகவல்களைக் கொட்டும் ஆசிரியரின் வாயின் வேகத்தோடு கூட வர முடியாமல் தடுமாறும் மாணவர்களுக்கும், கலை மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் பெற்ற திறன்கள் காரணமாக வகுப்புக்கு அடிக்கடி வர முடியாமல் போகும் மாணவர்களுக்கும் என்ன செய்யலாம் என யோசித்தபோது பிறந்த வகுப்பறை இது.
‘வெறும் அடிப்படைத் தகவல்களைத் தரவா நானும் இந்த வகுப்பறையும்?’ என்ற கேள்விகளையும் எழுப்பியவர்கள் இந்த ஆசிரியர்கள். அடிப்படைத் தகவல்களை வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் கற்றுக்கொண்டு வந்து, தகவல்கள் மீதான ஐயங்கள் , புரிதல்கள் குறித்த உரையாடலை இங்கு மேற்கொண்டால் வகுப்பறை இன்னும் வெளிச்சம் பெறுமே என்ற சிந்தனையையும் அவர்கள் முன்வைத்தார்கள்.
அறிவியல், கணிதப் பாடங்களை 5 முதல் 10 நிமிடங்கள் கொண்டு சிறுசிறு வீடியோக்களாக்கி யூ டியூபில் அவர்கள் பதிவேற்றம் செய்தார்கள். மாணவர்கள் வீட்டில் அமர்ந்து ஓய்வான நேரத்தில் வீடியோக்களைப் பார்த்தனர். அவரவர் வேகத்துக்கு நிறுத்தி நிறுத்திப் பார்த்தனர். அடுத்த நாட்களில் தொடர்ந்து வகுப்பறையில் தகவல்கள்மீது உரையாடல். ஒரு மாணவர் உரையாடலை நாளை தொடங்கலாம். இன்னொரு மாணவர் நான்கு நாட்கள் கழித்துத் தொடங்கலாம். வகுப்பறை காத்திருந்தது.
தலைகீழ் வகுப்பறையின் பயன்கள் உடனடியாக உலகின் பார்வைக்கு வந்தன. தெளிவாகப் புரிந்துகொள்வதற்கும், நிறையக் கற்பதற்கும் வகுப்பறையில் நேரம் கிடைத்தது. ஒவ்வொருவரும் அவரவர் வேகத்தில் கற்றுவர முடிந்தது. தகவல் தரும் வகுப்பறை உரையாடும் வகுப்பறையாக மாறியது. கல்வியைச் சுயமாய்த் தேடிப் பெறும் பொறுப்புணர்வு மாணவர்க்குக் கூடியது.
தகவல் தருபவர் என்ற நிலையிலிருந்து, தகவல்மீது வெளிச்சம் பாய்ச்சுபவர் என்ற நிலைக்கு ஆசிரியர் மதிப்பு உயர்ந்தது. மிகமிக முக்கியமாக ஆசிரியர் வடிவமைக்கும் பாடங்களைப் பெற்றோரும் சமூகத்தின் அறிவாளிகளும் கண்டு சரியான தலையீடுகளைச் செய்ய முடிந்தது. அதாவது, சமூகம் வகுப்பறைக்குள் வந்தது.
எது பிரச்சினை?
‘அமெரிக்காவில் முடியும்; நம்மால் வீடியோக்களை உருவாக்க முடியுமா?’ என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. அமெரிக்காவிலேயே எல்லா ஆசிரியர்களும் வீடியோக்களைப் பயன்படுத்துவதில்லை. வகுப்பறைக்கு வெளியே கற்க பல வழிகள் இருக்கின்றன. நூலகங்கள் இருக்கின்றன; சில வீடுகளில் பெற்றோர் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ‘சமூகத்தின் ஆசிரியர்கள்’ இருக்கிறார்கள். தகவல் தெளிவோடும் பகிர்ந்துகொள்ளும் ஆர்வத்தோடும் இருக்கக் கூடியவர்கள் இவர்கள். சிறிய தேடலிலும் வந்து குவிவார்கள். இன்று, வெளியிலிருந்து பள்ளிக்குள் வந்து குழந்தைகளோடு குழந்தைகளாய்க் கலந்துகொண்டு பாட்டு, கதை, நாடகம், விளையாட்டு என்றெல்லாம் அட்டகாசமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்கள் சமூகத்தின் ஆசிரியர்கள்தான்.
வகுப்பறைக்கு வெளியே என்றால் ‘காசு கொடுத்து டியூஷன்’ என்றிருக்கும் அவமதிப்பைக் களையக் கூடியவர்கள் இவர்கள். இவையெல்லாம் போக, இருக்கவே இருக்கிறது ‘மாணவர்கள் கூட்டாக உட்கார்ந்து உரையாடிக் கற்கும் முறை; (Peer Group Learning).
வாய்ப்புகள் அல்ல பிரச்சினை. வகுப்பறையின் பழைய அடிப்படைகளை மாற்ற விரும்பாத மனத்தடைதான் பிரச்சினை.
சடங்குகளா.. விவாதங்களா?
ஜோனதன் பெர்க்மேனும் ஆரன் சாம்ஸும் அறிவியல், கணிதப் பாடங்களில் தொடங்கினார்கள். வரலாறு மற்றும் மொழிப் பாடங்களில் நாம் தொடங்கலாம். பாடத்திட்டத்தில் மாற்றம் காண நிபுணர்களும் ஆசிரியர்களும் இணைந்து உழைத்துவரும் காலம் இது. மாணவர்கள் வெளியே கற்றுக்கொண்டு வந்து வகுப்பறையில் அது குறித்து விவாதிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் ஒரு சிறு பகுதியையாவது வடிவமைக்க வேண்டும். சடங்குகள் சூழ்ந்த வகுப்பறை, விவாதங்கள் நிறைந்த வகுப்பறையாக மாற வேண்டும். ஆசிரியர்கள் நினைத்தால் முடியாதது எது?
- ச. மாடசாமி,
ஓய்வுபெற்ற ஆசிரியர்,‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: smadasamy1947@gmail.com
செப்டம்பர்-5 ஆசிரியர் தினம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago