இப்போதுதான் ஜன்னலோர இருக்கை கிடைத்தது

By ஆசை

குழந்தைகளுக்கும் ஜன்னலோர இருக்கைகளுக்கும் என்றுமே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. ஒரு குடும்பம் ரயிலிலோ பேருந்திலோ ஏறினால், உட்கார்வதற்கு இருக்கைகள் இருந்தால் அங்கே குழந்தைகள்தான் முதலில் ஓடிப்போய் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொள்ளும். எனினும், குழந்தைகளுக்கு ஜன்னலோர இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் அளவுக்குப் பெரியவர்கள் ஒன்றும் ஜன்னலோரத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர்கள் அல்ல என்பதை தினந்தோறும் ரயிலிலும் பேருந்துகளிலும் பார்க்கலாம்.

குழந்தைப் பருவத்தில் நம்மிடம் பல ஆர்வங்கள், ஈடுபாடுகள் இருக்கும். அவற்றில் பலவற்றுக்கும் நாம் விடைகொடுக்கும் நிலையை ‘முதிர்ச்சி அடைதல்’ என்கிறோம். அதுவரை குழந்தைத்தனம் என்பது ரசிக்கக்கூடிய விஷயமாகவும் அதற்குப் பிறகு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் மாறுகிறது. அப்போது அதை வேறு ஒரு சொல்லால், அதாவது ‘சிறுபிள்ளைத்தனம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். ஆனால், நமக்குள் உள்ள குழந்தை, நமக்கு எத்தனை வயதானாலும் விடாப்பிடியாக நமக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதன் அடையாளங்களுள் ஒன்று ஜன்னலோர இருக்கை மீதான காதல். ஆகவே, ‘உலகளாவிய பண்பாக’ இருப்பதால் ஜன்னலோர இருக்கைக்கான போராட்டத்துக்கு ‘பெரிய மனுசத்தன’ அடையாளம் ஏற்பட்டுவிட்டது.

ஜன்னலோர இருக்கை மீதான நமது காதலை, ஏக்கத்தை நம்முள் இருக்கும் குழந்தையின் அடையாளமாக மட்டுமே சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. ஜன்னலோர இருக்கையின் நாட்டத்தை வீட்டின் ஜன்னலிலிருந்தே தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். வீட்டின் ஜன்னலோ பேருந்து, ரயில்களின் ஜன்னலோ காற்றோட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மனிதர்களின் தேவை எப்போதும் தோற்றத்தில் தென்படுவதை, எளிய நடைமுறைப் பயன்பாட்டைத் தாண்டியதாகவும் இருக்கிறது.

ஜன்னல் தரும் விடுதலை

நாடோடியாகத் திரிந்த மனிதர்கள் ஒரு இடத்தைத் தம்முடையதாக ஆக்கிக்கொண்டு அந்த இடத்தின் மீதான தம் உடைமையுணர்வின் அடையாளமாகவும் தமது பாதுகாப்பின் அடையாளமாகவும் வீடு கட்டிக்கொண்டாலும்கூட தம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருந்துகொண்டு சூழ உள்ள உலகைத் தரிசித்துக்கொள்ள, அடைத்துவைக்கப்பட்ட உணர்வைத் தவிர்த்துக்கொள்ள, அடைப்புக்குள்ளும் ஒரு விடுதலையுணர்வை அனுபவிக்க அவர்கள் உருவாக்கிக்கொண்டவைதான் ஜன்னல்கள்!

ஒரே இடத்துக்குள் இருந்தாலும் சரி ‘நகரும் இடமான’ வாகனங்களுக்குள் இருந்தாலும் சரி ஜன்னல்கள் இல்லையென்றால் அவற்றுக்குப் பெயர் ‘சிறை’. சிறைக்குள் இருப்பவருக்கு ஜன்னல் கொடுக்கும் ஆசுவாசத்தை ஆல்பெர் காம்யு தன் ‘அந்நியன்’ நாவலில் அழகாக விவரித்திருப்பார். ஆகவேதான், மூச்சு முட்டும் நம் சிறு உலகத்திலிருந்து அது வீடோ, பயணமோ ஜன்னல்கள் மீட்டெடுக்கின்றன. ஆனால், இன்று அதிவிரைவான நகரமயமாதலின் விளைவாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் இடைவெளியற்ற வீடுகள், அதனால் ஜன்னல்கள் இல்லாத நிலை, அப்படியே இருந்தாலும் அடுத்த வீட்டுச் சுவர் நம் ஜன்னலுக்குள் எட்டிப்பார்க்கும் நிலை. ஜன்னல்களை நம் நகரங்கள் இழந்துகொண்டிருக்கின்றன. காற்றோட்டமான ஜன்னல் என்பது பெரும்பாலும் வசதிபடைத்தோரின் விஷயமாகிவிட்டது.

ஜன்னல்களை அடைத்த கைபேசிகள்

இன்னும் பேருந்து, ரயில்களின் ஜன்னல்கள் அடைபடவில்லை. ஆயினும், ஜன்னல் இருக்கை கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமாகவும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் கைபேசி வருடல்களில் நாம் நம்மை இழக்க, பயணநேர ஜன்னல்கள் என்பவை இன்று காற்றோட்டத்துக்கு மட்டுமே என்றாகிவிடுகின்றன. மெய்யுலகில் மெய்நிகர் உலகால் ஜன்னல்களை இழந்துகொண்டிருக்கிறோம். ரயில் பயணத்தில் புத்தகம் படிப்பதையே மகா குற்றம் என்பார் கி.ரா. புத்தகம் படித்தால்கூட பரவாயில்லை என்று தோன்றும்படி இன்று கைபேசிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம், ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டும்.

பேருந்தில் ஒரு குழந்தைக்கு ஜன்னலோர இருக்கை கிடைப்பது பற்றி முகுந்த் நாகராஜன் அழகான கவிதையொன்று எழுதியிருப்பார்:

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

குழந்தை இப்படியெல்லாம் தன் ஜன்னல் சீட் மகிழ்ச்சியைக் கவிதையாக வெளிப்படுத்துமா என்ற கேள்வி எழலாம். குழந்தையால் வெளிப்படுத்த முடிகிறதோ இல்லையோ வீடு நெருங்கிவிட்டது என்பதைவிட ஜன்னல் சீட் கிடைத்துவிட்டதில்தான் குழந்தை அதிக மகிழ்ச்சி கொள்ளும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்த மகிழ்ச்சியைத்தான் கவிஞர் தன் புகைப்படக் கருவியால் படம் பிடித்திருக்கிறார். கருவி கவிஞருடையது என்றாலும் மகிழ்ச்சி குழந்தையுடையதுதான். அதாவது, பேருந்தில் இடம் கிடைத்த குழந்தையுடையதும், கவிஞருக்குள் இருக்கும் குழந்தையுடையதுமான மகிழ்ச்சி.

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்