எஸ்.நீலகண்டன்: நவ செவ்வியல் பொருளாதார அறிஞர்!

By Guest Author

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும் பொருளியல் அறிஞருமான பேராசிரியர் எஸ்.நீலகண்டன் (87), மார்ச் 19 அன்று காலமானார். சட்டம், பொருளாதாரம், புதிய நிறுவனப் பொருளாதாரம், போக்குவரத்துப் பொருளாதாரம், வளர்ச்சிப் பொருளாதாரம், மனிதவள மூலதனம் ஆகிய துறைகளைச் சார்ந்து தன்னுடைய ஆய்வு, கற்பித்தல் பணிகளை மேற்கொண்ட நீலகண்டன், தமிழ்நாடு அரசின் சிறந்த கல்லூரி ஆசிரியர் (1986–87) பரிசு பெற்றவர்.

நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்களுடன் நேரடி அறிமுகம் கொண்டவர். கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம் குக்கிராமத்தில் 1935 டிசம்பர் 19 அன்று பிறந்தவர் எஸ்.நீலகண்டன். கரூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, வேலூர் கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர்.

பொருளியல் துறை: 1957-60இல் நீதியரசர் பி.எஸ்.கைலாசத்திடம் வழக்கறிஞர் பயிற்சிபெற்ற நீலகண்டன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தன்னுடைய தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், அக்டோபர் 1960இல், உதகை அரசு கலைக் கல்லூரியில் பொருளியல் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

தமிழ்நாடு அரசு கல்விப் பணியில் சேர்ந்த அவர் உதகை, சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் பொருளியல் பயிற்றுவித்தார். ‘சொத்துரிமையும் இந்திய அரசமைப்புச் சட்டமும் பொருளியல் மாற்றங்களும்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து, 1979இல் முனைவர் பட்டம் பெற்ற நீலகண்டன், பொருளியல் துறைத் தலைவராக திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் அரசு சேவைக்குத் திரும்பினார்.

ஆய்வு வழிகாட்டி: 1980இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற அவர், அப்பல்கலைக்கழகத்தின் திருச்சி கிளை முதுகலை மையத்தில் நியமிக்கப்பட்டார். அப்போது ஆரம்பிக்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் நீலகண்டன் மட்டும்தான் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு மாணவர்களுக்குப் பொருளியல் துறையில் ஆய்வு வழிகாட்டியாகத் துணைபுரிந்தார்.

1986-87 இல் அமெரிக்க அரசால் வழங்கப்படும் ‘ஃபுல்பிரைட் வெகுமதி’ மூலம் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்துக்குச் சென்று பேராசிரியர் டக்ளஸ் சி.நார்த்திடம் (Douglass Cecil North) புதிய அமைப்புவாதப் பொருளாதாரம் பயின்றார். (1993இல் டக்ளஸ் சி.நார்த்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது). நார்த் ஏற்படுத்திய தாக்கத்தில் 1988இல் ‘இந்தியாவில் அடிமை வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் நிலைத்தன்மை மற்றும் மாற்றம் (1206—1290): புதிய அமைப்புவாதப் பொருளாதாரம் மூலம் ஒரு விளக்கம்’ எனும் ஒரு ஆய்வுக் கட்டுரையை நீலகண்டன் வெளியிட்டார்.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்: 1990இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவந்த நீலகண்டன், பேராசிரியர் சி.டி.குரியனின் அழைப்பின் பேரில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். தனது பதவிக் காலத்தில் அவர் கொண்டுவந்த மாற்றங்கள் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் அந்நிறுவனப் பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கும் இன்றளவும் இன்றியமையாதவையாக உள்ளன.

1995 டிசம்பர் 31 அன்று அந்நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுக்கு முன் அந்நிறுவனத்தில் ‘வளர்ச்சிக்கான ஒரு புதிய நிறுவன அணுகுமுறை’ எனும் கல்விப் பயிலரங்கில், பொருளியல் அறிஞர் ஆலிவர் இ.வில்லியம்சனின் ஆய்வுக்குக் கருத்துரையாளராக இருந்தார். பின்னாளில் (2009) பொருளாதாரத்துக்காக நோபல் பரிசு பெற்றவர் ஆலிவர் வில்லியம்சன்.

1998 வரை திருச்சியில் வாழ்ந்துவந்த நீலகண்டன், பின்னர் தன்னுடைய சொந்த ஊரான செட்டிப்பாளையத்தில் குடியேறினார். ஓய்வுக்குப் பின்னரும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்துவந்தார். பல்வேறு கல்விப் பயிலரங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பு விரிவுரையாளராகக் கவனஈர்ப்பு விவாதங்களைக் கையாண்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க நூல்கள்: இந்தியப் பொருளியல் கழகத்தின் பரிந்துரையை ஏற்று ‘நவீன அமைப்புப் பொருளியலும் விவசாய மாற்றமும்: ஓர் அரிச்சுவடி’ என்கிற நூலை நீலகண்டன் எழுதினார். 2008இல் அவர் எழுதிய ‘ஒரு நகரமும் ஒரு கிராமமும்: கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்’ என்ற நூலும், 2012இல் வெளியான ‘ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை: செவ்வியல் அரசியல் பொருளாதாரம்’ என்ற நூலும் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றன. 80 களைத் தொட்ட பிறகும் தொடர்ந்து எழுதிவந்த நீலகண்டன், சமீபத்தில் ‘நவ செவ்வியல் பொருளியல்’ (2021) எனும் நூலை சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்டார்.

பொருளியலில் தமிழில், குறிப்பாக ஆய்வு மாணவர்களுக்கான நூல்கள் குறைவு எனும் ஆதங்கத்தை நிவர்த்தி செய்யும் வகையில் அவரது நூல்கள் அமைந்தன. அவர் எழுதிய பொருளியல் நூல்களைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சமீபத்தில் மறுபதிப்பாக வெளியிட்டது. நீலகண்டனின் கடைசிப் படைப்பான, Socio-Economic Changes in Western Tamil Nadu (மேற்கு தமிழ்நாட்டில் சமூகப் பொருளாதார மாற்றம்) எனும் ஆங்கில நூல் விரைவில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் வெளிவர உள்ளது.

துணிச்சலுடன் வாதிட்டவர்: பேராசிரியர் நீலகண்டன் மிகவும் எளிமையானவர். அதே நேரத்தில், தனது கருத்துகளை மிகத் தெளிவாகவும் தயக்கமின்றியும் துணிச்சலுடனும் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர். 1990களில், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் மார்க்சிய சிந்தனையுடைய அறிஞர்கள் நிறைய உண்டு. ஆனால், நீலகண்டன் மட்டுமே நவ செவ்வியல் பொருளாதாரம் என்ற மாற்றுக் கருத்தில் ஈர்ப்புடையவராக இருந்தார்.

அந்நிறுவனத்தில் நடக்கும் ஒவ்வொரு கருத்தரங்கிலும், எதிர்க்கருத்தை முன்வைப்பவர் எவ்வளவு பெரிய அறிஞராக இருப்பினும், ஏற்புடைய நவசெவ்வியல் கோட்பாடுகளை முன்னிலைப்படுத்தி திறமையான வாதத்தின் மூலம் அவர்களையெல்லாம் தன் பக்கம் ஈர்த்தவர் அவர். அடிப்படையில் வழக்கறிஞர் என்பதால் இவையெல்லாம் அவருக்குச் சாத்தியமாகியிருக்கும் எனலாம். அன்றாட நிகழ்வுகளை உதாரணங்களாக மேற்கோள் காட்டி மிகக் கடினமான பொருளாதாரக் கோட்பாடுகளை விளக்குவதும் அவரது சிறப்பியல்பு.

அது மட்டுமன்றி, ‘பொருளியல் சிந்தனை வரலாறு’, ‘சமூக அறிவியலின் தத்துவம்’ என்ற முக்கியத்துவம் வாய்ந்த கடினமான இரண்டு பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர் நீலகண்டன். பெருவாரியான பொருளியல் அறிஞர்கள் மார்க்சியப் பொருளாதாரத்திலோ செவ்வியல் பொருளாதாரத்திலோதான் நிபுணத்துவம் பெற்றிருப்பர்.

ஆனால், பேராசிரியர் நீலகண்டன் மார்க்சியப் பொருளாதாரம், செவ்வியல் பொருளாதாரம் மட்டுமின்றி ஆஸ்திரியப் பொருளாதாரத்திலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அவருடைய மறைவு கல்வியாளர்களுக்கும் கல்விச் சமூகத்துக்கும், மிக முக்கியமாகப் பொருளியல் துறைக்கும் பேரிழப்பு என்பது சம்பிரதாயமான கூற்று அல்ல!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்