உலகின் வெவ்வேறு ஊடகங்களும் அமைப்புகளும் முதல் உலகப் போரின் நூறாவது ஆண்டை பிரம்மாண்டமான முறையில் நினைவுகூரும்போது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி மட்டும் சும்மா இருக்குமா என்ன? தற்போது, முதல் உலகப் போரை வரையறுக்கும் நூறு சொற்களின் தேர்ந்தெடுத்த பட்டியல் ஒன்றை ஆக்ஸ்ஃபோர்டு வெளியிட்டிருக்கிறது.
முதல் உலகப் போரில் உருவாக்கப்பட்ட சொற்கள், முன்னரே உருவாகி உலகப் போரின்போது பிரபலமான சொற்கள், உலகப் போரின்போது கூடுதல் பொருள் கிடைக்கப்பெற்ற சொற்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு அமர்க்களப்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றையும்விட ஆச்சரியமுட்டும் தகவல் ‘முதல் உலகப் போர்’ (ஃபர்ஸ்ட் வேர்ல்டு வார்) என்ற சொல்லைப் பற்றியதுதான். இந்தச் சொல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, (இரண்டையும் வேறுபடுத்திக் காட்டும் விதத்தில்) புழக்கத்துக்கு வந்திருக்குமென்று நாம் நினைப்போம். அதுதான் இல்லை. முதல் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், யாரோ ஒருவர் தனது நாட்குறிப்பில் செப்டம்பர் 10, 1918-ல் எழுதி, பிறகு புகழ்பெற்றதுதான் அந்தச் சொல். ஒன்றுக்கும் மேலே உலகப் போர்கள் வரலாம் என்பது அந்த தீர்க்கதரிசிக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது!
வெவ்வேறு மொழிகள் பேசும் வீரர்கள் ஒன்றுசேர்ந்தோ எதிர்த்தோ போரிட்ட உலகப் போர்களில் எவ்வளவு மொழிப் பரிமாற்றம் நடந்திருக்கும்? முதல் உலகப் போர்ச் சொற்களில் ஆங்கிலம், ஜெர்மன் (ஆயுதங்கள் தொடர்பான சொற்களில் ஜெர்மன் மொழியின் ஆதிக்கம் அதிகம்), பிரெஞ்சு போன்ற மொழிகளின் தாக்கம்தான் அதிகம் என்கிறது ஆக்ஸ்ஃபோர்டு. குறிப்பிட்ட சொல் எந்த ஆண்டில், யாரால், எந்தப் பத்திரிகையால் முதலில் பதியப்பட்டது என்பதுகுறித்த தகவல்கள் ஆக்ஸ்ஃபோர்டு பட்டியலின் சிறப்பம்சம்.
ஆக்ஸ்ஃபோர்டைப் போலவே சில இணையதளங்கள் இப்படிப் பட்டியல்களைத் தந்திருக்கின்றன. ஆக்ஸ்ஃபோர்டு பட்டியலிலிருந்தும் பிற பட்டியல்களிலிருந்தும் முக்கியமான சில சொற்களும் அவற்றுக்கு இணையான தமிழ்ச் சொற்களும்:
அலைஸ் (Allies) - நேச நாடுகள் (முதல் உலகப் போரில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா ஆகியவற்றின் ராணுவக் கூட்டைக் குறிக்கும் சொல்.)
பங்கர் (bunker) - பதுங்குகுழி (வேறுபாட்டுக்குக் காண்க: டிரென்ச்)
கேமஃப்ளாஜ் (camouflage) - உருமறைப்பு (ராணுவ வாகனங்கள், தளவாடங்கள் போன்றவை எதிரிகளின் கண்களில் சிக்காமல் இருப்பதற்காக மேற்கொள்ளும் செயல்.)
கன்ஸ்க்ரிப்ஷன் (conscription) - கட்டாய ஆளெடுப்பு (ராணுவத்தில் சேராத ஆண்களுக்குக் கடும் தண்டனை உண்டு.)
ஃபிரண்ட் லைன் (front line) - முன்வரிசை (முன்வரிசை வீரர்கள் நெடுங்குழிகளில் இருந்தபடி எதிரிப் படையினரை அருகில் எதிர்கொள்வார்கள்.)
ஷெல் ஷாக் (shell shock) - வெடிகுண்டு அதிர்ச்சி (போர்க்களங்களில் நீண்ட நாள் கழித்தவர்களுக்கு, தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு ஏற்படும் மனநலப் பிரச்சினை.)
டேங்க் (tank) - டாங்கி (முதல் உலகப் போரில்தான் டாங்கிகள் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டன.)
டிரென்ச் (trench) - நெடுங்குழி (பதுங்குகுழிக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. சதுரமாகவோ செவ்வகமாகவோ இருந்தால் பதுங்குகுழி, நீண்டுகொண்டே போனால் அது நெடுங்குழி.)
டிரென்ச் ஃபீவெர் (trench fever) - நெடுங்குழி காய்ச்சல் (வீரர்களிடையே சீலைப் பேன்களால் பரவும் ஒருவிதக் காய்ச்சல்.)
டிரென்ச் ஃபுட் (trench foot) - நெடுங்குழி பாதவீக்கம் (தொடர்ச்சியாக நெடுங் குழிகளில் ஈரத்தில் நின்றபடி போரிடுவதால் கால்களில் ஏற்படும் வீக்கம்.)
வெஸ்டர்ன் ஃப்ரண்ட் (western front) - மேற்குப் பிராந்தியம் (பிரான்ஸ் வழியாகவும் பெல்ஜியம் வழியாகவும் சென்ற முன்வரிசை நெடுங்குழி. அந்தப் பகுதியில் நெடுங்குழிகளில் இருந்தபடியே வீரர்கள் போரிட்ட சண்டை மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது. எந்தப் பக்கமும் யாரும் முன்னேற முடியாமல் நடந்த சண்டை அது.)
ஜீரோ அவர் (zero-hour)
- தொடக்க நேரம், பூஜ்ய நேரம் (போர் தொடங்கும் அல்லது, போரின் ஒரு முக்கியச் செயல்பாடு தொடங்கும் நேரம். தற்போது இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றவற்றில் வேறு பொருளில் இந்தச் சொல் பயன்படுகிறது.)
போன வாரம் கேட்ட கேள்விக்கான பதில் அடுத்த வாரம்
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago