சுதந்திர இந்தியாவின் முதல் நிதிநிலை அறிக்கையில், செலவு மதிப்பு ரூ.197.29 கோடி; கடந்த ஆண்டின் நிதிநிலை ரூ.34.83 லட்சம் கோடி. ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடுகள் என்னவாக இருந்தாலும், அதன் நோக்கம் பொருளாதார வளர்ச்சியை உத்தரவாதம் செய்தல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழில், வர்த்தகம், வளங்களின் பங்கீடு ஆகியவற்றை மேம்படுத்துதல் என ஆட்சியில் இருக்கும் அரசு தனது அரசியல், சமூக, பொருளாதாரக் கடமைகளை நிறைவேற்றுவதற்கே எனக் கருதப்படுகிறது.
வகைமை மாற்றங்கள்: 1951-52 முதல் 1972-73வரை சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், பொதுச் செலவானது முதலீட்டுச் செலவுகள், வருவாய் செலவினங்கள் என வகைப்படுத்தப்பட்டது, பொதுத் துறை நிறுவனங்களுக்கான மூலதன ஆக்கம், நீர்ப்பாசன வசதிகளுக்கான அணைக்கட்டுகள், கால்வாய் வெட்டுதல், மின் உற்பத்தித் திட்டங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகள் மூலதனச் செலவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. அரசின் பொதுவான செலவுகள் நிர்வாகச் செலவுகள், பாதுகாப்புச் செலவினங்கள், அரசு ஊழியர்களின் ஊதியம், மானியங்கள், பொதுக் கடனுக்கான வட்டி போன்றவை வருவாய்ச் செலவுகளாக இனம் காணப்பட்டன.
1973-74 ஆண்டுக்குப் பின்னர் இந்த வகைப்பாடு வளர்ச்சிக்கான செலவுகள், வளர்ச்சி சாராத செலவுகள் என மாற்றம் கண்டது, வேளாண்மை - அது சார்ந்த செலவுகள், தொழில் சார்ந்த செலவுகள், கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதி போன்ற வளர்ச்சி சார்ந்த செலவுகள் என்கிற வகைப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்புச் செலவினங்கள், வெளியுறவுத் துறை தொடர்பான செலவுகள், வட்டி, மானியங்கள் - நிர்வாகச் செலவுகள், பொதுச் சேவைக்கான செலவுகள், வளர்ச்சி சாராத செலவுகள் என மாற்றி அமைக்கப்பட்டது.
மாற்றங்களின் விளைவுகள்: 1951 முதல் 1960வரையான முதல் பத்தாண்டுகளில் வேளாண்மைத் துறைக்கும் அதனைத் தொடர்ந்து தொழில் துறை வளர்ச்சிக்கும் செலவுகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் நாடு முழுவதும் பல நீர்த்தேக்கத் திட்டங்கள் உருவாகின. பாசன வசதித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. நாடு முழுவதும் பல பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
1980கள் தொடங்கி வளர்ச்சி சாராத செலவுகள் அதிகரிக்கத் தொடங்கின. இதன் தொடர்ச்சியே 1990இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி. அதனைத் தொடர்ந்து பொருளாதாரக் கொள்கைகளில் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதே காலகட்டத்தில்தான் தொழில்முறை அரசியல்வாதிகள் அதிகார வர்க்கத்தின் துணையோடு அரசுகளை நிர்வகிக்கத் தொடங்கினர்.
1991 முதல் உருவாக்கப்பட்ட நிதிநிலைத் திட்டங்களில், பொதுச் செலவு முறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. வளர்ச்சி சாராத திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறைந்தது. உர மானியம் உள்ளிட்ட வேளாண்மை மானியங்கள், வேளாண்மை சார்ந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு,கிராமப்புற வளர்ச்சிக்கான செலவுகள், சமூக வளர்ச்சிக்கான செலவுகள் ஆகியவை குறைக்கப்பட்டன. தொழில் துறை தாராளமயம், சுதந்திர வர்த்தகப் பிராந்தியங்கள், அந்நியச் செலாவணிக் கொள்கையில் மாற்றம், பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயம், பொதுச் செலவுக்காகப் பொதுத் துறை நிறுவனங்களை விற்றல் போன்ற மாற்றங்கள் நிகழ்ந்தன.
2003இல் கொண்டுவரப்பட்ட நிதிப் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மைச் சட்டம் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றம். நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல், வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைத்தல், பொதுக் கடனுக்கான வட்டி பளுவைக் குறைத்தல் ஆகியவை இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்கள். இதன் விளைவாக உணவு மானியம், உர மானியம், கல்விக்கான நிதி ஒதுக்கீடு, சுகாதாரச் செலவுகள் பெருமளவில் குறைக்கப்பட்டன.
இந்தச் செலவுகள் பெயரளவில் அல்லது மொத்தச் செலவில் அதிகரித்துவருவதுபோல் தெரிந்தாலும், மொத்த தேசிய வருமானத்தின் விகிதமாகப் பார்க்கையில் இந்தச் செலவினங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. உணவு மானியங்கள் குறைக்கப்பட்டதால் விலைவாசிஏற்றம் ஒருபுறம்.
வேளாண்மை மானியங்கள் வெட்டப்பட்டதால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு அதிகரிப்பு மறுபுறம். நுகர்வோர், விவசாயிகள் என இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டாலும் கூடுதல் பாதிப்பு சிறு-குறு விவசாயிகளுக்கு (85%) ஏற்பட்டது. பரவலாக நிகழ்ந்த, நிகழ்ந்துவரும் விவசாயிகள் தற்கொலைகள் இதன் நீட்சிதான். நிதிநிலை அறிக்கையில் நிகழ்த்தப்பட்ட இந்த மாற்றங்கள் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துதல் என்னும் பெயரில் நடைபெறுகின்றன.
பாரபட்சமான அணுகுமுறை: நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்ய, செலவுகள் குறைக்கப்பட்ட அதேநேரத்தில் வருவாய் ஆதாரங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. 1991க்குப் பிறகு நேரடி வரி வருவாய்க்குப் பதிலாக, மறைமுக வரி வருவாயை அரசு உயர்த்திவருகிறது. நேரடி வரி வருவாயில் இரண்டு கூறுகள் உள்ளன: ஒன்று, தனிநபர் வருமான வரி; மற்றொன்று, கார்ப்பரேட் வரி. 1991க்குப் பிறகு, கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.
30%ஆக இருந்த கார்ப்பரேட் வரி, 2019இல் 8%ஆகக் குறைக்கப்பட்டது. இதன் விளைவாக, ரூ.1.84 லட்சம் கோடி வரிச் சலுகை வழங்கப்பட்டது. இதன் காரணமாகப் பெருந்தொற்றுக் காலத்திலும்கூட கார்ப்பரேட்டுகளில் செல்வம் 32% உயர்ந்துள்ளது. இதனை ஈடுசெய்ய உயர்த்தப்பட்ட மறைமுக வரி அல்லது நுகர்வு வரி (ஜிஎஸ்டி), பெட்ரோல், டீசல் வரிகள் சமூக அடுக்கில் அடித்தட்டில் உள்ள 50% மக்களை வரி செலுத்துவோராக மாற்றி உள்ளன.
2008இல் உலக அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியிலிருந்து இந்தியா தப்பித்துக்கொண்டதற்கான காரணம், நம் நாட்டின் ‘வீட்டுச் சேமிப்பு’ முறைமையே என்று கூறுவோர் உண்டு. அதுவும்கூட இப்போது குறைந்துவருகிறது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் சேமிப்பு விகிதமும் லாப விகிதமும் அதிகரித்துவருகின்றன. நமது வீட்டுச் சேமிப்புகள் முதலீடுகளாக மாற்றம் அடைந்தன. கார்ப்பரேட் சேமிப்பு அதிகரிப்பு நிதி மூலதனமாகவும் அந்நிய நாடுகளுக்கும் படையெடுக்கிறது.
1947இல் சமர்ப்பிக்கப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கை, பெரும் மாற்றத்திற்கு உட்பட்டு நிகழ்ந்த 1991 நிதிநிலை அறிக்கை எனப் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் இதில் நிகழ்ந்துள்ளன. ஆனால், 2022 வரை உலகிலேயே அதிக வறியவர்கள் நிறைந்த நாடாகவே இந்தியா நீடிக்கிறது. அந்தக் கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றத்தைக் கொண்டே நிதிநிலை அறிக்கைகள் அமைய வேண்டும் என்று மகாத்மா காந்தி தொடங்கி, உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசு வரை பலரும் வலியுறுத்தியிருக்கின்றனர். அந்தக் குரல்களுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்க வேண்டும்!
To Read in English: A look at the journey of budget
- நா.மணி, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி,
வே.சிவசங்கர்,புதுவைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: tnsfnmani@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago