மலாவியின் 50-வது சுதந்திர தினம்

By செய்திப்பிரிவு

தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவி, பிரிட்டனிடமிருந்து 1964-ம் ஆண்டு ஜூலை 6-ல் விடுதலை அடைந்தது பற்றிய தனது நினைவுகளைத் தெளிவாகக் கூறுகிறார் 82 வயதான ஹாரி மாசெகோ. “எனக்கு அப்போதுதான் திருமணமாகி இருந்தது. காலனிய முதலாளிகளின் ஆட்சியின்போது என்னைப் போன்றவர்கள் கொதிப்படைந்து இருந்தனர். நல்லவேளை, உரிய நேரத்தில் மலாவிக்கு விடுதலை கிடைத்தது” என்கிறார் அவர்.

மலாவி விடுதலை தினத்தின் 50-வது ஆண்டு விழாவுடன் சேர்த்து, அந்நாட்டில் பல கட்சி ஜனநாயக ஆட்சிமுறை அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதும் தற்செயலான ஒன்றே. அந்நாட்டின் முதல் தலைவரான ஹாஸ்டிங்ஸ் கமுசு பாண்டாவை ‘மலாவியின் தந்தை மற்றும் நிறுவனர்’ என்று நினைவுகூர்கிறார் மாசெகோ. எனினும், விடுதலைக்குப் பின்னர் தனது நாடு குறைந்த அளவிலேயே முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கருதுகிறார். “20 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டாவின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர்தான் விடுதலையை எங்களால் உணர முடிந்தது. என்றாலும், வீட்டில் உணவில்லாதபோது விடுதலையால் என்ன பயன்?”

இந்த 50 ஆண்டு காலத்தில் மலாவியின் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. நாட்டில் 10% மக்களுக்குதான் மின்சார வசதி உள்ளது. இறக்குமதியையே பெருமளவில் சார்ந்திருக்கும் மலாவி அந்நியச் செலாவணிக்குப் புகையிலை உற்பத்தியையே நம்பியிருக்கிறது. நாட்டின் இந்த நிலைக்கு அரசியல் தலைவர்கள்தான் காரணம் என்பது அவர்களின் குற்றச்சாட்டு.

​“நாட்டின் இயற்கை வளமும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை. அண்டை நாடான ஜாம்பியா, சுரங்கத் தொழிலால் நல்ல வளர்ச்சியடைந்ததுபோல் மலாவியால் வளர்ச்சியடைய முடியவில்லை. எனினும், நாங்கள் எந்த நிலையில் தொடங்கினோம் என்ற ரீதியில் பார்த்தால், நாங்கள் அடைந்துள்ள வெற்றி

களும் கணிசமானவைதான்” என்று மலாவி நிதியமைச்சர் குடால் காண்ட்வெ கூறுகிறார். 2008-ல் உலகின் வேகமாக வளர்ச்சி பெறும் இரண்டாவது நாடாக மலாவி இருந்தது. தற்போதைய அதிபர் பிங்குவா முத்தாரிக்காவின் தலைமையில், வெளிநாட்டு நிதியுதவியை நம்பி மலாவி இருக்கும் நிலை மாறும் என்பது குடால் காண்ட்வெ போன்ற தலைவர்களின் நம்பிக்கை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE