எல்லா இடங்களிலும் ஜெயிக்க விரும்புகிறோம்! - அமித் ஷா பேட்டி

By நிஸ்துலா ஹெப்பர்

பாஜக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறையும் நிலையில், பாஜகவின் எதிர்காலத் திட்டங்களில் மேலும் மும்முரமாக இருக்கிறார் அக்கட்சியின் தலைவரும் பிரதமர் மோடியின் வலதுகரமுமான அமித் ஷா. ஆட்சி தொடர்பான அவரது மதிப்பீடு, கட்சியின் கணக்குகள், எதிர்கால வியூகங்கள் பற்றி நிறையப் பேசினார்.

பாஜக ஆட்சி மூன்றாண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. உங்கள் மதிப்பீடு என்ன?

மோடி ஆட்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளோம். வேளாண் வளர்ச்சி போதுமானதாக இருக்கிறது. அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. சமீபத்தில் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அது, விண்வெளி ஆராய்ச்சித், தொழில் நுட்பத்தில் இந்தியா தனக்கெனத் தனியிடம் ஏற்படுத்திக் கொண்டதன் அடையாளம். இவையெல்லாம் இருந்தாலும் மோடி ஆட்சியின் மிகப் பெரிய சாதனை என்றால், அது நாட்டின் தன்னம்பிக்கை அதிகரித்திருப்பதே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தொலைநோக்குப் பார்வைக் கான அளவுகோல் உயரே இருக்கிறது. மோடியின் தொலை நோக்குப் பார்வை இந்த அரசாங்கத்தின் சாதனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தலைமையிடம் மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்துள்ளது. மோடியின் இந்தத் தலைமைப் பண்பும், அவர் மீதான மக்களின் எதிர்பார்ப்பும்தான் சாதனைகளை படைக்க உதவிசெய்கிறது.

பாஜக ஒரு வட இந்தியக் கட்சி. அப்படித்தான் தெற்கே அதன் மீதான பார்வை உள்ளது. தமிழகம் போன்ற ஒரு மாநிலத்தில் கலாச்சார இடைவெளியைச் சமன்படுத்த உங்கள் திட்டம் என்ன?

பாஜக அனைத்திந்தியக் கட்சி. தமிழகத்தில் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் தமிழர்களே. அப்படியிருக்கும்போது கலாச்சார இடைவெளி என்ற கேள்விக்கான தேவை என்ன இருக்கிறது? வெறும் மொழி, கலாச்சாரம், உணவு முறை நம்மைப் பிரித்துவிடும் என்றால், நாம் ஒரு தேசமாக இருப்பதே சாத்தியப்பட்டிருக்காது. இந்தியாவின் மையம் இத்தகைய கலாச்சார இடைவெளிகளுக்கு அப்பாற்பட்டு பிணைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலாச்சாரங்கள், பலதரப்பட்ட நம்பிக்கை என்ற பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் மையம் ‘பாரதியதா’. வடக்கு, கிழக்கு, தெற்கு எந்தப் பகுதியாக இருந்தாலும் ஏழைகள் சந்திக்கும் பிரச்சினை ஒரே மாதிரியானதுதான். மோடி அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக ஏழைகளுக்காக வேலை பார்த்துள்ளது. தலித்துகள், பழங்குடிகள், விவசாயிகள் என சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்புமிகு கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மோடியின் இந்த அடையாளம் ஒன்றே தெற்கே பாஜக வேர்களைப் பரப்பவும் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன். தமிழ்நாடு, தெலங்கானா, லட்சத்தீவு எனத் தென் பகுதிகளில் 24 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். இனி வரும் நாட்களில் தெற்கில் பாஜகவுக்கான மக்கள் ஆதரவு பெருகும்.

ரஜினி பாஜகவில் இணைவார் என்ற ஊகங்கள் குறித்து..

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்திருக்கிறார். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என நான் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருக்கிறேன். அந்த வகையில் ரஜினி அரசியலுக்கு வருவதும் வரவேற்கத்தக்கது. ஆனால், ரஜினி பாஜகவில் இணைவது பற்றி இதுவரை எந்தவித பேச்சுவார்த்தையும் அவருடன் நடத்தப்படவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறதே..

அதிமுகவில் நிச்சயமாக பாஜக தலையீடு இல்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடமே அக்கட்சியின் உட்பூசலுக்குக் காரணம். அதிமுக உள்கட்சி விவகாரங்களுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இன்றைய சூழலில் தெற்கே கர்நாடகத்தில் மட்டுமே பாஜக வலுவாக இருக்கிறது. இருப்பினும் கர்நாடக பாஜகவில் நிலவும் உட்பூசல்கள் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்குமா?

இந்தச் சச்சரவுகளெல்லாம் நீண்ட நாட்கள் நீடிக்காது. தேர்தலுக்கு முன்பு எல்லாம் முடிந்துவிடும்.

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் நடந்திருக்கும் சஹரான்பூர் கலவரம் போன்ற பிரச்சினைகள் தொடங்கிவிட்டனவே?

உத்தர பிரதேச மாநிலத்தின் மக்கள்தொகையை இந்தியாவின் பிற மாநிலங்களின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டு, அங்கு நடக்கும் கலவரங்களையும் உத்தர பிரதேசத்தில் நடக்கும் கலவரங்களையும் ஒப்பிட்டால் நீங்கள் உண்மையை உணர முடியும். உத்தர பிரதேசத்தில் இதற்கு முந்தைய ஆட்சியின் கீழ் நடந்த சாதிக் கலவரங்கள் எத்தனை என்பதையும் இதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். நிர்வாகரீதியான மாற்றங்களை ஏற்படுத்த முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. இன்னும் ஐந்தே ஆண்டுகளில் பின்தங்கிய மாநிலம் எனும் நிலையிலிருந்து உத்தர பிரதேசம் வெளியேறிவிடும்.

எல்லையில் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தகைய கெடுபிடியான ராணுவக் கொள்கைகளுக்குப் பின்னர் இருப்பதுதான் என்ன?

இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் உலக அரங்கில் பாதுகாப்புத் துறையின் மத்தியில் இந்தியா மீதான பார்வையை மாற்றியமைத்துள்ளது. மோடி அரசு எடுத்த முடிவுகளின்படி முன்னேறும் என்ற அடையாளம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முடிவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் அரசு மோடி அரசு. ராணுவத்துக்கு எப்போதுமே இந்த அரசு பக்கபலமாக இருக்கும். இத்தகைய கெடுபிடியான கொள்கைகள் மூலம் ராணுவமும் மத்திய அரசும் எல்லை பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதோடு பாதுகாப்பு வீரர்களுக்கு மரியாதையும் செய்திருக்கிறது. சமீபத்தில் நடந்த ராணுவத் தாக்குதல் இந்திய ராணுவத்தின் உத்வேகத்தை அதிகப்படுத்தியுள்ளதோடு ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்குவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் நோக்குடன் 95-நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளீர்கள். இதற்குப் பின் உள்ள வியூகம் என்ன?

பகுதிகள் என்று நீங்கள் குறிப்பிடுவது எனது பார்வையில் மாநிலங்கள் மட்டுமல்ல. உதாரணத்துக்கு, குஜராத்தில் கடந்த 22 ஆண்டுகளாக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவவில்லை. ஆனால், அங்கே எந்த வாக்குச்சாவடிகளில் எல்லாம் பாஜக தோல்வி கண்டதோ அங்கெல்லாம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். உத்தர பிரதேசத்தில் பாஜக இப்போது வலுவாக இருக்கிறது. ஆனால், அங்கும் தோல்வி கண்ட வாக்குச்சாவடிகளில் வெற்றிச் சூழலை உருவாக்க நினைக்கிறோம். ஏற்கெனவே சொன்னதுபோல், தெலங்கானா, தமிழகம், லட்சத்தீவுகளில் 24 நாட்கள் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். தெற்கிலும் பாஜகவுக்கு ஆதரவு பெருகும் என நம்புகிறேன்.

பிஹார் மகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா?

இது நிதிஷ்குமார் முடிவுசெய்ய வேண்டியது. அவரிடமிருந்து இதுவரை அத்தகைய சமிக்ஞைகள் ஏதும் வரவில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 18,000 வாக்குகள் தேவைப்படுகின்றன. குடியரசுத் தலைவர் அதிபர் வேட்பாளர் தேர்வில் இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

இதுகுறித்து எங்களது கூட்டணிக் கட்சிகளோடு ஆலோசித்துவருகிறோம். பிற கட்சிகளோடும் ஆலோசிக்க விருக்கிறோம். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

சிறுபான்மைச் சமூகத்தினருடன் மோடி அரசின் உறவு எப்படி இருக்கிறது? உங்கள் பார்வையில் விளக்குங்கள்..

நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசாங்கம் நலத் திட்டங்களுக்கான கொள்கையை வகுக்கும்போது எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லை. சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்போது பெரும்பான்மைச் சமூகத்தவர், சிறுபான்மைச் சமூகத்தவர் என்ற பாகுபாடு பார்க்கப்படுவதில்லை. மத்தியில் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 4.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பெரும்பான்மை, சிறுபான்மையினர் வீடுகளும் அடங்கும். 17,000 கிராமங்களுக்கு அரசாங்கம் இதுவரை மின்சார இணைப்பு வழங்கியிருக்கிறது. இதில் எந்த கிராமம் பெரும்பான்மை சமூகத்தினருடையது, எவை சிறுபான்மை சமூகத்தினருடையது என்ற பேதம் பார்க்கப்படவில்லை.

தேர்தல் வெற்றியையும் பாஜகவை மக்கள் கொள்கைரீதியாக ஏற்றுக்கொள்வதையும் நீங்கள் எப்போதுமே பிரித்துப்பார்ப்பது ஏன்? தேர்தல் வெற்றிக் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கு நிகரானது அல்லவா?

ஆமாம், நான் இதை எப்போதுமே வலியுறுத்துகிறேன். கொள்கை இல்லாத கட்சியால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித நன்மையும் பயக்காது. கொள்கையைப் புறக்கணித்து தேர்தலை மட்டுமே மையமாக்கிச் செயல்படும் கட்சிகள் இயந்திரங்களே. பாஜக வலுவாகக் காரணம் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ள கொள்கை. ஜன சங்கம் முதல் ஜனதா கட்சி வரையிலான பயணம், ஜனதா கட்சியுடனான பிரிவினை என அனைத்துமே கொள்கை அடிப்படையிலானவை. இன்று, மத்தியில் ஆட்சியை செலுத்தும் முறையிலும் மாநிலங்களில் ஆட்சியை செலுத்தும் முறையிலும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்க முடிகிறது. இதற்கெல்லாம் எங்கள் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் உருவானது என்பதே காரணம்.

பொருளாதாரச் சீர்திருத்தங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் பலத்துக்கு ஏற்ப செயலாக்கம் இல்லை என்ற கருத்து நிலவுகிறதே?

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என எழுத்துபூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ள அர்த்தத்துக்கும் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி ஏற்படுத்தியுள்ள சீர்திருத்தங்களுக்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இந்த அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார விகிதத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரரீதியாக விளிம்பு நிலை மக்களுக்கு பொருளாதார ஏற்றம் காண்பதற்கான சுதந்திரத்தை அளித்துள்ளது. அணுகுமுறைரீதியாக பொருளாதாரச் சீர்திருத்தம் மறு உருவம் பெற்றிருக்கிறது. ஜி.எஸ்.டி, ஜன் தன் யோஜனா, ஆதார் மூலம் சாத்தியமாக்கப்பட்ட நேரடி மானியத் திட்டங்கள் போன்றவை பொருளாதார சீர்திருத்தங்களை வெளிப்படைத் தன்மை கொண்டதாக மாற்றியுள்ளன. உஜ்வலா யோஜனா, முத்ரா, பயிர்க் காப்பீடு, மின்சந்தைகள் ஆகியனவற்றை சீர்திருத்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

© ‘தி இந்து’ ஆங்கிலம் தமிழில் சுருக்கமாக: பாரதி ஆனந்த்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்