ராகுல் காந்தி தகுதி இழப்பும், சில ‘அவசர’ நடவடிக்கைகளும்: பாஜக அரசியல் கணக்கின் ‘ரிசல்ட்’ என்ன?

By பால. மோகன்தாஸ்

ராகுல் காந்திக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியா, தவறா என்ற கேள்வி எந்த அளவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாத முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது மற்றொரு கேள்வி. இந்த நடவடிக்கை கவனத்துடன் எடுக்கப்பட்டதா அல்லது அவசர கோலத்தில் எடுக்கப்பட்டதா என்பதுதான் அது. இது குறித்து சற்றே விரிவாக அலசுவோம்.

கடந்த 23ம் தேதி (மார்ச் 23) ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச். வர்மா கூட, உடனடியாக அவருக்கு 30 நாட்களுக்கு ஜாமீன் வழங்கினார். ஆனால், இந்த தீர்ப்பு வந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடருவதற்கான தகுதியை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 102(1)(e)-ன் படி தீர்ப்பு வந்தபோதே இழந்துவிட்டதாக அறிவித்தார் மக்களவை செயலர் உத்பல் குமார் சிங்.

அவரது இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஏனெனில், மக்களவை செயலர் உத்பல் குமார் சிங் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை. நிச்சயம் மேலிட உத்தரவுக்கு இணங்கியே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பார். மக்களவை செயலகம் மக்களவை சபாநாயகரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடியது. சபாநாயகர் சுதந்திரமாக முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் கொண்டவர் என்றாலும், அரசியல் ரீதியில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரத்தில் 'உரிய ஆலோசனை'யின்படியே அவர் இந்த முடிவை எடுத்திருப்பார்.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: மக்களவை செயலரின் அறிவிப்பு வந்த உடன் தனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்பியுமான சசி தரூர். அவர் தனது ட்விட்டர் பதிவில், ''நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், தீர்ப்பு வந்த 24 மணி நேரத்துக்குள் இப்படி ஒரு அறிவிப்பை இத்தனை வேகமாக வெளியிட்டிருப்பது திகைக்க வைக்கிறது. எதிர் தரப்பு மீது எவ்வித கரிசனமும் மரியாதையும் இன்றி எடுக்கப்பட்ட அரசியல் நடவடிக்கை இது. நமது ஜனநாயகத்துக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்'' என தெரிவித்திருந்தார்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சியை கொடுத்தது அதே மக்களவை செயலகம். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டுவிட்டதால், டெல்லி துக்ளக் சாலையில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஒரு மாதத்துக்குள் காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதினார் மக்களவை செயலகத்தின் துணை செயலர் மோஹித் ராஜன். மார்ச் 27ம் தேதி எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், மார்ச் 23ம் தேதியே பதவி இழப்புக்கு ஆளாகிவிட்டதால், விதிப்படி ஒரு மாதத்துக்குள் அதாவது ஏப்ரல் 23ம் தேதிக்குள் பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அதில் அவர் கறாராக உத்தரவிட்டிருந்தார்.

இந்தக் கடித்திற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ''நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் மக்களவை உறுப்பினராக நான் இங்கு கழித்த நினைவுகள் மகிழ்ச்சியானவை. கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு நான் கட்டுப்படுகிறேன்'' என தெரிவித்திருந்தார். இதில் அவரது பெருந்தன்மையான அணுகுமுறை வெளிப்பட்டது.

தனக்கு 52 வயது ஆகிவிட்ட போதிலும் தனக்கென்று ஒரு வீடு கிடையாது என்று சில மாதங்களுக்கு முன்பு கூறி இருந்தவர் ராகுல் காந்தி. அப்படிப்பட்ட ஒருவரிடம் அரசு இத்தனை கறாராக நடந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி மிக இயல்பாக எழுகிறது.

மக்களவை செயலகத்தின் இந்த அறிவிப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ''ராகுல் தனது அம்மாவோடு தங்கிக்கொள்ள முடியும். அதோடு, அவர் என்னிடமும் வர முடியும். அவருக்காக எனது வீட்டை வழங்க நான் தயார்'' என தெரிவித்தார். அவர் அவ்வாறு கூறியதை அறிந்தபோது ராகுல் காந்தி நிச்சயம் மகிழ்ந்திருக்க மாட்டார்.

ஏன் இந்த அதிதீவிரம்? - இந்த நாட்டின் மிக முக்கிய குடும்பம் ஒன்றின் மிக முக்கிய வாரிசு ராகுல் காந்தி. நமது நாட்டின் ஜனநாயகம் சட்ட திட்டங்களின் அடிப்படையில் அமையப் பெற்றதாக இருக்கலாம். ஆனால், அதற்கு உயிர் கொடுக்கும் நாட்டு மக்கள் உணர்வுகளைக் கொண்டவர்கள். தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஊணர்வுபூர்வமாகவே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுகிறார்கள். சட்ட திட்டங்கள் மீதுள்ள காதலால் அல்ல.

ராகுல் காந்திக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தவர்கள் மக்களின் உணர்வுகளை அறியாதவர்கள் அல்ல; நன்கு அறிந்தவர்களே. இருந்தும் இப்படி ஒரு நடவடிக்கையை அவர்கள் ஏன் எடுத்தார்கள் என்பது மிக முக்கிய கேள்வியாக உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாகவே, ராகுலுக்கு எதிரான இந்த நடவடிக்கை கவனத்துடன் எடுக்கப்பட்டதா? அல்லது அவசர கோலத்தில் எடுக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.

ராகுல் மீதான இந்த நடவடிக்கை காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தும் என்ற அரசியல் கணக்கீட்டின் அடிப்படையில் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டுமல்லாது; கூட்டணியில் இல்லாத கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த மம்தா பானர்ஜி, ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அதோடு, கொல்கத்தாவில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அவர், ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். ஆட்சிக் கட்டிலில் இருந்து பாஜகவை அப்புறப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல. இது நாட்டை காப்பதற்கான போராட்டம்'' என குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் ஒருமித்த குரல்: கடந்த 17 ஆம் தேதி சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும், கடந்த 23 ஆம் தேதி ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும், கடந்த 24 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமியையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட மம்தா பானர்ஜி, அதையடுத்தே தனது வியூகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவும், ராகுலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். அதோடு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதற்கான பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏனெனில் காங்கிரஸ்தான் தேசிய கட்சி என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

டெல்லியிலும், பஞ்சாபிலும் காங்கிரஸை வீழ்த்தி அங்கு ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ''மக்களவையில் இருந்து ராகுல் காந்தி வெளியேற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாடு மிகவும் கடினமான காலங்களை கடந்து செல்கிறது. நாடு முழுவதையும் பாஜக அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்களின் ஆணவத்திற்கும், அதிகாரத்திற்கும் எதிராக 130 கோடி மக்களும் ஒன்றுபட வேண்டும்'' என்று அவர் கூறி இருக்கிறார்.

ராகுல் காந்தியின் தகுதி இழப்பை அடுத்து அறிக்கை வெளியிட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ''ராகுல் காந்தியின் தகுதி இழப்பு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளுக்கும் அரசியல் சாசன மதிப்பீடுகளுக்கும் எதிரான தாக்குதல். பிரதமர் நரேந்திர மோடியின் எதேச்சதிகாரத்தையும் அகங்காரத்தையுமே இது காட்டுகிறது. கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை கண்டிக்க வேண்டிய நேரம் இது'' என தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கணக்கு: ராகுல் மீதான நடவடிக்கை காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்தும் என்பது பாஜகவின் கணக்காக அல்லது நம்பிக்கையாக இருந்திருந்தால், அது தற்போது தவறாகிக் கொண்டிருக்கிறது என்பதையே மேற்சொன்ன தலைவர்களின் கருத்துகள் உணர்த்துகின்றன.

பாஜக பல கட்சிகளை எதிர்த்தாலும் தேசிய அளவில் அது அதிகம் எதிர்க்கும் கட்சியாக காங்கிரஸ்தான் இருந்து வருகிறது. இருந்தும் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, காங்கிரஸ் கடுமையாக பலவீனப்பட்டுவிட்டது; இனி அதனால் எழுந்து நிற்க முடியாது; அரசியல் களத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

பாஜக ஒன்றை மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் பலவீனப்பட்டிருக்கலாம். ஆனால், அது எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியை இழந்துவிடவில்லை. தன்னளவில் அதற்கென்று ஒரு சக்தி இருப்பதால்தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. அதோடு, எதிர்க்கட்சிகள் மத்தியில் காங்கிரஸுக்கென்று நம்பகத்தன்மையும் மரியாதையும் இல்லை என்றும் பாஜக எண்ணிவிட முடியாது.

பாஜக நாட்டின் மிகப் பெரிய கட்சிதான்; ஆனால் வீழ்த்த முடியாத சக்தி அல்ல. எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கும் மாநில அரசியல் சார்ந்த கணக்கீடுதான் அவற்றை ஒன்று சேர விடாமல் தடுத்து வருகிறது. பாஜகவுக்கு இருக்கும் மிகப் பெரிய சாதகம் இது.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் ஒரு வியூகம் பாஜகவை வீழ்த்தும் சக்தி கொண்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஒற்றை வேட்பாளரை நிறுத்துவது என்ற அந்த வியூகம் வெற்றி பெறுமானால், அதைவிட பாஜகவுக்கு மிகப் பெரிய சவால் வேறு இருக்க முடியாது. இந்த வியூகம் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்பதுகூட இல்லை. அதற்குக் குறைவான விகிதத்ததில் வெற்றி பெற்றால்கூட பாஜகவையும் அதன் கூட்டணியையும் வீழ்த்த முடியும்.

இது நடக்காது என்று பாஜக சொல்லலாம்; நம்பலாம். ஆனால், நாளை என்ன நடக்கும் என்பதை யார் அறிவர். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணியும் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத அளவுக்கு தோல்வியை சந்திக்குமானால், அதற்கு ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கையே அடிப்படை காரணமாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்