வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை திரிணமூல் காங்கிரஸ் தனித்தே எதிர்கொள்ளும் என்றும், வேறு எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும், மக்களுடன் மட்டுமே கூட்டணி என்றும் அறிவித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி. அவரது இந்த அறிவிப்பு தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இந்த அறிவிப்புக்குக் காரணம் என்ன? அதன் பின்னணி என்ன? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
இந்தியாவின் இன்றைய பெண் அரசியல் ஆளுமைகளில் அதிக மக்கள் செல்வாக்குள்ள மிகப் பெரிய ஆளுமை மம்தா பானர்ஜி. இந்தியாவின் பெண் அரசியல் ஆளுமைகளாகத் திகழும் சோனியா காந்தி, மாயாவதி, மெகபூபா முஃப்தி போன்றவர்களுக்கு இல்லாத சிறப்பு மம்தா பானர்ஜிக்கு உண்டு - சுயமாக கட்சியைத் தொடங்கி நாட்டின் மிகப் பெரிய மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 3-வது முறையாக முதல்வராக பதவி வகித்து வருவதுதான் அந்தச் சிறப்பு. இந்தியப் பெண் அரசியல் தலைவர்களில் வேறு யாருக்கும் இதுவரை கிட்டாத சிறப்பு அது.
மேற்கு வங்கத்தில் கட்சிகளின் நிலை: 42 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 22 தொகுதிகளில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் கட்சி 44 சதவீத வாக்குகளைப் பெற்றது. கடந்த 2021-ல் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது 48 சதவீத வாக்குகளையும், மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 215 தொகுதிகளில் வெற்றியையும் பெற்றது திரிணமூல் காங்கிரஸ்.
ஒருகாலத்தில் மேற்கு வங்கத்தில் பாஜகவோடு கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கட்சி திரிணாமூல் காங்கிரஸ். இன்று அக்கட்சிக்கு அம்மாநிலத்தில் மிகப் பெரிய அரசியல் எதிரியாக உருவெடுத்திருப்பது அதே பாஜகதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 40 சதவீத வாக்குகளையும் பெற்ற பாஜக, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 38 சதவீத வாக்குகளையும், 77 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இரு கட்சிகளைத் தவிர வேறு எந்த ஒரு கட்சியும் வெற்றி பெறவில்லை என்பதுதான்.
» வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 2 - இவர்களில் பலருக்கும் இந்தியே தெரியாது!
» தேசிய அரசியலில் காங்கிரஸ் களத்தை இழப்பது ஏன்? - ஒரு ‘டேட்டா’ அலசல்
காங்கிரஸ் தந்த அதிர்ச்சி: இந்தச் சூழலில்தான், மேற்கு வங்கத்தின் சகார்திகி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் சார்பிலும், ஒரே எதிர்க்கட்சியான பாஜக சார்பிலும் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதேநேரத்தில், சிபிஎம் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தனது வேட்பாளரை நிறுத்தியது. இந்த தேர்தலில் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த இடைத் தேர்தலில், காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணி 47 சதவீத வாக்குகளைப் பெற்றது. திரிணமூல் காங்கிரஸ் 35 சதவீத வாக்குகளையும், பாஜக 14 சதவீத வாக்குகளையும் பெற்றன.
கடந்த 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது சிபிஎம்-மும் காங்கிரசும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட போதிலும், சிபிஎம் 4.7 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 3 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றன. ஆனால், இம்முறை 47 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பது இவ்விரு கட்சிகளுக்கும் மிகப் பெரிய நம்பிக்கையை அளித்திருக்கிறது.
இவ்விரு கட்சிகளும் கடந்த மாதம் நடந்து முடிந்த திரிபுரா சட்டப்பேரவை பொதுத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் கவனத்தை ஈர்க்கும் வகையில் களம் கண்டது. இதில், சிபிஎம் கட்சி 24 சதவீத வாக்குகளையும் 11 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றது. காங்கிரஸ் 8.56 சதவீத வாக்குகளையும் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதமும் 1 சதவீதத்திற்கும் குறைவு.
தேர்தல் அரசியல் நெருக்கடி: இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை, திரிணமூல் காங்கிரஸின் கோட்டையாக மாற்றியவர் மம்தா. தற்போது, இடதுசாரிகளோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்து தனது அரசியலை பதம் பார்ப்பதால், இடதுசாரிகளோடு காங்கிரஸ் கட்சியையும் சேர்த்து கடுமையாக எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு மம்தா தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சிபிஎம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை மேற்கு வங்கத்தில் களத்தை இழந்துவிட்டதாகக் கருதப்பட்டது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் அவை பெற்ற வெற்றியும் வாக்கு சதவீதமும் திரிணமூல் காங்கிரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மம்தா அளித்த பேட்டி: இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ''காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணி ஒழுக்கமற்ற கூட்டணி. இந்தக் கூட்டணியின் வேட்பாளருக்கு பாஜக தனது வாக்குகளை மடைமாற்றம் செய்துள்ளது. கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு விழுந்த ஓட்டுகள் இம்முறை காங்கிரசுக்கு விழுந்திருக்கிறது. சிபிஎம் - காங்கிரஸ் - பாஜக ஆகியவை மேற்கு வங்கத்தில் இணைந்து செயல்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஏற்கெனவே கூறி இருக்கிறார். இதுபோன்ற ஓர் ஒழுக்கக் கேடான கூட்டணியில் இருந்து கொண்டு காங்கிரஸ் எவ்வாறு பாஜகவை எதிர்க்கும்? சிபிஎம் எவ்வாறு பாஜகவை எதிர்க்கும்? என்னை எதிர்க்க சிபிஎம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் பாஜவோடு ஒன்று சேர்வார்கள் என்றால், இவர்களா பாஜகவை எதிர்ப்பவர்கள்?'' என கேள்வி எழுப்பினார்.
காங்கிரசை கைவிடுவது மம்தாவுக்கு தவிர்க்க முடியாதது: பாஜகவை எதிர்ப்பதில் புதிய உறுதியை காட்டி வரும் மம்தா பானர்ஜி, இடதுசாரி எதிர்ப்பிலும் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். அதேநேரத்தில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்களோ, சிபிஎம் கட்சியை நண்பனாகவும், திரிணமூல் காங்கிரஸை எதிரியாகவும் பார்க்கிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலின்போது கேரளாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் சிபிஎம் கட்சியோடு, காங்கிரஸ் கூட்டணி வைப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இத்தகைய சூழலில், அந்தக் கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் இணைவது மேற்கு வங்கத்தில் அதன் அரசியல் எதிர்காலத்தை நிர்மூலமாக்கிவிடும் என அஞ்சுகிறார் மம்தா. பாஜகவை எதிர்ப்பதைப் போலவே, காங்கிரஸ் - சிபிஎம் கூட்டணியையும் எதிர்ப்பதில்தான் தனது அரசியல் எதிர்காலம் அடங்கி இருப்பதாக அவர் கருதினால், அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago