நீர்ப்பற்றாக்குறை: நிரந்தரத் தீர்வு

By Guest Author

கோடைக்காலத்தில் பல்வேறு மாநில விவசாயிகள் இரண்டு பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்: ஒன்று மின்சாரம்; மற்றொன்று, நீர்ப்பாசனப் பற்றாக்குறை. வாழை, கரும்பு, பருத்தி, நெல் போன்ற அதிக வருமானம் ஈட்டக்கூடிய பயிர்கள் சாகுபடியில் மின்சாரப் பற்றாக்குறையால் போதிய நீர்ப்பாசன வசதி கொடுக்க முடியாமல் பயிர்களில் இழப்பு ஏற்படுகிறது.

ஆனால், நீர்ப் பற்றாக்குறைக் காலத்தில் சொட்டு நீா்ப்பாசனம் (drip irrigation) மூலம் லாபத்துடன் பயிர் சாகுபடி செய்ய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது உண்மையில் சாத்தியமா?

நீர் உபயோகம்: இந்தியாவில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு விவசாய முறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், நீர்ப்பாசன வசதி மிகவும் முக்கியமாகிவிட்டது. காலங்காலமாகப் பயன்படுத்தப்பட்டுவந்த குளம், ஆற்று நீர்ப்பாசனங்களின் முக்கியத்துவம் குறைந்து, நிலத்தடி நீா்ப்பாசனத்தின் உபயோகம் பலமடங்கு உயா்ந்துவிட்டது.

கிராமப்புற மின்மயமாக்கலில் ஏற்பட்ட அசுர வளா்ச்சியால் நிலத்தடி நீா்ப்பாசனத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1970-71இல் வெறும் 16 லட்சமாக இருந்த மின் மோட்டார்களின் எண்ணிக்கை, 2018-19 இல் 2.7 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 1970-71இல்மொத்த நீர்ப்பாசனப் பரப்பில் 34%ஆக இருந்த நிலத்தடிநீர்ப்பாசனப் பரப்பு, 2018-19இல் 64%ஆக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக, விவசாயத் துறையின்மின்சாரப் பயன்பாடு 1970-71லிருந்து 2018-19வரையிலான காலத்தில் 48மடங்கு உயர்ந்துள்ளது.

குறுவை சாகுபடியும் கோடைப் பருவத்தில் செய்யப்படும் சாகுபடியும் பெரும்பாலும் நிலத்தடி நீரைச் சார்ந்தவைதான். ஆனால், கோடைக்காலத்தில் ஏற்படும் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக, விவசாயத் துறைக்கு வழங்கப்படும் மின்சாரம் பல்வேறு மாநிலங்களிலும் கணிசமாகக் குறைக்கப்படுவதால், விவசாயிகள் பயிரிட்டுள்ள விலை உயர்ந்த பயிர்கள் பெரும்பாலான நேரம் பாதிப்புக்குள்ளாகின்றன.

நீர் சேமிப்பு: சொட்டு நீர்ப்பாசன முறையின் மூலமாக, குறைந்த நீரையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி லாபம் தரக்கூடிய வகையில் பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்ய முடியும். பழங்கால நீர்ப்பாசன முறையில் நிலத்துக்கு முழுவதுமாக நீர் கொடுக்கும்போது நீர்ப்பாசனம் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

வாய்க்கால்கள் மூலமாக நீரைப் பயிருக்குக் கொடுப்பதால், அதிக அளவிலான நீர் வீணாக்கப்படுகிறது. ஆனால், சொட்டு நீர்ப்பாசன முறையானது பயிரின் வேர்ப் பகுதிக்குச் சிறிய குழாய்கள் மூலமாக (network of pipes) நீரை நேரடியாகக் கொடுப்பதால் நீர் விரயம் தடுக்கப்பட்டு பெரிய அளவில் நீா் சேமிக்கப்படுகிறது.

பலன்கள்: மத்திய வேளாண் அமைச்சகத்தின் அறிவுரைப்படி, சொட்டு நீர்ப்பாசனத்தை அதிகமாகப் பின்பற்றிவரும் மகாராஷ்டிர மாநிலத்தில் இந்நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் நடத்தப்பட்ட கள ஆய்வின்படி, கரும்புச் சாகுபடியில் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாக ஒரு ஹெக்டேருக்கு 1,065 யூனிட் மின்சாரத்தைச் சேமிக்க முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

2014இல், மத்திய வேளாண் அமைச்சகம் 13 மாநிலங்களில் நடத்திய ஆய்வில், சொட்டு நீா்ப்பாசன முறையின் மூலமாகப் பயிர்களின் மகசூலை 42-53% வரை அதிகரிக்க முடியும் எனவும், 20-50% வரை நீர்ப்பாசனச் செலவைக் குறைப்பதுடன் உரங்களின் உபயோகத்தில் ஏறக்குறைய 28% வரை குறைக்க முடியும் எனவும் தெரியவந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பயிர்ச் சாகுபடி செய்யும் விவசாயிகள், மிகவும் குறைவான மின்சாரத்தைக் கொண்டு பல்வேறு பயிர்களை லாபத்துடன் பயிரிட்டுவருகிறார்கள்.

