திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு 1973-ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கப்பட்ட அதிமுக அந்தத் தொகுதியில் போட்டியிடும் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர். வேட்பாளரின் செல்வாக்கு, சாதி பலம் என்பன உள்ளிட்ட அம்சங்களைக் கணக்கிட்டுப் பார்த்த எம்ஜிஆர், மாயத்தேவரை வேட்பாளராக அறிவித்தார்.
அப்போது தனக்கான சின்னத்தைத் தேர்வுசெய்ய மதுரை மாவட்ட ஆட்சியரை அணுகினார் வேட்பாளர் மாயத்தேவர். அப்போது அவரிடம் 16 சுயேச்சை சின்னங்கள் காட்டப்பட்டன. அவற்றிலிருந்து இரட்டை இலையைத் தேர்வுசெய்தார் மாயத்தேவர். அந்த இடைத்தேர்தலில் மாயத்தேவர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அப்போது அண்ணா கண்ட உதயசூரியன் சின்னம் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது.
இரட்டை இலை அதிகாரபூர்வமான சின்னமாக மாறியதும் அதைச் சுவர்களில் வரைந்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தினர் தொண்டர்கள். மக்களைச் சந்திக் கும் போது கைகூப்புவதுபோல இரட்டை விரல்களைக் காட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டார் எம்ஜிஆர். அதே வேகத்தில் 1974-ல் கோவை மேற்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, அதிமுக வேட்பாளரான அரங்கநாயகம் இரட்டை இலையில் வெற்றிபெற்று முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். 1977-ல் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அஇஅதிமுக.
எம்.ஜி.ஆரையே வீழ்த்திய இரட்டை இலை
இந்த இடத்தில் இரட்டை இலை சின்னத்தின் வீரியத்தைப் புரிந்துகொள்ள ஒரு சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும்.
சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அலங்கியம் பாலகிருஷ்ணனை அறிவித்திருந்தார் எம்.ஜி.ஆர். ஆனால், அய்யாசாமி என்பவருக்கு இரட்டை இலை சின்னத்துக்கான அதிகாரபூர்வக் கடிதம் சென்றுவிட்டது. அதனால் அய்யாசாமி அதிமுக வேட்பாளராகவும் பாலகிருஷ்ணன் சுயேச்சை வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.
விஷயத்தைத் தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர், தனது வேட்பாளர் அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னத்தில் வாக்களியுங்கள்… இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்தார். ஆனால் முடிவுகள் வெளியானபோது, இரட்டை இலையில் போட்டியிட்ட அய்யாசாமியே வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர். நிறுத்திய பாலகிருஷ்ணன் தோற்றுப்போனார்.
எம்.ஜி.ஆரையே வீழ்த்தும் வல்லமை கொண்டது இரட்டை இலை. அதனால்தான் கட்சியின் வேட்பாளருக்குச் சின்னம் ஒதுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே என்று அதிமுகவின் அமைப்பு விதி கறாராக உருவாக்கப்பட்டது. இந்த விதிதான் சமீபத்தில் அரவக்குறிச்சி உள்ளிட்ட இடைத்தேர்தல்களின்போது, ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகையைப் பதியவைத்து, சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிற்காமல் சென்றுகொண்டிருந்த இரட்டை இலையின் வெற்றிப் பயணம் 1980 மக்களவைத் தேர்தலில் தடம் புரண்டது. அந்தத் தேர்தலில் கருணாநிதி - இந்திரா காந்தி கூட்டணி இரட்டை இலையை அடியோடு துடைத்துப் போட்டது. ஆம், 24 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு வெறும் இரண்டு தொகுதிகளே கிடைத்தன.
இரட்டைப் புறாவும் சேவலும்
எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு அதிமுக ஜானகி பிரிவு, ஜெயலலிதா பிரிவு என்று இரண்டாக உடைந்தது. 1989 சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகளுமே இரட்டை இலை சின்னத்துக்குச் சொந்தம் கொண்டாடின. அப்போது இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், ஜானகி பிரிவுக்கு இரட்டைப் புறாவையும் ஜெயலலிதா பிரிவுக்கு சேவலையும் சின்னமாகக் கொடுத்தது. இரட்டை இலை இல்லாத அந்தத் தேர்தலின் முடிவுகள் ஜானகி, ஜெயலலிதா இருவருக்கும் பாதகமாகவே வந்தன. அதிலும் ஜானகி அணி படுதோல்வியைச் சந்தித்தது.
எதிர்காலத்தை யோசித்து, இரண்டு அணிகளும் அதிகாரபூர்வமாக இணைந்தன. இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கும் வகையில் தேர்தல் ஆணையத் தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் திரும்பப் பெறப் பட்டன. இரட்டை இலை சின்னம் மீண்டும் அஇஅதிமுகவுக்கே தரப்பட்டது. சின்னம் மீண்டும் கிடைத்த பிறகு நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றது. பின்னர் நடந்த 1991 சட்டமன்றத் தேர்தலிலும் அந்த வெற்றி தொடர்ந்தது.
ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சென்னை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் நினைவிடத்தை மாற்றியமைத்ததோடு, அதன் நுழைவாயிலில் பிரம்மாண்ட இரட்டை இலை சின்னத்தை வைத்தார். என்ன ஒன்று, தலையைக் கவிழ்த் துப் பார்த்தால் மட்டுமே அந்த இரட்டை இலையைப் பார்க்க முடியும். இரட்டை இலை சின்னத்தில் அருப்புக்கோட்டை, மதுரை மேற்கு, ஆண்டிப்பட்டி என்று மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். மூன்று முறையும் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், ஜெயலலிதா இரண்டாவது தேர்தலிலேயே பர்கூரில் தோல்வியடைந்திருந்தார்.
எல்லா தொகுதிகளிலும் இலை
அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை அதிமுக வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கும் ஒதுக்குவது ஜெயலலிதா காலத்தில் தீவிரம் பெற்றது. குறிப்பாக, 2011 சட்டமன்றத் தேர்தலில் சரத்குமார், தனியரசு, செ.கு.தமிழரசன் போன்றோர் இரட்டை இலையிலேயே வெற்றிபெற்றனர்.
பின்னர் 2014 மக்கள வைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு வழங்காமல், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம் இருக்கும் வகையில் அதிமுக வேட்பாளர்களையே நிறுத்தினார். எம்.ஜி.ஆர். காலத்தில்கூட எடுக்கப்படாத இந்தத் துணிச்சலான முயற்சிக்குத் தமிழக மக்கள் பிரம்மாண்ட மான ஆதரவைக் கொடுத்தனர். 39 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது.
இலைக்கு மரியாதை
அப்படியொரு பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்த இரட்டை இலைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், எம்.ஜி.ஆர். சமாதியில் இருந்த கவிழ்க்கப்பட்ட இரட்டை இலையை நீக்கிவிட்டு, சற்றே உயரத்தில் இரட்டை இலையை இடம்பெறச் செய்தார் ஜெயலலிதா. அப்போது அரசியல் கட்சியின் சின்னத்தை அரசு செலவில் பொறித்ததற்கு எதிராகப் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதில் ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், “எம்ஜிஆர் சமாதியில் பொருத்தப்பட்டிருப்பது இரட்டை இலை சின்னம் அல்ல. பறக்கும் குதிரை. அந்தக் குதிரையின் மேம்படுத்தப்பட்ட சிறகுகளைத்தான் இரட்டை இலை என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்” என்றார். இன்றுவரை புரிபடாத புதிர் இது.
