தமிழனின் பாரம்பரிய உடைக்கு வந்த ஆபத்துதான் தமிழ்நாடு முழுவதும் தற்போதைய விவாதச் செய்தி! வேட்டியுடன் புத்தக வெளியீட்டு விழாவுக்குப் போன நீதிபதி ஒருவரையும், வழக்கறிஞர் இருவரையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க விடுதிக்குள் நுழைய அனுமதிக்க மறுத்ததுதான் அதன் தொடக்கம். தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் கிரிக்கெட் சங்கத்தின் தமிழ்க் கலாச்சார விரோதப் போக்கைக் கண்டித்துள்ளனர். சட்டமன்றக் கூட்டத்தொடரிலும், மேற்கத்திய கலாச்சாரத்தை உடுப்பு விஷயத்தில் பின்பற்றும் விடுதிகளின் உடுப்பு விதிகளை மாற்றச்சொல்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும் கருப்பு கோட், வெள்ளை வேட்டியை அணிந்துகொண்டு கிரிக்கெட் சங்கத்தின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வழக்கறிஞர் ஒருவர் இப்படிப்பட்ட விதிகளை எதிர்த்து, பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிகளைப் பின்பற்றும் இவ்விடுதிகளின் கிளப் கலாச்சாரத்தைக் கண்டித்து, அரசியல் கட்சி ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வழக்கறிஞர்களின், நீதிபதிகளின் அங்கி
இதில் வேடிக்கை என்னவென்றால், கொதித்தெழுந்த வழக்கறிஞர் சமூகத்தினரும் பார் கவுன்சில் விதிகளைப் பின்பற்றி கோட்டும் சூட்டும் பூட்டும் அணிந்துகொண்டு, ஆங்கிலக் கலாச்சார உடையுடன் நீதிமன்றங்களில் தினசரி வாதாடிவருகின்றனர். அந்நியக் கலாச்சார உடுப்பு முறையை எதிர்த்து அவர்கள் இதுவரை கொடிபிடிக்கவில்லை. நீதிபதிக்கு கிரிக்கெட் சங்க வளாகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை அனைவரும் கண்டித்தாலும், நீதிபதிகள் எவ்வித சட்ட நிர்ப்பந்தமுமின்றி, ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்து இன்று வரை ஆங்கில உடுப்பு முறையைப் பின்பற்றிவருவதற்கு எவ்வித விளக்கமும் இல்லை.
வட மாநிலங்களில் கோடை வெப்பத்தைத் தாங்க முடியாமல் ஏப்ரல்-ஜூலை மாதங்களில் கருப்பு அங்கி அணிவதை அங்குள்ள வழக்கறிஞர்கள் தவிர்த்துவருகின்றனர். இந்திய தட்பவெப்பநிலைக்கு இத்தகைய உடுப்புகள் பொருந்தாது என்று கேரள வழக்கறிஞர்கள் தொடுத்த வழக்கு விசாரணையில் அன்றைய தலைமை நீதிபதி, நீதிமன்ற விதிகள் ஏதும் வழக்கறிஞர்களை நிர்ப்பந்திக்கவில்லை என்றும், பார் கவுன்சில் விதிகள்தான் உடுப்புநெறியை உண்டாக்கியுள்ளது என்றும், அவர்கள் அணுக வேண்டியது அவர்களது பிரதிநிதிக் குழுவிடமே ஒழிய, நீதிமன்றத்திடம் அல்ல என்றும் தெரிவித்தார்.
அரை நிர்வாண காந்தி
ஆண்கள் வேட்டி கட்டுவதுதான் தமிழருடைய பாரம்பரிய கலாச்சார உடை என்பது உண்மையானால், சேலம் வழியாகப் புகைவண்டியில் சென்ற காந்தி, கோவணாண்டித் தமிழர்களை எப்படிப் பார்த்தார்? அதைக் கண்டு அதிர்ச்சியுற்று அம்மக்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்வரை தான் மேல்சட்டை அணியப்போவதில்லை என்றும், இடுப்புத் துணியுடனேயே தனது போராட்டப் பணியை மேற்கொண்டார். அதேபோன்ற ஆடையை உடுத்திக்கொண்டு, பிரிட்டிஷ் மகாராணியை அவர் பார்க்கச் சென்றதையும், வின்ஸ்டன் சர்ச்சில் ‘அரை நிர்வாண பக்கிரி' என்று காந்தியை அழைத்ததும் வரலாறு. இதெல்லாம் நடந்து கிட்டத்தட்ட நூறாண்டுகள் ஆனாலும், இன்றும் பெரும்பான்மையான தமிழர்கள் உடுத்த உடையின்றி காந்தியின் கனவுகள் மெய்ப்படக் காத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அதனால்தான் கவிஞர் இன்குலாப் கவிதை ஒன்றை இப்படி வடித்தார்:-
‘வாடையில் வருந்திய மயிலுக்காகப்
போர்வையைத் தந்த புண்ணிய பூமியில்
மனிதர்கள் மட்டும் வாடையில் விறைத்தனர்'
‘பாஞ்சாலி என்ற ராஜகுமாரிக்குத்தான்
பரமாத்மாவும் பட்டாடை கொடுப்பார்
ராஜத்திற்கு ஒரு பருத்தியாடை கொடுப்பாரா?'
