தோற்றுவிட்டதா பொதுவுடைமைத் தத்துவம்?

By க.திருநாவுக்கரசு

சீனாவின் முதலாளித்துவச் செயல்பாடுகள், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தோல்வி ஆகியவற்றை வைத்தே பரவலாக விமர்சனங்கள் எழுகின்றன

கடந்த நூறாண்டு காலத்தில் பொதுவுடைமைத் தத்துவத்துக்கு, குறிப்பாக மார்க்சியத்துக்குப் பல்லாயிரம் முறைகள் மரணக் குறிப்புகள் எழுதப்பட்டுவிட்டன. இந்த விஷயத்தில் முதலாளித்துவ அறிவுஜீவிகளும், ஊடகங்களும் சலித்ததேயில்லை. ரஷ்யாவில் 1917 நவம்பரில், புரட்சியின் மூலம் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய தினத்திலிருந்தே இந்த மரணக் குறிப்புகள் எழுதப்படுவது தொடங்கிவிட்டது. ஆனால், 1990 பெர்லின் சுவர் இடிப்பு பொதுவுடைமை நாடுகளின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய பிறகு, ரஷ்யாவில் மிகைல் கோர்பசேவ் கொண்டுவந்த பெரஸ்த்ரேய்க்கா மற்றும் கிளாஸ்நாத் (அரசியல் மறுசீரமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை) பலனளிக்காமல் கோர்பசேவின் வீழ்ச்சிக்குப் பின்னர், 1991-ல் போரிஸ் யெல்ஸ்டின் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, இறுதி மரணக் குறிப்பை எழுதக் கிடைத்த வாய்ப்பை முதலாளித்துவ அறிவுஜீவிகளும், ஊடகங்களும் கொண்டாடினர்.

இவற்றுக்கு முத்தாய்ப்பு வைப்பதைப் போல அமெரிக்க அரசியல் அறிஞர் பிரான்சிஸ் புக்குயாமா, ‘வரலாற்றின் முடிவும் கடைசி மனிதனும்’ என்ற தனது புத்தகத்தில் வரலாறு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்பே, சமூக, அரசியல், பொருளாதாரரீதியாக மனிதச் சமூகம் கண்டடைந்த உச்சம் என்றும் அறிவித்தார். அதாவது, கார்ல் மார்க்ஸ் எதிர்பார்த்ததைப் போல முதலாளித்துவ அமைப்பானது, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படும் என்பதும், பின்னர் இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் அதன் அரசும் உலர்ந்து உதிர்ந்து, ஒவ்வொருவரிடமிருந்தும் அவரது தகுதிக்கேற்பப் பெற்றுக்கொள்வது, ஒவ்வொருவருக்கும் அவரது தேவைக்கேற்ப அளிப்பது என்ற உயரிய லட்சியத்தின் அடிப்படையில் இயங்கும் கம்யூனிச, அதாவது உயர்நிலை பொதுவுடைமைச் சமூகம் பரிணமிக்கும் என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்றார் புக்குயாமா. அவரைப் போன்றவர்களைப் பொறுத்தவரை முதலாளித்துவமே மனிதகுலம் கண்டடையக் கூடிய உச்சகட்ட சமூக அமைப்பு. கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் கீழிருக்கும் முதலாளித்துவ நாடு என்று சொல்லத்தக்க அளவில் சீனா இருப்பது, சமீப காலமாக இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் கண்டுள்ள பெரும் சரிவு ஆகியவை பொதுவுடைமைத் தத்துவம் தோற்றுவிட்டது என்று சொல்லப்படுவது உண்மைதானோ என்ற எண்ணத்தை அதன் ஆதரவாளர்கள் மத்தியிலேயே உருவாக்கிவிட்டது.

ரஷ்யாவின் சாதனை

ஐரோப்பாவின் மிகவும் பின்தங்கிய நாடுகளுள் ஒன்றான ரஷ்யா, பொதுவுடைமைப் புரட்சிக்குப் பிறகு தொழில்துறை, கல்வி, மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என சகல துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டதுடன், கல்வியின்மையையும் வறுமையையும் முற்றாக ஒழித்தது. குடிமக்கள் அனைவருக்கும் வேலை என்பதை உறுதிசெய்ததுடன் அனைவருக்கும் தரமான மருத்துவம், கல்வி, உணவு ஆகியவற்றை உறுதிசெய்தது. மனிதகுலத்தின் ஏடறிந்த வரலாற்றில் இதுவரை எந்தச் சமூகமும் சாதிக்க முடிந்திராதது இது.

ரஷ்யப் புரட்சி நடைபெறாது இருந்திருந்தால் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எத்தனையோ சிந்தனையாளர்களுள் ஒருவராகவே மார்க்ஸ் இன்று பார்க்கப்பட்டிருப்பார். இதுவரை மனிதகுலம் உருவாக்கிய ஆகச் சிறந்த ஒரு சில சிந்தனையாளர்களுள் ஒருவராக மார்க்ஸை உயர்த்தியதில் அவரது மாபெரும் மேதைமைக்கு மட்டுமல்ல, ரஷ்யப் புரட்சிக்கும் முக்கிய பங்குண்டு. 20-ம் நூற்றாண்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 நிகழ்வுகள் எவை என்று எந்தவொரு வரலாற்று அறிஞரை, அவர் மார்க்சியரோ அல்லது மார்க்சிய எதிரியோ, பட்டியலிடச் சொன்னாலும் அதில் ரஷ்யப் புரட்சி இடம்பெறும். அத்துடன் அதன் வீழ்ச்சியும் அந்தப் பட்டியலில் இடம்பெறும் என்பது வரலாற்று முரண்நகை.

பொதுவுடைமைச் சித்தாந்தம் நடைமுறைச் சாத்தியமற்றது, தீமையானது என்பதற்கு முதலாளித்துவ அறிவுஜீவிகள் வைக்கும் இரண்டு முக்கிய வாதங்கள்: 1. மனிதன் சுயநலம் மிக்கவன். தனது உழைப்பு மற்றும் அறிவுத்திறனால் ஈட்டக்கூடியவை தனக்கு சொந்தமாகாது, சமூகம் அனைத்துக்கும் பொதுவானதாக இருக்கும். அதன் விளைவாக, உழைப்பவர்கள் - சோம்பேறிகள் இருவருக்கும் கிடைக்கும் பலன் ஒரே மாதிரியானதாக இருக்கும் என்றால், அவனுக்கு உழைப்பதிலேயே ஆர்வமிருக்காது. 2. பொதுவுடைமைத் தத்துவத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தனிமனித உரிமைகளுக்கும் கருத்து மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கும் எதிரானது. மனிதர்களின் சிந்தனை ஆற்றலை முடக்கக் கூடியது. முதலாவது வாதத்துக்கு மார்க்ஸ், ஏங்கெல்ஸ் காலத்திலேயே பல நூறு முறைகள் பதில் சொல்லப்பட்டுவிட்டது. தனது உழைப்பின் பலன் தனக்கு மட்டுமே உரியதாக இருக்காது என்பதால், மனிதர்கள் உழைப்பதை நிறுத்திவிடுவார்கள் என்றால், நூற்றுக்குத் தொண்ணூறு பேர் உழைப்பதை எப்போதோ நிறுத்தியிருப்பார்கள்.

சுரண்டப்படும் உழைப்பு

அமெரிக்கா போன்ற மிகவும் முன்னேறிய நாடுகளிலேயே சமூக உழைப்பின் பலனால் உருவாகும் செல்வத்தின் பெரும் பகுதி, சமூகத்தின் மேல்தட்டிலிருக்கும் ஒரு சதவீதத்தினருக்குப் போய்ச் சேருகிறது. உலகின் ஒட்டுமொத்த செல்வத்தில் 80%, பணக்காரர்களாக இருக்கும் ஒரு சதவீதம் பேரிடம் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. சமூகத்தின் அடித்தட்டிலிருக்கும் சுமார் 40% பேர் தினசரி தனது வயிற்றை நிரப்பவே பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.

எந்தத் துறையைச் சேர்ந்த மேதையும் தனக்குக் கிடைக்கக் கூடிய செல்வத்துக்காகச் சிந்தித்ததாகத் தெரியவில்லை. குவாண்டம் இயற்பியல் இல்லையென்றால், கணினித் துறையில் இன்று நடந்திருக்கும் மாபெரும் முன்னேற்றங்கள் சாத்தியமில்லை. கணினி சார்ந்த வர்த்தகத்தில் பில்கேட்ஸ், மார்க் சக்கர்பெர்க் போன்றவர்கள் ஈட்டிய செல்வத்தில் லட்சத்தில் ஒரு பங்கைக்கூட குவாண்டம் இயற்பியல் துறையைச் சேர்ந்த மேதைகள் யாரும் ஈட்டியதில்லை. ஆனால், நாளொன்றுக்குச் சுமார் 14 மணி நேரம் கடுமையான மூளை உழைப்பில் இவர்கள் ஈடுபடுவதை அது தடுத்துவிடவில்லை. இதுவே எல்லா துறை சார்ந்த அறிஞர்கள் விஷயத்திலும் உண்மை. உழைப்பும் சிந்தனையும்தான் மனிதனை மனிதனாகவே ஆக்குகிறது என்பதைப் புரிந்துகொண்டால், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற தூண்டுதல்தான் மனிதர்களை உழைக்க வைக்கிறது என்கிற வாதத்தில் வலு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சர்வாதிகாரத்தின் பொருள்

அடுத்தது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். ‘டிக்டேட்டர்ஷிப்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு இப்போது நாம் என்ன பொருள் கொள்கிறோமோ அதே பொருள்தான் எப்போதும் இருந்துவந்திருக்கிறது என்று கருதிக்கொண்டிருப்பதால்தான் மார்க்ஸின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தாக்கத்தை மார்க்சிய எதிரிகள் மட்டுமல்ல, ஆதரவாளர்களில் பலரும்கூடத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ‘டிக்டேட்டர்ஷிப்’ என்ற வார்த்தை இன்று நாம் கொள்ளும் பொருளில் பயன்படுத்தப்படுவது 1920-களுக்குப் பிறகே தொடங்கியது. அதுவரை கொடுங்கோல் ஆட்சிகளைக் குறிப்பிட ‘டைரனி’, ‘டெஸ்பாட்டிஸம்’, ‘அப்ஸலூட்டிஸம்’ போன்ற வார்த்தைகளே பயன்படுத்தப்பட்டன. பண்டைய ரோமானியக் குடியரசில், நாட்டில் பெரும் நெருக்கடி நிலை ஏற்படுகிறபோது அதைத் தீர்ப்பதற்காக ஆட்சிக் குழுவான செனட் அவை, ஒருவரைத் தெரிவுசெய்து அவரிடம் சகல அதிகாரங்களையும் ஒப்படைக்கும். சகஜ நிலை திரும்பிய பிறகு, தெரிவு செய்யப்பட்டவர் தனது பதவியைத் துறப்பார். மீண்டும் செனட் அவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.

ஆக, நெருக்கடி நிலை காலகட்டங்களைச் சமாளிக்க ரோமானிய அரசியல்சாசன சட்டத்தின் படி உருவாக்கப்பட்ட, ஆறு மாத காலம் மட்டுமே நீடிக்கக் கூடிய ஓர் இடைக்கால ஏற்பாடுதான் டிக்டேட்டர்ஷிப் என்று அழைக்கப்பட்டது. புரட்சிக்குப் பின்னர், முதலாளித்துவத்திலிருந்து உயர்நிலை பொதுவுடைமைச் சமுகம் (அரசே இல்லாத கம்யூனிச சமூகம், அதாவது, ஆள்பவர் கள் என்று யாருமில்லாமல் மக்கள் தங்களைத் தாங்களே வழிநடத்திக்கொள்ளக்கூடிய, ஒவ்வொருவரிடமிருந்தும் அவரது திறனுக்கு ஏற்ப பெற்றுக்கொள்வது, ஒவ்வொருவருக்கும் அவரது தேவைக்கு ஏற்பத் தருவது என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படும் ஒரு சமூக அமைப்பு) நேரடியாகத் தோன்ற முடியாது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைக் கீழ்நிலைப் பொதுவுடைமை என்று மார்க்ஸ் அழைத்தார். இந்த அமைப்பில், சகல அதிகாரங்களும் பாட்டாளி வர்க்கத்திடம் இருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியிடம் அல்ல. இது ஓர் இடைக்கால ஏற்பாடு என்பதாலேயே மார்க்ஸ் இதை டிக்டேட்டர்ஷிப் (சர்வாதிகாரம்) என்று குறிப்பிட்டார். எல்லா அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே என்று லெனின் கூறியதும் இதையே.

யாருடைய சர்வாதிகாரம்?

ஆனால், ரஷ்யாவில் புரட்சிக்குப் பின்னர் யதார்த்தத்தில் நடந்து வேறு. அதுவே ரஷ்யப் புரட்சியின் மாபெரும் சோகமும். லெனின் காலத்திலேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வாதிகாரமாகிப் போனது. மேலும், போல்ஷ்விக் கட்சியைத் தவிர்த்து வேறு எந்தக் கட்சியும் இல்லாத நிலை உருவாகிவிட்டது. ஆனால், லெனின் காலத்தில் உட்கட்சி ஜனநாயகம் சிறப்பாகவே இருந்தது. லெனின் மறைவுக்குப் பின்னர், ஸ்டாலின் ஆட்சியின் கீழ் உட்கட்சி ஜனநாயகம் முற்றிலும் மறைந்தது. ஒரு கட்சியின் சர்வாதிகாரம் என்பது போய், ஸ்டாலின் என்ற தலைவரின் சர்வாதிகாரமாக அது உருவெடுத்தது. லெனின் உருவாக்கிய கட்சி அமைப்பு ஸ்டாலினுக்கு வசதியாகப் போனது.

இந்தக் காலகட்டத்தில் ரஷ்யா பல மாபெரும் சாதனைகளை நிகழ்த்தியபோதிலும் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பொறுத்தவரை அது ஒரு கொடுங்கோலாட்சியே. ரஷ்யப் புரட்சிக்கு ஒளி வீசும் ஒரு பக்கம் இருப்பதைச் சொல்லும் அதே நேரத்தில், அதன் இருண்ட பக்கத்தையும் சொல்லியாக வேண்டும். ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பொறுத்தவரை சீனா, வியட்நாம், கியூபா என எல்லாப் பொதுவுடைமை நாடுகளும் ரஷ்யாவை அப்படியே பின்பற்றின. இது மார்க்ஸின் தத்துவம் தோற்றுவிட்டது என்று நிரூபிக்க விரும்பிய அறிவுஜீவிகளுக்கு மிகவும் வசதியாகப் போனது.

மார்க்ஸ் குறிப்பிடும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கருத்தாக்கத்துக்கும் ஸ்டாலின், மாசேதுங் போன்றவர்கள் அமல்படுத்திய சர்வாதிகாரத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் பற்றி எந்த முதலாளித்துவ அறிவுஜீவியும் பேசவேயில்லை. மேலும், ஒரு பொதுவுடைமைச் சமூகம் எப்படி கட்டமைக்கப்பட வேண்டும், அதில் அரசு மற்றும் அரசியல் சாசனச் சட்டம் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் மார்க்ஸ் குறிப்பாக எதையும் சொல்லவில்லை என்பதையும் இவர்கள் மறந்துவிட்டனர். மார்க்ஸின் தத்துவத்தையே தாங்கள் நடைமுறைப்படுத்தியிருப்பதாக ரஷ்யாவும், சீனாவும் சொல்லிக்கொண்டதை இவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர். ஏனெனில், அது மார்க்சியத்தை நிராகரிப்பதற்கு இவர்களுக்கு வசதியாக இருந்தது.

முதலாளித்துவத்தின் பழைய முகம்

ஐரோப்பாவில் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் இருந்த முதலாளித்துவம் எவ்வளவு கொடூரமானது என்பதைப் பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை. 19-ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும்கூட, ஒரு தொழிலாளி தனது குடும்பத்துக்கான உணவு, உடை போன்ற மிக அடிப்படையான தேவைகளை நிறைவேற்றவே நாளொன்றுக்கு 14 மணி நேரம் உழைக்க வேண்டியிருந்தது. 1930-க்குப் பிறகு உலகெங்கும் தொழிலாளர்களிடையே பொதுவுடைமைச் சித்தாந்தம் பெரும் செல்வாக்கு பெறத் தொடங்கிய பிறகே, முதலாளிகளும் முதலாளித்துவ அரசுகளும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தொடங்கின. இன்றும்கூட முதலாளித்துவ நாடுகளின் அமைப்பு என்பது ஒரே மாதிரியானவை அல்ல. சோமாலியாவும் ருவாண்டாவும் முதலாளித்துவ நாடுகள்தான், நார்வேயும், ஸ்வீடனும் முதலாளித்துவ நாடுகள்தான்.

அவ்வளவு ஏன், மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் மிக அதிகம். அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புரீதியாக இவ்வளவு வேறுபாடுகளைக் கொண்ட வகை வகையான முதலாளித்துவ நாடுகள் சாத்தியம் என்கிறபோது, பொதுவுடைமை நாடுகள் விஷயத்தில் மட்டும் நாம் ஏன் ரஷ்யா, சீனா மட்டுமே சாத்தியம் என்று நினைக்க வேண்டும். இவற்றைவிட மிகவும் மேம்பட்ட, முதலாளித்துவ ஜனநாயகத்தைவிடப் பன்மடங்கு மேம்பட்ட ஜனநாயகத்தைக் கொண்ட, பல பொதுவுடைமைக் கட்சிகள் செயல்படக்கூடிய, முற்றிலும் சுதந்திரமான ஊடகங்களைக் கொண்ட பொதுவுடைமை நாடுகள் ஏன் சாத்தியமில்லை? அந்த சாத்தியத்தைத் தடுக்கும் மார்க்ஸின் ஏதாவது ஒரு கோட்பாட்டை யாராலாவது சுட்டிக்காட்ட முடியுமா? ‘‘சுதந்திரம் மனிதனின் சாராம்சமாக இருக்கிறது” என்று சொன்னவர் மார்க்ஸ். உளவியல் அறிஞர் எரிக் ஃப்ராமின் வார்த்தைகளில் சொன்னால், மனிதன் அடைய வேண்டிய லட்சியமாகப் பொதுவுடைமையை மார்க்ஸ் பார்க்கவில்லை.

மனித சுதந்திரத்துக்கும் படைப்பூக்கத்துக்கு மான நிபந்தனையாகப் பொதுவுடைமையைப் பார்த்தவர் மார்க்ஸ். அவர் ஒரு தத்துவஞானி. முக்காலமும் உணர்ந்த முனிவரோ, தீர்க்க தரிசியோ அல்ல. மார்க்ஸின் பல கணிப்புகள் சரியாக இருந்திருக்கின்றன, சில தவறாகப் போயிருக்கின்றன. ஆனால், கம்யூனிச சமூகம் பற்றிய அவரது கனவு ஒட்டுமொத்த மானுட குலத்தின் கனவு. மனிதகுலப் பண்பாட்டு வளர்ச்சியின் உச்சம். அந்தக் கனவு நனவாகாமல் கலையாது!

- க. திருநாவுக்கரசு, தொடர்புக்கு: kthiru1968@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

மேலும்