மரபணு நோயைப் பெருக்கும்அகமணத் திருமணங்கள்: என்ன தீர்வு?

By த.வி.வெங்கடேஸ்வரன்

மீபத்தில் இந்திய மற்றும் அமெரிக்க மரபணு ஆய்வாளர்கள் ஒரு ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகச் சொந்த சாதிக்குள்ளே திருமணம் செய்யும் போக்கின் விளைவாகப் பல சமூகங்களிடையே பல்வேறு மரபணு பரம்பரை நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன என்று அந்த ஆய்வு எச்சரிக்கை செய்கிறது.

குறிப்பிட்ட சாதிச் சமூகத்தில் மரபணு சார்ந்த பரம்பரை நோய்கள் இயல்பைவிட கூடுதலாக இருக்கின்றன எனவும் உள்ளபடியே அகமண உறவு காரணமாகவே இவை உருவாயின எனவும் ஹைதராபாதில் உள்ள சி.சி.எம்.பி. ஆய்வு நிறுவனத்தைss சார்ந்த ஆய்வளர்கள் நிறுவியுள்ளனர். சாதி என்பது சமூக நோய் மட்டுமல்ல சமூகத்தில் மரபணு நோயையும் கூடுதலாக்கிப் பொதுச் சுகாதார ஆபத்தையும் ஏற்படுத்துகிறது என்று சுட்டுகிறது இந்த ஆய்வு.

நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் மரபியல் நோய் ஆபத்து குறித்து நாம் ஏற்கெனவே அறிவோம். இந்த ஆய்வு, சாதிக்குள் நடக்கும் அகமண திருமணமும் இவ்வாறே மரபியல் நோய்களை ஏற்படுத்துகிறது என கூறுகிறது. சாதி, குலம், பண்பாடு அல்லது மொழி என்ற பாகுபாட்டுப் பிரிவின் அடிப்படையில் திருமணங்கள் அமைந்து அகமண முறை நடைமுறைப்படுத்தும் நிலையில் அந்த மக்கள் பிரிவிடம் மரபியல் வேறுபாடுகள் குறைந்துபோகின்றன. 'ஏழு தலைமுறை' கடந்து திருமணம் என்று கோத்திரம் பார்த்துத் திருமணம் செய்வதும் பலன் தராது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அகமண முறை நீடிக்கும் நிலையில் பல்வேறு கோத்திரங்களுக்குள்ளும் மரபியல் வேறுபாடுகள் அழிந்துபோகின்றன.

பண்டைய காலத்தில் திடும்திடுமென கொள்ளை நோய்கள் பரவி, கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்து போவர்கள். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவில் இருந்தவர்களில் பலர் திடீரென மடிந்துபோனால் அந்தக் குழுவின் மரபியல் பரவல் சுருங்கிவிடும். அந்தக் குழு, அகமண முறையைக் கடைப்பிடிக்கும் கலாச்சாரத்தைக் கொண்டிருந்தால் அதன் பின்னர் ஒடுங்கிய மரபியல் பரவலே அந்தக் குழுவில் அமைந்துபோகும். அதேபோல ஒரு குழுவில் இருந்த சிலர் பிணக்கம் காரணமாக அல்லது பிழைப்பு தேடித் தனியாக வேறு ஒரு குழுவை ஏற்படுத்திப் பிரிந்து சென்று தொலைவில் வேறு ஒரு நிலப்பகுதியில் குடிபுகுந்து வாழத் தொடங்கி அவர்களும் தங்களுக்குள் அகமண முறையைப் பின்பற்றினாலும் அந்தக் குழுவிடமும் மரபியல் பரவல் குறைந்துபோகும். மக்கள்தொகை மரபியல் ஆய்வில் இவை முறையே மக்கள்தொகை முட்டுப்பாடு (population bottleneck) மற்றும் ஸ்தாபக நிகழ்வு (founder event) கோட்பாடு என அழைகப்படுகிறது.

அகமண முறையைப் பின்பற்றினால் மக்கள்தொகை முட்டுப்பாடு மற்றும் ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தலைமுறை தலைமுறையாக தொடரும்; காலப்போக்கில் மரபியல் பரவல் மேலும் சுருங்கும். அகமண முறையின் காரணமாக மரபியல் பரவல் செழிக்க முடியாமல் தேங்கிய நிலைக்கு உள்ளாகும்போது ஒடுங்கு-மரபணுப் பிறழ்ச்சி வழி ஏற்படும் பரம்பரை நோய்கள் (recessive genetic diseases) கூடும். மரபியல் பரவல் ஒடுங்கினால் அது மரபியல் நோய்களுக்கு இட்டுச்செல்லும்.

இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளத்தைச் சார்ந்த மானுடவியல் பார்வையில் தனித்தனிக் குழுவாக அகமண முறை கொண்டு வாழும் 275 சாதிகளைச் சார்ந்த 2,800 நபர்களின் மரபணு தொகுதிகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்தக் குழுக்களில் ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தூக்கலாக இருந்தது புலப்பட்டது. இன்று பல லட்சம் மக்கள்தொகை கொண்டதாகப் பல சாதிகள் இருந்தபோதிலும், ஆயிரம் தலைமுறைக்கு முன்னர் வாழ்ந்த ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் காரணமாக நீண்ட மரபணுத் தொடர்கள், அகமண முறையின் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட குழுவில் எல்லோரிடமும் பரவியிருப்பது இந்த ஆய்வில் வெளிப்பட்டது. எனவே, மரபணு நோயைத் தூண்டும் மரபணு தாய் தந்தை இருவரிடமும் அமைந்து குழந்தைக்குப் பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதன் தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட மரபணு நோய் அந்தச் சாதியில் பரம்பரை நோயாக வளர்ந்துவிடுகிறது.

ஹைதராபாதில் உள்ள சி.சி.எம்.பி-சி.எஸ்.ஐ.ஆர். (CCMB-CSIR) எனும் ஆய்வு நிறுவனத்தைச் சார்ந்த குமாரசாமி தங்கராஜும் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியை சார்ந்த டேவிட் ரெய்ச்சும் இணைந்து தலைமையேற்று நடத்திய இந்த ஆய்வில் ஜம்மு காஷ்மீரைச் சார்ந்த குஜ்ஜர் சமுதாயம், உத்தர பிரதேசத்தைச் சார்ந்த பனியா, தெலங்கானா பகுதியின் ரெட்டி சமூகம், தமிழகத்தில் பிராமணர்கள், கள்ளர்கள், அருந்ததியர்கள், புதுச்சேரியை சார்ந்த யாதவர்கள் முதலானோரிடையே ஸ்தாபக நிகழ்வின் தாக்கம் தூக்கலாக இருக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

முப்பது லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் அகமண முறையின் காரணமாக வலுபெற்ற ஸ்தாபக நிகழ்வு தொடர்ச்சியாக தெலங்கானா வைசிய சமுதாயத்தில் ‘பிசிஎச்ஈ’ (BChE - butyrylcholinesterase) எனும் அரிய மரபணு நோய் மற்ற சமுதாயங்களைவிட நூறு மடங்கு கூடுதலாக இருக்கிறது என்று சுட்டும் இந்த ஆய்வு, சாதி அமைப்பின் வேறு ஒரு அவல முகத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ‘பிசிஎச்ஈ’ மரபணு நோய் காரணமாக ஏற்படும் வளர்சிதைமாற்றச் சீர்கேடுகளின் காரணமாக இந்த நோய் கொண்டிருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சைகளின்போது வலி தெரியாமல் இருப்பதற்குத் தரப்படும் மயக்க மருந்து மீது ஒவ்வாமை ஏற்படும்.

எனவே, இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம். எந்த ஒடுங்கு மரபியல் நோய் எந்தெந்த சாதியில் மிகுந்துள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதற்குக் காரணமான ஒடுங்கு மரபணுவை இனம்காண்பது இந்த ஆய்வின் அடுத்த படிநிலை என்று தங்கராஜ் கூறுகிறார். தொற்றுநோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துவரும் தற்போதைய காலகட்டத்தில் மரபணு நோய்களால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகரிக்கும் என்றும், ஆகவே தங்களின் ஆய்வு பொதுச் சுகாதார மேம்பாட்டுக்குப் பெரிதும் உதவும் என்கிறார்.

இப்படிப் பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் தெளிவாகக் கூறிவிட்டன. எனினும் நம் சமூகமோ இன்னமும் சாதியை இறுக்கமாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறது!

-- த.வி. வெங்கடேஸ்வரன்,

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ‘விஞ்ஞான் பிரசார்’ என்ற தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி; தொடர்புக்கு: tvv123@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்