தமிழ்நாட்டின் வடக்குக் கடலோரப் பகுதியில் சமீபத்தில் வீசிய 'வார்தா' புயல், 'எனக்குப் பிறகு பெரிய பிரளயம்தான்' என்ற பழமொழியை நினைவுபடுத்தியது. ஜெயலலிதாவின் மறைவுடன் அதை ஒப்பிடத் தோன்றியது. தமிழக அரசியல் இப்போது புதிய சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது.
திராவிட இயக்கம் ஏற்படுத்திய சமூக மாற்றம், அதன் திரைப்படக் கவர்ச்சி, நிறைவேற்றக்கூடிய சமூகநலத் திட்டங்களை அது கைக்கொண்டது போன்றவை தமிழ்நாட்டில் உள்ள பிரதான கட்சிகளாலும் உதிரிக் கட்சிகளாலும் முழுக்க உள்வாங்கப்பட்டிருக்கிறது. அதிமுக, திமுக மற்றும் 'திராவிட' என்ற சொல்லைத் தாங்கிய பிற கட்சிகளுக்கும் பொதுவாக இருப்பது மக்களை ஈர்க்கும் கவர்ச்சிகரமான திட்டங்களாகும். 'ஜனமயக்குத் திட்டங்கள்' என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கெட்ட வார்த்தை இல்லை. 1960-களில் காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை மேலும் சிறப்பாக அமல்படுத்திய எம்.ஜி.ராமசந்திரன் அதைச் சத்துணவுத் திட்டமாக்கினார். வாக்குகளைக் கவர்வதற்கான கவர்ச்சித் திட்டம் என்று முதலில் கேலி பேசப்பட்ட அந்தத் திட்டம், இப்போது உலகின் பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட வேண்டிய ஊட்டச்சத்துத் திட்டமாகப் பேசப்படுகிறது. தேசிய அளவிலும் ஏற்கப்பட்டு பல்வேறு மாநிலங்களில் அமலாக்கப்படுகிறது.
கைவிட முடியாத திட்டங்கள்
ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடங்கிய பல திட்டங்கள் 'அம்மா திட்டங்கள்' என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. பெண் சிசுக்களைக் கொல்வதைத் தடுக்கும் 'தொட்டில் குழந்தைகள் திட்டம்', இளம் தாய்மார்களுக்குப் பிள்ளை வளர்ப்புக்குத் தேவையான 16 பொருட்களைக் கொண்ட 'குழந்தை நல பரிசுப் பெட்டகம்', ஏழை குடும்பப் பெண்களின் திருமணத்துக்கு உதவியாக தாலிக்குத் தங்கம், ஏழைகள் வயிறார சாப்பிடக் குறைந்த விலையில் அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், மாணவர்களுக்கு மடிக்கணினிகள், அம்மா காய்கறி அங்காடிகள், மருந்துக் கடைகள், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், விவசாயிகளுக்கு விதை, செல்பேசி, திரையரங்குகள், அழைப்பு மையங்கள் என்று அவருடைய கருணைக்கும் கொடைக்கும் சாட்சியங்களாகத் திகழ்கின்றன. விமர்சகர்கள் இவற்றை இலவசங்கள் என்றும் வீண் விரயம் என்றும் கண்டிக்கலாம். இவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்கு இவை வரப்பிரசாதங்கள். ஜெயலலிதாவுக்கு மக்களிடத்தில் செல்வாக்கை ஏற்படுத்திய இந்தத் திட்டங்களிலிருந்து 'அம்மா' என்ற பெயரை வேண்டுமானால் நீக்கலாமே தவிர, திட்டங்களை இனி கைவிட முடியாது.
வெகுஜன ஈர்ப்புத் திட்டங்களை ஒரு சித்தாந்தமாகவும், தனது தனிப்பட்ட நிர்வாக அடையாளமாகவும் கடைப்பிடித்தார் ஜெயலலிதா. பொருளாதாரரீதியாக அது சரியானதா என்றும் விவாதிக்கலாம்; நிர்வாகரீதியிலான மாறுதல்களைச் செய்யவிடாமல் தடுப்பதால், அரசியல்ரீதியாக அவை விரும்பத்தக்கதா என்பதும் கேள்விக்கு உரியதே. உடனுக்குடன் பலன் தரும் திட்டங்களும் வழிமுறைகளும்தான் வேண்டப்படுகின்றன. அவ்வாறு அளிப்பதற்கான தொழில்நுட்பமும் கைவசம் இருக்கிறது. இந்நிலையில், நடுத்தரக் கால, நீண்ட கால மாற்றங்களுக்காக உழைப்பைச் செலவிட யாரும் தயாரில்லை. "நீண்ட கால நோக்கில் நாம் எதையும் செய்ய முடியாது. ஏனென்றால், நீண்ட காலத்துக்குப் பிறகு நாம் உயிரோடு இருக்க மாட்டோம்" என்ற பொருளியல் அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் வார்த்தைகளை நாம் மறக்கக் கூடாது.
மக்கள் ஈர்ப்புத் திட்டங்கள்
ஜெயலலிதாவின் ஆட்சித் தரத்தை உரசிப் பார்க்க வேண்டுமென்றால், அவருடைய மக்கள் ஈர்ப்புத் திட்டங்களின் நன்மை - தீமைகளை நாம் விவாதித்தாக வேண்டும். இவை திராவிடக் கட்சிகளுடைய கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. ஆனால், இக்கட்டுரையின் நோக்கம் அதுவல்ல. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில், என்னுடைய மனம் அவரோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட மூன்று நிகழ்ச்சிகளைச் சுற்றியே வட்டமிட்டது.
முதலாவது சம்பவம், 1980-களின் தொடக்கத்தில் சென்னை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக நான் பணியாற்றியபோது நடந்தது. ஒரு நாள் இரவு செய்தி வாசித்து முடித்ததும் வீட்டுக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தேன். ஒளிபரப்பு மையத்தின் பணியறையிலிருந்து என்னை அவசரமாகக் கூப்பிட்டார்கள். முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து பேசுகிறார்கள் என்றார்கள். முதல்வர் எம்.ஜி.ஆர். எதிர்முனையில் இருந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பிறகு அவர் பேசினார். "தமிழ்ப் பண்பாடு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு நிகழ்ச்சிக்குத் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றுவது எவ்வளவு மங்களகரமானது என்று தெரியுமா?" என்று கேட்டு, அதைப் பற்றிச் சில நிமிடங்கள் விளக்கி விட்டு தொலைபேசியை வைத்துவிட்டார் முதல்வர். செய்தி வாசிப்பில் நாம் என்ன தவறு செய்தோம் என்று மூளையைக் கசக்கிக்கொண்டு யோசித்தேன், புரியவில்லை.
முதல்வரின் எரிச்சல்
பிறகு, செய்தித் தயாரிப்பாளர்கள் சம்பத் குமார், நிஷாத் அஹம்மது ஆகியோருக்கும் இது தெரியவந்த பிறகுதான், முதல்வரை எரிச்சலடைய வைத்தது எது என்று எங்களுக்குப் புரிந்தது. முதல்வரின் நிகழ்ச்சியொன்றில், அதிமுகவின் கொள்கைபரப்புச் செயலாளராக விரைவில் பதவியேற்கவிருந்த ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றியிருந்தார். குத்துவிளக்கு ஏற்றும் பகுதியை எடிட்டர் கே.என்.ராஜு வெட்டிவிட்டார். செய்தி ஒளிபரப்பின்போது காட்சிகளையும் ஒளிபரப்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய குறுகிய அவகாசம்தான் இருக்கும் என்பதால், மிகத் துரிதமாகச் செயல்படுவார்கள். செய்தி நேரத்துக்கேற்ப காட்சிகளின் ஒளிபரப்பு நீளம் வெட்டப்படும். அப்படி அது வெட்டப்பட்டுவிட்டது. இதை முதலமைச்சரே கவனித்தாரா அல்லது அவருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதா என்று தெரியாது. செய்தியை வாசித்தவன் என்பதால், நான் முதல் இலக்காகி விட்டேன். சில நாட்களுக்குப் பிறகு, அதற்கு நான் காரணம் இல்லை என்று எம்.ஜி.ஆர். தெரிந்துகொண்டார்.
புனித ஜார்ஜ் கோட்டையில் ஒரு மாநாட்டுக்காகச் சென்றிருந்தேன். மூடிய அரங்கின் கதவைத் திறந்ததும் எம்.ஜி.ஆர். வேகமாக உள்ளே நுழைந்தார். அங்கே இருந்த என்னைப் பார்த்துவிட்டு என்னருகில் வந்தார். என்னுடைய வலது கையை எடுத்துத் தன்னுடைய கைக்குள் வைத்துக்கொண்டு, அப்படிப் பேசியது தவறு என்று உணர்ந்த நிலையில் பேசினார். அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டு, தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். அதை உடனே ஏற்றுக்கொண்டார். அது ஏன், எப்படிக் கைகூடவில்லை என்பது தனிக் கதை.
தொலைக்காட்சியின் பயன்பாடுகள்
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதாவைச் சந்திக்கும் தருணம், அவருடைய அழைப்பால் 1995-ல் சாத்தியமானது. 'ஏஷியாநெட்' தொலைக்காட்சி நிறுவனத்தையும் கேபிள் சேவையையும் கேரளத்தில் துவக்கியிருந்தோம். நான் சென்னைக்கும் திருவனந்தபுரத்துக்குமாகப் பறந்துகொண்டிருந்தேன். மூத்த பத்திரிகையாளரும் சகாவுமான வி.கே.மாதவன் குட்டியுடன் மதியச் சாப்பாட்டுக்குத் தயாரானேன். 'இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் முதல்வரை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்திக்க வர முடியுமா?' என்று கேட்டார்கள். 'மாதவன் குட்டியையும் அழைத்து வரலாமா?' என்று கேட்டேன். எதிர்முனையிலிருந்த அதிகாரி யாரிடமோ பேசிவிட்டு, 'கூட்டி வாருங்கள்' என்றார். முதலமைச்சருக்கும் சசிகலாவுக்கும் இரு பூச்செண்டுகளை வாங்கிக்கொண்டு சென்றோம். பாதுகாவலர்கள் சில வினாடிகளுக்குள் எங்களை விசாரித்துவிட்டு உள்ளே அனுமதித்தனர்.
முதலில் சசிகலா அந்த அறைக்குள் வந்து எங்களை வரவேற்றார். பிறகு, ஜெயலலிதா புன்னகை தவழ அங்கு வந்து, அழைத்த விஷயம் குறித்துப் பேசத் தொடங்கினார். 'ஏஷியாநெட்' தொலைக்காட்சியை வெற்றிகரமாக நிறுவியதற்காக என்னைப் பாராட்டிய முதல்வர், எதிர்காலத்தில் மக்களுடன் தொடர்புகொள்ள தொலைக்காட்சிகள் அவசியம் என்பதை உணர்ந்துகொண்டிருப்பதை வெளிப்படுத்தினார். 'சன்' தொலைக்காட்சி எப்படி திமுகவுக்குப் பயன்படுகிறது என்று போலித்தனமோ கேலியோ இல்லாமல், ஆரோக்கியமான மரியாதையுடனேயே குறிப்பிட்டார்.
நினைவுகூர்வதில் தவறில்லை
ஜெயலலிதா திட்டமிட்டிருந்த தொலைக் காட்சியின் நிர்வாகிகள் பயிற்சி பெற்றுத் தயாராகும் வரையில், அவர்களுக்காகவும் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கி, நடத்தித் தர முடியுமா என்று என்னிடம் கேட்டார். கேரளத்தில் செய்ததைப் போல தஞ்சாவூரில் செப்புக் கம்பி வயர்களை விளக்குக் கம்பங்கள் வழியாக இழுத்து, தஞ்சையில் நடைபெறவுள்ள தமிழ் மாநாட்டு ஒளிபரப்புக்குப் பயன்படுத்த உதவ முடியுமா என்று கேட்டார். அம்மாநாடு சில மாதங்களில் நடைபெற வேண்டியிருந்தது. 'சரியென்று சொல்', 'ஒப்புக்கொள்' என்ற வகையில் மாதவன் குட்டி என்னுடைய விலாவில் முழங்கையால் இடித்துக்கொண்டேயிருந்தார். என்னால் என்ன முடியும் என்பதைப் புரிந்துவைத்திருந்த நான், அந்த வாய்ப்பை ஏற்கவில்லை. "தேவைப்படும் தகவல்களைத் தருகிறேன், வழிகாட்டத் தயாராக இருக்கிறேன், ஏற்றுக்கொண்ட பணிகளே அதிகமாக இருப்பதால், புதிய வாய்ப்பை ஏற்க இயலாமல் இருக்கிறேன்" என்று பணிவுடன் தெரிவித்துவிட்டேன். அதைப் புரிந்துகொண்ட முதல்வர், அதற்கு மேல் வற்புறுத்தாமல் அமெரிக்கையாகப் பேசி அனுப்பினார்.
அதற்கும் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரைச் சந்தித்தேன். சந்திக்க நேரம் கோரி கடிதம் எழுதியிருந்தேன். லாப நோக்கம் இன்றி பொது அறக்கட்டளையாக 2000-ல் நிறுவப்பட்ட 'ஆசிய இதழியல் கல்லூரி'(ஏ.சி.ஜே.) வளாகம் கட்டுவதற்கு அரசு நிலம் வேண்டும் என்று கோரியிருந்தோம். கடிதம் எழுதிய சில நாட்களுக்கெல்லாம், ஒரு காலை நேரத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாகப் பதில் கடிதம் வந்தது. அங்கே என்ன பேசிக்கொண்டோம் என்று தெரிவிக்க முதலில் தயங்கினேன். என்னுடைய நீண்ட கால நண்பரும், கல்லூரியின் சக அறங்காவலரும், 'தி இந்து' குழும மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் பற்றிய அதை, அவரே ஒரு தேசியத் தொலைக்காட்சி உரையாடலில் பேசிவிட்டதால், இப்போது நான் நினைவுகூர்வதால் தவறில்லை என்று நினைக்கிறேன்.
கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன
சந்திப்பு தொடங்கியதும் நேரே விஷயத்துக்கு வந்தார் முதல்வர் ஜெயலலிதா. எதற்காக வந்தீர்கள் என்று கேட்டார். நான் விளக்கினேன். கல்லூரி பற்றிய விளக்கக் கையேட்டை அளித்தேன். அதைப் புரட்டி அறங்காவலர்கள் பெயர்களையும் புகைப்படங்களையும் பார்த்தவர், என்.ராமின் படம் இருந்த பக்கத்துக்கு வந்ததும், 'இந்த அறக்கட்டளையில் இவருடைய பங்கு என்ன?' என்று கேட்டார். கல்லூரியை நிறுவ தொடக்கக் காலத்திலிருந்தே அவர் எங்களுடன் இருப்பது குறித்து விவரித்தேன். "எனக்கும் தமிழக அரசுக்கும் அவருடனும் அவருடைய 'தி இந்து' பத்திரிகையுடனும் உள்ள உரசல் தொடர்பாக உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். பிறகு, அவருக்கு எதிராக 'தி இந்து'வில் செய்திகள் வெளியிடப்படுவதாக அவர் பட்டியலிட்டார். சரி, நாம் வந்த வேலை நடந்த மாதிரிதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பிறகு துணிந்து, "நீங்கள் ஏன் ராம் உங்களைச் சந்திக்க ஒரு வாய்ப்பு தந்து, கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ளக் கூடாது?" என்று கேட்டேன். ஜெயலலிதா மீண்டும், 'தி இந்து'வில் தன்னுடைய அரசுக்கு எதிராக எழுதப் பட்டவற்றைக் கோபத்துடன் நினைவு கூர்ந்தார். பத்திரிகைகளில் தன்னைப் பற்றி எழுதப்படுவதை அவர் தொடர்ந்து கவனித்துவந்துள்ளார். எவ்வளவு விரைவாகக் கோபம் அடைந்தாரோ அதே வேகத்தில் இயல்பு நிலைக்கும் திரும்பினார். நான் வந்த வேலை குறித்துப் பேசினார்.
கல்லூரியைக் கட்ட நாங்கள் போட்டிருந்த உத்தேசத் திட்டம் குறித்து மட்டும் பேசினேன். அருகிலிருந்த மூத்த செயலாளர் ஒருவரை நோக்கித் திரும்பிய முதல்வர், இவர்களுடைய கல்லூரிக்கு உதவும் வகையில் அரசு நிலம் ஒதுக்க முடியுமா என்று கேட்டார். "யாருடன் நட்பாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தும்கூட உங்களுக்காக இதைச் செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார். அவருக்கு நன்றி தெரிவித்து எழுந்த பிறகு, ராமை அவர் சந்திக்க வேண்டும் என்ற விருப்பத்தை மீண்டும் தெரிவித்தேன். அதுபற்றி யோசிப்பதாகக் கூறினார். பிறகு, அந்தச் சந்திப்பும் நிகழ்ந்தது. இருவரும் மனம்விட்டுப் பேசியதில் கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. தரமணியில் அமைந்த 'ஆசிய இதழியல் கல்லூரி'யின் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றார்.
சோ ராமசாமி
ஜெயலலிதா மறைந்த உடனேயே அவருடைய நம்பிக்கைக்குரியவரும், மரியாதையைப் பெற்ற வரும், இடைவிடாத துணிச்சலுக்காக ஜெய லலிதாவைப் பாராட்டியவரும், அவருடைய செயல் களைத் துணிச்சலுடன் விமர்சித்தவருமான பத்திரிகையாளர் சோ ராமசாமியும் இறந்துவிட்டார். தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரை தமிழக அரசியல் பற்றியும் தேசிய அரசியல் பற்றியும் விமர்சித்துவந்தவர் சோ. 1960-களின் பிற்பகுதியில், தமிழக நாடக மேடைகளில் முஹம்மது பின் துக்ளக்காக அவர் நடைபோட்ட காட்சிகள் அழியாத நினைவுகளாக எனக்குள் இருக்கின்றன. கிண்ட லும் கேலியும் நிரம்பிய பேச்சு, எகிறி எகிறி நடக்கும் துள்ளல் நடை, துடுக்கான வசனங்களுடன் பேசிய சோ, பின்னாளில் இந்திரா காந்தி நெருக்கடி நிலை யைக் கொண்டுவரப்போவதை எதிர்பார்த்ததைப் போலக் காட்சிகள் அமைத்திருந்தார்.
எதிர்காலம் இருக்காது
1970-களின் தொடக்கத்தில் கல்லூரி மாணவனாக இருந்தபோது டி.டி.வாசு அலுவலகத்தில் அவரைச் சந்தித்தேன். புகைத்துக் கொண்டும் நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும் மேடையின் தொடர்ச்சியாகவே நடந்துகொண்டார். அடிக்கடி சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் சந்திக்கும்போது, முந்தைய சந்திப்பில் விட்ட இடத்திலிருந்து தொடர்வோம்.
சித்தாந்தரீதியாக எங்களிடையே பொதுவான அம்சம் ஏதுமில்லை. என்னுடைய இடதுசாரி சார்பை அவர் கேலிசெய்வார். "இடதுசாரிக் கொள்கை களுக்கு மட்டும் எதிர்காலம் என்று ஒன்றிருந்தால், எதிர்காலம் என்று நாட்டுக்கு எதுவுமே மிச்சமிருக்காது" என்று ஆங்கில வாக்கியங்களைக் கொண்டு சிலேடையாகப் பேசுவார். அதையே நான் பொதுக்கூட்டங்களில் பேசும்போது, "இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லாவிட்டால், எதிர்காலம் என்று எதுவுமே (யாருக்கும்) மிச்சமிருக்காது" என்பேன். "நீங்கள் பேசியதை அப்படியே நான் மாற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்று ஒருமுறை அவரிடம் கூறினேன். "இடதுசாரிகளிடம் ஜோக்கடித்தால்கூட அதை அவர்கள் தவறாக மேற்கோள்களுக்குப் பயன்படுத்திவிடுகிறார்களப்பா" என்றார் நக்கலாக. அதேசமயம், "ஏழைகளுக்காக உண்மையாகக் கரிசனம் காட்டுகிறவர்கள் இடதுசாரிகள்தான், அவர்களை ஊழல் நெருங்க முடியாது" என்று வெளிப்படையாகப் பாராட்டுவார்.
பிரிட்டனின் 'யெஸ் பாஸ்'!
2000 தொடக்கத்தில் 'தூர்தர்ஷன்' நிறுவனத்துக்காக 'சவுத் ஃபைல்' என்ற தலைப்பில் சோ, என்.ராம் ஆகியோருடன் நான் நடுவராகச் செயல்படும் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வாரம் இரு முறை ஒளிபரப்பப்பட்டது. நான்கு மாநிலங்களின் பிரச்சினைகள் அதில் விவாதிக்கப்பட்டன. சிலவற்றில் ராமும் சோவும் இணங்குவார்கள்.. பெரும்பாலானவற்றில் எதிரெதிர் நிலையில் இருப்பார்கள், சிலவற்றில் எதிர்த்துப் பேசுவதில் உடன்படுவார்கள். ஆனால், விவாதங்கள் எப்போதும் கண்ணியமாகவும், நேரடியாகவும், பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையிலும் இருக்கும். இருவரும் பரஸ்பர அறிவுத்திறனையும் அரசியல் நேர்மையையும் அங்கீகரித்து நடந்துகொள்வார்கள்.
நிகழ்ச்சிக்காக ஸ்டுடியோவுக்கு வரும்போது, ஓட்டுநருக்கு அருகில் அமர்ந்து காரில் வருவார் சோ. அவருடைய பாதுகாவலர் பின் இருக்கையில், வேண்டாத விருந்தாளியாக அமர்ந்திருப்பார். இடையிடையே தொண்டையைக் கனைத்துக்கொண்டு அரசியல் பொடிவைத்து வேடிக்கையாகப் பேசுவார். 'சவுத் ஃபைல்' நிகழ்ச்சி முடிந்தபோது, பிரிட்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'யெஸ் மினிஸ்டர்' என்ற தொடரை இந்தியாவிலும் தயாரிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார். அது அரசியல்வாதிகளைக் கேலிசெய்யும் தொடர். "நீங்கள் முக்கியப் பங்கு வகிப்பதாக இருந்தால், தயாரிக்கிறேன்" என்றேன் நான். "பரிசீலிக்கிறேன்" என்றார். லண்டனில் பிபிசி தமிழ்ப் பிரிவில் பணியாற்றிய என்னுடைய நண்பர் சம்பத்குமார் மூலம் அந்தத் தொடரின் சில சுருள்களை வரவழைத்தார். சில காரணங்களுக்காக எங்களால் அதைத் தொடர முடியவில்லை. செய்ய முடியாமல் போய்விட்டதே என்று பலமுறை வருந்தியிருக்கிறேன்.
இந்திய அரசியல்வாதிகளை அவர் தத்ரூபமாகத் திரையில் சித்தரித்திருப்பார். அரசை விமர்சிக்கும் கலைவடிவத்தைக்கூட சகித்துக்கொள்ள முடியாத இக்காலத்தில், அவரும் பொருத்தமில்லாதவராகக் கூட ஆகியிருப்பார்.
© 'ஃப்ரென்ட்லைன்' | சுருக்கமாகத் தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago