மருத்துவர்கள் ஆவதற்காக மட்டுமா மாணவர்கள் போராடுகிறார்கள்?

By தங்க.ஜெயராமன்

நீ

ட் தேர்வை விலக்கிக்கொண்டால் தாங்களும் மருத்துவர்களாகிவிடலாம் என்ற தன்னலச் சிந்தனையில் மாணவர்கள் போராடுகிறார்கள் என்றே ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. மருத்துவர்களுக்குப் பொதுவாகவே இருக்கும் சமூக அந்தஸ்து என்ற மாயை மாணவ சமுதாயத்தைக் கவர்ந்திருக்கிறது என்றும் நினைத்து சமூகவியலின் கற்பனை நுட்பங்களில் இறங்கக் கூடாது. மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் நீட் தேர்வின் புள்ளிவிவரங்களை வைத்து அது செய்யவிருக்கும் நன்மைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுத்தேர்வில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு மதிப்பெண்கள் பெற்ற மாணவி மற்றொரு போட்டித் தேர்வு எழுதித் தன் தகுதியை மூதலிக்க வேண்டுமென்றால் மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டுத்தான் போகும். நீட் தேர்வு அந்த மாணவிக்கு வைத்த தேர்வு அல்ல. அவர் அதற்கு முன்பே எழுதிய பொதுத்தேர்வின் முடிவை நிராகரிப்பதற்காக வைத்த தேர்வு.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தப்போகிறோம், நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை உருவாக்குவோம் என்பதெல்லாம் புண்பட்ட நியாய உணர்வின் குமுறலுக்கிடையில் எடுபடாது. நீட் தேர்வு இருந்தால் எத்தனை பேருக்கு, அது இல்லாவிட்டால் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று அந்த உணர்வு எண்ணிக்கொண்டிருக்காது. யாருக்குக் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்று வகைப்படுத்திப் பார்க்காது. ஏறிக் கடந்துவிடலாம் என்று நம்பியிருந்த ஏணியை யாரோ தட்டிவிட்டது போன்ற ஏமாற்றம். மாணவர்கள் கேட்பது மனதுக்கு மட்டுமே தெரிந்த நியாயம். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் பள்ளிச் சிறுமிகள் சாலையில் அமர்ந்து நியாயம் கேட்கிறார்கள். அவர்களின் நியாய உணர்வு எப்படியோ புண்பட்டுள்ளது என்று சொல்லாமல் இதை வேறு எப்படிச் சொல்ல முடியும்? இளைஞர்களுக்கு லட்சிய வேகம் குறைந்துவருகிறது என்று கவலைப்பட்டவர்கள் விழிதிறந்து பார்க்க வேண்டிய தருணம்.

நூற்றுக்கணக்கில் பள்ளிச் சிறுமிகளே போராட்டம் நடத்துவதைப் பார்க்கும்போது நான் பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வருகிறது. எங்கள் பள்ளியின் மாணவர்கள் ஆயிரத்துக்கும்மேல். ஆனால், மாணவிகளின் எண்ணிக்கை முப்பது என்ற அளவில் இருந்தது. இதுவே அப்போது பெரிய எண்ணிக்கை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இன்று எந்த வகுப்பை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். ஆக, இளைய சமுதாயத்தினர், குறிப்பாகப் பெண்கள், கல்வியை எப்படிக் கணிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கல்வி அறிவைத் தேடும் வழியாக மட்டுமல்ல, தங்களைக் கட்டிவைத்திருக்கும் சமுதாயத்தின் பழந்தளைகளை உடைத்து மேலெழும்ப உதவும் ஒரே சாதனமாகக் கல்வியை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த விடுதலை முயற்சிக்கு நீட் தேர்வு ஒரு தடை என்ற அச்சம் அவர்களைப் பற்றிக்கொண்டிருக்கிறது.

இது மாணவர்களின் சூட்டிப்பு

மைய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையில் கல்வி சிக்கிக்கொண்டது. அந்தப் பின்னணியில்தான் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது என்றும் ஆட்சியாளர்கள் காரணம் கற்பிக்கலாம். அரசியல் தொடர்பில்லாமலேயே கல்விப் பிரச்சினைகளில் தமிழக மாணவர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். 1970 என்று நினைவு. கல்லூரிகளில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்குமாறு அப்போதைய தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. நான் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தேன். அன்றைய மாணவர்கள், கல்வியாளர்கள் இத்திட்டத்தை ஏற்கவில்லை. தமிழில் போதுமான தரமான பாடநூல்கள் அப்போது இல்லை என்பதால் ஆங்கிலமும் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து. சிதம்பரம் கோட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பெரிய ஊர்வலம் ஒன்றை நாங்களே நடத்திச்சென்று அந்தத் திட்டத்தை எதிர்த்தோம். ஊர்வலத்துக்காக நாங்கள் எந்த முயற்சியும் செய்து கூட்டம் சேர்க்கவில்லை. தமிழக மாணவர்களின் சூட்டிப்பை நாம் என்றைக்குமே குறைத்து மதிப்பிடக் கூடாது.

நீட் தேர்வு மருத்துவப் படிப்புக்குத் திட்டமிடுபவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டியதல்ல என்பதைக் கல்வியாளர்கள் ஏற்பார்கள். சில ஆயிரம் மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு பற்றியது என்று நாம் இதனை எளிமைப்படுத்தி ஒதுக்கிவிட முடியாது. நீட் தேர்வு இப்போதே கச்சிதமாகத் தனது நோக்கத்தைச் சாதித்துக்கொண்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக, அல்லது அந்த ஆதர்ச பாடத்திட்டத்தை நோக்கிச் செல்வதாக எல்லா மாநிலப் பாடத்திட்டங்களும் புனரமைக்கப் படும்.

நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற சூழல் விரைவிலேயே உருவாகும். நமது சந்ததியினரின் சிந்தனை வளத்தைத் தான் நிர்ணயிக்கும் இலக்கு நோக்கித் திருப்பவும், கட்டுப்படுத்தவும் தேசிய அளவிலான அதிகார மையத்துக்கு இதை விடச் சிறந்த சாதனம் வேறென்ன வேண்டும்? கல்வித்திட்டமும் (curriculum), அதன் நோக்கத்தை அடைய உதவும் பாடத்திட்டமும் (syllabus) கற்பிக்கும் முறையும் கற்கும் முறையும் தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும், கேள்வித்தாளின் வடிவமைப்பும்-- எல்லாமே எட்டாம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வை முன்மாதிரியாகக் கொண்டு அமைந்துவிடும். இப்படி, ஒரு தேர்வை நோக்கியே பயணிக்கும் கல்விமுறையை கல்வியாளர்கள் ஏற்பார்களா? எந்த மட்டத்திலும் ஒரு மாற்று முறையை, மாற்றுக் கல்வித்திட்டத்தை மாணவர்களிடையே சோதித்துப்பார்க்க சுதந்திரம் தராத கல்வி முறையை என்னவென்று சொல்லலாம்? எதிர்ப்பையும் ஆதரவையும் தன்னை நோக்கியே ஈர்த்துக்கொண்டு நீட் தேர்வு தானே கல்வி பற்றிய சிந்தனையின் மையமாகிவிட்டதல்லவா? அதற்கு உருவாகும் எதிர்ப்பும் கல்விச்சிந்தனையை நீட் தேர்வின் மீது மையங்கொள்ளச் செய்யும் விந்தையாக மாறியது.

கலைப் பாடங்களின் இடம் என்ன?

மற்ற பாடங்களை விரும்பிப் படிப்பவர்களை நாங்களா தடுக்கிறோம் என்பார்கள் நீட் ஆதரவாளர்கள். மாணவர்களின் மனத்தளவிலேயே “இதைத் தவிர வேறு எதைப் படிப்பது?” என்று நீட் பாடங்கள் பரிசீலனைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையாகி ஒரு போலியான உயர்ச்சியைப் பிடித்துவிடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவ்வப்போது தேவைப்படும் திறன்களும், பொருள் சார்ந்ததல்லாத இதர தேவைகளும் உண்டு. அதற்கான மனிதவளமும் வேண்டும் என்பது மறந்துபோனது போலாயிற்று. ஏற்கெனவே, இங்கு மொழி, அரசியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடங்களும் மற்றவையும் கல்வித்திட்டத்தில் அவற்றுக்கு உரிய இடத்தைச் சுருக்கிக்கொண்டன. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் இவற்றை மேலும் ஒதுக்கிவிடும். பிறகு நாட்டின் மனிதவள மேம்பாடு எப்படியிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். நீட் தேர்வை மருத்துவப் படிப்பு என்ற எல்லைக்குள் மட்டுமே விவாதிப்பது பொருந்தாது. பள்ளிக் கல்வியின் தளத்தை முழுதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும் நீட் தேர்வு நமது மனிதவள முயற்சிகளை எப்படித் திசை மாற்றும் என்பதையும் கவனிக்க வேண்டும். மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு மட்டுமே போராடவில்லை.

-தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

55 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்