மாதவிடாய் விடுப்பு: இந்தியாவில் விவாதிக்க வேண்டிய நேரம் இது. ஏன்?

By இந்து குணசேகர்

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம்,பெண்களுக்கு பணிக்காலங்களில் மாதவிடாய்க்கு விடுமுறை அளித்துள்ள முதல் ஐரோப்பிய நாடு என்ற பெருமை ஸ்பெயினுக்கு கிடைத்துள்ளது. ஸ்பெயினின் இந்தப் புதிய சட்டம் மாதவிடாய் விடுப்பு குறித்த விவாதமும் உலக அளவில் எழுந்துள்ளது.

இந்தியாவிலும் இதன் அதிர்வலைகள் கடந்த சில நாட்களாக தொடர்கின்றன. அந்த வகையில் கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வலியுறுத்தி ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் சில தினங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் பிப். 24 விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''இந்த விவகாரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருக்கிறது. முதலில் மத்திய அரசு மாதவிடாய் விடுப்பிற்கான கொள்கையை வகுக்கட்டும். அதன் பிறகு நாம் அதனை பரிசீலிப்போம்” என்று பதிலளித்து மனுவை தள்ளுபடி செய்தனர். இந்தியா போன்ற நாடுகளில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதுபோல் ’மாதவிடாய் விடுப்பு’ பல்வேறு சிக்கலான பரிமாணங்களை கொண்டிருக்கிறது.

மாதவிடாய் - முதலில் மாதவிடாய் என்ற பெயரே நமது சமூகத்தில் பிரச்சினையாகவும், ரகசியமாகவும் பார்க்கப்படுகிறது. இவ்வாறு மாதவிடாய் பற்றிய முழுமையான புரிதல்கள் இல்லாத ஒரு சமூக அமைப்பில் இருந்துகொண்டு இங்கு விடுப்பு என்பது பெண்களின் அடிப்படை உரிமைகளாக பார்க்கப்படாமல் சலுகைகளாக மட்டுமே பார்க்கப்படும். இவ்வாறான யதார்த்த சூழலில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான வலிகள் மீம்ஸ்களாக பார்க்கும் மந்தை நிலை மனப்பான்மை மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

நமது சமூகத்தில் மாதவிடாய் குறித்த ஆரம்பமே தவறான கண்ணோட்டத்தில்தான் பார்க்கப்பட்டு வருகிறது. மாதவிடாய் என்பது வெறும் உடல் அளவில் ஏற்படும் பிரச்சினை மட்டுமல்ல. சிலர், மாதவிடாய் காலங்களில் மனரீதியான பாதிப்புகளான பதற்றத்துக்கும், மூட் ஸ்விங்ஸ்குக்கும் உள்ளாகிறார்கள். கார்ப்பரேட் போன்ற மேம்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது சிரமமாக இருக்காது. ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாத சிறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. போதிய சுகாதார வசதிகள் இல்லாததுதான் இங்கு அடிப்படை பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. எனவே, மாதவிடாய் குறித்த புரிதல்கள் குடும்பம், பள்ளி, சமூகம் சார்ந்த அமைப்புகளில் முழுமையாக ஏற்படுவது கட்டாய தேவையாகிறது.

ஒரே தராசில் வைக்க முடியுமா? - முதலில் மாதவிடாய் விடுப்பு குறித்த புரிதல்கள் இங்கு பெண்கள் பலருக்கே இல்லை என்பதுதான் நிதர்சனம். நமது கல்வி அமைப்பும் இப்புரிதலுக்கான வாய்ப்பை இதுவரை ஏற்படுத்தி கொடுக்கவில்லை என்பதே உண்மை. நீங்கள் அலுவலகங்களிலோ, பள்ளிகளிலோ மாதவிடாய் காரணமாக சுருண்டு நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் பெண்களை பார்த்தீருப்பீர்கள். சில பெண்களோ மாதவிடாய் நாளுக்கான அறிகுறியே இல்லாமல் இருப்பார்கள். அதாவது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் உபாதைகள் என்பது ஒவ்வொருவரது உடலமைப்பை பொருத்து மாறுபடும். இவ்வாறான சூழலில் இதில் உள்ள இரண்டு பெண்களின் நிலைகளையும் ஒரே தராசில் வைத்து, அவளுக்கு வலி இல்லையே, உனக்கு மட்டும் மாதம், மாதம் எப்படி வலி ஏற்படுகிறது என்ற வாதத்தில் எந்த பலனும் இங்கு ஏற்படபோவதில்லை.

2020-இல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தனியார் நிறுவன கணக்கெடுப்பின் முடிவுகள்படி, 20 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 23 சதவீதம் பேரும், 30 முதல் 44வயதுக்குட்பட்ட பெண்களில் 15.18% பேரும், பதின்பருவ பெண்களில் 17.% பேரும் மாதவிடாய் காலங்களில் உடல்ரீதியான பாதிப்புகளை அனுப்பவிப்பதாக கூறுகின்றது. இவ்வாறு இருக்க மாதவிடாய் விடுப்பு குறித்த கோரிக்கைகள் நிச்சயம் இங்கு நியாயம் சேர்கின்றன என்பதற்கான புரிதல்கள் இங்கு அவசியம் தேவை.

பலவீனப்படுத்துமா? - மாதவிடாய் விடுப்பு விவகாரத்தில், முதன்மையாக எழும் விமர்சனம் இம்மாதிரியான திட்டங்கள் பெண்களை மேலும் பலவீனப்படுத்தும் என்பதுதான். இரண்டாம் பாலினம் என்று வகைப்படுத்தி பெண்களின் உரிமைகள் ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டன. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட இச்சமூகத்தில் முட்டி மோதி தங்களுக்கான வாய்ப்புகளை இப்போதுதான் பெண்கள் போராடி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் மாதவிடாய் விடுப்பு போன்றவைகள் பெண்களை சமூகத்தின் பார்வையிலிருந்து கூடுதலாக பலவீனப்படுத்தும் என்று பலரும் நினைப்பதில் தவறில்லை.

வேலைவாய்ப்பில் எதிர்வினை: அடுத்தது பெண்களுக்கு பணியிடங்களில் இன்னமும் சமமான வேலை வாய்ப்பும், சம ஊதியமும் மறுக்கப்பட்டு வரும் நிலையில் மாதவிடாய் விடுப்பு போன்றவை நிச்சயம் எதிர்வினைகளை உண்டக்கும் வாய்ப்பு இங்கு கூடுதலாகவே உள்ளது. இம்மாதிரியான விடுப்புகளை காரணம் காட்டி பணியிடங்களில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படலாம். மறுபுறம் இதே காரணத்திற்காக பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் மறுக்கும் சூழலும் உருவாகும்.

கரோனா காலத்தை சுட்டிக் காட்டி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது ஒரு நிறுவனத்தில் 5 பேர் நீக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களில் 3 பேர் பெண்களாகதான் இருந்தார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இதுபோன்ற எதிர்வினைகளை கவனத்தில் கொண்டு இவ்விவகாரத்தை அணுக வேண்டிய தேவை அரசுக்கும், பெண்கள் நல அமைப்புகளுக்கும் உள்ளது.

அமைப்புச்சாரா பெண்களின் நிலை? - இந்திய அளவில் மாதவிடாய் விடுப்பு குறித்த மசோதா ஒருவேளை கொண்டுவரப்பட்டால் அவ்விடுப்பு அனைத்து தரப்பு பெண்களையும் சென்றடைவது அவசியம். குறிப்பாக அமைப்பு சாரா நிறுவனங்களில் பணி செய்யும் பெண்கள் இதில் கொண்டுவரப்படுவது அரசின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும். இதற்கான கண்கணிப்பு அமைப்புகளை செயல்பாட்டில் வைத்திருப்பதும் அவசியம்.

இந்திய பெண்களைப் பொறுத்தவரை, பெரும்பாலானவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாகதான் உள்ளனர். வீட்டு வேலை, பீடித் தொழில், பின்னலாடை நிறுவனங்கள், தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள் என பெண்கள் இங்கு பிரிந்து இருக்கிறார்கள். இவ்வாறு அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் தேவைகளாக ஒலிக்கும் மருத்துவக் காப்பீடு, பட்ஜெட்டில் நிதி , ஓய்வூதியம் போன்ற நீண்டகால கோரிக்கைகளை அரசு தீர்க்க வேண்டும். இவை எல்லாம் தீர்க்கப்படாத சூழலில் இங்கு மாதவிடாய் விடுப்பு என்பது ஆடம்பரமாகவே பார்க்கப்படும்.

உலக நாடுகளில்.... ஜப்பானில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் தொடர்பாக விடுப்பு கேட்டால் அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என்ற முறை வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தோனேசியாவில் 1948ஆம் ஆண்டே மாதவிடாய் விடுப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி மாதவிடாய் விடுப்பு கேட்கும் பெண்களுக்கு நிறுவனங்கள் இரண்டு நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்கும் முறை வழக்கத்தில் உள்ளது. தென்கொரியாவில், சட்டம் 73-ன் படி ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாதவிடாய் விடுமுறைகளை எடுத்துக் கொள்ளலாம்.

தைவான் - சட்டம் 14-ன் படி, நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் விடுமுறையை பெற்றுக் கொள்ள உரிமை உள்ளது என்று கூறுகிறது. ஜாம்பியாவில் பெண்கள் மாதவிடாயை காரணம் காட்டி ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். வியட்நாமில் பெண்கள் மாதவிடாயை குறிப்பிட்டு மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளாம். இதற்காக அவர்களது சம்பளத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படாது. பிரிட்டனிலும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு என்ன நினைக்கிறது? - மாதவிடாய் விடுப்பு குறித்த கேள்விகள் திடீரென எழுப்பப்பட்டவை அல்ல. காலங்காலமாக விவாதத்துக்கு உள்ளாகி இருக்கும் தலைப்பு இது. இந்தியாவை பொறுத்தவரை பிஹார், கேரளா போன்ற மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு வழக்கத்தில் உள்ளது. இதனை அடிகோடாய் காட்டியே பிற மாநிலங்களும் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இந்த விவகாரத்தில் எந்த நிலைப்பாட்டை கொண்டிருக்கிறது என்று பின்னோக்கி பார்த்தோமேயானால், கடந்த 2022 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மாதவிடாய் விடுப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாதவிடாய்க்கு விடுப்பு வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மருத்துவ விடுப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார். இவ்வாறு மாதவிடாய் விடுப்பு குறித்த மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு இந்த நிலையில்தான் உள்ளது.

2000-ஆம் ஆண்டு இந்தியாவில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு விகிதம் 25.6% ஆக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 20.3% ஆகக் குறைந்துவிட்டதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை எத்தனைபேர் அறிந்திருப்போம். ஆனால் இவை எல்லாம் இங்கு பேசும் பொருளாகவோ, விவாதத்திற்கோ உள்ளாக்கப்படவில்லை.

பெண்களுக்கான சம உரிமை, சம வாய்ப்பு, சம ஊதியம் வேண்டி நூற்றாண்டுகளாக நடந்த போராட்டத்தின் விளைவு அதற்கான கால் பகுதியை நாம் அடைத்திருக்கிறோம். ஆனால் கடக்க வேண்டிய தொலைவு நெடுந்தூரம் உள்ளது. பெண் பணியாளர்களின் பங்களிப்பு சம அளவில் இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் ஆரோக்கியமான நிலையில் இருக்கும் என்பதை அரசு அமைப்புகள் உணர வேண்டும். இதில் மாற்றங்கள் கொண்டுவராத வரையில் மாதவிடாய் விடுப்பு போன்றவை இச்சமூகத்தால் அத்தியாவசியமாக பார்க்கப்படாது!

தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்