வரலாறு நெடுகிலும் தொடரும் புலம்பெயர்தல்: ‘‘தொடக்கத்தில் வேட்டையாடுதல் மூலம் உணவு சேகரிக்கும் வழக்கம் மனிதர்களிடம் இருந்தது. நாடோடி முறையிலான வாழ்க்கை நடத்திவந்த மனிதர்கள் உணவு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பான இருப்பிடங்களுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்துகொண்டே இருந்தனர். புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் மனிதர்கள் உணவு தயாரிக்க கற்றுக்கொண்டனர். அந்த சமயத்தில் இருந்து ஓரிடத்தில் தங்கி வாழும் வழக்கம் ஏற்பட்டது. வயல்வெளிகளுக்கு அருகில் வீடுகள் கட்டி வசிக்கத் தொடங்கிய மனிதர்களிடம் வீட்டு விலங்குகளை வளர்க்கும் பழக்கமும் இருந்தது.’ - என்சிஇஆர்டியின் 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் 3-வது பாடம் புலம்பெயர்தலை இவ்வாறு விவரிக்கிறது.
பெரும்பாலான சமூகத்தினர் ஓரிடத்தில் குழுவாக தங்கி வாழ்ந்து வந்த நிலையில், நாடோடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் தங்களது குழந்தைகளுடன் காலங்காலமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், உலக அளவில் பல நாடுகளில் நிகழும் நிலையற்ற பொருளாதாரம் உள்ளிட்ட காரணங்களால், ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கும் புலம்பெயரும் வழக்கம் நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது.
புலம்பெயர்தல் ஏன்? - 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் உள்நாட்டில் புலம்பெயர்ந்தவர்கள் 45.5 கோடி. தமிழ்நாட்டில் 34,87,974 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வொன்றில் பேசிய பொருளாதார அறிஞரும், மாநில வளர்ச்சிக் குழுவின் துணைத் தலைவருமான ஜெயரஞ்சன், “இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளுக்கு அதிகளவில் புலம்பெயர்ந்தனர். இதனால், அம்மாநிலத்தில் உள்ள வேலைகளைச் செய்வதற்கு போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கேரளாவிற்கு பல்வேறு வேலைகளுக்காகச் சென்றனர். அதுபோலத்தான், தற்போது தமிழகத்திற்கு பல்வேறு மாநில தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சிக்னலில் காத்திருப்பவர்கள்: சென்னையின் அனைத்து பிரதான சிக்னல்களிலும், கார் சம்பந்தப்பட்ட உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கையில் ஏந்தியபடி சிவப்பு விளக்கின் சமிக்ஞைக்காக காத்திருப்பவர்களைப் பார்திருப்பீர்கள். இவர்களில் பலரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பட்கா ஜங்கம் (Budga Jangam) எனப்படும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சுற்றி மேம்பாலங்களின் கீழ் டெண்ட் அமைத்து பல ஆண்டுகளாக வசித்து வருபவர்கள். பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்களான இவர்கள், தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சிகளால் தங்களது பாரம்பரியக் கலைத் தொழிலைக் கொண்டு சொந்த மாநிலத்தில் பிழைக்க முடியாமல், இங்கு புலம்பெயர்ந்தவர்கள். எனவே, புலம்பெயர்தல் இதுபோன்ற சமூக ரீதியான காரணிகளாலும் நிகழ்வது உண்டு. இவர்களைப் போன்றவர்களும், தொழில் ரீதியாக புலம்பெயர்கிறவர்களும் புலம்பெயர்ந்த மாநிலங்களில் சந்திக்கும் பிரச்சினைகளும் உள்ளன.
» வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப் பதிவு; வதந்தி பரப்பினால் 7 ஆண்டு வரை சிறை
» விதிமுறைகளை மீறியதற்காக அமேசான் பேவுக்கு ரூ.3.06 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி
பாதுகாப்பு அளித்திடுக... : இந்தநிலையில், மார்ச் 1-ம் தேதி, சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "வட மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுவிடும்” என்று குறிப்பிட்டதில் இருந்தே இந்தத் தொழிலாளர்களின் தேவை, நமக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதை உணர்த்துகிறது. இந்தத் தொடரின் முதல் அத்தியாயம் இடம்பெற்ற கட்டுரையில் கருத்துப் பகுதியில் வாசகர்கள் பலரும் ‘வட மாநிலத் தொழிலாளர்கள் சென்றுவிட்டால் சென்னை இருக்காது’ என்று பேராசிரியர் இருதயராஜன் பேசியது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.
தொழில் முடங்கும் அபயாம்: இதுதொடர்பாக, சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் எம்.ரவியிடம் பேசியபோது, "எங்கள் சங்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஹோட்டல் தொழில்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. தமிழகம் முழுவதும் 3.5 லட்சம் பேருக்கு மேல் வடமாநிலத் தொழிலாளர்கள் ஹோட்டல், டீக்கடை உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் முன்வந்து செய்ய விரும்பாத வேலைகளையே இந்தத் தொழிலாளர்கள் செய்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பல வேலைகளை செய்ய முன்வருவது இல்லை. எனவேதான், தற்போது வடமாநில தொழிலாளர்கள் கார்பென்டர், பிளம்பர், விவசாய வேலைகள், கோழிப் பண்ணைகள் என எல்லாவிதமான வேலைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.
ஹோட்டல் வேலைகளுக்கு வரும் இந்தத் தொழிலாளர்கள் இட்லி, தோசை சுடுவது முதல் மேஜைகளைத் துடைப்பது, கழிவறைகள் பராமரிப்பு வரை எந்த வேலைகளையும் செய்யத் தயங்குவது இல்லை. இவர்கள் வேகமாக வேலையைக் கற்றுக்கொள்ளவும் செய்கின்றனர். இவர்கள் இல்லாவிட்டால் எங்களது தொழில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இங்கே பாதுகாப்பு இல்லாதச் சூழல் இருந்தால், இவர்கள் தமிழகம் வருவதை தவிர்த்துவிட்டு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிற்குச் செல்லும் சூழல் ஏற்படலாம். கோவை, திருப்பூர் தொடர்பான செய்திகள், வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் இவர்களுக்குள் வேகமாக பகிரப்படுகிறது. எனவே, இந்தத் தொழிலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
தமிழக அரசு உறுதி: இந்நிலையில், மார்ச் 3-ம் தேதி தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள். அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். | வாசிக்க > தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை: அரசு விளக்கம்
சுரண்டப்படும் தொழிலாளர்கள்: இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்தில் பல வாசகர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் வருகையால் தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களின் வேலைகள் பறிக்கப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக ஏஐடியூசியின் தேசிய செயலாளர் வகிதா நிஜாமிடம் பேசினோம். அவர் கூறியது: "புலம்பெயர்தல் என்பது காலங்காலமாக நடந்து வருவது. தேவையும் வேலையும் புலம்பெயர்தலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்து வருகின்றன. தொழில்மயமாதலில் முதலாளித்துவத்தின் உச்சபட்ச சுரண்டல்முறைதான் புலம்பெயர்தல். பொதுவாக புலம்பெயர்தல், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்தல், உள்நாட்டிற்குள் புலம்பெயர்தல், மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு புலம்பெயர்தல் என மூன்று வகைப்படும்.
அதாவது, ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில் இருந்து வளர்ந்த நாடுகளுக்கு வேலைகளுக்காக மக்கள் புலம்பெயர்கின்றனர். அதேபோல், ஒரு வளர்ச்சியடைந்த மாநிலத்தை நோக்கி, வளர்ச்சி குறைவாக உள்ள மாநிலங்களில் இருந்து புலம்பெயர்தல் நடக்கும். அதேபோல், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியடைந்த மாவட்டங்களை நோக்கி, வளர்ச்சி குறைந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்வர். இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட நாடு அல்லது மாநில அரசு அம்மக்களுக்கு தேவையான வேலை வாய்ப்பை வழங்கத் தவறியதன் தோல்வியே முதன்மைக் காரணி ஆகும். பொதுவாக, முதலாளிகளுக்கு உள்ளூர் ஆட்களை பணியமர்த்தினால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், பணிப் பாதுகாப்பு, இதர பலன்கள் என பலவற்றை செய்து தரவேண்டும். ஆனால், இதுபோன்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இவை எதுவும் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதில் கவனமாக இருக்கின்றனர்.
சட்டங்களை அமல்படுத்துக... : இத்தகைய தொழிலாளர்களுக்கு சர்வதேச பிரகடனத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. அதன் அடிப்படையில், புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் காக்கும் சட்டங்களும் உள்ளன. ஆனால், அந்தச் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை. சென்னை முகலிவாக்கத்தில் ஒரு கட்டிட விபத்து நிகழ்ந்தது நினைவிருக்கலாம். அந்தக் கட்டிடத்தினுள் எத்தனை பேர் வேலை பார்த்தனர்? யார் அவர்கள்? எங்கிருந்து வந்தவர்கள்? - இந்த விவரம் எதுவும் இல்லை. எனவே, இதுபோன்ற விபரீதங்களைத் தடுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை உரிய முறையில் அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்தத் தொழிலாளர்களுக்கு ஓர் அங்கீகாரமும், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பிற உரிமைகளும் கிடைக்கும்.
தமிழகத்திற்கு அதிகமாக புலம்பெயரும் தொழிலாளர்கள் யார்? : பிஹார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் மணிப்பூர், மிசோரம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பெருமளவில் தமிழகத்திற்கு வேலைத்தேடி வருகின்றனர். இந்த வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும், உணவகங்கள், அழகு நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
கிராமப்புற பட்டியலினத்தவர்கள்... - இத்தகைய புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த சமீபத்திய ஆய்வு ஒன்றில், இவர்களில் பெரும்பாலானவர்கள் அந்தந்த மாநிலங்களின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒருசில மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறது. மேலும், இவர்கள் பெரும்பாலும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் நசிந்துள்ளதையே இது காட்டுகிறது. கிராமப்புறங்களை மேம்படுத்தும் திட்டங்கள் இல்லை. இதன்மூலம், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், வறுமை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் புலம்பெயர்கின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இன்றைக்கு உள்நாட்டிற்குள் புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கை என்பது 30 சதவீதமாக இருக்கிறது.
எனவே, சமூக - பொருளாதாரரீதியாக அணுகவேண்டிய இந்தப் பிரச்சினையை மொழியைக் காரணம் காட்டி அரசியலாக்கப்படுவது சரியல்ல. உண்மையில் புலம்பெயரும் தொழிலாளர்கள், முதலாளிகளால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். உதாரணத்துக்கு, திருப்பூரில் ஓர் உள்ளூர் தொழிலாளிக்கு ஒரு பீஸ் ஆடை தைக்க 75 பைசா கூலி கொடுக்கப்படுகிறது என்றால், இதுபோல குடும்பத்துடன் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு ஒரு பீஸ் ஆடை தைக்க 40 பைசா கூலி கொடுக்கப்படுகிறது.
இந்தியே தெரியாது... : ஏஐடியூசியைப் பொறுத்தவரை, தமிழ் பேசினாலும் இந்தி பேசினாலும் எங்களுக்கு அவர்கள் தொழிலாளர்கள்தான். இதில் வட மாநில தொழிலாளர்கள், தென் மாநில தொழிலாளர்கள் என்ற வேறுபாடு இல்லை. அதேபோல் இவர்கள் அனைவரும் இந்தி பேசுகிறவர்கள் என்பதை நான் மறுக்கிறேன். காரணம், இவர்களில் பலருக்கு இந்தியே தெரியாது. பிஹாரில் இருந்து வருபவர்கள் போஜ்புரி, மைத்திலி மொழி பேசக் கூடியவர்கள். ஒடிசாவில் இருந்து வருபவர்கள் ஒடியா மொழி பேசக்கூடியவர்கள், மேற்கு வங்கத்தில் இருந்து வரும் தொழிலாளர்கள் வங்க மொழி பேசுபவர்கள். நிலைமை இப்படியிருக்க, மொழியை காரணம் காட்டி இதை அரசியலாக்குவதும், உண்மைக்குப் புறம்பான வீடியோக்களை பகிர்வதும் தேவையற்றது” என்கிறார் வகிதா நிஜாம்.
இதனிடையே, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, நிலையற்ற நூல் விலை, போட்டி நாடுகளுக்கு ஆர்டர் சென்றது, கரோனா, உலகளாவிய பொருளாதார தேக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக திருப்பூர் பின்னலாடை தொழில் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சரிவை சந்தித்துள்ளது. இதனால், பின்னலாடை தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை தர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியும் பரவியுள்ளது. இத்தகைய காரணங்களால் கடந்த சில வாரங்களாக திருப்பூரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது அதிகரித்துள்ளது. | வாசிக்க > திருப்பூரில் தாக்கப்படுவதாக பரவும் தகவலால் பீதி - வதந்தி, வருவாய் இழப்பால் சொந்த ஊருக்கு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்
இந்தச் சூழலில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். முழுமையாக வாசிக்க > வதந்தி பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள்; வட மாநில தொழிலாள தோழர்கள் அச்சம் அடைய வேண்டாம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தப் பின்னனியில் வகிதா நிஜாமின் ஒரு கருத்து மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. “புலம்பெயரும் தொழிலாளர்கள் குறித்த சட்டங்களை முறையாக அமல்படுத்தாமல் இருப்பதே உண்மையான பிரச்சினை. அவற்றை சரியாக நடைமுறைப்படுத்தினால் போதும். இதுபோன்ற பிரச்சினைகள் வராது. விரைவில் ஏஐடியூசி சார்பில் திருப்பூரில், தமிழக தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து அமைதியாக பணியாற்றும் சூழலைக் கொண்டுவரும் வகையில் மாநாடு நடத்தப்படும். ஏஐடியூசி சார்பிலும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்காக பல முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறது" என்றார் அவர்.
| வட மாநிலத் தொழிலாளர்களின் தமிழக வருகை குறித்த பார்வைகள் தொடரும்... |
முந்தைய அத்தியாயம்: வட மாநில தொழிலாளர்கள் @ தமிழகம் 1 - புலம்பெயர்தலை அரசியலோடு கலக்கக் கூடாது. ஏன்?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago