நீங்கள் ஏன் யூடியூப் சேனல் தொடங்கக் கூடாது? ஏன் பாட்காஸ்ட்டில் பேசக் கூடாது? ஏன் ரீல்ஸ், ஷாட்ஸ் வெளியிடக் கூடாது? இதை செய்துவிட்டால் நீங்களும் சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர்தானே? பிராண்டுகள் உங்களை நோக்கி வருமே? - சமீப ஆண்டுகளாக பலரையும் துரத்திக் கொண்டிருக்கும் கேள்விகள் இவை. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கு பின்னால் இருக்கும் உளவியலை நாம் புரிந்துகொள்ள வேண்டிய காலத்தில் வாழ்கிறோம்.
‘இன்ஃப்ளூயன்சர்’ சமீப ஆண்டுகளில் சக்தி வாய்ந்த வார்த்தையாக மாறியிருக்கிறது. உண்மையில் 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் இன்ஃப்ளூயன்சர் என்ற வார்த்தை இணையத்தில் தீவிரப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. ‘இன்ஃப்ளூயன்சர்’ என்ற வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து பிறந்துள்ளது. அதாவது, ’inflow’ என்ற வார்த்தையிலிருந்துதான் இன்ஃப்ளூயன்சர் என்ற வார்த்தை பிறந்துள்ளது. அதுவும் குறிப்பாக, 16-ஆம் நூற்றாண்டில்தான் இந்த வார்த்தையை சமூகத்தில் செல்வாக்கு செலுத்துப்பவர்களுடன் தொடர்புப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். முன்னரெல்லாம் அரசியல்வாதிகள், தத்துவவியலாளர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் முதலானவர்களே சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக கருதப்பட்டனர்.
ஆனால், இணையப் பயன்பாட்டு அதிகரிப்பு இன்ஃப்ளூயன்சர் என்ற வார்த்தையின் மேட்டிமைத் தன்மையை குறைத்தது. அதனை சாமானிய மக்களுடன் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. சாமானியர்களும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்; அவர்களும் பிரபலங்கள்தான் என்ற விளம்பர டேக் லைன் இணையத்தை பயன்படுத்தும் பலரது கழுத்திலும் மறைமுகமாக மாட்டப்பட்டது.
இதனால், சில ஆரோக்கியமான மாற்றங்களும் பிறந்தன. வேலைக்காக யாரையும் சார்ந்திருக்காமல் தன் திறமையை நம்பி இறங்கும் விடுதலை உணர்வு பலருக்கும் கிடைத்தது. குறிப்பாக, இளம் வயதினருக்கு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் என்ற யுக்தியை பயன்படுத்தி தற்போது சமூக அந்தஸ்தில் உச்சத்தில் இருக்கும் பலரின் நாமும் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால், நான் இங்கு கூறப்போவது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நம்மைச் சுற்றி இணையம் சார்ந்து நிறைய மாற்றங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. சற்று மெல்ல நிதானித்துப் பாருங்கள். நாம் முழுமையாக இந்த இன்ஃப்ளூயன்சர் உலகிற்குள் நுழைந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்த இன்ஃப்ளூயன்சர்கள் சற்று தொடர்பில்லாத தாக்கத்தை நம்முள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கேபி பெட்டிட்டோ என்ற இளம்பெண்ணை நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா? அமெரிக்காவில் வளர்ந்து வந்த இளம் யூடியூப்பராக கேபி அறியப்பட்டார். சமூக வலைதளங்களில் நாளும் உலவிக் கொண்டிருக்கும் வீடியோக்களின் தாக்கத்தினால் கேபிக்கு ஓர் எண்ணம் எழுகிறது. படிப்பை முடித்த கையுடன் தனது காதலருடன் வேனில் அமெரிக்கா முழுவதும் பயணிக்க விரும்புகிறார். இதற்காக சிறிய வேன் ஒன்றை வாங்கி தனது கனவுப் பயணத்தை தொடங்குகிறார் கேபி. பயண அனுபங்களை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி தனக்கான அடையாளத்தையும் பிரபலத்தன்மையையும் பெற முயல்கிறார். கேபி நினைத்தது மெல்ல மெல்ல நடந்தேறியது.
அமெரிக்கர்கள் மத்தியில் கேபி பிரபலமானார். அவரை இளைஞர்கள் இணையத்தில் பின்தொடர ஆரம்பித்தார்கள். கேபியின் இன்ஸ்டா பக்கத்தில் அவரது வேன் பயணித்திற்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்த வண்ணம் இருந்தன. நாமும் கேபியை போல் வாழ வேண்டும். இந்த இயந்திரமான வாழ்க்கை வேண்டாம் என்பன போன்ற பதிவுகளை அமெரிக்க இளைஞர்கள் பதிவிட தொடங்கினர். எல்லாமே நல்லபடியாக சென்றுக் கொண்டிருந்தது.
ஆனால், 2021 செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு அனைத்தும் தலைகீழாக மாறுகிறது. கேபியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று அவரது பெற்றோர்கள், போலீஸாரிடம் புகார் அளிக்கின்றனர். சமூக வலைதளங்களில் #whereisGabbyPetito என்று அனைவரும் டிரெண்ட் செய்கின்றனர். கேபி வழக்கில் அமெரிக்க போலீஸுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இதன் முடிவில் ஒரு மாதத்துக்குப் பிறகு கேபியின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. விசாரணையின் இறுதியில் கேபியின் காதலரான பிரையன் லாண்ட்ரிதான் இந்தக் கொலையை நடத்தி, தானும் தற்கொலையும் செய்து கொண்டார் எனத் தெரிய வருகிறது.
இந்தக் கொலையும், தற்கொலையும் அமெரிக்காவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. சமூக வலைதளங்களில் நம் முன் நிறுத்தப்படும் இன்ஃப்ளூயன்சர்களின் வாழ்க்கைக்கும் யதார்த்தத்துக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருப்பதை மக்கள் உணர்கிறார்கள். இது தொடர்பான விவாதங்கள் நடக்கின்றன.
அமெரிக்காவில் எழுந்த அந்த விவாதப் புள்ளியிலிருந்துதான் இந்தத் தொடரை நான் தொடங்க இருக்கிறேன்.
‘இன்ஃப்ளூயன்சர்’ என்ற இத்தொடரின் நோக்கம், இன்ஃப்ளூயன்சர்களின் புகழ் வளர்ச்சிகளை வெளிச்சமிட்டுக் காட்டி, நீங்களும் இன்ஃப்ளுயன்சர்கள் ஆகலாம்... இதோ 10 வழிகள் என்பதல்ல... “நீங்கள் காண்பதெல்லாம் உண்மை அல்ல” என்ற யதார்த்தத்தை மக்களுக்கு கொண்டு செல்வது மட்டுமே இந்தத் தொடரின் நோக்கம். நான் இங்கு கூற முயற்சிப்பது, உண்மைக்கும் மாய வலைக்கும் இடைப்பட்ட பகுதியைப் பற்றியது.
செய்தி, அரசியல், அழகு, கல்வி, குடும்ப உறவுகள், காதல், பயணம், உணவு, ஆடை சார்ந்து நம்மைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த மாய வலையில் நாம் எப்படி சிக்க வைக்கப்பட்டுள்ளோம்? இந்த வலை எவ்வாறு இயக்கப்படுகிறது? அதிகார சக்திகள் இந்த இன்ஃப்ளூயன்சர்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள்? இதற்குப் பின்னால் இருக்கும் கார்ப்பரேட் எப்படி செயல்படுகிறது? இன்றைய தலைமுறை இதனை எப்படி உள்வாங்கிக் கொண்டுள்ளது? - இவை குறித்தே அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்க்க இருக்கிறோம்.
| தொடர்ந்து பயணிப்போம்... |
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago