ட்ரம்பின் 100 நாட்கள்!

By தாமஸ் எல்.ஃப்ரைட்மேன்

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற முதல் 100 நாட்களில் அவர் போட்ட உத்தரவுகள், அவர் அளித்த பேட்டிகள், அவர் எடுத்த நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர் வகிக்கும் பதவி அவரைச் சுய நிலையை இழக்க வைத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது. முதல் 100 நாட்களில் வெவ்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் அளித்த பேட்டிகளைப் பார்த்தால், முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பமாகவும் இருக்கிறது.

“அணு ஆயுத, ஏவுகணைச் சோதனைகளை நடத்துவதால் வட கொரியாவுக்கு எதிராகப் போர் வரும்” என்று பல வாரங்களாக மிரட்டிவிட்டு திடீரென்று, “வட கொரிய அதிபருடன் நேரடியாகப் பேசுவதைப் பெரிய கௌரவமாகக் கருதுவேன்” என்று சாந்த சொரூபியாகக் கூறுகிறார்.

‘அடித்தளக் கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் வரி வருவாயைத் திரட்ட, காசோலின் (எரிபொருள்) மீது வரி விதிப்பேன், நாட்டின் பெரிய வங்கிகளைச் சிறு வங்கிகளாகப் பிரிப்பேன்’ என்கிறார். ஒபாமாகேர் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு மாற்றாக, தான் கொண்டுவரவிருக்கும் சட்டம், ஏற்கெனவே அரசின் இலவச மருத்துவப் பாதுகாப்புக்கு உட்பட்டவர்களுக்கு அப்படியே தொடரும் என்கிறார். அதில் எள் முனையளவும் உண்மையில்லை.

ஆதாரமற்ற புகார்கள்

உலகில் இப்போது உள்ள சர்வாதிகாரிகளில் ட்ரம்பின் பாராட்டைப் பெறாதவர்களே கிடையாது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறுகிறார் அது, ‘பராக் ஒபாமா என்னை உளவு பார்த்தார்’ என்பது. ‘ஆதாரம் என்ன?’ என்று நிருபர்கள் கேட்டால், ‘போய்க் கண்டுபிடியுங்கள்’ என்கிறார். அதிபராக இருக்கும் அவர் தொலைபேசியை எடுத்து எஃப்.பி.ஐ. தலைவருக்கு ஒரு போனைப்போட்டால், அடுத்த நிமிடமே அறிக்கை வந்து மடியில் விழும். ‘இந்தக் குற்றச்சாட்டில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘நான் எதிலும் உறுதியாக இருந்ததே இல்லை’ என்று பதில் அளிக்கிறார்.

இப்படி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டு, சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பதில் அளிப்பது அரசியல் உத்தியா அல்லது மனப் பிறழ்வின் ஆரம்பமா.. எனக்குத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, அடுத்த 100 நாட்களில் ‘எது வேண்டுமானாலும்’ நடக்கலாம் நல்லதும் சரி; கெட்டதும் சரி - என்றே தோன்றுகிறது. தன்னுடைய நிலையை எந்தக் கோணத்துக்கும் மாற்றிக்கொள்ளக்கூடிய சாமர்த்தியம் அவருக்கு இருக்கிறது. எந்தப் பிரச்சினை தொடர்பாகவும், யாருடன் வேண்டுமானாலும் அவர் எளிதாக ‘பேரம் பேசி’ காரியத்தை முடித்துவிடுவார்.

ட்ரம்ப் எந்த விஷயத்தில், எப்படி நடந்து கொள்வார் என்று முன்கூட்டியே ஊகிப்பது மிகமிகக் கடினம். காரணம், அவர் அதிபர் பதவிக்கு வருவ தற்கு முன்னால் தன்னுடைய கொள்கைகள், திட்டங்கள் குறித்து முன் தயாரிப்புகள் எதையும் செய்துகொள்ளவில்லை. அதனால்தான், ‘நான் எதிர்பார்த்ததைவிடப் பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன’ என்று மலைத்துப்போகிறார். அது மட்டுமல்ல.. அவர் நியமித்த அமைச்சர்களிலேயே பலரின் பெயர், பின்னணி உள்ளிட்டவற்றை அவரே மறந்துவிடுகிறார். அவர்கள் அனைவரும் கூடைப்பந்து அணியைப் போல, ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஒன்றாக இருக்கின் றனர். ஆனால், பொதுவான தொலைநோக்கோ, திட்டமோ இல்லாதவர்கள்; ட்ரம்பின் அறியாமை, நிலையற்ற மனம், நாகரிகமற்ற பேச்சு போன்ற வற்றை லட்சியம் செய்யாமல் வேலை செய்வதற்குத் தயாரான மனோபாவங்களுடன் வந்திருக்கின்றனர்.

ட்ரம்ப் அதிபரான பிறகு, முதல் 100 நாட்களில் மிகவும் மோசமான நிலைக்கு நாடு சென்றுவிடாமல் காப்பாற்றியது ட்ரம்பின் தோழமை நாடுகளைச் சேர்ந்தவர்களும், எதிரி நாட்டவர்களும்தான். ஈரானுடனான அணுவிசைப் பாதுகாப்பு ஒப்பந் தத்தை அவர் ரத்து செய்துவிடாமல் தடுத்தது அமெரிக்க வெளியுறவுத் துறையினர். இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்கத் தூதரகம் மாற்றப்படாமல் தடுத்ததும் அவர்கள்தான். சீனாவை ‘ரொக்க மோசடி நாடு’ என்று அறிவித்து, பெய்ஜிங்குடன் வணிகப் போர் தொடங்காமல் ட்ரம்பைக் காப்பாற்றியவர் ஏவுகணைப் பிரியரான வட கொரிய அதிபர்தான். வட கொரியாவைக் கட்டுப்படுத்தவும் போரைத் தவிர்க்கவும் சீனா அவசியம் என்ற ஞானோதயத்தை வட கொரிய அதிபர்தான் ஏற்படுத்தினார்.

ஏற்றுமதி - இறக்குமதி வங்கியை ட்ரம்ப் ஒழித்துவிடாமல் போயிங் மற்றும் ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனங்கள்தான் காப்பாற்றின. முஸ்லிம்கள் குடியேறத் தடை விதித்துவிடாமல் அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றங்கள் தடுத்தன. மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லையில் பெரிய மதில் சுவரை எழுப்ப முடியாமல் எல்லையோர மாநிலங்களின் குடியரசுக் கட்சி நிர்வாகிகள் தடுத்தனர். ‘ஒபாமா கேர்’ சட்டத்தையும் அவர் மாற்றிவிடாமல் குடியரசுக் கட்சி நிர்வாகிகள்தான் தடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

கலிபோர்னிய நம்பிக்கை

அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்காவை இப்படி யாரெல்லாம் காப்பாற்றுவார்களோ தெரியவில்லை. ஜனநாயகக் கட்சி மீது எனக்கு நம்பிக்கையில்லை. அது மிகவும் வலுவிழந்து கிடக்கிறது. பெரும்பாலான விஷயங்களுக்கு கலிபோர்னியா மாகாணத்தைத்தான் நம்புகிறேன். கலிபோர்னிய சந்தையின் அளவு, வளர்ச்சியில் அதற்கு இருக்கும் லட்சியங்கள், முற்போக்கான சட்டங்களை இயற்றக்கூடிய அதன் ஆற்றல் காரணமாக அமெரிக்காவில் ட்ரம்பை எதிர்த்து நிற்கக்கூடிய மாகாணமாக அது திகழ்கிறது.

‘ஆப்பிள்’ நிறுவனம் உலகம் முழுக்க உள்ள தன்னுடைய கிளைகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களிலிருந்து (காற்று, சூரிய ஒளி போன்றவை) கிடைக்கும் மின்சாரத்தை 96% அளவுக்குப் பயன்படுத்துகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அந்தப் பயன்பாட்டை 100% ஆக்கப்போகிறது. எனவே, நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களுக்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்து, அவற்றுக்கு ஆதரவாக வாதாடினாலும் எதிர்கால அமெரிக்கா நுரையீரல் பாதிக்கப்பட்டு இருமலால் அவதிப்படாமல் இருக்க ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பார்த்துக்கொள்ளும்.

அம்பலப்படுத்துகிறது கலிபோர்னியா

புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களிலிருந்து மின்சாரம் தயாரிப்பது கலிபோர்னியாவில் அதிகம் என்று ஆற்றல் கண்டுபிடிப்பாளர் ஹால் ஹார்வி கூறுகிறார். 2030-ல் கலிபோர்னியாவின் மொத்த மின் தேவையில் 50% காற்று, சூரிய ஒளி உள்ளிட்ட இயற்கை ஆற்றல்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 15% அணுவிசையில் இருந்தும் புனல்மின் நிலையங்களிலிருந்தும் கிடைக்கின்றன. அதாவது, 65% மின்சாரம் கரிப்புகையை வெளிவிடாமல் தயாரிக்கப்பட உள்ளது.

அனல்மின் நிலையங்களில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளைவிட இயற்கை வளங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரத்தைத் தயாரிப்பதில் அதிக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. “படிப்படியாக தூய்மையான மின்உற்பத்திக்கு மாறிக்கொள்ளலாம். அதுவரை மின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஜிடிபி ஆகியவற்றுக்கு அனல் மின் நிலையங்கள் தொடரட்டும்” என்று ட்ரம்ப் கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்பதை கலிபோர்னியா அம்பலப்படுத்துகிறது.

ட்ரம்பின் கொடூரமான குடியேற்றச் சட்டத்தை எதிர்ப்பதிலும் கலிபோர்னியா முன்னிலை வகிக் கிறது. எல்லைப்புறக் காவலை வலுப்படுத் தினாலும், சட்ட விரோதமாகக் குடியேறியவர் களுக்குக் கல்வி, மருத்துவ வசதி, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் அக்கறையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நம்முடைய பொருளாதார வளங்களையும் அதே சமயம், ஜனநாயக மாண்புகளையும் மனிதாபிமானத்தையும் தொடர்ந்து காப்பாற்றி வருவோம் என்று கலிபோர்னியா மாகாண எதிர்க் கட்சித் தலைவர் கெவின் டி லியான் தெரிவித்திருக்கிறார். ட்ரம்ப் தொடரும் வழக்கு களைச் சந்திக்க முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் எரிக் ஹோல்டரையும் கலிபோர் னியா மாகாண அரசு அமர்த்திக் கொண்டிருக் கிறது. ஒருவகையில் எரிக் ஹோல்டர் கலிபோர் னியாவுக்கும் எனக்கும் ‘பாதுகாப்பு’ அமைச்சர்!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’ சுருக்கமாகத் தமிழில்: சாரி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்