மாநில சுயாட்சி ஓர் தேசிய முழக்கம்!

By சமஸ்

இம்பாலில் உள்ள ‘இமா கைதேல் - அம்மா சந்தை’ மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்றது. முழுக்கவும் பெண்களால் நிர்வகிக்கப்படும் உலகின் பெரிய சந்தைகளில் ஒன்று இது. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டு செல்லும் இடம் இது. பூக்கள், காய் - கனிகளில் தொடங்கி கருவாடு, வாசனைத் திரவியங்கள், கைவினைப்பொருட்கள் வரை சகலமும் கிடைக்குமிடம். இந்தச் சந்தை வெறும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையம் மட்டுமல்ல; மணிப்பூர் வரலாற்றின் ஒரு பகுதி. தாய்வழி மரபின் செல்வாக்கு நிரம்பிய மணிப்பூரின் கலாச்சாரத்தில் மட்டும் அல்லாமல், பொருளாதார வளர்ச்சியிலும் பெண்களின் நேரடிப் பங்களிப்பு அதிகம். உள்ளூர் வாணிபத்தில் அவர்களுடைய நூற்றாண்டு செல்வாக்குக்கான தொடர்ச்சியின் மையம் ‘இமா கைதேல்’. பல்வேறு பழங்குடிகள், மீத்தேக்கள், முஸ்லிம்கள் என்று பல்வேறு இனக் குழுக்கள், மொழிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பாகுபாடின்றிக் கூடும் இந்தச் சந்தைக்குச் சென்றதன் நோக்கம் அங்குள்ள பெண்களின் அன்றாட வாழ்க்கை, சந்தைக் கதைகளை அறிவது. அரசியல் கதைகளும் பேசுவதற்கான இடமாக அது மாறியது ஆச்சரியம்!

மணிப்பூரில் நாட்டு மீன்கள் பிரசித்தம். மீன் சமையலும் விசேஷம். மீன்களைச் சுட்டும் அவித்தும் வித்தியாசமான ருசியில் பரிமாறும் அவர்களுடைய மீன் சமையல் முறையை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன். எது பேச்சின் போக்கைத் திருப்பியது என்றால், அப்படிப் பேசிக்கொண்டிருந்த பெண்களின் பின்னணியில், பிரமாண்டமான அந்தச் சந்தைக் கட்டிடத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள். உடன் வந்த நண்பர் வீ.பா.கணேசன்தான் அதைச் சுட்டிக்காட்டினார். ஆகஸ்ட் 14-ம் நாளை மணிப்பூரின் சுதந்திர நாளாகக் குறிப்பிட்டுக் கொண்டாடின அந்தச் சுவரொட்டிகள். நகரத்தின் சந்து பொந்துகளிலும்கூட ஆயுதப் படைகளும், ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டமும் அடக்குமுறையும் அமலில் உள்ள ஓரிடத்தில் எப்படி இதுபோன்ற சுவரொட்டிகள் சர்வ சாதாரணமாக ஒட்டப்பட்டிருக்கின்றன? சர்வ சாதாரணமாக அணுகப்படுகின்றன?

அந்தப் பெண்களில் ஒருவர் “இதென்ன பிரமாதம்?” என்று கேட்டபடி, ஒரு ஆங்கிலப் பத்திரிகையை என் கையில் கொடுத்தார். அவர் சுட்டிக்காட்டிய பக்கத்தில் இருந்த செய்தி, நாகாலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி தொடர்பானது. ஒரு பேராசிரியர் பேசியிருந்தார். “நாகலாந்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க இந்தியர்களிடம் என்ன இருக்கிறது?” என்று அவர் கேட்டிருந்தார். அன்று மாலை அந்தப் பத்திரிகையின் - ‘இம்பால் ஃப்ரீ ப்ரஸ்’ - ஆசிரியர் பிரதீப் பாஞ்சுபாமைச் சந்தித்தபோது இதுகுறித்து கேட்டேன். “பரவாயில்லையே, உங்களூரில் கருத்துச் சுதந்திரம் பிரமாதம்போல் இருக்கிறதே! எங்கள் மாநிலத்தில் இதெல்லாம் நடந்தால், மாநில அரசாங்கமே தூக்கிச் சிறையில் வைத்துவிடும்” என்றேன். பிரதீப் பாஞ்சுபாம் சொன்னார், “ஆயுதங்கள் வழி போராடுபவர்களைக் காட்டிலும், வார்த்தைகள் வழி போராடுபவர்கள் மேலானவர்கள் இல்லையா? இங்கே வன்முறைக்கு இடமில்லையே!”

பிரதீப் பாஞ்சுபாம், “மாநிலங்களுக்கான அதிகபட்ச உரிமைகளுடன் இந்திய ஒன்றியத்தின் கீழ் நீடிப்பதே மணிப்பூரின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும்; இங்குள்ள பல குழுக்கள் மணிப்பூரைப் பல நாடுகள் ஆக்கிவிடும் அபாயம் கொண்டவை” என்று நம்புபவராகத் தெரிந்தார். “அதேசமயம் டெல்லியிடம் குவிந்திருக்கும் அதிகமான அதிகாரங்களே பிரிவினைவாதிகளின் நியாயங்களுக்கு உரமாகின்றன” என்றும் சுட்டிக்காட்டினார். “உள்ளபடி காஷ்மீரைப் போலவேதான் வட கிழக்கின் நிலைமையும் மோசம். ஆயுதப் படைகளையும் மானியத்தையும் வைத்தே டெல்லி இந்த மாநிலங்களைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்த மாநிலங்களின் பெரும்பான்மை நிதியாதாரம் டெல்லியிலிருந்து வரும் நிதியை அடிப்படையாகக் கொண்டது. விளைவாகவே தேசியக் கட்சிகள் இங்கிருக்கின்றன. உள்ளூர் பொருளாதாரம் என்ற ஒன்று இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமும் வளர்த்தெடுக்கப்படவில்லை. இளைய தலைமுறைக்குள்ள ஒரே உத்தரவாதமான வேலைவாய்ப்பு அரசுப் பணி. இருபது லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிலங்கள், சொத்துகளை விற்றாவது லஞ்சம் கொடுத்து அரசு வேலைகளை வாங்கிவிட வேண்டும் என்பதே அவர்கள் கண் முன்னுள்ள தீர்வாக இருக்கிறது. டெல்லியிடம் பேரம் பேசும் வல்லமை தேசியக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளிடம் இல்லை. அவர்கள் தங்களுக்கான அதிகாரம் கிடைத்தால் போதும் என்று பதவிக்காக தலைமையை அண்டியிருக்கிறார்கள். மாநிலக் கட்சிகள் ஒரு சக்தியாக உருவெடுக்கவே இல்லை. விளைவாக பிரிவினைவாதிகள் அல்லது அதிகாரத்தரகர்கள் இரு தரப்புக்கும் மத்தியில் சிக்கித் தவிக்கிறார்கள் இங்குள்ள மக்கள்” என்றார் பிரதீப் பாஞ்சுபாம்.

ஜனநாயக விரோதச் சட்டங்கள், ஆயுதப் படைகள், மானியம் என்ற பெயரில் ஏராளமான பணம் இப்படியான வழிகளில் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் இந்த மாநிலங்களை வைத்துக்கொள்ள முயற்சிக்கும் டெல்லி ஏன் மாநிலங்களுக்கான அதிகாரங்களை அதிகமாக்குவதன் மூலம், அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம், மேலும் ஜனநாயகமாக நடந்துகொள்வதன் மூலம் அதை முயற்சிக்கக் கூடாது?

திரிபுரா சென்றிருந்தபோது முதல்வர் மாணிக் சர்க்கார் சந்தித்தது நினைவுக்குவந்தது. அவர் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டினார். “வெறும் காவல் படையினரில் வெளியாட்கள் ஆதிக்கத்தைக் குறைந்து, உள்ளூர்வாசிகளை அதிகரித்ததே - இந்த அதிகார மாற்றமும், பரவலாக்கமும் - திரிபுராவில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை எவ்வளவு குறைத்திருக்கிறது, தெரியுமா? இன்று திரிபுராவில் தீவிரவாதம், பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது என்றால், மார்க்ஸிஸ்ட் கட்சி இங்கு செய்திருக்கும் அதிகாரப் பரவலாக்கம்தான் காரணம். மாநிலங்களிடம் உள்ள அதிகாரங்கள் குறைவு. ஆனால், அவற்றைப் பரவலாக்கும்போதே இவ்வளவு மாற்றங்கள் வெளிப்படுகின்றன. மாநிலங்களுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டால், டெல்லி தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டால் எவ்வளவோ மாற்றங்கள் நடக்கும். நேர் எதிராக அல்லவா சிந்திக்கிறார்கள்?” என்றார் மாணிக் சர்க்கார்.

பிரதீப் பாஞ்சுபாம் பேசியபோது ஒரு பெரும் குறை தெரிந்தது - மாநிலக் கட்சிகள் மணிப்பூரில் பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்பதே அது. “எப்படியோ மாநிலங்கள் உரிமையை இப்போதாவது பேசத் தொடங்கியிருக்கிறார்கள்” என்றார். இந்தி பேசும் மாநிலங்கள் - குறிப்பாக உத்தர பிரதேசமும் பிகாரும் - எழுபதாண்டுகளுக்குப் பின்னரும் ஏன் பொருளாதாரரீதியாக ஏனைய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வளவு கீழே இருக்கின்றன என்பது குறித்து ஆய்வுசெய்துவரும் ஆய்வாளர் சைபால் குப்தாவும் சமீபத்தில் இதையே வேறு வார்த்தைகளில் சொன்னார், “தேசிய, சாதிய, மதவாத உணர்வுகள் இங்கு வளர்ந்தனவே அன்றி மாநில உணர்வு என்று ஒன்று உருவாகாமல் போய்விட்டது; இந்தி பேசும் மாநிலங்களின் வளர்ச்சிப் பின்னடைவுக்கு இது முக்கியமான காரணம்.”

இதையெல்லாம் அரை நூற்றாண்டுக்கு முன்னரே சிந்தித்த அண்ணா எவ்வளவு பெரிய தொலைநோக்காளர்! என்னிடம் பலர் கேட்பதுண்டு, “ஒரு காந்தியரான நீங்கள் அண்ணாவைப் பற்றி அதிகம் பேசுகிறீர்களே எப்படி?” சுதந்திர இந்தியாவில் உருவெடுத்த மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் அண்ணா என்பதே காரணம். இந்தியாவின் பெரும்பான்மையினரான - அதேசமயம் மொழிச் சிறுபான்மையினரான இந்தி பேசாத மக்களின் சுயமரியாதைக்கான மிக வலுவான குரல் அண்ணாவுடையது. அண்ணா உருவாக்கிய திமுகவின் அடித்தள உணர்வு தமிழ்த் தேசியத்தில் குடிகொண்டிருந்தாலும், எல்லோரையும் அரவணைக்கும் இயல்பை அவர் அதன் அடிநாதமாகப் பொருத்தினார். சாதி ஒழிப்பை முன்னிறுத்தினாலும் திமுக எந்தச் சாதியினரையும் ஒதுக்கவில்லை; மதவாதத்துக்கு எதிராகப் பேசியதோடு, மத நல்லிணக்கத்திலும் அது உறுதியாக இருந்தது; தமிழுணர்வைத் தூக்கிப் பிடித்தாலும் எந்த மொழியினர் மீதும் அது விரோதம் கற்பிக்கவில்லை - ஒரு சிவசேனையுடன் ஒப்பிட்டால் புரியும் அண்ணா உருவாக்கிய கட்சியின், கனவின் அருமை! தமிழர் எனும் அடையாளத்தைச் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட ஒரு பொது இனமாக வளர்த்தெடுக்கும் கனவு அண்ணாவுடையது. அவர் அடிக்கடி சுட்டிக்காட்டும் வாஸ்கியின் மேற்கோளான “சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியாக நடத்துவது அல்ல; எல்லோருக்கும் சம வாய்ப்பு தருவது” என்ற சமூக நீதியிலிருந்தது அந்தக் கனவின் உள்ளடக்கம்.

தன்னுடைய இறுதிக்காலத்தில் காந்தியின் மொழியோடு ஒப்பிடத்தக்க அளவுக்கு அண்ணாவின் மொழி மாறியிருந்தது. பிரிவினைவாத யுகத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்திய ஒன்றியத்துடன் மாநிலங்கள் பேசுவதற்கான மொழி அண்ணாவிடமிருந்தே தொடங்குகிறது. பிராந்திய நிர்வாகங்களுக்கான உரிமைக் குரல் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்தியாவில் இருந்தாலும், அதை வெற்றிகரமான ‘மாநில சுயாட்சி’ முழக்கமாக உருவாக்கியவர் அண்ணா. “மாநிலங்களுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொண்டதாக இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்” என்ற அண்ணாவின் கோரிக்கை வெறும் மாநிலங்கள் உரிமையோடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல; இந்நாட்டின் உயிர்நாடியான பன்மைத்துவத்தோடும் சம்பந்தப்பட்டது. ஒற்றைக் கலாச்சாரம், வெறுப்பரசியல், பெரும்பான்மைவாதம், அதிகாரக்குவிப்பு, வளர்ச்சி முடக்கம் என்று நாடு இன்று எதிர்கொள்ளும் பல அபாயங்களுக்கான மாற்று அதில் இருக்கிறது. அதை ஒரு தேசிய முழக்கமாக உணரும்போதே இந்நாடு உண்மையான கூட்டாட்சியை அடையும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்