கட்டாய நுழைவுத் தேர்வு: அனைவருக்கும் கல்வி என்னவாகும்?

By Guest Author

மத்திய, மாநில, தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) செயலா் மணீஷ் ஆர்.ஜோஷி பிப்ரவாி 16 அன்று ஒரு கடிதம் அனுப்பினார்.

‘2023-24 கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (கியூட் - CUET) தோ்ச்சி பெற்றிருப்பது அவசியம். இத்தோ்வில் வெற்றி பெறுபவர்களுக்கே பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சோ்க்கை அனுமதி அளிக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், விரும்புகின்ற பல்கலைக்கழகங்கள் இந்தப் பொது நுழைவுத் தோ்வு முறையை அமல்படுத்தலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் 1,113 பல்கலைக்கழகங்கள், 47,000 கல்லூரிகளுக்கான மாணவர் சோ்க்கைக்கும் இந்தத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

தேசியக் கல்விக் கொள்கை 2020இல், அனைத்துப் பாடச் சோ்க்கைக்கும் பொது நுழைவுத் தோ்வு அவசியம் என்று பாிந்துரைக்கப்பட்டிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.

நோக்கம் சிதையும்: பள்ளிப் படிப்பை முடித்த அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும்; அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்யும் கல்வியாக உயர்கல்வி அமைய வேண்டும் - கல்வி மேம்பாட்டுக்கென அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் ஆணையம், கோத்தாரி ஆணையம் போன்றவற்றின் பாிந்துரையிலும், தேசியக் கல்விக் கொள்கை 1986, 1992 ஆகியவற்றிலும், தற்போது அமல்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கை 2020இலும் இதுதான் முக்கிய நோக்கமாக வலியுறுத்தப்படுகிறது.

அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையில், தற்போதுள்ள உயர்கல்விக்கான மாணவர் சோ்க்கையின் மொத்தப் பதிவு விகிதம் (GER) 24%இலிருந்து 2030க்குள் 50%ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு முரண்பாடாகப் பொது நுழைவுத் தோ்வை அமல்படுத்துவது சோ்க்கை எண்ணிக்கையைக் குறைத்துவிடும். குறிப்பாக முதல் தலைமுறை, கிராமப்புற, மலைவாழ் மாணவர்கள் பொது நுழைவுத் தோ்வை எழுதித் தோ்ச்சி பெற்று உயர்கல்வி பெறுவது என்பது கானல் நீராகிவிடும்.

இந்தியாவில், உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21ஆம் ஆண்டில், முதன்முறையாக 4 கோடியைக் கடந்தது. இதில் 2019-20ஆம்ஆண்டை ஒப்பிட, தொலைதூரப் படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7% அதிகரித்தது.

கல்லூரிக்குக் கட்டணம் செலுத்த இயலாதவர்கள், வேலை இல்லாதவர்கள், பகுதி நேரப் படிப்பைத் தொடர்பவர்கள் போன்றோர்தான் தொலைதூரக் கல்வி முறையில் பயிலுகின்றனா். இவா்களுக்கும் பொது நுழைவுத் தோ்வு அவசியம் என்பது மிகப் பெரிய முரண்.

முன்னிலையில் தமிழ்நாடு: உயர்கல்விச் சேர்க்கையில் மொத்தப் பதிவு விகிதம், 52% எனும் நிலையை அடைந்த முன்னணி மாநிலம் தமிழ்நாடு. மேலும், பெண் குழந்தைகள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக உயர்கல்வி பயிலச் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அளிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும், அரசுக் கல்லூரியில் பயிலும் இளங்கலை மாணவா்களுக்குக் கட்டணத்திலிருந்து முழுமையாக விலக்களிக்கப்படுகிறது. இவ்வாறான மேம்பாட்டுச் செயல்பாடுகளால்தான் உயர்கல்விக்கான மாணவர் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில், பொது நுழைவுத் தோ்வு கட்டாயம் என்பது சரியல்ல.

விளைவுகளும் விபரீதங்களும்: கியூட் கட்டாயமாக்கப்பட்டால், பொது நுழைவுத் தோ்வுக்குப் பயிற்சியளிக்கும் மையங்கள் நாடு முழுவதும் புற்றீசலாகப் பெருகும். பொருளாதார வசதி படைத்த மாணவா்கள் மட்டும்தான் பல லட்ச ரூபாய் கட்டணம் செலுத்திப் பயிற்சி பெற்றுத் தோ்ச்சி பெறுவார்கள்.

ஏழை மாணவா்களின் குடும்பத்தினா், இந்தக் கட்டணத்துக்காகக் கடன் வாங்கி மேலும் இன்னலுக்குள்ளாவார்கள். பலர் விலகி நிற்பார்கள். தோ்வில் தோல்வியடைந்தவர்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர இயலாமல் பெரும் இழப்புகளைச் சந்திப்பார்கள். சமூகத்திலும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

பொது நுழைவுத் தோ்வின் மதிப்பெண்கள் மட்டுமே உயர்கல்விச் சோ்க்கைக்குத் தேவை என்பதால், மாணவர்கள் 10, 2 பொதுத் தோ்வுகளில் கவனம் செலுத்தமாட்டார்கள். இதனால், அடிப்படைப் பாடங்களின் அறிவைப் பெறுவது தடுக்கப்பட்டுவிடும்.

பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கான செலவை, மாணவர்களின் கட்டணம் - குறிப்பாகத் தொலைதூரக் கல்விக் கட்டணத்தின் வருவாயில்தான் ஈடுகட்டப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, ஏறத்தாழ 45% பல்கலைக்கழகங்கள் ஊழியா்களுக்குச் சம்பளம், ஓய்வூதியம் வழங்க நிதி இல்லாமல் திண்டாடிவருகின்றன.

மாணவர் எண்ணிக்கை குறையும்போது நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும். தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஏறத்தாழ 95% மாணவர்கள் தமிழ்நாட்டைச் சோ்ந்தவர்கள். கியூட் தேர்வு மூலம் சோ்க்கை நடைபெறும்போது, வெளிமாநிலத்து மாணவர் சேர்க்கை அதிகரிக்கக்கூடும்.

இந்தியாவில் உயர்கல்வி பெற்ற பல லட்சம் மாணவா்கள் - குறிப்பாக, கிராமப்புற ஏழை, எளிய குடும்பத்தைச் சோ்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரிகள், தகவல் தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வருகின்றனா். வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்றனர்.

அத்தகையவா்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறியிருக்கின்றன. இந்தியாவின் அந்நியச் செலாவணியும் உயர்ந்துள்ளது. இனிவரும் காலத்தில், இவையெல்லாம் எட்டாக் கனியாகிவிடும் அபாயம் உள்ளது.

உயர்கல்விச் சோ்க்கையில் நாடு முழுவதும், முக்கியமாக தமிழ்நாட்டில், சமூக நீதியின் அடிப்படையில் இடஒதுக்கீட்டு முறை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கியூட் தோ்வு இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்த்துவிடும். புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு, மேற்கு வங்கம், தெலங்கானா, கேரளம் ஆகிய மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

தற்போது கொண்டுவரப்படும் பொது நுழைவுத் தோ்வுக்கு, நிச்சயமாக பிற மாநிலங்களிலும் எதிர்ப்பு உருவாகும். இதன் தொடர்ச்சியாக, புதிய தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கின்ற மாநிலங்களின் எண்ணிக்கை கூடும்.

தீர்வுகள்: அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நுழைவுத் தோ்வின் அடிப்படையில்தான் மாணவர் சோ்க்கை நடைபெறுகிறது. பல்கலைக்கழகங்களே நடத்தும் தோ்வுகளை எப்படி நடத்த வேண்டும் என்று வரைமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு தொிவிக்கலாம்.

தோ்வுகள் நடத்தும் முறைகளை ஆய்வுசெய்யலாம். இப்படியான கண்காணிப்பு மூலமாகச் சாியான முறையில் தோ்வுகள் நடத்தி, தகுதியுள்ள மாணவர் சோ்க்கைக்கு வழிவகுக்கலாம்.

சிறந்த ஆசிரியா்களால், எப்படியான மாணவர்களையும் கல்வியில் மேம்பட்டவர்களாக உருவாக்க முடியும். இன்றைக்கு உயர்கல்வியின் தரம் விமா்சனத்துக்குள்ளாக முக்கியக் காரணமே பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியா்கள் நியமன முறைகேடுகள்தான்.

திறமையும் தகுதியும் உள்ளவர்கள்கூட, செல்வாக்கும் செல்வமும் இல்லாமல் நியமனம் பெற முடியாத நிலை உள்ளது. இது அடிப்படைப் பிரச்சினை.

இந்நிலையில், தேசிய அல்லது மாநில அளவில் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்துக்கான வாரியத்தை உருவாக்கி, முறைப்படி தோ்வுகள் நடத்தி, வல்லுநா்களைக் கொண்டு நோ்காணல் மூலம் சிறந்த தகுதியும் அனுபவமும் உள்ளவா்களைக் கல்லூரி ஆசிரியா்களாகத் தோ்வுசெய்யலாம்.

அதன் மூலம் உயர்கல்வியின் தரம் உயரும் என்பது திண்ணம். பொது நுழைவுத் தோ்வை மாணவா்களுக்கு நடத்துவதை தவிர்த்து, ஆசிரியா்களுக்கு நடத்தினால் அனைத்து நிலைபெற்றோர்கள், மாணவர்கள் வரவேற்பார்கள்!

- க.திருவாசகம் | முன்னாள் துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்; தொடர்புக்கு: vc@ametuniv.ac.in

To Read in English: Compulsory entrance exam: What’ll happen to education for all?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்