பட்டுப்பாதை மீட்டெடுத்த இலக்கிய உறவு! - சீனத்தின் ‘ஒரு மண்டலம்.. ஒரு பாதை’சிறப்புப் புத்தகக் காட்சி அனுபவங்கள்!

By ஆழி செந்தில்நாதன்

ஜா

ங் வய் - நவீன சீனப் படைப்புலகின் ஜாம்பவான்களில் ஒருவர். வயது அறுபதைத் தாண்டியிருக்கும். ஜாங் வய், புரட்சிக்குப் பிந்தைய சீன வாழ்க்கையைத் தனது இடையறா எழுத்துகளால் பதிவுசெய்பவர். தனது நாற்பதாண்டு எழுத்துலக வாழ்வில் 650 நூல்களை எழுதியிருக்கும் ஜாங் வய், ஏற்கெனவே நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார்.

‘மீநிலத்தில்’ என்கிற அவரது நாவல் 10 தொகுதிகளால் ஆனது. பத்தாண்டு காலம் அதை அவர் எழுதினார். ஆனால், அது ஒரு மலிவான சீன உற்பத்தி அல்ல. அசுரப் படைப்பு. நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், சிறுவர் இலக்கியங்கள், கவிதைகள் என விரியும் அவரது படைப்புகள் படைப்புத் திறனில் சோடை போகாதவை.

நம்புதற்கரிய தருணம்

அந்தத் தீரா எழுத்தாளனைச் சந்திக்கும் தருணம், வாழ்வின் நம்புதற்கரிய தருணங்களில் ஒன்றாக எனக்கு அமைந்தது. சீனாவில் மஞ்சளாற்றங்கரையிலுள்ள ஷான்தோங் மாகாணத் தலைநகரான ஜினானில் ஆகஸ்ட் 19-20 தேதிகளில் நடந்த ‘ஒரு மண்டலம்.. ஒரு பாதை சிறப்புப் புத்தகக் காட்சி’யில் ஆழி பதிப்பகம் சார்பாகக் கலந்துகொண்டபோது அவரைச் சந்தித்தேன். தமிழ்நாட்டின் செவ்வியல், நவீன இலக்கிய நூல்கள் பலவற்றை (பல்வேறு பதிப்பகங்கள் பதிப்பித்தவை) ஜினான் புத்தகக் காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தேன்.

கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் கடல்வழிப் பட்டுப்பாதையின் 2,500 கால இலக்கிய முத்துகள் இவை என்று தமிழ், ஆங்கில, சீன மொழிகளில் விளம்பரப்படுத்தியிருந்தோம். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் தொடங்கி, கல்கி, சி.சு.செல்லப்பா, சுந்தர ராமசாமி கடந்து, இன்றைய பெருமாள் முருகன், இமையம், ஆர்.கண்ணன் வரை ஜினான் சர்வதேசப் புத்தகக் காப்புரிமைக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தார்கள்.

1949-ல் சீனாவில் நடந்த புரட்சியில் தொடங்கி, எண்பதுகளில் டெங் ஷியாவ்ப்பிங் மேற்கொண்ட சீர்திருத்தம் வரையிலான காலகட்டத்தில், மாபெரும் முன்னோக்குப் பாய்ச்சல் காலம், பண்பாட்டுப் புரட்சிக் காலம், சீர்திருத்தக் காலம் எனப் பல காலங்களில் வாலி என்கிற கிழக்குச் சீன நகரமொன்றில் ஏற்படும் மாறுபாடுகளை மூன்று குடும்பங்களின் கதைகளினூடாகச் சொல்லியிருக்கிறார் ஜாங் வய். ‘ஆதிக் கப்பல்’ என்ற தலைப்பிலான அந்த நாவல், உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று.

பட்டுப் பாதை

பெய்ஜிங் பன்னாட்டுப் புத்தகக்காட்சியில் ‘ஆதிக் கப்பல்’ நூலைத் தமிழில் கொண்டுவருவதற்கான காப்புரிமை கையொப்ப நிகழ்ச்சியில் பேசியபோது, தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தேன். அத்துடன் “எங்கள் பதிப்பகத்தின் பெயர் ஆழி. கடல் என்று பொருள், நாங்கள் மொழிபெயர்க்கவுள்ள உங்கள் நாவலின் தலைப்பு ‘ஆதிக் கப்பல்’. ஆதிக் காலத்தில் தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையில் எத்தனையோ கப்பல்கள் இருதிசையிலும் பயணித்திருக்கின்றன” என்று பேசியபோது, ஜாங் வய் ஆர்வத்தோடு அந்தச் சொற்களை வரவேற்றார்.

அந்தப் பட்டுப்பாதை ஒருவழிப் பாதை அல்ல. வைதேகி ஹெர்பெர்ட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பில் நூறு சங்கத் தமிழ்க் கவிதைகளை தொகுத்து ‘ ஒன் ஹன்ட்ரட் சங்கம் லவ் போயம்ஸ்’ என்கிற தலைப்பில் இந்தப் புத்தகக் காட்சிக்காக ஒரு நூலைக் கொண்டுவந்திருக்கிறோம். அந்த நூலை சீன மொழியில் கொண்டுவர வேண்டும் என நாங்கள் விரும்பியதும் அங்கே நிறைவேறியது.

கார்லோசின் ஆச்சரியம்!

ஆதிக் கப்பல்கள் சென்ற இடங்களிலிருந்து வந்த மனிதர்கள் அந்த கண்காட்சியரங்கில் குழுமியிருந்தார்கள். காகிதத்தையும் அச்சுக் கலையையும் உலகுக்கு அளித்தவர்கள் சீனர்கள்தான் என்று ஒரு சீனர் நெஞ்சுநிமிர்த்திப் பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பகல் விருந்தில், என் அருகில் அமர்ந்திருந்தவர்கள் போர்ச்சுகலிலிருந்து வந்திருந்த கிராவிடா என்கிற பதிப்பகத்தின் பிரதிநிதிகள் மரியா கார்மாவும் கார்லோசும். கார்லோசிடம் கேட்டேன்: “உங்களுக்குத் தெரியுமா? உங்கள் நாட்டில் லிஸ்பனில்தான் தமிழ் நூல் முதன்முதலாக அச்சிடப்பட்டது.” அவருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. 1554-ல் ரோமன் வரிவடிவத்தில் தமிழ் நூலொன்று அங்கே பதிப்பிக்கப்பட்ட கதையைச் சொன்னேன். அந்த நட்புறவின் இறுதியில் சங்கக் கவிதைகளை போர்த்துக்கீசிய மொழியில் கொண்டுவரத் தங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள்.

சென்னையிலிருந்து வருகிறேன்...

அங்கே, ராண்ட் அலெக்சான்யான் என்ற அர்மீனியப் பதிப்பாளரைப் பார்த்தேன். அவரிடம் வேண்டுமென்றே “நான் சென்னையில் இருந்துவருகிறேன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் விளங்காமல் என்னைப் பார்த்தார். “எங்கள் ஊரில் அர்மீனியன் தெரு என்றொரு தெரு இருக்கிறது”என்று கூறிப் புன்னகைத்தேன். அவருக்குப் புரியவில்லை. பிறகு “நான் மெட்ராஸிலிருந்து வருகிறேன்” என்று சொன்னேன். அவ்வளவுதான்! அந்தக் கம்பீர உடல் சட்டென்று நிமிர்ந்து எழுந்து என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டது.

“உங்களுக்குத் தெரியுமா? அர்மீனிய மொழி முதன்முதலில் அச்சேறியது சென்னையில்தான்” என்றேன். தெரியும், தெரியும் என்றார் அன்பின் இறுக்கம் தளர்த்தாமல். 1794-ல் சென்னையில் இருந்த அர்மீனியர்கள் மண்ணடியில்தான் தங்கள் முதல் பத்திரிகையை அச்சிட்டார்கள். பிறகென்ன? சங்கக் கவிதைகளை அர்மீனிய மொழியில் கொண்டுவருவதற்கான பொறுப்பு அவர் கையில் அன்போடு திணிக்கப்பட்டது.

தமிழ் மொழி எழுத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்க்க விரும்பினார் ஜாங் வய். கையில் இருந்த நான் எழுதிய ‘டிராகன்’ என்கிற நூலை அவரிடம் காட்டினேன். “உங்கள் எழுத்துகள் பார்ப்பதற்கு மர்மம் நிறைந்தவையாக இருக்கின்றன” என்றார் ஜாங் வய். சிரித்துவிட்டேன்! ஆயிரக்கணக்கான சிக்கலான சித்திர எழுத்துகளைக் கொண்ட சீனாக்காரர், உலகிலேயே மிக எளிமையான எழுத்து வடிவம் கொண்ட நம்மிடம் சொல்கிறார் இதை!

எழுத்துகளும் எழுத்துகளும் (படைப்புகள்) மந்திர சக்தி வாய்ந்தவை. அவை மர்மத்தன்மையோடும் இருக்கின்றன. ஆதியில் நாகப்பட்டினத்துக்கும் ஹாங்ஜோவுக்கும் இடையில் ஓடிய கலங்களில் குவிந்திருந்தவை வாசனைத் திரவியங்களும் பீங்கான்களும் பட்டும் மட்டுமில்லை. நமது இரு செம்மொழிகளின் மர்மங்களும்தான். அன்று யுவான் சுவாங்குக்கும் போதி தருமருக்கும் அது தெரிந்திருந்தது. இனி நமக்கும் புலப்படட்டும். தமிழ் நூல் லிஸ்பனிலும் அர்மீனிய நூல் சென்னையிலும் பதிப்பிக்கப்பட்ட காலத்துக்கு பன்னெடுங்காலம் முன்பிருந்தே இந்தப் பட்டுப்பாதையில் நாம் உறவாடியிருக்கிறோம் ஜாங் வய்!

ஆழி.செந்தில்நாதன், பதிப்பாளர்,
தொடர்புக்கு: zsenthil@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்