இனி, சர்வமும் சாட்ஜிபிடி மயமாகிவிடுமா?

By ஆயிஷா இரா.நடராசன்

சாட்ஜிபிடி (ChatGPT) எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வரவு, சாதகமா பாதகமா என்பதுதான் இன்றைக்குப் பல தளங்களிலும் விவாதிக்கப்படும் விஷயம். மருத்துவ இறுதித்தேர்வின் எல்லா கேள்விகளுக்கும் அரை மணி நேரத்தில் சரியான விடையளித்து மலைக்கவைத்த சாட்ஜிபிடி, ஆயிரக்கணக்கான மென்பொருள் நிரல் (Coding) எழுதும் பொறியாளர்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு விதங்களில் இதன் பயன்பாடு குறித்த வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. நிதர்சனம் என்ன?

கூகுளைவிடக் கூடுதலாக: கூகுளுக்குச் சென்று கேள்வியைத் தட்டச்சு செய்கிறோம் அல்லவா? அது ஒரு மென்பொருள்; அதுவும் ஒருவகை செயற்கை நுண்ணறிவுதான். ‘ராண்டம் சர்ச்’ (Random Search) எனப்படும் ‘பேஜ் ரேங்க் அல்காரித’த்தைக் (இணையப் பக்கத் தரவரிசை அல்காரிதம்) கூகுள் பயன்படுத்துகிறது. இணையம் முழுவதும் தேடி, பொருத்தமான தரவுகள் எங்கெல்லாம் உள்ளன என்பதைத் தேர்வுசெய்து எடுத்துவந்து திரையை நிரப்பும்போது, அதுவே ஒரு தரப்பட்டியலையும் (Ranking) தயாரித்து அதன்படி வரிசைப்படுத்துகிறது.

அவ்விதம் செய்யும்போது, அது ஐந்து வகையாகச் செயல்படுகிறது: 1) முதலில் நம் உள்ளீட்டை இயற்கையான பொருளில் ஏற்று, அதன் அடிப்படையில் செயல்படுகிறது; 2) கேட்பவரின் தேவை என்னவாக இருக்கலாம் என்பதைக் கணிக்கிறது; 3) நாம் ஏற்கெனவே தேடியவற்றை வைத்து நமது தேடலின் வகைப்பாட்டைத் தீர்மானிக்கிறது; 4) திரட்டிய பல்வேறு இணையத் தரவுகளை வரிசைப்படுத்தும்போது தேதி – காலம் அடிப்படையில் சமீபத்திய விஷயம் முதலில் வருமாறு வரிசைப்படுத்துகிறது; 5) சொற்களின் அடிப்படையில் வரிசைப்படுத்துதல் என அந்த அல்காரிதம் செயல்படுகிறது. கூகுள் தேடுபொறி வழங்கும் தரவுகளைக் கொண்டு நாம் நமது தேடலை நிறைவுசெய்கிறோம்; திருப்தி இல்லையெனில் மீண்டும் தொடர்கிறோம்.

ஆனால், சாட்ஜிபிடி அந்த எல்லா வேலைகளையும் தானே செய்து ‘இறுதி விடை’யை மட்டும் நமக்கு வழங்குகிறது. மனித வேலையை ரோபாட் செய்துவிடுவதே 21ஆம் நூற்றாண்டின் முன்னெடுப்பாக இருக்கும் என்பது மிச்சியோ காகு (Michio Kaku) உள்ளிட்ட பல அறிஞர்கள் கணித்ததுதான்; சாட்ஜிபிடி அதை நிதர்சனமாக்குகிறது. கூடவே, பல துறைகளில் வேலையிழப்பு ஏற்படலாம் எனும் எச்சரிக்கை மணியும் ஒலிக்கிறது.

தேடுதலில் தெளிவு: சாட்ஜிபிடி எப்படிச் செயல்படுகிறது என எல்லாரையும்போல் சமீபத்தில் நானும் வெள்ளோட்டம் பார்த்தேன்: கூகுள், சாட்ஜிபிடி இரண்டிடமும் ஒரே கேள்வியைக் கேட்டேன். நான் கேட்டது மிக மிகச் சுலபமான கேள்வி: ‘ஒரு கைபேசி வாங்க வேண்டும்... என்ன செய்யலாம்?’ இதை கூகுள் எதிர்கொண்டு மொத்தம் 1,64,760 தரவுகளைக் கொண்டுவந்து கொட்டியது. சாட்ஜிபிடி அப்படி எதுவும் செய்யவில்லை. ‘நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள்.

நாளை மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விலை மற்றும் வரிவிதிப்பில் மாறுபாடுகள் வரலாம். கைபேசி வாங்குவதை இரண்டு நாள்களுக்குத் தள்ளிப்போடுவதே நல்லது. இருந்தாலும் கீழ்க்கண்ட விஷயங்களைப் பரிசீலிக்கலாம்’ என ஒரு நான்கு பாரா திரையில் விரிந்தபோது நான் புன்னகைத்துக்கொண்டேன். நான் இருக்கும் தேசம் சாட்ஜிபிடிக்குத் தெரிகிறது. ஜிபிஎஸ் மூலம் கூகுளுக்கும் அது தெரியும்தான். ஆனால், என் பிரதேசத்தின் சமீபத்திய செய்தியை மிகுந்த புத்திக்கூர்மையுடன் பரிசீலிக்க சாட்ஜிபிடிக்குத் தெரிகிறது; ஆச்சரியம்தான்!

சுய கற்றல் - மேம்படுத்துதல்: சாட்ஜிபிடியை உருவாக்கியது ஓபன்ஏஐ (OpenAI) எனும் நிறுவனம். எலான் மஸ்க், சாம் ஆல்ட்மன் ஆகியோர் 2015இல் உருவாக்கிய இந்நிறுவனம், 2020இல் இன்ஸ்ட்ரக்ட்ஜிபிடி (InstructGPT) எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இதன் அடுத்தகட்டம்தான் சாட்ஜிபிடி. 2018இல் எலான் மஸ்க் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார்.

ஜிபிடி என்பது ஜெனரேட்டிவ் பிரீட்ரெய்ன்ட் டிரான்ஸ்ஃபார்மர் (Generative Pre-trained Transformer) எனும் செயற்கை நுண்ணறிவுச் செயலாக்கம் ஆகும். அதாவது, முன்பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து தரவேண்டிய ஒரு முடிவை எடுத்தல். இது ஒரு அரட்டை வகை மெய்நிகர் ரோபாட். தற்போதைக்கு அதன் அதிர்ச்சி அலைகளின் பரவசங்கள் – கூகுள் காலத்தில்கூட இல்லாத அங்கீகாரம் இதற்கு வழங்கப்படுவதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு.

கணினி மென்பொருள் நிரலாக்கல் (Coding) விஷயத்தில் சாட்ஜிபிடி அதிசயச் சுரங்கம். புரோகிராம் எழுதுவதில் அதீதத் திறன் கொண்ட ஒரு வல்லுநர்போல மென்பொருள் ஆள்களுக்குத் திறம்படப் பணி செய்கிறது. பாதி கோடிங் கொடுத்தால்கூட மீதியைத் தானே இட்டு நிரப்பி இறுதி வடிவத்தைத் தந்துவிடுகிறது. செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இந்த மெய்நிகர் ரோபாட், முழுதும் உரையாடல் (Text) அடிப்படையிலானது. ஏராளமான தரவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

ஏற்கெனவே சேமித்த தனது வாக்கியங்களின் வழியே கண நேரத் தேடலைச் செலுத்திப் புரிந்துகொள்ளும். ஒரு புதிய அல்காரிதத்தைப் பயன்படுத்தி நம் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது. ஒருவேளை பதில் தவறு என்று நாம் பதிவிட்டால், மன்னிப்புக் கேட்கிறது. எது சரியான பதில் என்று நம்மிடமே கேட்டுப் பெறுகிறது. சாட்ஜிபிடியின் அற்புதம் இந்த விஷயத்தில்தான் அடங்கியிருக்கிறது. இது ஒரு சுயகற்றல் மேம்படுத்துதல் ரோபாட். பயனர்கள் தரும் கேள்விகளிலிருந்து அது தானாகவே கற்றுக்கொள்கிறது.

காத்திருக்கும் சவால்கள்: ஆங்கிலத்தைத் தவிர, தமிழ் போன்ற மொழிகளில் சாட்ஜிபிடி வழங்கும் பதில்களின் வாக்கிய அமைப்புகளில் தவறுகள் உள்ளன. தற்போதைக்கு சாட்ஜிபிடி எதற்கெல்லாம் அதிர்ச்சி தரப்போகிறது என்று பார்ப்போம். சரியான அனுமானம் (Hypothesis) தரப்பட்டால், ஓரளவு தெளிவுடன் முழு ஆய்வு – அறிக்கையை (Thesis) வழங்கி, முனைவர் பட்டம் பெறுபவருக்கு ‘உதவி’ செய்யக்கூடும். சாதாரணப் பள்ளிக்கூட மாணவர் பாடப்பணி (Assignment) முதல் கல்லூரி-பல்கலைக்கழகத் தேர்வுவரை எல்லாமே இந்தத் தொழில்நுட்பத்துக்குச் சாத்தியம்.

தற்போதைக்கு அமெரிக்காவும் கனடாவும் கல்வித் துறையில் சாட்ஜிபிடியைத் தடை செய்துவிட்டன. இந்தியாவில் சென்னை ஐஐடி உட்பட சில கல்வி நிறுவனங்கள் விழித்துக்கொண்டிருப்பது தெரிகிறது. அருந்ததி ராய் போன்ற ஒரு மோடி எதிர்ப்பாளர், மோடியைப் பற்றி என்ன கட்டுரை எழுதுவார் என்று - வேறு எந்த உள்ளீடும் கொடுக்காமல் -கேட்டதற்கு சாட்ஜிபிடி படைத்துக் கொடுத்ததாக ஒரு கட்டுரையை வெளியிட்டு நகைச்சுவை செய்திருக்கிறது ஓர் இணையதளம்.

எல்லாம் சரிதான். ஆனால், சுய படைப்பாக்க வகையை இன்னும் அடையவில்லை. தற்போது செய்வது பெரும்பாலும் கருத்துத் திருட்டுதான் (Plagiarism). கூகுளுக்கும் அதற்குமான அடிப்படை வேற்றுமை இங்குதான் உள்ளது. கூகுள் போன்ற இணையத்தேடலின் மின்பொறி உங்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதன் உரிமம் அதைப் படைத்தவர் சார்ந்ததே. ஆனால், சாட்ஜிபிடி எல்லாவற்றையும் தன்னுடையதாக்கிவிடுவது பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

சாட்ஜிபிடி உலகை மாற்றிவிடும் என்கிறார் பில் கேட்ஸ். இன்றைய தேதியில் இது மிக ஆபத்தான செயற்கை நுண்ணறிவு என்கிறார் எலான் மஸ்க். தனிமனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தும்போதுதான் எந்த ஒரு புதிய அம்சமும் வெற்றி பெறும். சாட்ஜிபிடி அப்படியான தாக்கத்தை ஏற்படுத்துமா?

- ஆயிஷா இரா.நடராசன் கல்வியாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

To Read in English: ChatGPT: A chatbot or just chatterbox?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்