கவிஞரின் பொங்கியெழுந்த கோபக் கனலுக்குத் தமிழர்களிடம் விடையேதும் கிடைக்கவில்லை. மாறாக, அவரது கவிதைத் தொகுப்புதான் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவில் கைத்தறித் துண்டு
எங்குதான் அந்நிய உடை மோகம் இல்லை? வெள்ளையர்களின் நடை, உடை, பாவனைகளில் தம்மைப் பறிகொடுத்த தமிழர்களுக்கு அவர்களது உடுப்பை மாட்டிக்கொள்ளும் வாய்ப்பு, அன்றைய கவர்னர் ஜெனரலின் 1854-ம் ஆண்டு உத்தரவின்படி கிடைத்தது. அன்று ஆங்கில உடுப்பு மாற்றத்துக்குத் தயாரான தமிழர்கள், சுதந்திரமான இந்தியாவிலும் அதைக் கழட்டிப் போட்டுவிட்டு, தமிழரின் பாரம்பரியத்தை ஏந்திப்பிடிக்கத் தயாரில்லை. மழலையர் பள்ளிகளில்கூட கழுத்தில் முடிச்சுப்போட்ட டை கட்டும் ஆடைவிதிகள் கறாராக அமல்படுத்தப்படுகின்றன. நகரத் தந்தைகளோ கருப்பு அங்கியை விட்டுக்கொடுக்காமல் நகராட்சிக் கூட்டங்களை நடத்துகின்றனர். புதிதாகப் பட்டம் பெறும் மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் கருப்பு அங்கியுடன் வௌவால்கள் எனச் சுற்றிவருகின்றனர். இதற்கு விதிவிலக்காக, மேற்கு வங்கத்தில் தாகூர் தொடங்கிய சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் மட்டுமே கைத்தறித் துண்டு போர்த்திக்கொண்ட பட்டமளிப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி கட்டுவதைத் திருமணங்களில் மட்டுமே காண முடிகிறது என்று ஒருவர் அங்கலாய்த்துள்ளார். உண்மையில், தமிழ் மணமகன்கள் இன்றைய மணவிழாக்களில் ராஜஸ்தானி, குஜராத்தி பாரம்பரிய உடைகளில்தான் காட்சிதருகின்றனர். பாரம்பரிய உடையென்றாலும், தினசரி செய்யும் வேலை எதுவானாலும் அப்போது அதை அணிய முடியுமா? தமிழர்களின் கலாச்சாரக் குறியீடு களான வேட்டி, புடவை ஆகியவற்றைக் கட்டாயமாக்கிய ஆடை சர்வாதிகாரத்தை அமல்படுத்த முடியுமா?
பாவாடை தாவணியில்…
பள்ளி மாணவிகள் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்ல சரியான போக்குவரத்து இல்லை என்பதால், அவர்களது படிப்பைத் தொடரும் வகையில் தமிழக அரசு அவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளைத் தந்தது. ‘பாவாடை தாவணியில் பார்த்த உருவமா' என்று திரைப்படங்களில் ஏக்கப் பாடல்களைக் காட்சிப்படுத்தலாம். உண்மையில், அத்தகைய உடுப்புடன் மிதிவண்டியைச் செலுத்துவது எவ்வளவு கடினமென்பதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதா, அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் சீருடையை மாற்றி உத்தரவிட்டதால் வடக்கிந்திய சல்வார் கமீசுடன் அவர்களது பள்ளிப்படிப்பு இன்று தொடர்கிறது. வாழ்க்கை முறையை அர்த்தப்படும் வகையில் புரட்சிகர மாற்றம் செய்த முதல்வரின் செயல் பாராட்டத் தக்கது.
ஜீன்ஸின் வரலாறு
அதேசமயத்தில், ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேட்டி-சட்டையுடன் வந்த ஆசிரியர்களுக்குத் தினசரி அபராதம் விதித்த பள்ளியின் நடவடிக்கையை எதிர்த்துப் போட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்ததுடன் நிர்வாகத்தின் செயலை நியாயப்படுத்தியது. அப்போது யாரும், தமிழர்களின் கலாச்சாரம் பறிபோய்விட்டதென்றோ, மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர், அந்தப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களின் உடுப்பு விஷயத்தில் தமிழ்க் கலாச்சாரத்தைப் பின்பற்றும்படி உத்தரவிடக் கோரியோ வேண்டுகோள் விடுக்கவில்லை. அதற்கு மாறாக, இன்றைய மருத்துவக் கல்வி இயக்குநர், மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஜீன்ஸ் கால்சட்டை அணிந்து வரக் கூடாதென்று உத்தரவிட்டுள்ளார். மருத்துவம் போன்ற தொழில்புரிய முனைவோர் கண்ணியம் காக்கும் விதத்தில் உடுப்பு அணிய வேண்டும் என்று விளக்கம் வேறு கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் போலத்தான் வட மாநிலங்களில் உள்ள சாதிப் பஞ்சாயத்துகளிலும் தங்கள் கிராமத்துப் பெண்கள் ஜீன்ஸ் போடக் கூடாதென்று உத்தரவிட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நீதிமன்றமே மன்ற வளாகத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள் ஜீன்ஸ் அணியக் கூடாதென்று கட்டளையிட்டது. சமீபத்தில், மும்பை நீதிமன்றமோ மனைவியை ஜீன்ஸ் அணியக் கூடாதென்று கட்டளையிட்ட கணவனின் செயல் குரூரமானது என்று தீர்ப்பு அளித்துள்ளது. ஜீன்ஸ் படும் பாடு சொல்லி மாளாது. கல்லில் துவைத்துச் சாயம்போன ஜீன்ஸ் அணிய முற்பட்ட அமெரிக்க இளைஞர்கள்/இளைஞிகள் அங்கிருந்த நுகர்வுக் கலாச்சார எதிர்ப்பின் குறியீடாக ஜீன்ஸைப் பயன்படுத்தினர் என்பது இன்றைய இளைய சமுதாயத்தினர் அறியாத செய்தி.
வரலாற்றுச் சம்பவம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது. ரஷ்யப் புரட்சி வெற்றிபெற்ற பின்னும், முதல் உலகப் போர் முடியாத சூழ்நிலையில், சோவியத் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் ஜெர்மன் பேரரசர் கெய்சர் வில்லியம்ஸுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, ரஷ்யாவுக்கும் ஜெர்மனிக்கும் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படும் வகையில் ஏற்பாடு செய்யக் கட்சியின் மூத்த தலைவர் டிராட்ஸ்கியை ஜெர்மனிக்கு அனுப்பினார். பேரரசரைப் பார்ப்பதற்குப் பாரம்பரிய உடையில்தான் வர வேண்டும் என்று கூறப்பட்டதால், திகைப்படைந்த டிராட்ஸ்கிக்கு பேரரசரைச் சந்திப்பதற்குத் தயக்கம் ஏற்பட்டது. தனக்கு வழிகாட்டும்படி தந்திமூலம் லெனினிடம் கோரினார். பதில் தந்தி அனுப்பிய லெனின் இவ்வாறு உத்தரவிட்டார்:-
“பாவாடையுடன் போனால்தான் மன்னருடன் சமாதானம் ஏற்படுமென்றால் அதையும் செய். உனது உடை விருப்பத்தைவிட, ரஷ்யாவின் சமாதானத் தேவை பெரிது.”
உடுப்பு உடுத்தும் உரிமையில் கலாச்சாரக் குறி யீடுகளைப் புகுத்தும் தலையீடுகள் மற்றும் குறிப்பிட்ட உடைகளை மட்டுமே அணிய வேண்டுமென்று வற்புறுத் தும் செயல்கள் இரண்டுமே உடை சர்வாதிகாரமே! அது என்றைக்கும் உடைக்கப்பட வேண்டும்.
- கே. சந்துரு, சமூக விமர்சகர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago