அனிதாவுக்கு நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழக் கூடாது!- பிரின்ஸ் கஜேந்திரபாபு பேட்டி

By ஆசை

னிதாவின் தற்கொலை, சமூக நீதியை நோக்கிய பயணம் கேள்விக்குறியாகியிருப்பதன் அடையாளம். இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் முன்நின்றுகொண்டிருப்பவரும், அனிதாவின் சட்டப் போராட்டத்தில் துணைநின்றவருமான கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவுடனான உரையாடலிலிருந்து…

அனிதாவின் தற்கொலை, தனது கனவு நிறைவேறவில்லை என்பதால் மட்டும்தானா?

அனிதா எப்போதுமே தன்னைத் தனி நபராக வெளிப்படுத்திக்கொண்டதில்லை. குழுமூரின் சொத்தாகவே தன்னைக் கருதிக்கொண்டார். குழுமூர் கிராமத்தின் முதல் மருத்துவர் என்றே அவ்வூர் மக்கள் அவர் பெற்ற மதிப்பெண்களை வைத்து அவரைப் பார்க்கத் தொடங்கினர். ஏன், அனிதா மருத்துவர் ஆகியிருந்தால் மற்றொரு முத்துலட்சுமி ரெட்டியாக உருவாகியிருக்கவும் வாய்ப்பிருந்தது. அந்த அளவுக்கு உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர் அவர். அவர் உச்ச நீதிமன்றப் படியேறியதும் தன்னைப் போன்ற பிற மாணவர்கள் அனைவரின் பிரதிநிதியாகத்தான். ஆனால், அவரது கனவு காற்றுடன் கரைந்துவிட்டது.

நீட் தேர்வு விவகாரம் ஏற்படுத்தியிருக்கும் மிகப் பெரிய பாதிப்பாக, இதோ 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவை இழந்து நிற்கிறோம். ஒடுக்கப்பட்ட, ஏழைக் குடும்பத்திலிருந்து ஒரு பெண் மருத்துவராக முடியும் எனும் வாய்ப்பு மறுக்கப்பட்டதன் விளைவு இந்த மரணம் என்றே சொல்லலாம்.

நீட் விவகாரத்தில் எந்தெந்த வகையிலெல்லாம் தமிழகம் ஏமாற்றப்பட்டிருக்கிறது?

நீட் பிரச்சினையில் தமிழகம் எதிர்கொள்ள நேர்ந்த ஏமாற்றங்களைப் பட்டியலிட்டால், அனிதாவின் இழப்பின் வலி எத்தகையது என் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.

சென்னை செய்தியாளர்களின் சந்திப்பின்போது தமிழ்நாடு அரசு ஓராண்டு விலக்கு கோரினால், அது ‘உரிய முறையில்’ பரிசீலிக்கப்படும் என்று கூறினார் மத்திய வர்த்தகத் துறையின் அப்போதைய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன். இது தமிழ்நாட்டில் மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மத்திய அரசு திடீரென்று தமிழ்நாட்டுக்கு விலக்களித்தால் பிற மாநிலங்களும் கேட்கும்; எனவே, தமிழ்நாடு அரசு ஓர் ஆண்டுக்கு விலக்கு கோரி கொண்டுவரும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் பரிசீலனையில் மத்திய அரசு இல்லை என்று பிறகு கூறியது பெரும் அதிர்ச்சி அளித்தது. சட்டப்படி இத்தகைய காரணத்துக்காக விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அரசு சொல்லவில்லை.

மாறாக, தமிழகத்துக்கு விலக்கு அளித்தால் பிற மாநிலங்களும் கேட்கும் என்றே காரணம் சொன்னது. இதை எவ்வாறு சட்டப்படி ஏற்க இயலும்? தமிழ்நாட்டுக்கு விலக்களித்தால் பிற மாநிலங்கள் கேட்கும் என்பது, ஓராண்டுக்கான அவசரச் சட்டம் எனில் பரிசீலிப்போம் என்று கூறியபோது நிர்மலா சீதாராமனுக்குத் தெரியாதா?

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் பங்கைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடவடிக்கையைத் தமிழக அரசு உடனே தொடங்க உத்தரவிட வேண்டி ‘நீட்’ மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரண்டு தரப்பினருக்கும் பாதிப்பில்லாத ஒரு தீர்வுடன் வரும்படி உச்ச நீதிமன்றம் அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், அப்படி ஒரு தீர்வு எட்டப்படவில்லை.

கடைசியில் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கினால் பல மாதங்களாக அலைக்கழிக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உச்ச நீதிமன்றம் யோசித்துப்பார்த்திருக்க வேண்டுமல்லவா? சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்களைத்தானே தங்கள் தீர்ப்புகளின் முதன்மைப் பயனாளிகளாக நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்!

தமிழக அரசின் மெத்தனப் போக்கையும் விட்டுவிட முடியாதல்லவா?

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனே ‘ரிட்’ மனுத் தாக்கல் செய்திருக்கலாம். தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், சட்டப்படியாகத் தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் உரிமையையும் எடுத்துக் கூறி நியாயம் பெற போராடியிருக்க வேண்டும். தற்போது தனியார் பல்கலைக்கழகத்துக்கு செப்டம்பர் 20 வரை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழக அரசும் கோரிப் பெற்றிருக்க முடியாதா? ஆட்சியையும் பதவிகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் காட்டிய அக்கறையில் பாதியளவாவது நீட் விவகாரத்தில் தமிழக அரசு காட்டியிருந்தால் இன்று அனிதாவை இழந்திருக்க மாட்டோம்.

ஆனால், அனிதாவை இழந்துவிட்டோம்! இனி என்ன?

அனிதாவுக்கு நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழக் கூடாது. அதுதான் முக்கியம்! இந்த ஆண்டு நீட் தேர்வால் பாதிப்புக்கு உள்ளான மாணவர்களுக்கு நீதி கிடைக்க மருத்துவ மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீட் மதிப்பெண்ணால் தனியார் கல்லூரியில் சேர வேண்டிய சூழலில் உள்ள மாணவர்களின் தனியார் கல்லூரி/பல்கலைக்கழகக் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும். தமிழகச் சட்டமன்றம் இயற்றி அனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களுக்கு உடனடியாக மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தர அனைத்து வகை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் ஆட்சியே மக்களாட்சி. தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைக் காப்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் மங்கிவிடவில்லை என்பதை உணர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். அதுதான் அனிதாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்!

- ஆசை, தொடர்புக்கு:

asaithambi.d@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்