கடலும் உயிரும்!

By சமஸ்

“ஆடைக்கும் கோடைக்கும் காத்துக்கும் மழைக்கும் இங்கேதான்... இன்னும் எத்தனை புயல் வந்தாலும் சரி; பூகம்பம் வந்தாலும் சரி; செத்தாலும் இங்க கிடந்து சாவோமே தவிர, எங்க கடலை விட்டு விலக மாட்டோம்...”

- தனுஷ்கோடியில் கேட்ட இந்த வார்த்தைகள்தான் ‘நீர், நிலம், வனம்' தொடரின் மிக முக்கியமான வார்த்தைகள் என்று சொல்லலாம். இன்னமும் கடலோடும் வயலோடும் வனத்தோடும் ஒட்டி வாழும் நம்முடைய ஆதி சமூகங்களைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கான அடிப்படையும்கூட இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒரு வாழ்க்கையை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது வேறு. அதற்கு உள்ளிருந்து வாழ்ந்து பார்ப்பது வேறு. இந்த வேறுபாடு தனுஷ்கோடியில் கொஞ்சம் வாழ்ந்து பார்த்த தற்கும் அங்குள்ள கடலோடிகளிடம் பேசிப் பார்த்ததற்கும் பின்புதான் புரிபட ஆரம்பித்தது.

தனுஷ்கோடியில் வாழ்தல்

தனுஷ்கோடி வாழ்க்கைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. இன்னமும் அழிந்துவிடாத ஒரு பாரம்பரிய மீனவக் கிராம வாழ்க்கைக்கான உதாரணம் அது.

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையை ஜீப்புகள் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக் கின்றன என்று எழுதியிருந்தேன் அல்லவா? இப்படி ஜீப்பு களிலோ, வேன்களிலோ தனுஷ்கோடிக்குச் செல்வதும் கூட வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மட்டுமே சாத்தியம். புரட்டாசி தொடங்கிவிட்டால், அடுத்த நான்கு மாதங்களுக்கு இப்படி ஜீப்புகளில் செல்லும் பாதையையும் கடல் சூழ்ந்து விடுகிறது. திரும்ப, தைக்குப் பின்தான் கடல் உள்வாங்கி, பாதை தெரிகிறது.

அப்படியென்றால், எப்படி வெளியுலகோடு தொடர்புகொள் கிறார்கள்? ஒரு அமயஞ்சமயம் என்றால், எங்கே செல் கிறார்கள்? எப்படிச் செல்கிறார்கள்?

தொட்டது தொண்ணூறுக்கும் ராமேசுவரமே கதி. கடல் வழியே பயணிக்கிறார்கள். படகுகளில் செல்கிறார்கள். 24 கடல் மைல் தூரத்தை நாட்டுப்படகில் கடக்க ஒன்றரை மணி நேரம் ஆகுமாம். தொழில் சார்ந்து ராமேசுவரத்துக்குப் படகை எடுத்துக்கொண்டு செல்பவர்கள் மற்றவர்களுக்குத் தேவைப்படும் சாமான்களையும் வாங்கிக்கொண்டு வரு கிறார்கள். மற்றபடி, கூடுமானவரை ஊர் சார்ந்த வாழ்க்கை முறை. உதாரணமாக, சமையலில் வெளியூர் சார்ந்த காய்கறி

களின் பயன்பாடு குறைவு. ஒன்று மீன் சாப்பாடு அல்லது உள்ளூரில் கிடைக்கும் கீரைச் சாப்பாடு. சரி, கடலோடிகளுக்கு டீ அவசியம் வேண்டுமே... பாலுக்கு என்ன செய்கிறார்கள்? டீக்கடை இருக்கிறது. அமுல் பால் மாவில் அருமையாக டீ போடுகிறார் முனியசாமி.

வாழ்வு இனிது

தனுஷ்கோடியில் பெரும்பாலான மீனவர்களின் தொழில் கரை வலை போடுவது அல்லது வள்ளங்களில் சென்று கரைக் கடலுக்குள் மீன் பிடிப்பது. அதாவது, கரையையொட்டி நடக்கும் பிழைப்பு. அதிகாலைக்கு மீன் பிடிக்கச் சென்றால், ஐந்தாறு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடுகிறார்கள். கரை வலை இழுக்கும்போது கைகள் நைந்துபோகும் அளவுக்கு வலி தரும். நூறோ, இருநூறோ வருமானம். ஆனால், அது போதும் என்று நினைக்கிறார்கள். வீடு திரும்பியதும் பழைய கஞ்சி. குடித்துவிட்டுச் சாய்ந்தால், கடல் காற்றில் கொஞ்சம் அசதி தீரும். சாயங்காலமாக முனியசாமி டீக்கடையில் ஒரு டீ. கூடவே, ஊர்நடப்புப் பேச்சு. இருட்ட ஆரம்பித்ததும் வீடு திரும்பினால், காலையில் பிடித்துவந்த மீன்களில் வீட்டுக்காகக் கொஞ்சம் எடுத்துவைத்த கறிமீன் குழம்பும் சுடுசோறும். மனைவி மக்களுடன் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்

கொண்டே சாப்பாடு. இப்படிச் சாப்பிட்டு முடித்த பின் இருட்டில், கடற்கரையில் விளையாடும் பிள்ளைகளைப் பார்த்துக்

கொண்டும், மனைவியோடு பேசிக்கொண்டும் கழியும் நிமிஷங்கள்தான் இந்தக் கடலோடிகளின் வாழ்வின் ஒரே சொர்க்கம். மின்சாரம் இல்லாத ஊரில், கடிகாரத்துக்குத்தான் என்ன பெரிய தேவை? சூரியன் மறைந்த சில மணி நேரங்களில் தனுஷ்கோடியைத் தூக்கம் போர்த்திக்கொள்கிறது.

இதைக்கூட நம்மால் தர முடியாதா?

இவ்வளவு எளிமையாக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தனுஷ்கோடி மக்கள் அரசாங்கத்திடம் எதிர் பார்ப்பது ரொம்பக் குறைவு. வெட்கக்கேடு! மாபெரும் இந்திய வல்லரசிடம் ஒரு குடிதண்ணீர்க் குழாயை எதிர்பார்க் கிறார்கள். ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று, ஊற்றுத் தண்ணீரைக் கொஞ்சம்கொஞ்சமாக மொண்டு, குடம் நிரப்பிக் கொண்டுவரும் தண்ணீர் இன்றைய சூழலில், முன்புபோல் சுத்தமாக இல்லை. ஒரேயொரு குடிநீர்க் குழாய் வேண்டும் என்று கேட்கிறார்கள். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருவர், ஒன்றரை ஆள் உயரம் இருக்கும் படகில், கயிற்றுச் சுருக்கில் கால்வைத்து ஏறும் காட்சியைச் சகித்துக்கொள்ள முடிகிறதா? ராமேசுவரத்துக்குப் போகும் வழியில் படகிலேயே பல பிரசவங்கள் நடந்திருக்கும் சூழலில், ஆபத்து சமயங்களை எதிர்கொள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என்று கேட்கிறார்கள். தனுஷ்கோடியில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது. அரசாங்கம் பெயருக்கு நடத்தும் நடுநிலைப் பள்ளி. முன்பு அரிதாக வந்த ஒரு நல்லாசிரியை இந்தப் பள்ளிக்கூடத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார். பிள்ளைகள் நன்றாகப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர் இங்கிருந்து சென்றதும் மீண்டும் பள்ளிக்கூடம் நொண்டியடிக்க ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். ஆசிரியர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. வந்துபோகவே வசதி இல்லை என்றால்? “எங்களுக்கு பஸ் விடாட்டினாலும் பரவாயில்லை; வெளியிலேர்ந்து வாத்திமாருங்க வந்து போகவாவது எதாவது ஒரு ஜீப்பு வசதி பண்ணனும்” என்று கோருகிறார்கள். காலங்காலமாக இதற்காகவெல்லாம் மனு மீது மனு போட்டுக்கொண்டிருக்கிறோம் என்கிறார் ஊர்த் தலைவர் மாரி. இவற்றையெல்லாம் நிறைவேற்றகூட பிரதமர் மோடியோ, முதல்வர் ஜெயலலிதாவோதான் வர வேண்டுமா? ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாராலும், சட்டப்பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ்வாலும் முடியாதா?

தொழில் கற்றால் கல்யாணம்

உள்ளூரில் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கவைக்க வழியில்லாததால் பெரும்பாலான பிள்ளைகளைத் தொழிலுக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆண் பிள்ளைகள் என்றால், கடல் தொழில், பெண் பிள்ளைகள் என்றால், கரைத் தொழில். பெரும்பாலான பிள்ளைகளுக்குத் தொழில் கற்றுக்கொண்ட உடனேயே காதல் வந்துவிடுகிறது. “பெத்தவங்களைக் கூப்பிடுவோம். புடிச்சவரைக்கும் சரி, போனவரைக்கும் சரின்னு சொல்லி கோயில்ல வெச்சுப் பேசி, கல்யாணத்தை முடிச்சுடுவோம். எதுவும் கொறையா இல்ல; நல்லாதான் இருக்குதுவோ” என்கிறார்கள்.

மரணத்தின் அருகே ஏன் வாழ்கிறார்கள்?

இறையுமண்துறையில், வீடுகளுக்குப் பின்னே கொந்தளிக்கும் கடலைப் பார்த்தபோது இந்தக் கேள்வி எழுந்தது: எந்த நேரத்திலும் வாரிச் சுருட்டலாம் என்றாலும், கடலோடிகள் ஏன் கடல் அருகிலேயே வாழ்கிறார்கள்?

திரும்பத் திரும்பக் குடைந்தெடுத்த இந்தக் கேள்விக்கான பதில் தனுஷ்கோடியில் கிடைத்தது என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அந்தப் பதில் இதுதான். “ஆடைக்கும் கோடைக் கும் காத்து மழைக்கும் இங்கேதான்... இன்னும் எத்தனை புயல் வந்தாலும் சரி; செத்தாலும் இங்க கிடந்து சாவோமே தவிர, எங்க மண்ணை விட்டு அகல மாட்டோம்... ஏன்னா, நீங்க பாக்குற கடல் வேற. நாங்க பார்க்குற கடல் வேற.''

எனக்கு முதலில் பெரிய அதிர்ச்சியாக இருந்தது, ஒரு மீனவப் பெரியவர் சொன்ன இந்தப் பதில். இறையுமண் துறையிலாவது கடலின் ஆவேசம் ஒரு மிரட்டலைப் போலதான் இருக்கிறது. தனுஷ்கோடியிலோ கடல் சூறையாடிக்

காட்டியிருக்கிறது. ஊருக்குச் செல்ல சாலைகள் இல்லை; பஸ்கள் இல்லை; ஊருக்குள்ளோ குடிநீர்க் குழாய்கள் இல்லை; மின்சாரம் இல்லை... என்ன தந்துகொண்டிருக்கிறது இந்த ஊர்? அதுவும், அரசாங்கம் தந்த மாற்று ஊரை விடவும், இரு பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும் இந்த ஊரில் அப்படி என்ன இருக்கிறது என்று தோன்றுகிறது.

அந்த மீனவப் பெரியவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்த வாறு, விளக்க ஆரம்பித்தார். “ஐயா நான் சில கேள்விகளைக் கேக்குறேன். நீங்க பதில் சொல்லுங்க. நாங்க ஏன் கடலை ஒட்டிக் கெடக்கோம்னு உங்களுக்குப் புரிஞ்சுடும்...”

“சரி கேளுங்க...”

“உங்க ஊர்லேர்ந்து தனுஷ்கோடிக்கு வரும்போது எப்படி வந்தீங்க?”

“ராமேசுவரம் வரைக்கும் ரயில்ல வந்து, அங்கிருந்து முச்சத்திரம் வரைக்கும் பஸ்ஸுல வந்து, அங்கிருந்து ஜீப்புல வந்தேன்...”

“ரயில்ல வரையில நிறைய வயலைப் பார்த்தீங்களா?”

“ஆமா... வழி நெடுகப் பார்த்தேன்...”

“நீங்க ரயிலேர்ந்து பார்த்தப்போ ஒண்ணுபோல அந்த வயலெல்லாம் தெரிஞ்சாலும், அது அத்தனையும் ஒரே வயலு இல்ல. ஒவ்வொண்ணும் ஒரு வகை. ஒவ்வொண்ணும் பலருக்குச் சொந்தம் இல்லையா?”

“ஆமாங்க...”

“அதேபோலத்தான்யா இந்தக் கடலும்... உங்களுக்கு வெளியில நின்னு பார்க்குறப்ப எல்லாம் ஒண்ணா தெரிஞ் சாலும் இதிலேயும் பல வகை இருக்கு. இதுலேயும் பலருக்குப் பங்கு இருக்கு. ஒரு ஊருக்குப் பாத்தியப்பட்ட கடலுல நாம நுழையக் கூடாது. அதே மாதிரி நமக்குப் பாத்தியப்பட்ட கடலு நம்ம சொத்து...”

அவர் தொடர்ந்தார்:

“ஒரு விவசாயிக்கு நெலம் எப்படியோ, அப்படித்தான் கடலோடிக்குக் கடலும். எவ்வளவோ பாம்புக, வெட்டு வாக்கிளிய கெடக்குது நெலத்துல. ஒரு விவசாயியால நெலத்தை விலகி இருக்க முடியுதா? முடியாது. ஏன்னா, அவனோட பொழப்பு அங்கேதான் கிடக்கு. அப்படி ஒரு கடலோடியோடு பொழப்பு கடல்லதானே கெடக்கு? சர்க்கார் ஆபிஸுக்கு மணியடிச்சா போயிட்டுவர்ற மாரி பொழப்பு இல்லீங்க மீன் புடிக்கிறது. காலையிலேர்ந்து வலை போட்டுப் போட்டு பார்ப்போம், ஒரு மச்சம்கூட சிக்காது. ஒடம்பும் மனுசும் அசந்து வீட்டுல வந்து சாய்வோம். ‘கரவலைக்கு மீன் வந்துருக்கு'னு கரையில விளையாண்டுக்கிட்டிருக்குற புள்ளைய ஓடியாந்து சொல்லும்... வலையைத் தூக்கிக்கிட்டு ஓடுவோம். நடுராத்திரி இல்ல; உச்சிப் பகல் இல்ல; குறி தெரிஞ்சா ஓடுவோம். அப்பதான் பொழப்பு. கடலைவுட்டு விலகி எப்படிங்கய்யா ஓடியாற முடியும்?”

பெரியவர் தொடர்ந்தார்:

“இந்தக் கடலுதான் எங்க சொத்து. பாட்டனும் பூட்டனும் வுட்டுட்டுபோன சொத்து. எங்கம்மா. இந்தக் கடலுதான் எங்க சாமி. உசுருய்யா இது...”

கடலோரம் நடந்துகொண்டிருந்த அந்த மீனவக் கிழவர் என் கண்ணுக்கு முன்னாலேயே, அப்படியே கடலடியில் அமர்ந்து அலையை வாரிக்கொண்டார். கடல், அலையாக அல்ல, ஒரு தாயாக அவரைத் தழுவிக்கொண்டதை நான் பார்த்தேன்; சத்தியமாகப் பார்த்தேன்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

54 mins ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்