மகாராஷ்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்தில் பருத்தி, வாழை, வெங்காயம் இன்னும் பல பயிர்களைச் சாகுபடி செய்யும் பெரும்பாலான விவசாயிகள் கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக, சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மாறியுள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2004இல் மத்திய அரசு அமைத்த சொட்டு நீர் வளர்ச்சி வழிமுறை அறியும் குழுவின் அறிக்கையிலும் சொட்டு நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிப்பதன் மூலம் நீா், மின்சாரத்தைப் பெரிய அளவில் சேமிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

திட்டங்கள்: பல்வேறு நன்மைகளைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு 1990-91 முதல் சொட்டு நீர்ப்பாசனத்தை ஊக்குவிப்பதற்காக, இதைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு அதன் முதலீட்டில் 50% முதல்100% வரை மானியமாக வழங்கிவருகிறது. துளிநீரில் அதிக விளைச்சல் என்ற நோக்கை அடையும் வகையில், ‘பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம்’ (Pradhan Mantri Krishi Sinchayee Yojana) எனும் திட்டம் 2015இல் தொடங்கப்பட்டது.

இதனால், 1991-92இல் வெறும் 70,589 ஹெக்டேராக இருந்த சொட்டு நீா்ப்பாசனப் பரப்பளவு 2020-21இல் 63.2 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மானியத்துடன் கூடிய பல்வேறு திட்டங்களை அறிவித்து, சொட்டு நீா்ப்பாசன முறையை விவசாயிகளிடம் வேகமாகப் பிரபலப்படுத்தி வருகின்றன. பல திட்டங்கள் மூலமாக தமிழக அரசும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொட்டு நீர்ப்பாசனத்தை ஊக்குவித்து வருகிறது.

அதிகரிப்பதற்கான வழிகள்: 2004இல் மத்திய அரசு அமைத்த சொட்டு நீர்ப்பாசன வளர்ச்சிக்கு வழிமுறை அறியும் குழு, 270 லட்சம் ஹெக்டேர் சாகுபடிநிலங்கள் சொட்டு நீர்ப்பாசனத்துக்கு உகந்தவை எனமதிப்பிட்டுள்ளது. ஆனால், 2020-21இல் இந்தியாவின் சொட்டு நீர்ப்பாசனப் பரப்பளவானது மொத்த நீா்ப்பாசனப் பரப்பளவில் வெறும் 6% மட்டுமே ஆகும்.

குறைந்த மின்சாரம், நீரைப் பயன்படுத்தி, லாபத்துடன் பயிர் சாகுபடி செய்வதற்குச் சொட்டு நீர்ப்பாசனம் ஒரு தீர்வாக அமையும். தோட்டக்கலைப் பயிர்கள் மட்டுமல்லாமல், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, வாழை, துவரை போன்ற 80க்கும் மேற்பட்ட பயிர்களைச் சொட்டு நீர்ப்பாசனம் மூலமாகப் பயிரிட முடியும். எனவே, சொட்டு நீர்ப்பாசனத்தைப் பெரும்பாலான விவசாயிகளிடம் எடுத்துச் செல்வதற்கு அரசும் அது சார்ந்த நிறுவனங்களும் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில், நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள வட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கியக் காரணம், அதிக நீர் தேவைப்படும் கரும்பு, வாழை, கோதுமை, காய்கறிப் பயிர்களைப் பாரம்பரிய நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்வதாகும்.

எனவே, நிலத்தடி நீா் அதிகம் உறிஞ்சப்படும் பகுதிகளில் கரும்பு, வாழை போன்ற அதிக நீரைக் குடிக்கும் பயிர்களைச் சொட்டு நீா்ப்பாசனத்தின் மூலமாக மட்டும் சாகுபடி செய்யக் கட்டாயப்படுத்த வேண்டும்.

கரும்பு ஆலைகள் மூலமாக, கரும்புப் பயிர்ச் சாகுபடியைச் சொட்டு நீா்ப்பாசனத்தின் கீழ் படிப்படியாகக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், சொட்டு நீா்ப்பாசன முறையில் மட்டும் பயிர்ச் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன் மற்றும் மோட்டார்களுக்கு உடனடி மின்சார இணைப்பு கொடுப்பதற்கு அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

பருவகால மாற்றங்கள், மழைப் பொழிவின் அளவில் மாற்றங்களை ஏற்படுத்தி நீா்ப் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் எனச் செய்திகள் வெளியாகின்றன. இந்தச் சூழலில் குறைந்த நீரில் அதிக மகசூல் தரக்கூடிய சொட்டு நீா்ப்பாசன முறையை வளர்த்தெடுத்தல் காலத்தின் கட்டாயம்.

மார்ச் 22: உலகத் தண்ணீர் நாள்

- அ.நாராயணமூர்த்தி | மூத்த பேராசிரியர்; முன்னாள் முழு நேர உறுப்பினா் - CACP, தொடர்புக்கு: narayana64@gmail.com

To Read in English: More crop per drop: Drip irrigation mitigates water scarcity

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்