ரோஹிங்கியாக்களைக் கைவிடுவதுதான் இந்தியாவின் அறமா?

By ஷிவ் விஸ்வநாதன்

ப்படியொரு முடிவை அறிவிக்க, இதைவிட மோசமான ஒரு நேரம் இருக்க முடியாது. மியான்மரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பி ஓடி வந்துகொண்டிருக்கும் நேரத்தில், அவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்தும் முடிவிலிருந்து பின்வாங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்தியா என்ற கருணை மிக்க நாடு, ஜனநாயக நாடு, வந்தாரை வாழவைக்கும் நாடு என்ற சிந்தனை ஒரே வரியில் மாயமாக மறைந்துவிட்டது. ஏற்கெனவே நொந்துகிடக்கும் ரோஹிங்கியாக்களுக்கு அது பேரிடியாக நெஞ்சில் இறங்கியது. கருணை, அன்பு, அரவணைப்பு, மற்றவர்கள் மனம் நோகாமல் பேசும் பண்பு ஆகியவற்றையெல்லாம் கைவிட்ட - இதயம் கல்லான - அரசாக மாறிவிட்டோம். தேவையில்லாத அம்சங்களுக்கு முக்கியத்துவம் தரும் அதிகாரவர்க்கமும், எல்லைப்புறப் பாதுகாப்பை மட்டும் வலுப்படுத்த நினைக்கும் தேசிய ஆலோசனை நிபுணர்களும் உலக அரங்கில் வளர நினைக்கும் இந்தியாவுக்கு ரோஹிங்கியாக்கள் அவசியமில்லை என்று கருதியிருக்கலாம்.

வதைக்கப்பட்ட சிறுபான்மையினர்

‘சர்வதேசச் சமூகத்தின் கடைசி மனிதர்கள்’ என்று காந்தி கூறியவர்களுக்கு உதாரணம்தான் ரோஹிங்கியாக்கள். உலகிலேயே அதிகம் வதைக்கப்பட்ட சன்னி பிரிவைச் சேர்ந்த இந்த முஸ்லிம்கள் ரக்கைன் மாநிலத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றனர். மியான்மர் ராணுவத்தால் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். பவுத்த பேரினவாதிகளும் திட்டமிட்டு வதைக்கின்றனர். தார்மிகம், மனித உரிமைகள் என்ற விழுமியங்களை, ரோஹிங்கியாக்கள் படும் வேதனையைக் கண்டும் காணாமல் மெளனம் சாதிப்பதன் மூலம் நாசமாக்கிவிட்டார் ஆங் சான் சூச்சி.

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக மனித உரிமைகள் மீட்கப்பட அவர் நடத்திய நீண்ட காலப் போராட்டம்தான் அவருக்கு ‘அமைதி’க்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது. ரோஹிங்கியாக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்தால் அரசியல்ரீதியாகப் பின்னடைவு ஏற்படும் என்று அஞ்சுகிறார்.

ஒன்று மட்டும் நிச்சயம் - நேருவின் அரசோ, இந்திரா காந்தி யின் ஆட்சியோ இப்படியொரு முடிவை நிச்சயம் எடுத்திருக்காது. அவ்விருவருமே பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்தார்கள், எல்லைகளைத் திறந்து வைத்தார்கள். ஜவாஹர்லால் நேரு திபெத்துக்கு ஆதரவு தெரிவித்தார், தலாய் லாமா இங்கே வந்து தங்குவதற்குத் துணிச்சலாக அனுமதித்தார். அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் போன்றோர் மிரட்டியபோதும் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வந்த அகதிகளுக்குப் புகலிடம் அளித்தார் இந்திரா.

ரோஹிங்கியாக்களின் வாழ்க்கை பாழாகிப் பல ஆண்டுகளாகின்றன. “மியான்மர் சமூகத்தின் ஆதிகுடிகள் அல்ல ரோஹிங்கியாக்கள், பிற்காலத்தில் குடியேறியவர்கள்” என்று கூறி அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற அவர்கள்மீது தாக்குதலை நடத்துகிறது மியான்மர் ராணுவ அரசு. சுயாட்சியும் கலாச்சார அந்தஸ்தும் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. குடிமக்களாவதற்கான அனைத்து உரிமைகளையும் இழந்தனர். கல்வி, சுகாதாரம் மட்டும் மறுக்கப்படவில்லை, குடியுரிமைக்காகக் கோரிக்கை வைக்கும் உரிமைகூடத் தரப்படவில்லை.

மெதுவான வெளியேற்றம்

மியான்மர் ராணுவத்தாலும் பவுத்தப் பேரினவாதிகளாலும் நசுக்கப்பட்ட ரோஹிங்கியாக்கள் இந்தியா, வங்கதேசத்தை நோக்கி வெளியேறினர். இந்தியாவில் ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரளம் வரையில் குடியேறியுள்ளனர். சர்வதேசத் தரகர்கள் பல மடங்கு பணம் பெற்றுக்கொண்டு பல ஊர்களுக்கும் அவர்களை அனுப்புகின்றனர். போதை மருந்து கடத்துகின்றனர் என்று கூறி வங்கதேசம் ரோஹிங்கியாக்கள் வர முடியாமல் எல்லைகளை மூடிவிட்டது.

மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளுக்குப் படகுகளில் செல்ல முயன்றனர். இஸ்லாமிய நாடுகளான அவையும் அனுதாபமாக இல்லை. ‘அகதிகளை முடிந்த அளவு ஏற்றுக்கொண்டுவிட்டோம், இனி இடமில்லை’ என்று கைவிரித்துவிட்டன. சிரியா அகதிகளுக்கு சர்வதேசப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் கிடைத்த அனுதாபம், ரோஹிங்கியாக்களுக்குக் கிடைக்கவில்லை.

ரோஹிங்கியாக்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரம் ஓய வேண்டும் என்று போப்பாண்டவர் பிரான்சிஸ் விடுத்த வேண்டுகோளை யாரும் பொருட்படுத்தவில்லை. அன்னை தெரசாவின் கருணையும் தலைமைப் பண்பும் அரசுக்கு இல்லை. அவர் இருந்திருந்தால் ரோஹிங்கியாக்களை அரவணைத்திருப்பார். இன அழிப்பைச் சந்திக்கும் இத்தகைய எளிய மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பவர்கள் அதிகாரிகளாகத்தான் இருக்கின்றனர். அகதிகள் என்றால் அவர்கள் அரவணைப்புக்கு உரியவர்கள்.

ஆனால், சட்டவிரோதக் குடியேறிகள் என்று முத்திரை குத்திவிட்டால், அவர்களை எப்படி வேண்டுமானாலும் அலைக்கழிக்கலாம். முறைசாராப் பொருளாதாரத்தில் கொத்தடிமைகளாகத்தான் அகதிகள் நடத்தப்படுகின்றனர். ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்பதில் இணையமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதியாக இருக்கிறார். அவர்கள் இங்கே வாழ்வதற்கு அடிப்படையே இல்லை என்கிறார். மனிதாபிமானச் சட்டப்படியும் ஐ.நா. சபையின் மாநாடுகள் எடுத்த முடிவுகளின்படியும் இந்திய அரசின் நிலை சரியானதுதானா என்ற கேள்வி எழுகிறது.

ரோஹிங்கியாக்களும் மனிதர்கள்தான்!

எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கும் தேசிய மனித உரிமை கள் ஆணையம் இந்த முறை சுறுசுறுப்பாகி, ‘ரோஹிங்கியாக்களை ஏன் வெளியேற்றப் பார்க்கிறீர்கள், நான்கு வாரங்களுக் குள் பதில் அளியுங்கள்’ என்று இந்திய அரசைக் கேட்டிருக்கிறது. “அடிப்படை மனித உரிமைகள் என்பவை எல்லோருக்கும் பொதுவானவை; இந்தியக் குடிமக்களாக இருந்தாலும் இல்லா விட்டாலும் உரிமைகள் உண்டு” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதை மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த அறிவுரைகளும் வேண்டுகோள்களும் இப்போதைய அதிகாரவர்க்கத்திடம் செல்லுபடியாகாது; அது நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாத ஆபத்து, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஆகியவற்றைத்தான் ஆதரவற்ற மக்கள் விஷயத்திலும் முக்கியத்துவம் தந்து பேசும். ரோஹிங்கியாக்கள் வெளிநாட்டவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை; ஆனால் அவர்களும் மனிதர்கள்தான் என்று மனித உரிமைகள் ஆணையம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

ரோஹிங்கியாக்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாகிவிட்டது. அவர்கள் மியான்மருக்குத் திரும்பினால் உயிர் பிழைத்திருப்பதே நிச்சயம் இல்லை, அப்படியே உயிரோடு இருக்க முடிந்தாலும் வதைபடாமல் இருக்க முடியாது. இந்தியாவை எதிர்கொண்டிருப்பது தார்மிகப் பிரச்சினை. குடியுரிமை, சுதந்திரம் என்றால் என்னவென்று அது புரிந்துகொண்டிருக்கிறது என்பது தெரிய வேண்டும். ரோஹிங்கியாக்களை நாம் இப்போது கைவிட்டால், அகதிகளுக்கு நாம்தான் புகலிடம் என்ற கொள்கை யைக் கைவிட்டோம் என்பதே நிலைக்கும்.

பார்சிகள், திபெத்தியர்கள், ஆப்கானிஸ்தானத்தவர், யூதர்கள் என்று பலருக்குப் புகலிடம் அளித்துவிட்டு மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் ரோஹிங்கியாக்களைத் திருப்பி அனுப்புவது சரியல்ல. அரசின் இந்த முடிவுக்கு எதிராக மக்கள் அமைப்புகள் கிளர்ந்து எழும் என்று நம்புவோம்; ஆதரவற்றவர்களுக்குத் துணை நிற்பதே அறம் என்ற தேசத்தின் ஆன்மாவைக் காப்பாற்றுவதே இங்கே முக்கியம். இந்தியா எப்படிப்பட்டதாக இருந்தது என்பதே இப்போது மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் குழுக்கள் இனியும் வாய்மூடி மவுனிகளாக இருக்கப்போகின்றனவா? நம் அனைவருக்குள்ளும் ஒரு ரோஹிங்கியா இருக்கிறார், மறந்துவிடக் கூடாது.

-ஷிவ் விஸ்வநாதன், ஜிண்டால் குளோபல் சட்டக்கல்லூரி பேராசிரியர், இயக்குநர். சுருக்கமாகத் தமிழில்: சாரி,
©: ‘தி இந்து’ ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்