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தமாகா உள்ளிட்ட பல கட்சிகளும் விரும்பின. ஆனால், இரட்டை இலையில் போட்டியிடத் தயங்கி ஒதுங்கின. இறுதியாக, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னமே இருக்கும் வகையில் வேட்பாளர்களை அறிவித் தார் ஜெயலலிதா. அந்தப் பட்டியலில் கூட்டணிக் கட்சியினரும் இடம்பெற்றனர். அந்தத் தேர்தலில் அபார வெற்றி யைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அதிமுகவுக்குள் சிக்கல்கள் முளைத்தன. முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். பிறகு சிக்கல்கள் முளைக்கவே, ஓபிஎஸ் ராஜினாமா செய்து, சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோரினார். திடீரென சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவே, சசிகலாவுக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். பின்னர் ஓபிஎஸ் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினார்.
ஜெயலலிதா மரணத்தால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் தரப்பினர் இரட்டை இலைக்கு உரிமைகோரினர். அதற்கு சசிகலா தரப்பு மறுப்பு தெரிவிக்கவே, கால அவகாசத்தைக் காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்.
அத்தோடு, சசிகலா பிரிவுக்கு அஇஅதிமுக (அம்மா) என்றும் ஓ.பன்னீர்செல்வம் பிரிவுக்கு அஇஅதிமுக (புரட்சித்தலைவி அம்மா) என்றும் பெயர் கொடுத்தது. இரு பிரிவுகளுக்கும் முறையே தொப்பி, இரட்டை மின்கம்பம் சின்னங்களைக் கொடுத்தது. பின்னர் பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.
இலைக்கு வந்த இடியாப்பச் சிக்கல்
முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்க வேண்டுமானால், இரு அணிகளும் இணைய வேண்டும் அல்லது இரட்டை இலையை ஒருவர் பயன்படுத்திக்கொள்ள இன்னொருவர் சம்மதிக்க வேண்டும். இந்தச் சமயத்தில், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்துவிட்டதாகச் சொல்லி, இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தரப்பட்டிருந்த பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெறத் தயாராகிவிட்டனர் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும்.
இந்த இடத்தில்தான் அரசியலும் சட்டமும் எதிரெதிர் முனைகளில் நிற்கின்றன. இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்குக் கொடுக்க வேண்டும் என்றால், சின்னத்துக்கு உரிமை கோரிய சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என்ற இரண்டு தரப்பினரும் தத்தமது பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப்பெற வேண்டும் அல்லது இருவரில் ஒருவர் பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெற்று, அடுத்தவருக்குச் சின்னம் கிடைக்க வழிவிட வேண்டும்.
இங்கே சிக்கல் என்னவென்றால், ஓ.பி.எஸ். மட்டும் பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற்றால், இரட்டை இலை சின்னம் இன்னொரு பிரிவுக்குப் போகும். அந்த இன்னொரு பிரிவு, சசிகலா பிரிவு. ஆனால் அதை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஏற்க மாட்டார்கள். மாறாக, எடப்பாடி பழனிசாமியும் அவருடைய ஆதரவாளர்களும் பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப்பெற்றாலும், சசிகலா உள்ளிட்டோர் திரும்பப்பெறாததால், அது முழுமையான திரும்பப்பெறலாகக் கருதப்படாது. ஆகவே, சின்னம் விடுவிக்கப்படாது. அதிமுகவின் அமைப்பு விதிகளும் தேர்தல் ஆணையச் சட்டங்களும் சின்னங்கள் தொடர்பான சட்டங்களும் தெளிவாக இருக்கும் நிலையில், இரட்டை இலை எப்படி மீட்கப்படும் என்பது பெருங்கேள்வி. இந்த இடத்தில்தான் ‘டெல்லி தொழில்நுட்பம்’ தேவைப்படுகிறது. இங்கே ‘டெல்லி’ என்று நாம் குறிப்பிடுவது இந்தியத் தேர்தல் ஆணையத்தை மட்டும்தான்!
-ஆர்.முத்துக்குமார்,
எழுத்தாளர். ‘தமிழக அரசியல் வரலாறு’, ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
3 days ago