பேருந்துப் போக்குவரத்து அரசுடைமையான வரலாறு!

By Guest Author

சென்னையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேருந்துகளை இயக்குவதற்கான அனுமதியைத் தனியாருக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக வெளியான செய்தி வாதப் பிரதிவாதங்களை எழுப்பியிருக்கிறது.

பேருந்துப் போக்குவரத்தைத் தனியாரிடமிருந்து தமிழ்நாடு அரசின் ஆளுகைக்குள் கொண்டுவந்த முற்போக்கு நடவடிக்கையை அரை நூற்றாண்டுக்கு முன்பே எடுத்த திமுக அரசு, தற்போது மீண்டும் தனியாரை நுழைப்பது சரியா என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்து அரசுடைமையாக்கப்பட்ட வரலாற்றை நினைவூட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

சுதந்திரத்துக்குப் பிறகு சில மாநிலங்கள் மட்டுமே பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் இறங்கின; அதற்கு முன்னோடி தமிழ்நாடுதான். பேருந்துப் போக்குவரத்தின் முக்கியத்துவம் கருதி 1956இல்தான் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை உருவாக்கப்பட்டது. மூன்றாண்டுகள் கழித்து 192 கி.மீ. தொலைவுள்ள தடங்களுக்கு விரைவுப் போக்குவரத்தை அரசு அறிமுகப்படுத்தியது.

சோமசுந்தரம் குழு: 1967இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் பேருந்துத் தடங்களை அரசுடைமையாக்கும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றன. குறிப்பாக, மு.கருணாநிதி இரண்டாவது முறையாக முதலமைச்சரானதும் 1971இல் சோமசுந்தரம் குழுவை அமைத்தார்.

அக்குழு அளித்த பரிந்துரையின்படி 120 கி.மீ. மற்றும் அதற்கு அதிகமான தொலைவு கொண்ட சாதாரண, விரைவுத் தடங்களை முதல் கட்டமாகவும், சென்னையுடன் இணைக்கப்பட்ட தடங்களை இரண்டாம் கட்டமாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தடங்களை மூன்றாம் கட்டமாகவும் அரசுடைமையாக்குவது என்று முடிவுசெய்தது அரசு. அதன்மூலம் தமிழ்நாட்டில் பேருந்துகள், பேருந்துத் தடங்கள், பேருந்துக் கழகங்கள் மெல்ல மெல்ல அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

அதைத் தொடர்ந்து 1956 கம்பெனிகள் சட்டத்தின்படி போக்குவரத்துக் கழகங்களைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியது. அரசின் சார்பில் பல போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டதற்கு இதுதான் ஆரம்பப்புள்ளி. 1972 ஜனவரி 1 அன்று முதன்முறையாக ‘பல்லவன் போக்குவரத்துக் கழகம்’ உருவானது. அதே வேகத்தில் தனியாரிடம் இருக்கும் பெரிய பேருந்துக் கழகங்களைக் கையகப்படுத்தத் தயாரானது தமிழ்நாடு அரசு.

அரசுடைமையான பேருந்துகள்: ஐம்பதுக்கும் அதிகமான பேருந்துகளை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களிடமிருந்துபேருந்துகளையும் அவை தொடர்பான சொத்துகளையும் கையகப்படுத்துவதுதான் அரசின் ஆரம்பகாலத் திட்டம்.

அதன்படி, 346 பேருந்துகளை வைத்திருந்த மதுரை ரோட்வேஸ் நிறுவனம், அரசு உருவாக்கிய பாண்டியன் போக்குவரத்துக் கழகத்துடன் இணைக்கப்பட்டு, அதற்கான தலைமையிடமாக மதுரை அறிவிக்கப்பட்டது. அடுத்தடுத்து பல மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பேருந்து நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுப் பேருந்துக் கழகங்களுடன் இணைக்கப்பட்டன.

ஒரு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாவட்டங்களில் செயல்படும் வகையில் இணைப்பு நடவடிக்கைகள் நேர்த்தியாகவும் கவனமாகவும் கையாளப்பட்டன. திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களை இணைக்கும் வகையில் பாண்டியன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது ஓர் உதாரணம். சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கூட்டுறவு மோட்டார் சர்வீஸ் சங்கங்களால் நடத்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் இருந்த 46 பேருந்துகளைக் கொண்டு அண்ணா போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது; இந்நடவடிக்கை மளமளவென விரிவடைந்தது.

முளைத்தது சிக்கல்: 1973இல் தமிழ்நாடு பொதுப் பேருந்துகள் மற்றும் ஒப்பந்தப் பேருந்துகள் (கையகப்படுத்துதல்) சட்டம் (Tamil Nadu Stage Carriages and Contract carriages (Acquisition) Act) என்கிற சட்டத்தைக் கொண்டுவந்தது தமிழ்நாடு அரசு. அதன்படி, எந்த மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் உள்ளனவோ அங்கு அரசுடைமை நடவடிக்கையை அமல்படுத்துவது; அதன்பிறகு அடுத்தடுத்து ஏறுவரிசையில் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஐந்தாண்டுகளில் அரசுடைமையாக்கலை முழுமைப்படுத்துவது எனத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, 1973 ஜனவரி 14 அன்று நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 தனியார் போக்குவரத்துக் கழகங்கள் அவற்றிலிருந்த 121 பேருந்துகளோடு அரசுடைமையாக்கப்பட்டன. இந்த இடத்தில்தான் சிக்கல் முளைத்தது. பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமையாக்குவதற்கு எதிராக நீதிமன்றங்களில் ஏராளமான ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமையாக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்தைச் செல்லாததாக அறிவித்தது.

தீர்வு தந்த தீர்ப்பு: என்றாலும், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழ்நாடு அரசு. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்தச் சட்டம் செல்லும் என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம். வழக்கு நடந்துகொண்டிருந்த காலத்தில் பேருந்துப் போக்குவரத்தை அரசுடைமையாக்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

தீர்ப்புக்குப் பிறகு அரசுடைமையாக்கும் பணி வேகம் பிடித்தது. பின்னாளில் வந்த ஆட்சியாளர்களும் அதில் கவனம் செலுத்தினர் என்பது கவனிக்கத்தக்கது. இப்படித்தான் தமிழ்நாட்டில் பேருந்துப் போக்குவரத்து தனியாரிடமிருந்து அரசின் வசம் வந்தது.

வலுவான இணைப்புச் சங்கிலி கொண்ட அமைப்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இன்று உருவெடுத்து நிற்பதற்குக் காரணம், அது அரசின் ஆளுகைக்குள் வந்ததுதான். இந்தச் சூழலில், தமிழ்நாடு அரசு தற்போது முன்னெடுக்க முயலும் திட்டம் விமர்சனத்துக்குள்ளாவதில் ஆச்சரியமில்லை. அரசு அதிகபட்ச கவனத்துடனும் தீவிர கரிசனத்துடனும் அரை நூற்றாண்டுக்கு முன்பு காட்டிய அதே தொலைநோக்குப் பார்வையுடனும் அணுக வேண்டிய விவகாரம் இது.

- ஆர்.முத்துக்குமார் | ‘தமிழக அரசியல் வரலாறு’ நூலாசிரியர்; தொடர்புக்கு: writermuthukumar@gmail.com

To Read in English: The history of Bus transport nationalization

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்