சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், பிரெஞ்சு - தமிழ் மொழிபெயர்ப்பாளர். ஆல்பர்ட் காம்யூ, தஹர் பென் ஜெலூன், லெ கிளெஸியோ, உய்பெர் அசாத் போன்றோரின் படைப்புகளைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.
குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்றவற்றைத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு முழுமையாக மொழிபெயர்த்திருக்கிறார். இவர் மொழிபெயர்த்த தஹர் பென் ஜெலூனின் ‘உல்லாசத் திருமணம்’, பிரெஞ்சு அரசின் ‘ரோமன் ரோலன் 2021’ விருது பெற்றது; ஜெலூனின் மற்றொரு நூலின் மொழிபெயர்ப்பான ‘இல்லறவாசிகள்’ சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது.
மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டும் என உங்களுக்கு எப்படித் தோன்றியது; பிரெஞ்சிலிருந்து நேரடித் தமிழ் மொழிபெயர்ப்புக்கு என்னவிதமான தயாரிப்புகளை மேற்கொண்டீர்கள்?
மொழியாக்கம் என்று இல்லாமல், வேறு மொழியில் வாசித்த சுவையான கதைகள் குறித்து நண்பர்களுடனும், கல்லூரியில் என் மாணவர்களிடமும் பகிர்ந்துகொள்ளும் வழக்கம் என்னிடம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட கதையின் மீது அவர்கள் காட்டும் ஆர்வம்தான், என் மொழியாக்கத்துக்கு ஊக்க விதையாக அமைந்தது என்று சொல்லலாம்.
» பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
» சென்னை சர்வதேச புத்தகக் காட்சி தொடக்கம்: 30 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
அவ்வாறு நண்பர்களுடன் பேசும்போது மேற்கோள் காட்ட சில தொடர்கள், உரையாடல்கள் ஆகியவற்றை மொழிபெயர்த்துக் கூறுவேன். அதுவே சில நேரம் முதல் தயாரிப்பாக அமையும். பொதுவாக மொழியாக்கம் தொடங்கும் முன், மூல நூலை முழுமையாக வாசித்து முடித்தால், மொழியாக்கத்துக்குச் சவாலாக அமையக்கூடிய இடங்களை, சொற்களை இனங்காண முடியும்.
பிரெஞ்சிலிருந்து தமிழ், தமிழிலிருந்து பிரெஞ்சு என நீங்கள் மேற்கொண்டிருக்கும் நேரடி மொழியாக்க முறையின் சாத்தியங்கள், சவால்கள் யாவை?
அந்நிய மொழி தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாத நிலையில், ஆங்கில மொழி வழியாக வருவது இயல்பே. எனினும், மூல மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருக்கும்போது, பல நுட்பமான பண்பாட்டு, மொழியியல் அம்சங்கள் ஆகியவற்றை எளிதாக இலக்கு மொழிக்கு மொழிபெயர்ப்பாளரால் கொண்டுவர முடியும். பிரெஞ்சு, தமிழ் மொழிபெயர்ப்பில், இதனை நடைமுறையில் என்னால் உணர முடியும். எனவே, நேரடி மொழியாக்கம் அதிக நம்பகத்தன்மையுடன் வரவேற்பைப் பெறுவதில் வியப்பு இல்லை.
உங்கள் மொழியாக்கங்களுக்கு பிரெஞ்சில் வரவேற்பு எப்படி உள்ளது?
தமிழ்ச் சங்க இலக்கியங்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகியவற்றை முழுமையாக மொழியாக்கம் செய்துள்ளேன். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பாக குறுந்தொகை பிரெஞ்சு மொழியாக்கம் விரைவில் வெளிவர உள்ளது. பிரெஞ்சு வாசகரிடையே அது நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.
அல்புனைவுகள் - குறிப்பாக அறிவியல் தொடர்பான நூல்களையும் நீங்கள் மொழிபெயர்த்துள்ளீர்கள். மொழிபெயர்ப்பில் உங்கள் தேர்வுகள் பற்றிச் சொல்லுங்கள்.
புனைவுகள்போலவே, அறிவியல், சமூக, வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பதும் அவசியமாகும். அத்தகைய தேவையை உணர்ந்தே, நாளைய உலகுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஃபுக்குஷிமாவையும் நுண்ணுயிரியலின் தந்தை எனக் கொண்டாடப்படும் லூயி பஸ்தேர் குறித்த வித்தியாசமான வாழ்க்கை வரலாற்று நூலையும் தெரிவுசெய்து தமிழாக்கம் செய்தேன்.
தமிழ் மொழிபெயர்ப்புத் துறைக்குப் போதிய அங்கீகாரம் கிடைப்பதாக உணர்கிறீர்களா? சென்னை சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, தமிழ் மொழிபெயர்ப்புத் துறையில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?
இந்தத் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அண்மைக் காலமாக நல்ல மொழிபெயர்ப்புகளைத் தேடி வாசிக்கும் வாசகர்கள் பெருகியுள்ளனர். அத்தகைய மொழியாக்கங்களை வெளியிட பதிப்பாளர்கள் காட்டும் ஆர்வமும் கூடியுள்ளது. சிறந்த மொழிபெயர்ப்புகளைப் பாராட்டி வழங்கப்படும் பரிசுகள், விருதுகள் ஆகியவை இத்துறையை நோக்கி மேலும் பலரை ஈர்க்க உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி, அந்நிய மொழி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் ஆகியோரிடையே ஓர் உறவுப் பாலமாகத் திகழும். இதன் மூலம் பல வகையில் புதிய மொழியாக்க நூல்கள் தமிழ் வாசகர்களுக்குக் கிடைக்க அது உதவும். இத்தகைய புதிய எழுத்துகள், உலக இலக்கிய வகைமைகளில் இப்போதைய போக்குகள், எடுத்துரைப்பு உத்திகள் உள்ளிட்ட நவீன எழுத்து நடைகள் ஆகியவை வளரும் எழுத்தாளர்களுக்கு உதவியாக இருக்கும். மொத்தத்தில், இவை தமிழ் இலக்கியத்தில் புதிய நல்வரவுகளாக இருக்கும்.
- சந்திப்பு: சு.அருண் பிரசாத், தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago