காட்டில் புலி எப்படி? கடலில் வரிப்புலியன் அப்படி!
சுறா என்றாலே, மிரள வைக்கும் ஓர் உருவம் நம் மனதில் உருவாகியிருந்தாலும் எல்லாச் சுறாக்களும் ஆபத்தானவை அல்ல என்பதே உண்மை. உலகில் உள்ள 470 சுறா இனங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய இனங்களே ஆபத்தானவை. அவற்றில் முக்கிய மானது வரிப்புலியன் என்று நம் மீனவர்களால் அழைக்கப்படும் புலி சுறா. வேட்டையன்!
ஐயய்யோ புலியன்
கடலோடிகள் திமிங்கிலத்துக்குக்கூட அஞ்சுவ தில்லை. ஆனால், வரிப்புலியனைக் கண்டால் அரளு வார்கள் (சுறா வேட்டை என்பது தனிக் கலை. எல்லோருக் கும் அது சாத்தியமானது அல்ல). தனி ஒருவர் செல்லக்கூடிய கட்டுமரமான ஒத்தனா மரத்தில் மீன் பிடிக்கச் சென்று வரிப்புலியனிடம் சிக்கிய ஒரு மீனவரின் அனுபவம் இது.
தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர் அவர். முதல் நாள் காத்திருந்தார். கொண்டுவந்த கஞ்சி கரைந்துபோயிற்று. ஒரு மீனும் சிக்கவில்லை. இரண்டாவது நாள் காத்திருந்தார். கட்டுச் சோறும் கரைந்துபோயாயிற்று. ஒரு மீனும் சிக்கவில்லை. மூன்றாவது நாள் காத்திருந்தார். வெற்றிலை சீவலும் கரைந்து போயிற்று. ஒரு மீனும் சிக்கவில்லை.
மீன்களே இல்லா குளம்போலக் கிடக்கிறது கடல். மூன்று பகல்கள் முழுக்க வெயிலைத் தாங்கியாயிற்று; இரண்டு இரவுகள் குளிரையும் தாங்கியாயிற்று. வயிற்றைத் துவைக்கிறது பசி. இனியும் காத்திருக்க முடியாது. ஆனால், மூன்று நாள் கழித்து எப்படி வெறும் கையோடு வீட்டுக்குப் போவது? திகைத்து நிற்கும் மனிதரின் தூண்டில் சிலும்புகிறது. இழுத்தால் சரசரவென்று வருகிறது. தூண்டில் முள்ளில் இரையைக் காணவில்லை. ஏமாற்றம். ஆனாலும், ஏதோ ஒரு மீன் அருகில் இருக்கிறது என்கிற ஆறுதல். கூடவே கொஞ்சம் கலக்கம். ஏதோ பெரிய மீன். ரொம்ப சாமர்த்தியமாக இரையைக் கவ்வும் மீன். என்ன மீனாக இருக்கும் என்று யோசிக்கும்போதே அது நீருக்கடியிலிருந்து மெல்ல மேல் நோக்கி வருகிறது... வரிப்புலியன்!
அப்படியே உலகமே இருண்டதுபோல ஆகிவிட்டது. வரிப்புலியனிடம் எதிர்த்துப் போராடும் சூழல் அது இல்லை. போராடினாலும் முடிவு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. உறைந்துபோகிறார். மெல்லக் கட்டுமரத்தின் அணியத்தை (முன்பகுதி) நெருங்கும் அது அந்தப் பகுதியைச் சுற்றுகிறது. கட்டுமரத்தைக் கடித்து, நொறுக்க ஆரம்பிக்கிறது. ஆட்டம் காண்கிறது கட்டுமரம். கடலில் குதிக்கிறார் அவர். நீந்த ஆரம்பிக்கிறார். ஒரு பெரும் அலை அவரைத் தூக்கி வீசுகிறது. கண் மூடும் அவர் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது, சுறா வேட்டைக்கு வந்து, காணாமல்போன மீனவர்களைத் தேடி வந்த ஒரு மீனவக் குழுவால் அவர் காப்பாற்றப்பட்டிருந்தார். அவர்கள் தேடிவந்த இரு மீனவர்களையும் வரிப்புலியன் வேட்டையாடியிருந்தது.
இப்படி ஆயிரமாயிரம் அனுபவங்கள். நான் பார்த்த இன்னொரு மீனவர் தன் நண்பனுடன் கடலுக்குச் சென்றவர். தவறுதலாகத் தூண்டிலில் ஒரு வரிப்புலியன் சிக்கிவிட்டது. தூண்டிலை அது இழுத்தபோது, நண்பரால் சுதாரிக்க முடிய வில்லை. இவர் உதவுவதற்கு முன் இன்னொரு வரிப்புலியன் அவரை மறித்துவிட்டது. கொடூரமான மரணம். கண்ணெதிரே.
உயிர் மோதல்
பொதுவாக, வரிப்புலியன் எதையும் விட்டுவைப்பதில்லை. மீன்கள், நண்டுகள், ஆமைகளில் தொடங்கி, கடல் பாம்புகள், குட்டி சுறாக்கள் வரை எதையும் விட்டுவைப்பதில்லை. அசந்தால், கொஞ்சம் அடிபட்ட, முடியாத திமிங்கிலங்களையும்கூடப் போட்டுப்பார்க்கக்கூடியது. இதன் கடிவேட்கைக்குப் படகுகளும் விதிவிலக்கு அல்ல. ஒரு மீனவர் பார்வையில் வரிப்புலியன் விழுவதும், வரிப்புலியன் பார்வையில் ஒரு மீனவர் விழுவதும், கிட்டத்தட்ட ‘இரண்டில் ஒன்று’ போராட்டம்தான்.
சுறா வரலாறு
சுறாக்கள் இனத்தின் ஆணி வேர் 42 கோடி ஆண்டுகளுக்குப் பின் செல்லும் என்கிறார்கள் அறிவியலாளர்கள். இன்றைக்கு நாம் பார்க்கும் தோற்றத்தை அவை பெற்றே 10 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இனத்துக்கேற்ப சுறாக்களின் அளவு வேறுபடும். உலகின் மிகப் பெரிய மீனான திமிங்கிலச் சுறா (கவனிக்க: திமிங்கிலம் வேறு, திமிங்கிலச் சுறா வேறு. திமிங்கிலம் மீன் அல்ல) 40 அடி வரை வளரக்கூடியது. ஆழ்கடலில் உள்ள சில சுறா இனங்கள் முக்கால் அடிக்கும் குறைவான நீளம் உடையவை. வரிப்புலியன் 18 அடி வரை வளரும்.
அபாரமான மோப்ப சக்தி சுறாக்களுக்கு உண்டு. 10 லட்சம் பங்கு தண்ணீரில் ஒரு பங்கு ரத்தம் கலந்தாலும் மோப்பம்பிடித்து, அந்த இடம் நோக்கி நகரக்கூடியவை. சுறாக்களின் பல் அமைப்பு ஆச்சரியம் தரக் கூடியது. பல அடுக்குகளாக அமைந்த அதன் பற்களில் முன்வரிசைப் பல் ஒன்று விழும்போது, அதன் அடுத்த வரிசைப் பல் அந்த இடத்துக்கு நகர்ந்துவரும். வெகுசீக்கிரம் மாற்றுப்பல்லும் முளைக்கும். சில வகை சுறாக்களுக்கு வெறும் எட்டே நாட்களில் புதுப் பல் முளைத்துவிடும். சில வகை சுறாக்கள் தன் வாழ்நாளில் 30 ஆயிரம் பற்களைக்கூட இழக்கும். அதேசமயம், பார்வையைப் பற்றி அப்படிப் பெரிதாகச் சொல்ல முடியாது என்கிறார்கள். சில வகை சுறாக்கள் நிறக்குருடு (அவற்றின் கண்களுக்கு சில வகை நிறங்கள் தெரியாது).
சுறாக்கள் பொதுவாக 20-30 ஆண்டுகள் வாழக்கூடியவை. சில இனங்கள் - திமிங்கிலச் சுறாக்கள் போன்றவை - நூறாண்டுகள் வாழக்கூடியவை. வரிப்புலியன் 12 ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியது. இந்தக் கணக்கெல்லாம் கடலுக்குள்தான். கடற்கரைக் கதைகளில் வரிப்புலியன்களுக்கு சாவே இல்லை!
(அலைகள் தழுவும்...)
-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago