அரசியல் சட்டக்கூறு 35-ஏ கூறுவது என்ன?

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

மா

நிலத்தில் ‘நிரந்தரக் குடிமக்கள்’ யார் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவைக்கு இந்திய அரசியல் சட்டம் வழங்கியதைக் குறிக்கும் சட்டக் கூறுதான் 35ஏ. அரசிலும் அரசுத் துறை நிறுவனங்களிலும் நிரந்தரக் குடிமக்களுக்கு சிறப்பு உரிமைகளும் சலுகைகளும் தரப்படும். மாநிலத்துக்குள் வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை அவர்கள் மட்டும்தான் வாங்க முடியும். படிப்புக்கான அரசின் நிதியுதவி, சமூகநலத் திட்ட உதவி, பொதுவாக அரசு வழங்கும் உதவிகள் நிரந்தரக் குடிமக்களுக்கு மட்டும்தான். 35ஏ-படி மாநில சட்டப் பேரவை இயற்றும் எந்தச் சட்டத்தையும் அரசியல் சட்டத்துக்கோ, பிற சட்டத்துக்கோ முரணாக இருக்கிறது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க முடியாது.

1954-ல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் பிறப்பித்த ஆணைப்படி, 35ஏ கூறு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. இச்சட்டக்கூறு ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குகிறது. அரசியல் சட்டத்தின் 370 (1) (டி) கூறின் கீழ், இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் மாநில குடிமக்களின் நலனுக்காக, அரசியல் சட்டத்திலேயே சில விதிவிலக்குகளை அல்லது திருத்தங்களைச் செய்ய குடியரசுத் தலைவருக்கு அனுமதி அளிக்கிறது. அந்த வகையில்தான் 35ஏ அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள் மீது இந்திய அரசுக்கு உள்ள சிறப்புக் கரிசனத்தை இது வெளிப்படுத்துகிறது.

அரசியல் சட்டத்தில் 35ஏ சேர்க்கப்பட்டபோது நாடாளுமன்றப் பங்கேற்பு அதில் இல்லை. அரசியல் சட்டத்தைத் திருத்தும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அரசியல் சட்டத்தின் கூறு 368 (i) அளிக்கிறது. அப்படியானால், குடியரசுத் தலைவரின் செயல் அவருடைய அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதா? 35ஏ நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி முடிவுசெய்யப்படாததால், அது செல்லாததாகிவிடுமா? ‘பூரண்லால் லக்கன்பால் எதிர் இந்திய குடியரசுத் தலைவர்’ வழக்கில், அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அரசியல் சட்டத்தின் 370-வது கூறு அளிக்கும் அதிகாரம் பற்றி உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விவாதித்து 1961 மார்ச்சில் தீர்ப்பு வழங்கியது. அரசியல் சட்டத்தின் 370-வது கூறின் கீழ், இப்போதுள்ள ஒரு கூறில் குடியரசுத் தலைவர் சில மாறுதல்களைச் செய்யலாம் என்று கூறியதே தவிர, நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லாமலேயே அதைச் செய்யலாமா என்பதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. எனவே, இந்தக் கேள்வி, விடை இல்லாமலேயே தொடர்கிறது.

‘வீத சிட்டிசன்ஸ்’ (நாங்கள் குடிமக்கள்) என்ற தன்னார்வ அமைப்பு அரசியல் சட்டத்தின் 35ஏ, 370 ஆகியவை செல்லுபடியாகுமா என்று கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறது. ‘அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிறப்பு சட்டமன்றத்தில் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகளும் பங்கேற்று சட்ட வரைவுகளைத் தயாரிப்பதில் உதவினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அதில் தனிச் சிறப்பு அந்தஸ்து எதுவுமே வழங்கப்படவில்லை. 370-வது பிரிவு அம்மாநிலத்தில் சகஜ நிலையைக் கொண்டுவரவும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டதுதான்’ என்று அந்த அமைப்பு, மனுவில் கூறியிருக்கிறது. 35ஏ சட்டக் கூறினைப்போல நிரந்தரத் திருத்தங்களைக் கொண்டுவருவது அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவின் நோக்கம் அல்ல என்றும் அந்த அமைப்பு வாதிடுகிறது.

இந்தியாவின் ஒருமைப்பாட்டு உணர்வுக்கு எதிராக 35ஏ இருக்கிறது, அது இந்திய மக்களுக்குள் தனிப்பிரிவை உருவாக்குகிறது என்று அந்த அமைப்பு, மனுவில் கூறியுள்ளது. இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் வேலைவாய்ப்பு பெறவும் வீடு-மனை வாங்கவும் தடை விதிப்பது அரசியல் சட்டம் 14, 19, 21 கூறுகள் அளிக்கும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று மனு தெரிவிக்கிறது.

காஷ்மீரத்தைச் சேர்ந்த பெண், நிரந்தரக் குடியுரிமை பெறாதவரை மணந்தால், அந்தப் பெண்ணின் சொத்துரிமையையே கட்டுப்படுத்துவதாக இருப்பதால் 35ஏ செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சாரு வாலி கன்னா, இரண்டாவது மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அந்தப் பெண்ணுக்குச் சொத்துரிமை மறுக்கப்படுவதுடன் அவருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியிருப்புச் சான்றிதழ்களும் மறுக்கப்படுகின்றன. இது அவர்களை முறையற்றவர்களாகவே கருதுவதற்குச் சமம் என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மிகவும் நுட்பமான இந்த விவகாரம் குறித்து, உச்ச நீதிமன்றம் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அழைப்பு விடுத்திருக்கிறார்.

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, கன்னாவின் மனுவை ‘வீ த சிட்டிசன்ஸ்’ தன்னார்வக் குழுவின் மனுவோடு சேர்த்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது. அரசியல் சட்டத்தின் கூறுகள் 35ஏ, 370 ஆகியவற்றின் தன்மை குறித்து அதிக நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வுதான் தீர்மானிக்க முடியும் என்பதையே இது உணர்த்துகிறது.

தமிழில்: ஜூரி,

©: ‘தி இந்து’ ஆங்கிலம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்