காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவின் (IPCC) 58ஆவது மாநாடு, சுவிட்சர்லாந்தின் இண்டர்லேகன் நகரத்தில் மார்ச் 19 அன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில் பன்னாட்டுக் குழுவின் ஆறாவது காலநிலை அறிக்கையின் (Sixth Assessment Report) நான்காவதும் இறுதியுமான பகுதி வெளியிடப்பட்டிருக்கிறது.
‘காலநிலை மாற்றத்தின் அறிவியல்’, ‘காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகளும்’, ‘காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்’ என்ற மூன்று தலைப்புகளில் முந்தைய அறிக்கைகளை 782 விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த மூன்று அறிக்கைகளின் ஒருங்கிணைந்த கருத்துகள், முடிவுரை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்துறை அறிவியலாளர்களும் நிபுணர்களும் இணைந்து தயாரித்திருப்பது இதன் சிறப்பம்சம். முந்தைய அறிக்கைகளின் ஒருங்கிணைந்த வடிவம் என்றாலும், இதில் சில கூடுதலான கணிப்புகளும் தெளிவான வழிமுறைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 2023 நவம்பரில் துபாயில் நடக்கவிருக்கும் காலநிலை உச்சி மாநாட்டுக்கு (COP28) இந்த அறிக்கையின் தரவுகளே அடிப்படையாக அமையும் என்பதால், இதன் முக்கிய அம்சங்களைப் புரிந்துகொள்வது அவசியம்.
வெப்பம் அதிகரிக்கும்: கரிம உமிழ்வு இப்போதைய நிலையிலேயே தொடரும்பட்சத்தில், 2040ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை எட்டுவதற்கு 50% வாய்ப்பு உண்டு என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். இது இன்னும் விரைவாக - அதாவது 2037க்குள்ளாகவே நிகழலாம் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாரிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல உலகளாவிய ஒப்பந்தங்களும் பேச்சுவார்த்தைகளும் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படுத்தப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்திருப்பதை இந்த அறிக்கை அங்கீகரிக்கிறது. காலநிலை மாற்றம் பற்றிய தங்களது ஆவணங்களில், அதை எப்படிச் சமாளிப்பது என்கிற வழிமுறைகளையும் உலக நாடுகள் குறிப்பிடத் தொடங்கியிருக்கின்றன.
இதை வரவேற்பதாகக் கூறும் விஞ்ஞானிகள், இந்த வழிமுறைகள் ஒழுங்கமைவுடன் இல்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர். பல்வேறு துறைகளின் ஊடுபாவாக இந்த வழிமுறைகள் உருவாக்கப்பட்டு, தொடர் செயல்பாடுகளாக அவை பரந்துபட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறைகளான சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம் ஆகியவற்றில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. குறிப்பாக, இவற்றின் செலவு குறைந்திருப்பதாகவும், இவற்றின் பயன்பாட்டு விகிதம் அதிகரித்திருப்பதாகவும் காலநிலை அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அனைவருக்கும் கொண்டுசெல்ல இன்னும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். நகர்ப்புறப் பசுமை உள்கட்டமைப்பு, ஆற்றல் செயல்திறன், உணவு வீணாவதைக் குறைப்பது, பயிர் மேலாண்மை ஆகியவற்றில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கும் விஞ்ஞானிகள்: காலநிலை மாற்றத்தின் நீண்ட காலப் பாதிப்பு, இதுவரை கணக்கிடப்பட்டுள்ளதைவிடப் பல மடங்கு மோசமானதாக இருக்கலாம் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க, பாதிப்புகளின் விகிதம் ஒரு பெருக்கல் தொடரைப் போல (Geometric Progression) அதிகரிக்கும் என்று இதை நாம் புரிந்துகொள்ளலாம். ஒரு டிகிரி அதிகரித்தால் 10 மடங்கு பாதிப்பு என்றால், இரண்டு டிகிரி அதிகரித்தால் 20 மடங்கு என பாதிப்புகளை ஒரே நேர்க்கோட்டில் அணுக முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிதிச் சிக்கல்: காலநிலைச் செயல்பாட்டின் வேகத்தை அதிகரிப்பதற்கான மூன்று முக்கியத் தேவைகளாக நிதி, தொழில்நுட்பம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது. சர்வதேச ஒத்துழைப்பு இருக்குமா, ஒருவேளை இருந்தாலும் அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையே நிதிதான் தீர்மானிக்கிறது.
பெரும்பாலான காலநிலை மாநாடுகளில் நிதி தொடர்பான விவாதங்களில்தான் அதிகமான முரண்களும் சர்ச்சைகளும் ஏற்படுகின்றன. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, வளங்குன்றாச் செயல்பாடுகளுக்கான தொழில்நுட்பம், கரிம உறிஞ்சு தொழில்நுட்பம் என்று பலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றிலும் நிதி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆகவே, வேறு எல்லாவற்றையும்விட காலநிலைச் செயல்பாடுகளுக்கு நிதி ஒரு முதன்மையான தடைக்கல்லாக இருந்துவருகிறது.
வளர்ந்த நாடுகள் நிதியளிப்புக்குப் பொறுப்பெடுத்துக்கொள்வதில்லை என்பது பல ஆண்டுகளாக இருக்கும் குற்றச்சாட்டு; அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. யாருக்கு யார் நிதி வழங்குவது என்ற விவாதமே பெரும்பாலான காலநிலை மாநாடுகளின் ஒப்பந்தத்தைச் சீர்குலைத்துவிடுகிறது.
தயார் நிலை அவசியம்: காலநிலை மாற்றத்தால் வரும் பேரிடர்களைச் சமாளிக்க, சூழலியல் மண்டலத்தை அடிப்படையாகக் கொண்ட தகவமைப்புகளை (Ecosystem based adaptation) இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. உதாரணமாக, நிலச்சரிவுகளைக் குறைக்க காடழிப்பைத் தடுப்பது, சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதன் மூலம் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவது, கடல்நீர் உட்புகுதல், கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்றின் பாதிப்பு ஆகியவற்றைத் தடுக்க அலையாத்திக் காடுகளை மீட்டெடுப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளைக் குறிப்பிடலாம்.
இவை தவிர, ஒரு சில பேரிடர்களுக்கு எந்தத் தகவமைப்புமே உதவாது என்று இந்த அறிக்கை வெளிப்படையாகவே அறிவிக்கிறது. அந்தந்த நாடுகள் இவற்றுக்கான தயார் நிலையில் இருக்க வேண்டியதும் அவசியம்.
காலநிலை ஒப்பந்தங்களின்போது அறிவிக்கப்படும் சில வாக்குறுதிகளை உண்மையாகவே நடைமுறைப்படுத்துவதில் நாடுகள் முனைப்பாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. கரிமத் தொழில்நுட்பங்கள் பற்றி இதில் அதிகமாகப் பேசப்பட்டிருப்பது கவனத்துக்குரியது.
உமிழ்வுகளை எவ்வளவு குறைத்தாலும் ஏற்கெனவே வளிமண்டலத்தில் இருக்கும் பசுங்குடில் வாயுக்களைச் சமாளிக்க கரிமத் தொழில்நுட்பம்தான் ஒரே வழி என்பது உண்மையே. ஆனால், எண்ணெய் நிறுவனங்களின் தொடர்ந்த ‘லாபி’ காரணமாக, புதைபடிவ எரிபொருள்களின்மீது வெளிச்சம்படாமல் இருப்பதற்காக இந்தத் தொழில்நுட்பம் முன்னிறுத்தப்படுகிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.
‘துயரங்களின் வரைபடம்’: உலகின் வெவ்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், வெவ்வேறு தலைமுறையினர் காலநிலை அவசரநிலையால் சந்திக்கப்போகும் அழிவுகள் ஆகியவை படங்களாக இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இவற்றை, ‘மனிதத் துயரங்களின் வரைபடம்’ என்று வர்ணிக்கும் ஐநா பொதுச்செயலாளர்அன்டோணியோ குட்டர்ஸ், “எல்லா இடங்களில்இருப்பவர்களும் ஒருசேர, எல்லா விதமான காலநிலை செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுவேஇந்த அறிக்கையை செயல்பாடுத்துவதற்கான அறைகூவல்” என்று தெரிவித்திருக்கிறார்.
காலநிலை மாற்றத்தின் தீவிரம் முன்னெப்போதையும்விட அதிகமாகியிருக்கிறது. உலகம் தொடர் பேரிடர்களால் பாதிக்கப்படுகிறது. சிறிய முரண்களால் வேறுபடாமல் மனித இனத்தின் எதிர்காலத்தைக் காப்பதற்கு உலக நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று இந்த அறிக்கை தெளிவாக வலியுறுத்துகிறது. அதற்குக் காதுகொடுப்பதா வேண்டாமா என்பது உலக நாடுகளின் கையில்தான் இருக்கிறது.
- நாராயணி சுப்ரமணியன் | சுற்றுச்சூழல் எழுத்தாளர் தொடர்புக்கு: nans.mythila@gmail.com
To Read in English: Climate change: A map of human miseries
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago