கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்!

By ஷிவ் விஸ்வநாதன்

வழக்கமல்லாத வகையில் அந்த நாள் இருந்தது. குளிர்காலத்தின் இதமான பகல் பொழுதைத் துறை சார்ந்த கூட்டமொன்றில் கணிசமாகக் கழித்தேன். பிற்பகல் வீணானதே என்று என்னை நானே வைதுகொண்டேன். என்னுடைய அறைக்குத் திரும்பியபோது எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் ஒரு மாணவி கண்ணீருடன் காட்சி தந்தார். "அலெப்போ, அலெப்போவில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்; உலகில் யாருக்குமே அக்கறையில்லையே" என்று விசும்பினாள்.

அலெப்போ குறித்த தகவல்களை முகநூலில் படித்தேன். மக்களுடைய துயரங்களைச் சகித்துக்கொள்ள இயலவில்லை. 50,000-க்கும் மேற்பட்ட சிறார்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் 'வெளியேற்றம்' என்கிறார்களா? இந்தியாவிலிருந்து ஏன் ஒருவர்கூட இந்தக் கொலைகள் குறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை அல்லது கண்டிக்கவில்லை? அந்த உயிர்கள் முக்கியமானவை இல்லையா?

இனப்படுகொலையில் தரமுண்டா?

அடுக்கடுக்காக எழும் கேள்விகளும் அவற்றைத் தொடர்ந்து மேலிடும் துக்கமும் என்னைச் சோகத்தில் ஆழ்த்துகின்றன. என்னுடைய மாணவி இரங்கல் தெரிவிக்கிறார். அலெப்போவில் இறக்கும் மக்களுக்காக இரங்குகிறார். இந்தியாவின் மனசாட்சியும் மரணம் அடைந்துவிட்டதே என்று இரங்குகிறார். உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஆக விரும்பும் இந்தியா, அலெப்போவில் நடப்பது குறித்து ஏதும் அறியாமல் இருக்க விரும்புகிறது.

இந்தியப் பத்திரிகை உலகம், அலெப்போ தொடர்பான எல்லா செய்திகளையும் வடிகட்டியே தருகின்றன. இது முதலாவது வடிகட்டி.

நம்முடைய மனங்களிலும் சர்வதேசத் துயரச் சம்பவங்களை வடிகட்டும் சல்லடைகள் இருக்கின்றன. மிகப் பெரியதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் உள்ளவற்றுக்கு மட்டுமே நாம் காதுகொடுக்கிறோம். அலெப்போ நடுத்தர ரக சோகம். சிரியாவில் உள்நாட்டுக் கலவரம் தொடங்கியது முதல் இதுவரை 4,50,000 பேர் இறந்திருப்பது போல்பாட், மாவோ, இட்லர் போன்றோரின் ஆட்சிக்காலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சாதாரணம் என்று ஒதுக்கிவிடுகிறோம். எனவே, நம்முடைய நினைவிலிருந்தும் எளிதில் இது நழுவிவிடுகிறது. அங்கே எத்தனை பேர் இறந்தார்கள், இங்கே எத்தனை பேர் இறந்தார்கள் என்று ஒப்பிடுவதே தர்மம் அல்ல என்றாலும் செய்கிறோம். சில நூறு அல்லது ஆயிரத்தில் இறப்பு இருந்தால் அது இழப்பே இல்லை என்றும்கூட மனம் மறந்துவிடுகிறது.

இரக்கமற்ற கண்ணோட்டம்

இரண்டாவது வடிகட்டி, ஊடகச் செய்திகள். அணு ஆயுதங்களைத் தயாரித்து சதாம் உசைன் மறைத்து வைத்திருப்பதாக ஊடகங்களில் பொறுப்பில்லாமல் ஜார்ஜ் டபிள்யு. புஷ் விதைத்த செய்திகளால், இராக்கில் பெரும் தாக்குதலும் பிறகு பேரழிவும் ஏற்பட்டது. இனப்படுகொலை என்பது உலகளாவிய கற்பனை என்று சில நாடுகள் கருதுகின்றன. செய்தி ஊடகங்கள் எதையும் மிகைப்படுத்துகின்றன என்ற எண்ணமும் பரவிவருகிறது. இந்தச் சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள வேண்டும் என்ற முயற்சி இல்லாததால், படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்க அதுவே காரணமாகிவிடுகிறது. ஒருதலைப்பட்சமான தகவல்கள், வெறிகொண்ட போர்களுக்கு வழிசெய்கின்றன. இரக்கமற்ற கண்ணோட்டம் ஏராளமான உயிர்கள் பலியாவதைப் பார்க்காமல் தவிர்க்கச் செய்கிறது. வெளியுறவுக் கொள்கை தார்மிகமானதா, சம்பிரதாயப்படியானதா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது. சம்பிரதாயம் என்பது எப்படிச் சாப்பிட வேண்டும், எப்படி அமர வேண்டும் என்று சொல்கிறது. தார்மிகம் என்பது நீங்கள் சாப்பிடும்போது, உணவு தேவைப்பட்ட நிலையில் பக்கத்தில் யாராவது பசியோடு இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களுக்குச் சோறிடச் சொல்கிறது. தவறான பிரச்சாரங்கள் தார்மிக எண்ணங்களை அடக்கிவிடும்போது, மனிதாபிமான அணுகுமுறை மறைந்து விடுகிறது.

மூன்றாவதான வடிகட்டி, மிகமிக மோசமானது. பயங்கரவாதம் பற்றிய கண்ணோட்டம் அது. ஆப்பிரிக்காவில் உள்நாட்டுப் போரில் பல நாடுகள் அமைதியிழந்துவிட்டதால் பிற நாடுகளின் மனதில் அழிக்க முடியாத ஒரு பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது. இஸ்லாமிய நாடுகளில் எப்போது வேண்டுமானாலும் மோதல்கள் வெடிக்கும், மக்கள் அடித்துக்கொள்வார்கள் என்பதும் அதே போன்ற ஒன்று. எனவே, அனுதாபக் கண்ணோட்டம் இருப்பதில்லை. இதெல்லாவற்றையும் இப்போதைய சமூகம் கொண்டுள்ள நினைவுகளும் இதற்குக் காரணம். தோற்றுப்போன ஒரு சமூகம் மேலும் தோற்பதுதான் நடக்கும் என்ற பொதுப்புத்தி ஏற்பட்டிருக்கிறது. புதிய உலக வரலாற்றில், தோல்வியடைந்த நாடு மீட்சி பெற்றுவர ஒரு வாய்ப்பு தேவைப்படுகிறது என்று சிந்திக்கப்படுவதில்லை. டார்வின் கோட்பாட்டில் இனக் குழுக்கள் தொடர்பான கருதுகோளைப் போல, சிரியாவைத் தங்களைச் சேர்ந்த நாடாகப் பிற நாடுகள் கருதுவதில்லை. எனவே, அதற்காக இரக்கப்படுவதில்லை.

இரட்டை அர்த்தச் சொல்

2015-ல் ஸ்வெட்லானா அலெக்சிவிச் இலக்கியத்துக்கான நோபல் விருதைப் பெற்ற நகைமுரணை நினைத்துப் பார்த்தேன். இலக்கியத்துக்காக நோபல் விருது பெற்ற முதல் பத்திரிகையாளர் அவர். 'செகண்ட்ஹாண்ட் டைம்' என்ற அந்தப் புத்தகம், சோவியத் சர்வாதிகாரத்தால் அன்றாட வாழ்வு எப்படி நாசமாக்கப்பட்டது என்பதை விரிவாகச் சொல்கிறது. ஒரு பத்திரிகையாளருக்கு நோபல் விருது கிடைத்த அதே நேரத்தில்தான், பெரும்பாலான பத்திரிகையாளர்களிடம் தொழில் தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு இல்லாத நெருக்கடி நிலவுகிறது. போரைப் பற்றிய உண்மையான தகவல்களைப் பதிவுசெய்த பத்திரிகையாளர்கள் இன்று இல்லை. சிரியா ஒரு செய்மூர் ஹெர்ஷையோ, ஜூலியன் அசாஞ்சாவையோ உருவாக்கவில்லை.

அப்படியே சில பத்திரிகைகளில் வரும் செய்திகளும் நூற்றுக்கணக்கில் மக்கள் இறப்பது தவிர்க்க முடியாதது என்பதைப் போலவே இருக்கின்றன. அதிபர் பஷார் அல் ஆசாதுக்கு ஆதரவான அரசுப் படைகள் முன்னேறுவது பாராட்டப்படுகிறது. எல்லா பெரிய நகரங்களும் அவருடைய கட்டுப்பாட்டில் வந்துவிட்டன என்று போற்றப்படுகிறது. சாவு தவிர்க்க முடியாதது என்ற தொனியும், பெறப்போகிற வெற்றியை விதந்தோதும் எழுத்தும், அங்கே நிலவும் சோகத்தின் தன்மையை மூடி மறைக்கிறது. மக்கள் 'வெளியேற்றம்' என்பது இரட்டை அர்த்தச் சொல்லாகிவிட்டது. முன்பெல்லாம் இதற்கு அர்த்தம், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டார்கள் என்பது மட்டுமே. இப்போதோ சண்டையில் அவர்களைக் கொல்வது என்றாகிவிட்டது.

வீழும் தார்மிக விழுமியங்கள்

நவீனத் தொழில்நுட்பங்கள் காரணமாகப் போர் என்பது மிகக் கொடூரமானதாகிவிட்டதால், தார்மிக விழுமியங்கள் ஆழப் புதைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் மனிதாபிமானத்தில் சிறந்து விளங்கிய மேற்கத்திய நாடுகள் இன்று மாறிவிட்டன. செஞ்சிலுவைச் சங்கத்தை ஏற்படுத்திய ஹென்றி டுனன்ட், சமாதானத்துக்கான நோபல் விருதைப் பெற்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் போன்ற பெருமகன்கள் இப்போது இல்லை. நவீன ராணுவத் தொழில்நுட்பம், போருக்கான அரசியல் தர்க்கம் ஆகியவற்றின் வலிமை கூடிவிட்டதால், தார்மிக நெறிகள் தாக்குப்பிடிக்க முடியாமல் மரணித்துவிட்டன. போப்பாண்டவர் மட்டும் தனியொரு ஆளாகக் குரல் கொடுத்துப் பலனில்லை. எல்லை கடந்த மருத்துவர்கள் குழு போன்றவைதான் மனிதாபிமானத்துடன் செயல்படுகின்றன. அவற்றை வலுப்படுத்துவது அவசியம்.

போருக்கு என்ன அவசியம் என்பது சில வேளைகளில் பூதாகாரமாக விளக்கப்படுகிறது. ஒரு நகரம் முழுக்கவும் பயங்கரவாதிகளுடையது என்று சித்தரிக்கப்படுகிறது. எனவே, அங்கே வாழும் பிற அப்பாவிப் பொதுமக்கள் பற்றிக் கவலைப்படாமல் போர் விமானங்களிலிருந்து குண்டுகளை வீசியும் பீரங்கிகளால் கடுமையாகச் சுட்டும் கொல்லலாம் என்று நியாயப்படுத்தப்படுகிறது. முகநூல்களில் வரும் உருக்கமான வேண்டுகோள்கள்கூடப் படிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகின்றன. சிரியாவும் ரஷ்யாவும் போர்க்களத்தில் இணைந்து செயல்படுகின்றன. இன்றைய வரலாற்றுக்குப் பலியானவர்களைக் கவனிக்க ஆட்களே இல்லை. தன்னால் அப்பாவிகளை அடையாளம் காண முடியும், அவர்களைச் சாகாமல் தடுக்க முடியும் என்றாலும், போரை நடத்துகிறவர்கள் இந்தச் சாவுகள் தவிர்க்க முடியாதவை என்று கூறிவிடுகின்றனர். பின்விளைவுகளைப் பற்றி எந்தவிதச் சிந்தனையும் இல்லாமல், அப்பாவிகளைக் கொல்வதே வெற்றி பெறும் ராணுவங்களின் இலக்கணமாகி வருகிறது. வீடுகளில் இருப்பவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி, குடும்பத்தோடு சுட்டுக் கொல்கின்றனர்.

பசுஞ்சிலுவைச் சங்கம்

உலக கலாச்சாரச் சின்னங்கள் அழிக்கப் படுவதைப் பார்க்கும்போது இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. செஞ்சிலுவையைப் போல பசுஞ்சிலுவையைத் தோற்றுவித்து, கலாச்சாரச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார், ரஷ்யாவின் கலைஞர் நிகோலாய் ரோரிக். நகரங்களைக் காப்பதற்காவது பசுஞ்சிலுவைச் சங்கம் தோற்றுவிக்கப்பட வேண்டும். நகரங்களையே நாம் கலாச்சாரச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும்.

இன்னொரு சம்பவம் ஜப்பானுக்குத் தூதராகச் சென்ற எட்வின் ரெய்ஷாயர் பற்றியது. இரண்டாவது உலகப் போரின்போது, முதலில் கியாட்டோ நகரத்தின் மீதுதான் அணுகுண்டு வீச அமெரிக்க ராணுவம் தீர்மானித்திருந்தது. இதைக் கேட்ட ரெய்ஷாயர் அதிர்ச்சி அடைந்தார்.

அமெரிக்கப் படைத் தளபதி ஜெனரல் லெஸ்லி குரோவ்ஸ் முன்னால் ஓடிச் சென்று உடல் பதற, கண்ணீர் மல்க வேண்டினார். ஒரு பெரிய கல்வியாளர் தன் முன்னால்வந்து கண்ணீர் சிந்துவதைச் சகிக்க முடியாத குரோவ்ஸ், "சரி சரி, நான் இந்த நகரம் மீது குண்டு வீசவில்லை போதுமா?" என்று கூறிவிட்டு, ஹிரோஷிமா நகரைப் பிறகு தேர்ந்தெடுத்தார். சிரியா நாட்டின் நகரங்களுக்காகவும், வீடுகளில் சிக்கிய குழந்தைகளுக்காகவும் இப்படி யாராவது படித்த பெருமக்கள், ராணுவத் தளபதிகள் முன்னால் அழுது புலம்பினால்கூடத் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

அலெப்போ நகரில் உள்ள சிவிலியன்கள் உயிர்தப்ப வாய்ப்பே இல்லை. அரசுக்கு எதிரான அதிருப்தியாளர்கள்தான் பெரும்பாலானவர்கள். அவர்கள் நகரைவிட்டு வெளியேறாமல் தங்கினால், அரசுப் படைகள் அவர்களைக் கைதுசெய்து சித்ரவதை செய்யும். அங்கிருந்து தப்பினாலோ ஆயுள் முழுவதும் இனி அகதிகள் என்ற முத்திரையுடனேயே வேறு எந்த நாட்டிலோ திண்டாட வேண்டியதுதான். எப்படியிருந்தாலும், இனி அவரவர் வீடுகளில் தங்க முடியாது. வீடுகளை இழப்பதும், இனப்படுகொலைக்கு ஆளாவதும் இரட்டைப் பலன்களாக அப்பாவிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுவதைப் போல, அலெப்போ நகரின் குழந்தைகளும் பெண்களும்தான் முதலில் பலியாகிக்கொண்டிருக்கின்றனர்.

விராட் கோலியின் கிரிக்கெட் வெற்றியையும் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்டுள்ள சூழலையும் வாசிக்கும் இந்தியர்கள், அலெப்போவில் அநாதைகளாகச் சாகும் மக்களின் நிலையைச் சில நிமிடங்களுக்காவது நினைத்து உருகிச் செயல்படும்படி வேண்டிக்கொள்கிறேன். நீண்ட காலமாகவே நாம் மரத்துப்போன சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். ருவாண்டா, சோமாலியா இப்போது சிரியா என்று எந்த நாட்டில் எது நடந்தாலும் நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நம்முடைய வெளியுறவுக் கொள்கை என்பது வெற்றுக் கருணையாகவே இருக்கிறது. நம்முடைய வாழ்வில் இனியாவது கருணையும் தார்மிக அறநெறிகளும் இடம் பெறட்டும். இந்தியர்கள் மேலும் மனிதாபிமானிகளாக அலெப்போ முதல் படியாக இருக்கட்டும்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

- 'தி இந்து' ஆங்கிலம்





















VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்