உலகம் முழுவதிலும், மிக எளிதாக பாதிப்புகளைச் சந்திக்கக் கூடியவர்களாக குழந்தைகள் மற்றும் பெண்கள் கணிக்கப்படுகின்றனர். அதனால்தான், அரசின் வளர்ச்சிப் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் குழந்தைகள், முதியோர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு இடங்களுக்கு குடும்பங்களுடன் புலம்பெயரும் வழக்கம் இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாகியிருக்கிறது. இத்தகைய புலம்பெயர்தலில் மிக அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் குழந்தைகள்தான். மொழி, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்ட அடிப்படையான அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல், பெற்றோருடன் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் குழந்தைகள் எண்ணற்ற பிரச்சினைகளை எல்லா இடங்களிலும் சந்திக்கவே செய்கின்றனர்.
9 கோடிக்கும் அதிகமான குழந்தைகள்: இந்தியாவில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உள்நாட்டிற்குள் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 45.57 கோடி. இந்தியாவினுள் புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு ஐந்தாவது நபராக குழந்தைகள் உள்ளனர். 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 9 கோடிக்கும் அதிகமானவர்கள் உள்நாட்டிற்குள் புலம்பெயர்ந்த குழந்தைகள். இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், மகராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் இருந்துதான் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக, குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் அதிகமாக புலம்பெயர்ந்துள்ளனர்.
38 வகையான தொழில்களில் குழந்தைகள்... இவ்வாறு புலம்பெயரும் குழந்தைகளில் 80 சதவீதம் பேர் முறைசாரா தொழில்களில்தான் பணியாற்றுகின்றனர். தேநீர் கடைகள், பேக்கரிகள், புத்தகக் கடைகள், கிளினீங் பணிகள், ஃபேன்சி ஸ்டோர்கள், மீன் கடைகள், பழக்கடைகள், மளிகைக் கடைகள், ஹார்டுவேர் கடைகள், ஹோட்டல்கள், ஐஸ்க்ரீம் கடைகள், மெடிக்கல் ஷாப்புகள், பானிபூரி விற்பனையகங்கள், தெருவோரக் கடைகள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக் கடைகள், சிறிய கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டூவீலர் சீட் கவர் மாற்றும் கடைகள், துணிக்கடைகள், பழைய பேப்பர் கடைகள், வாட்டர் கேன் விநியோகம், தினக்கூலிகள், வீட்டு வேலைகள், ஓட்டுநர்கள், குப்பை பொறுக்குதல், குதிரை ஓட்டுதல், அயர்னிங் கடைகள், சுமை ஏற்றும் தொழில், மெக்கானிக் கடைகள், இரும்புக் கடைகள், பிரின்டிங் பிரஸ்கள், தூய்மைப் பணிகள், திரைப்படங்களில் துணைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.
ஒருசிலர் யாசகம் கேட்கும் பணிகளிலும், குறி சொல்லும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி 38 வகையான பணிகளில் புலம்பெயரும் குழந்தைகள் பணியாற்றி வருகின்றனர். 2 சதவீதம் பேர் விவசாயத்தின் துணைப் பணிகளான மரம் வெட்டுதல், மரம் ஏறுதல், கால்நடைகள் மேய்த்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். 15 சதவீதம் பேர் கட்டுமானத் தொழில், பெயின்டிங் மற்றும் செங்கல் சூளை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
» “நான் இருக்கும் வரை நடக்காது” - டெல்டா பகுதி நிலக்கரி சுரங்க விவகாரத்தில் சீமான் ஆவேசம்
» கோடை வெயில் உக்கிரம்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்காக தென்னை நார் விரிப்புகள்!
15 முதல்18 வயதுடையோர் அதிகம் : புலம்பெயரும் தொழிலாளர்கள் பிரச்சினை தமிழகத்தில் அண்மையில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவாவதற்கு முன்பு, குழந்தை உரிமைகள் மற்றும் முன்னேற்ற மையம் என்ற அமைப்பு தமிழகத்தில் புலம்பெயரும் குழந்தைகள் எனும் தலைப்பில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு. தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. 210 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் புலம்பெயர்ந்த குழந்தைகளில் 39 சதவீதம் பேர் பெண் குழந்தைகள். 5 சதவீதம் பேர் 11 வயதுக்கு உட்பட்டவர்கள். 30 சதவீதம் பேர் 12 முதல் 14 வயதுக்கு உட்டபட்டவர்கள்.
15 முதல் 18 வயதுடைய குழந்தைகளே அதிகமான அளவில் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் 48 சதவீதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், 20 சதவீதம் பேர் பழங்குடியினர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்களில் 75 சதவீதம் பேர் தமிழ்நாட்டிற்குள் புலம்பெயர்ந்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைகள். எஞ்சிய 25 சதவீதம் பேர் ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், மகராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆவர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தங்களது குடும்பத்துடன் புலம்பெயர்ந்தவர்கள். 7 சதவீதம் பேர் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்கள். 12 சதவீதம் பேர் படிப்பு வராத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறியவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
கேள்விக்குறியாகும் அடிப்படை உரிமைகள்: இதுகுறித்து குழந்தை உரிமைகள் மற்றும் முன்னேற்ற மையத்தின் இயக்குநர் ஸ்டெக்னா ஜென்சி கூறியது: "நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, தமிழகத்திற்கு ஆந்திரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்கம், மகராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 8 மாநிலங்களில் இருந்துதான் குழந்தைகள் புலம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தங்களது பெற்றோருடன்தான் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட 38 வகையான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வை மேற்கொண்டபோது, அவர்களில் பலருக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதைக் காண முடிந்தது. மொழி தங்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாக அவர்கள் கூறவில்லை. அதேநேரம், உரிய சான்றிதழ் இல்லாத காரணத்தால் அவர்களால் பள்ளிகளுக்குச் சென்று படிப்பைத் தொடர முடியவில்லை என்பதை அறிய முடிந்தது.
மேலும், புலம்பெயர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்வியை தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதேநேரம், பெற்றோரின் குடும்பச் சூழல் காரணமாக தாங்கள் வேலைகளுக்குச் செல்வதாகவும் குழந்தைகள் பலர் கூறுகின்றனர். நாங்கள் மேற்கொண்ட ஆய்வு 6 மாவட்டங்கள்தான் என்றாலும், புலம்பெயர்ந்த குழந்தை தொழிலாளர்களின் முக்கியப் பிரச்சினைகளை பட்டியலிட்டுக் கூறமுடியும். இந்த ஆய்வில் எங்களுக்கு அந்த 6 மாவட்டங்களில் குழந்தைகளுடன் பணியாற்றும் நிறுவனங்கள் எங்களுக்குத் தேவையான இந்த தகவல்களைத் திரட்டி கொடுத்தனர்.
பிரசித்திப் பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆலயத்தை நோக்கி பல்வேறு பணிகளுக்காக புலம்பெயரும் குழந்தைகள் தினசரி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வந்து செல்கின்றனர். ஆலயத்தின் வெளியே உள்ள சாலையோர கடைகள் உள்ளிட்டவற்றில் வியாபாரம் செய்வது இவர்களது பிரதான தொழிலாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு புலம்பெயரும் குழந்தைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகிறது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முடிவெடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. எனவே புலம்பெயர்ந்த குழந்தைகள் விவகாரத்தில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது மிக முக்கியமாகும். பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் நின்று ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டதாகவும், பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை என்றும் கூறுகின்றனர். பள்ளிக்குச் செல்ல குழந்தைகள் விரும்பவில்லை என்றால், அதற்கான மாற்று குறித்து அரசு ஆலோசிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். அவர்கள் விரும்புகிற மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ள அரசு கொடுக்கும் வாய்ப்புகளை புலம்பெயரும் குழந்தைகள் எளிதில் அணுகும்படியாக உள்ளதா என்றால் அதுவும் மிகப்பெரிய கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம் : பொதுவாக, புலம்பெயர்ந்துள்ள குழந்தைகளில் அதிகமானவர்கள் 16 முதல் 18 வயதுடையவர்களாக உள்ளனர். அதேநேரம் 14 வயகுக்குட்பட்ட குழந்தைகளும் உள்ளனர். எங்களுடைய ஆய்வு மிக குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகளை உள்ளடக்கியது. எனவே, தமிழ்நாடு அரசு மாநில அளவில் புலம்பெயர்ந்த குழந்தைகள் குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் புலம்பெயர்ந்த குழந்தைகளை கல்வி நிலையங்களில் தக்க வைப்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். சான்றிதழ் இல்லாத காரணத்தால் பலரால் படிப்பைத் தொடர முடிவதில்லை. குறிப்பாக, அனைவருக்கும் கட்டாயக் கல்வி இலவசம் என்ற அரசு திட்டம் 8-ம் வகுப்போடு முடிந்துவிடுகிறது. எனவே, 9 உள்ளிட்ட அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய படிப்புகளில் சேர சான்றிதழ்கள் கட்டாயமாகும்.
கல்வி உதவித்தொகை குறித்து இவ்வாறு புலம்பெயரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்களும், குழந்தைகளும் அறிந்திருக்கவில்லை. உள்மாநிலத்திற்குள் புலம்பெயரும் தமிழக குழந்தைகளுக்கு தெரிந்திருக்கும் வாய்ப்புகள்கூட, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் புலம்பெயரும் குழந்தைகளுக்குத் தெரியவில்லை. தமிழகத்திற்குள் வந்துவிட்டால் அவர்களும் நம்முடைய குழந்தைகள்தான். ஐநாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் கையொப்பமிட்டுள்ளது. இதன்படி எந்த மாநிலத்திற்கு ஒரு குழந்தை சென்றாலும், அக்குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு அம்மாநிலத்திற்கு உண்டு. கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட குழந்தைகளின் உரிமைகளை அந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அவற்றை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், அரசுக்கு புள்ளிவிவரங்கள் அவசியமாகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக புலம்பெயர்ந்த குழந்தைகள் குறித்த முழுமையான தரவுகள் இல்லை. ஆனால், ஆங்காங்கே சில ஆய்வுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எத்தனை குழந்தைகள் இதுபோல புலம்பெயர்ந்துள்ளனர் என்ற முறையான விவரங்கள் இல்லை.
தமிழகத்தில் அதிகரிப்பு.... குறிப்பாக, தமிழகத்திற்குள் புலம்பெயரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை யாருமே கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து பேசுகிற இந்த நேரத்தில், தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு குழந்தைகள் புலம்பெயர்ந்து செல்வதை மிகத் தீவிரமான பிரச்சினையாக நாம் பார்க்க வேண்டும். காரணம், இதனால் குழந்தைகளின் கல்வி பின்தங்கும் நிலை ஏற்பட்டால், எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிடும். ஆற்றல் மிக்க குழந்தைகளை மேம்படுத்திக் கொணரும் சூழல் தற்போது குறைந்துகொண்டே வருகிறது.
தமிழகத்துக்குள் புலம்பெயரும் 15 முதல் 18 வயதுடைய குழந்தைகள் கண்காணிப்பில் கவனம் செலுத்தவேண்டும். கரோனா சமயத்தில் இருந்தே குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இதில், அதிக கவனம் செலுத்தி திட்டங்களை வகுத்து அதற்குரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பொதுவாக புலம்பெயர்தல் என்றால், நம்முடைய பார்வை என்னவாக இருக்கிறது என்றால், ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்துவிடுகின்றனர் என்பதாக இருக்கிறது. வெளியில் இருந்து வருபவர்கள் மீது கவனம் செலுத்தும் நாம், நமது மாநிலத்துக்குள்ளேயே நடக்கும் இந்த குழந்தைகளின் புலம்பெயர்தலை கண்டும் காணாமல் இருக்கிறோமா அல்லது உண்மையிலேயே தெரியாமல் இருக்கிறதா என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். இதை தடுக்கவும், திட்டங்களை வகுக்கவும் அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அதேநேரம், பெற்றோருடன் புலம்பெயர்ந்து செல்லும் குழந்தைளின் எண்ணிக்கையைத் தடுப்பதில் அரசுக்கு சிரமம் இருக்கிறது. எனவே, குடும்பம் சகிதமாக நடைபெறும் இந்த புலம்பெயர்தலைத் தடுக்க வேண்டுமென்றால், உள்ளூர் அளவில், ஏற்கெனவே அரசு கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை அமைப்பதற்கான அரசாணைகள் எல்லாம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்தக் குழுக்கள் எல்லாம் அமைக்கப்பட்டுள்ளதாக சொன்னாலும், அவை பெயரளவிலும், ஏட்டளவிலும்தான் இருக்கிறது. குழந்தைகள் புலம்பெயர்தலைத் தடுக்க இதுபோன்ற அமைப்புகளை அரசு வலுப்படுத்தி, அதைக் கண்காணிக்கும் முறையையும் கொண்டுவர வேண்டும்.
எனவே, தமிழகத்தில் புலம்பெயர்ந்துள்ள குழந்தைகளின் நிலை குறித்து அரசு ஒரு முழுமையான ஆய்வு நடத்த வேண்டும். அக்குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? அவர்களின் தற்போதைய சூழ்நிலை என்ன? ஏன் இந்த குழந்தைகள் புலம்பெயர்கின்றனர்? என்பது உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கியதாக அந்த ஆய்வு இருக்க வேண்டும்.
அதிக கூலிக்காக அல்ல, வேலை வாய்ப்பிற்காகவே.... எங்கள் ஆய்வின்போது, எங்களுக்கு அதிகமான கூலி கிடைக்கிறது என்பதற்காக நாங்கள் புலம்பெயரவில்லை. எங்களுக்கு இங்கு வேலை கிடைப்பதால் புலம்பெயர்ந்தோம் என்றுதான் பெரும்பாலான பெற்றோர்களும், குழந்தைகளும் கூறியுள்ளனர். தங்களது கிராமத்தில் அல்லது ஊரில் வருமானத்திற்கு வழியே இல்லாத காரணத்தால்தான் புலம்பெயர்ந்ததாகவும், பெற்றோர்கள் தங்களையும் உடன் அழைத்து வந்ததாகவும் குழந்தைகள் கூறுகின்றனர்.
குழந்தைகள் புலம்பெயர்தல் காரணமாக அவர்களது கல்வி, சுகாதாரம், உடல்நலம், விளையாட்டு, பாதுகாப்பு இவை அனைத்துமே முற்றிலுமாக மறுக்கப்படுகிறது. இத்தகைய குழந்தைகளின் எதிர்காம் ஒரு கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. இவர்கள் சிறு வயதிலேயே ஏதோ ஒரு தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகின்றனர். குறிப்பாக 15 வயது முதல் 18 வயதுடைய புலம்பெயர்ந்த ஆண் குழந்தைகள், கையில் காசு புழங்கும் காரணத்தால், போதை உள்ளிட்ட பழக்கங்களை வெகுசுலபமாக பழகிக்கொள்கின்றனர்.
அதேபோல், மறைமுகமாக இந்த வயதுடைய பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணங்களும் நடத்தப்படுகிறது. எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, ஆரம்ப நிலையிலேயே அரசு இதில் கவனம் செலுத்தி, இக்குழந்தைகளை ஆளுமைத்திறன் மிக்க குழந்தைகளாக மாற்றுவதற்கான செயல்திட்டங்களை வகுத்து, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதே அரசுக்கு நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் ஆகும்" என்று அவர் கூறினார்.
/ வட மாநிலத் தொழிலாளர்களின் தமிழக வருகை குறித்த பார்வைகள் தொடரும்... /
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago